என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறுதி சடங்கு"

    • வெங்காயம் எங்கள் குழந்தை போன்றது. விவசாயம் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி
    • ஏற்றுமதி குறைவால், உள்நாட்டில் இருப்பு கூடி, மண்டிகளில் குறைந்த விலைக்கு வாங்கப்படுவதாக விவசாயிகள் வேதனை.

    விலைச்சரிவால் அடிப்படை உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவை கூட எடுக்க முடியவில்லை என விரக்தியில், வெங்காயத்திற்கு விவசாயிகள் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தின் தம்னார் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வுதான் இது. கிராமத்தில் உள்ள தகன மைதானத்தில் ஒரு பாடையில் வெங்காயத்தை கொட்டி, அதற்கு பூமாலை போட்டு, மனிதருக்கு இறுதி சடங்கு செய்வது போல அனைத்து காரியங்களையும் செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் மால்வா மற்றும் நிமர் பகுதிகள் இந்தியாவின் வெங்காய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இந்நிலையில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், வெங்காயத்திற்கு சரியான விலை கிடைக்காததால் இந்த நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மண்டிகளில் வெங்காயம் கிலோவுக்கு 1 முதல் 10 ரூபாய்க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். சிலர் 1 -2 ரூபாய்க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.  

    நியாயமான விலை கிடைக்காததால் இந்த வெங்காய ஊர்வலம் நடத்தப்பட்டது. எங்களுக்கு நிறைய நஷ்டம் ஆகியுள்ளது. அரசு இன்னும் விழித்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? என இறுதிச் சடங்கில் பங்கேற்ற விவசாயி பத்ரி