என் மலர்
நீங்கள் தேடியது "funeral"
- அவளுடைய எதிர்காலத்திற்கான என் பெற்றோரின் கனவுகளுக்கான இறுதிச்சடங்கு
- ஒரு இளம் பெண் தனது வாழ்க்கைத் துணையைத் தானாகவே தேர்ந்தெடுப்பது உண்மையிலேயே குற்றமா?
மத்தியப் பிரதேசத்தில் 23 வயது பெண் ஒருவர் தனது சொந்த விருப்பப்படி திருமணம் செய்துகொண்டதால், அவரது உருவப்பொம்மையை வைத்து குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்து, அதனை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் உறவுகள், மரபுகள் மற்றும் சமூக சிந்தனை குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா நகரைச் சேர்ந்த சவிதா குஷ்வாஹா என்ற பெண் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் குடும்பத்தினர் அவரை ஊர்முழுவதும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால், போலீசிடம் புகாரளித்துள்ளனர். பல நாட்கள் தேடிய பிறகு, போலீசார் சவிதாவைக் கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு குடும்பத்தினரும் வரவழைக்கப்பட்டனர்.
போலீசார் சவிதாவை குடும்பத்தினருடன் செல்ல கூறியுள்ளனர். ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த சவிதா, அவர்களுடன் செல்ல விருப்பமில்லை எனவும், தான் ஒருவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொண்டு அவருடன் வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், துக்கத்திலும், கோபத்திலும் எடுத்த ஒரு முடிவு இப்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
சவிதாவின் குடும்பத்தினர் அவரைப்போன்றே ஒரு உருவப்பொம்மையை வடிவமைத்து, அதற்கு இறுதி சடங்குகள் செய்து, அதனை சவப்பெட்டியில் வைத்து மேள, தாளத்துடன் இறுதி ஊர்வலம் நடத்தினர். தொடர்ந்து இடுகாட்டிற்கு எடுத்துச்சென்று எரித்த குடும்பத்தினர் தங்கள் மகள் இறந்துவிட்டதாக ஊர்முழுவதும் அறிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் பார்த்த பலரும் ஒரு இளம் பெண் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது உண்மையிலேயே குற்றமா? குடும்பம் மற்றும் சமூகத்தின் விதிமுறைகள் ஒருவரின் சொந்த வாழ்க்கையை விட முக்கியமானதாக மாறுகிறதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மறுபக்கம் இதுதொடர்பாக பேசியுள்ள சவிதாவின் சகோதரர், "எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை இது சகோதரியின் இழப்பு மட்டுமல்ல. பல வருட வளர்ப்பு, நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளின் சிதைவு. சவிதா வீட்டில் பாசமாக வளர்க்கப்பட்டார். அவளுடைய ஒவ்வொரு தேவையும், விருப்பமும் பூர்த்தி செய்யப்பட்டது. ஆனாலும், அவள் வீட்டை விட்டு வெளியேறியது குடும்பத்தை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது சவிதாவின் இறுதிச்சடங்கு அல்ல. அவளுடைய எதிர்காலத்திற்கான என் பெற்றோரின் கனவுகளுக்கான இறுதிச்சடங்கு" என தெரிவித்தார்.
- நால்வரும் சந்தேகப்படும்படி நடந்து கொண்டதால், உள்ளூர்வாசிகள் தகனத்தை நிறுத்தினர்.
- பிரீமியத்தை தவறாமல் செலுத்தினார்.
உத்தர பிரதேசத்தில் காப்பீட்டுப் பணத்திற்காக போலியான இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
உத்தர பிரதேசத்தில் உள்ள கர்முக்தேஷ்வர் கங்கா காட் பகுதிக்கு நான்கு பேர் ஒரு இறந்த உடலை தகனத்திற்காக கொண்டு வந்தனர்.
சடங்குகளின்படி இறுதிச் சடங்கை செய்வதற்குப் பதிலாக, உடலை நேரடியாகச் சிதைக்கு எடுத்துச் சென்று தகனத்தைத் தொடங்கினர்.
நால்வரும் சந்தேகப்படும்படி நடந்து கொண்டதால், உள்ளூர்வாசிகள் தகனத்தை நிறுத்தினர். உடலில் இருந்த துணிகள் அகற்றப்பட்டபோது, ஒரு பிளாஸ்டிக் போலி உடல் கண்டெடுக்கப்பட்டது.
அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்ற நிலையில் உள்ளூர்வாசிகள் அவர்களில் இருவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் இருவர் தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் பிடிபட்ட இருவரை விசாரித்தபோது, அதிர்ச்சியூட்டும் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
கைது செய்யப்பட்ட டெல்லியின் கைலாஸ்புரியைச் சேர்ந்த துணிக்கடை நடத்தி வந்த கமல் சோமானி ரூ.50 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கியிருப்பது கண்டறியப்பட்டது. அதிலிருந்து தப்பிக்க, அவர் தனது நண்பர் ஆஷிஷ் குரானாவுடன் ஒரு திட்டம் தீட்டினார்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கமல் சோமானி, முன்பு தன்னிடம் பணிபுரிந்த அன்ஷுல் குமாரின் ஆதார் மற்றும் பான் கார்டுகளை பய்னபடுத்தி ஒரு வருடம் முன்பு, அன்ஷுலின் பெயரில் ரூ.50 லட்சத்திற்கான ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை வாங்கி, பிரீமியத்தை தவறாமல் செலுத்தினார். காப்பீட்டுத் தொகையைப் பெற, அன்ஷுல் இறந்துவிட்டதாகக் காட்ட போலி இறப்புச் சான்றிதழைப் பெற்றார்.
பின்னர், நண்பர்களின் உதவியுடன், தான் உடலை தகனம் செய்வதாக அனைவரையும் நம்ப வைக்க போலி இறுதிச் சடங்கு செய்ய முயன்றார்.
போலீசார் அன்ஷுலைத் தொடர்பு கொண்டபோது, அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், தனது பெயரில் பாலிசி இருப்பது கூட தெரியாது என்றும் கூறினார்.
இதன் மூலம், கமல் சோமானி மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.
- வெங்காயம் எங்கள் குழந்தை போன்றது. விவசாயம் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி
- ஏற்றுமதி குறைவால், உள்நாட்டில் இருப்பு கூடி, மண்டிகளில் குறைந்த விலைக்கு வாங்கப்படுவதாக விவசாயிகள் வேதனை.
விலைச்சரிவால் அடிப்படை உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவை கூட எடுக்க முடியவில்லை என விரக்தியில், வெங்காயத்திற்கு விவசாயிகள் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தின் தம்னார் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வுதான் இது. கிராமத்தில் உள்ள தகன மைதானத்தில் ஒரு பாடையில் வெங்காயத்தை கொட்டி, அதற்கு பூமாலை போட்டு, மனிதருக்கு இறுதி சடங்கு செய்வது போல அனைத்து காரியங்களையும் செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் மால்வா மற்றும் நிமர் பகுதிகள் இந்தியாவின் வெங்காய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், வெங்காயத்திற்கு சரியான விலை கிடைக்காததால் இந்த நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மண்டிகளில் வெங்காயம் கிலோவுக்கு 1 முதல் 10 ரூபாய்க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். சிலர் 1 -2 ரூபாய்க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நியாயமான விலை கிடைக்காததால் இந்த வெங்காய ஊர்வலம் நடத்தப்பட்டது. எங்களுக்கு நிறைய நஷ்டம் ஆகியுள்ளது. அரசு இன்னும் விழித்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? என இறுதிச் சடங்கில் பங்கேற்ற விவசாயி பத்ரி லால் தாக்கட் தெரிவித்தார்.
"இந்த நூதன போராட்டம் தொடர்பாக பேசிய மற்றொரு விவசாயி, "வெங்காயம் எங்கள் குழந்தை போன்றது. இந்த விவசாயம் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி. அதிக கனமழையால் இரண்டாவது பயிரும் வீணானது. இப்போது வெங்காயமும் காய்ந்துவிட்டது. அதனால்தான் இறுதி ஊர்வலம் நடத்தினோம். எங்கள் செலவை ஈடுகட்டும் விலையைக்கூட அரசு வழங்கவில்லை" என தெரிவித்தார்.
வெங்காயத்தின் மீதான நீண்டகால வரியால்தான் சர்வதேச சந்தைகளில் இந்தியா போட்டியிட முடியவில்லை எனவும், இதன் விளைவாக ஏற்றுமதி சரிந்து உள்நாட்டில் இருப்பு அதிகமாவதால், மண்டியில் குறைவான விலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த இறுதி ஊர்வலம் வெறும் ஆரம்பம்தான் எனவும், நியாயமான விலை உறுதி செய்யப்படாவிடில் பிராந்தியம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
- கென்யாவின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா இறுதிச்சடங்கு நடந்தது.
- அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசினர்.
நைரோபி:
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் ரைலா ஒடிங்கா (80). உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அவர் ஆயுர்வேத சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வந்திருந்தார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென மயங்கி விழுந்தார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் மாரடைப்பால் இறந்தது உறுதியானது.
அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். ஒடிங்காவின் மறைவு 7 நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அந்நாட்டின் அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் தாய் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நைரோபி விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் நைரோபி விமான நிலையம் மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது.
எனவே சில மணி நேரம் கழித்தே விமானங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதனையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக பின்னர் மோய் கால்பந்து மைதானத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கூடியிருந்தனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் தடுப்புச் சுவரை மீறி உள்ளே நுழைய முயன்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
எனவே பொதுமக்களை விரட்டியடிப்பதற்காக போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசினர். இதனால் மக்கள் அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் கென்யாவில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மோகன் லாலின் மனைவி 14 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.
- இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
பீகார் மாநிலம் கயாவை சேர்ந்த 74 வயதான முன்னாள் விமானப்படை வீரர் மோகன் லால், தான் இறந்தது போல் நடித்து தனக்கு தானே இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
மோகன் லாலின் மனைவி 14 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், தான் மரணமடைந்தால் இந்த ஊரில் யார் எல்லாம் தன்னுடைய இறுதிச்சடங்கிற்கு வருவார்கள், யாரெல்லாம் என் மீது அன்பு வைத்துள்ளார்கள் என்று அறிய மோகன் லாலுக்கு ஆசை ஏற்பட்டது.
இதையடுத்து தான் இறந்தது போல மொகல் லால் தனக்கு இறுதிச்சடங்கு நடத்தினார். இறுதிச்சடங்கு நடைபெற்ற போது, எழுந்து உட்கார்ந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
- இந்த மறுவாழ்வு மையம் கன்னியாஸ்திரிகளால் நடத்தப்பட்டு வருகிறது.
- தான் இறந்த பின், இந்து வழக்கப்படி இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என்று அப்பெண் கோரியுள்ளார்.
கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்த இந்து பெண்ணுக்கு இந்து முறைப்படி இஸ்லாமியர் இறுதி சடங்கு செய்த சம்பவம் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் கடினம்குளம் மறுவாழ்வு மையத்தில் சத்தீஸ்கரை சேர்ந்த ராக்கி என்ற 44 வயது பெண் சிகிச்சை பெற்று வந்தார். இந்த மறுவாழ்வு மையம் கன்னியாஸ்திரிகளால் நடத்தப்பட்டு வருகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராக்கி, தான் இறந்த பின், இந்து வழக்கப்படி இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இஸ்லாமியரான சஃபீர் தானே முன்வந்து இந்து முறைப்படி அப்பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார்.
இந்து பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு இஸ்லாம் மதம் எனக்கு தடையாக இருக்கவில்லை என்று சஃபீர் தெரிவித்தார்.
சஃபீரின் இச்செயலுக்கு உள்ளூர் ஜமாத் மற்றும் கிராமத்தினர் பாராட்டி வருகின்றனர்.
- லால் வைஷ்ணவ் - சரஸ்வதி வைஷ்ணவ் இணையருக்கு மூத்த மகன் அஸ்வினி வைஷ்ணவ் ஆவார்.
- ஜோத்பூரில் குடியேறி வழக்கறிஞராகவும், வரி ஆலோசகராகவும் நீண்ட காலம் பணியாற்றினார்.
ராஜஸ்தான்: மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் தந்தை டவு லால் வைஷ்ணவ், வயது மூப்பு காரணமாக இன்று காலை (செவ்வாய்க்கிழமை) காலமானார்.
அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு, ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை 11:52 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாலி மாவட்டத்தில் உள்ள ஜீவன்ட் கலா கிராமத்தைச் சேர்ந்த டவு லால் வைஷ்ணவ், பின்னர் ஜோத்பூரில் குடியேறி வழக்கறிஞராகவும், வரி ஆலோசகராகவும் நீண்ட காலம் பணியாற்றினார்.
அவர் தனது சொந்த கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராகவும் பணியாற்றி உள்ளார். லால் வைஷ்ணவ் - சரஸ்வதி வைஷ்ணவ் இணையருக்கு மூத்த மகன் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் இளைய மகன் ஆனந்த் வைஷ்ணவ் ஆவர்.
இறுதிச் சடங்குகள் இன்று மாலை ஜோத்பூர், காகாவில் உள்ள வைஷ்ணவ் சமாஜ் மயானத்தில் நடைபெற்றன. இதன்பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் ராஜஸ்தான் சபாநாயகர் வாசுதேவ் தேவ்நானி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- அப்போது அவரது வீட்டு அலமாரியில், எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
- வேலை முடிந்து திரும்பியபோது தனது 86 வயதான தந்தை வீட்டில் இறந்து கிடந்தார்.
ஜப்பானில் இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் தந்தையின் சடலத்தை 2 ஆண்டுகளாக வீட்டு அலமாரியில் ஒளித்து வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த 56 வயதான நோபுஹிகோ சுசுகி என்ற நபர், உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஒரு வாரமாக உணவகம் திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நோபுஹிகோ சுசுகி வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டு அலமாரியில், எலும்புக்கூடு ஒன்று இருந்துள்ளது.
இதுதொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், வேலை முடிந்து திரும்பியபோது தனது 86 வயதான தந்தை வீட்டில் இறந்து கிடந்தார், ஆனால் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு அதிகளவு செலவாகும் என்பதால், அதை தவிர்க்க தந்தையின் உடலை அலமாரியில் மறைத்து வைத்ததாக சுசுகி தெரிவித்தார்.
எனினும் தந்தையின் ஓய்வூதியத்தை 2 ஆண்டுகளாக பெற்று வந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜப்பானில், இறுதிச்சடங்கு செய்வதற்கு 1.3 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ.7.60 லட்சம்) ஆகும் என மதிப்பிடப்படுகிறது.
- சுமார் 250,000 பேர் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
- 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் அவரது விருப்பப்படியே வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் 266வது தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார்.
அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். நேற்று முன்தினம் மாலை வரை 90 ஆயிரத்துக்கு அதிகமானோர் போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
3-வது நாளாக நேற்றும் போப் பிரான்சிஸ் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் அஞ்சலி செலுத்தினர். இதனால் புனித பீட்டர் சதுக்கம் நிரம்பி வழிந்தது.
பின்னர் மாலையுடன் பொதுமக்கள் அஞ்சலி நிகழ்ச்சி நிறைவடைந்தது. பின்னர் போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்ட பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு வாடிகன் நகரில் தொடங்கியது. அவரது உடலுக்கு பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது.
செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஏராளமான மக்கள் கூடி உள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து கிறிஸ்துவ பேராயர்கள் பங்கேற்றனர்.
பின்னர் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.
போப் பிரான்சிஸ் உடல் புனித பீட்டர் பேராலயத்தில் இறுதிச்சடங்குகளை முடித்து புனித மேரி பசிலிக்காவுக்கு கொண்டு வந்ததும், ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டோரை கொண்ட ஒரு குழுவினர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்
போப் பிரான்சிஸ், தனது பதவிக்காலம் முழுவதும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக வாடிகன் தெரிவித்தது. சுமார் 250,000 பேர் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவி மெலனியா, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர், இளவரசர் வில்லியம், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா என பல நாடுளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்.
- கத்தோலிக்க திருச்சபையின் தலைமை குரு போப் பிரான்ஸ் மறைவையொட்டி நாளை அவருக்கு இறுதிச்சடங்குகள் நடக்கிறது.
- உள்துறை அமைச்சக அறிவிப்பை சுட்டிக்காட்டி தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21 அன்று காலை தனது 88 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நாளை அவரின் இறுதிச் சடங்கு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாடிகன் வருகை தருகின்றனர்.
தற்போது போப் பிரான்சிஸ் உடல் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பொதுமக்கள், உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவர்.
இந்நிலையில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, கிரண் ரிஜிஜு, மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் மற்றும் கோவா துணை சபாநாயகர் ஜோசுவா பீட்டர் டி சௌசா ஆகியோர் 2நாள் பயணமாக இன்று வாடிகன் கிளம்பியுள்ளனர். நாளை போப் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு இந்தியா சார்பில் அஞ்சலி செலுத்துவார்கள்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை குரு போப் பிரான்ஸ் மறைவையொட்டி நாளை அவருக்கு இறுதிச்சடங்குகள் நடக்கிறது.
இந்நிலையில், நாளைய தினம் (ஏப். 26) போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கையொட்டி தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும், அரசு நிகழ்ச்சிகள் கூடாது என உள்துறை அமைச்சக அறிவிப்பை சுட்டிக்காட்டி தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
- பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 40 பேர் உடல் உபாதையால் பாதிப்பு.
- உணவில் விஷம் ஏதும் கலந்துள்ளதா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மரணத்திற்குப் பிந்தைய சடங்கிற்காக தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்ட 40 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் ராமானுஜ்நகர் மேம்பாட்டுத் தொகுதிக்கு உட்பட்ட விசுன்பூர் கிராமத்தில் நேற்று காலை உணவை உட்கொண்டதாக சூரஜ்பூர் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி மருத்துவர் ஆர்.எஸ்.சிங் தெரிவித்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் அனைவரும் சூரஜ்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரி தெரிவித்தார்.
உணவு உட்கொண்ட இரண்டு, மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 40 பேர் உடல் உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம் பதறி அடித்துக் கொண்டு கிராமத்திற்கு சென்றார்.
- தியாகதுருகம் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுமானுர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). கூலிதொழிலாளி. இவருக்கு கவுண்டமணி (30), செந்தில் (28) என 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக சுப்பிரமணி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. தந்தை காணாமல் போன நிலையில் கடந்த 3 நாட்களாக கவுண்டமணி, செந்தில் ஆகியோர் சுப்பிரமணியை பல இடங்களில் தேடி உள்ளனர்.
சுப்பிரமணியின் மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோர் புதுச்சேரியில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் அவரை தேடிச் சென்றனர்.
இதற்கிடையே கள்ளக் குறிச்சி மாவட்டம் தியாக துருகம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் முதியவர் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை பார்த்த ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இது குறித்து தியாகதுருகம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அங்கு வந்த தியாகதுருகம் வனத்துறையினர் மற்றும் போலீசார் உயிரிழந்த முதியவரின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அடையாளம் காண முயற்சி செய்தனர். கிட்டத்தட்ட காணாமல் போன சுப்பிரமணியின் உருவமும் உயிரிழந்து கிடந்த முதியவரின் உடல் அமைப்பும் ஒரே மாதிரி இருந்ததால் தியாகதுருகம் வனப்பகுதியில் கிடந்த பிணம், தனது தந்தை தான் என முடிவு செய்த கவுண்டமணி, செந்தில் ஆகியோர் பிணத்தை காட்டுப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் எடுத்துக் கொண்டு எலவனாசூர்கோட்டை அருகே உள்ள நெடுமானுர் கிராமத்திற்கு கொண்டு வந்தனர்.
தந்தை உயிரிழந்துவிட்டார் என உறவினர்களுக்கு அவர்கள் தகவல் சொல்லவே, இறுதி சடங்கிற்கான வேலைகளை தொடங்கினார்கள்.
தொடர்ந்து கவுண்டமணி, செந்தில் ஆகியோர் பிணத்தை எடுத்துக்கொண்டு சுடுகாட்டிற்கு சென்ற நிலையில், அவர்களது உறவினர் ஒருவர் சுப்பிரமணியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாலை வாங்க எலவனா சூர்கோட்டைக்கு சென்றார்.
அப்போது கடைவீதியில் முதியவர் சுப்பிரமணி நடந்து வந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியின் உறவினர் நீ இறந்துவிட்டதாக கூறி உனது மகன்கள் அங்கே பிணத்தை வைத்துக் கொண்டு இறுதி சடங்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என கூறினார்.
இதில் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம் பதறி அடித்துக் கொண்டு கிராமத்திற்கு சென்றார். கதையில் மிகப்பெரிய திருப்பமாக சுப்பிரமணி மீண்டும் உயிரோடு வந்ததை பார்த்து கவுண்டமணி, செந்தில் அதிர்ச்சி அடைந்த னர். இந்த தகவல் கிடைத்த சிறிது நேரத்தில் அங்கு வந்த தியாகதுருகம் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.






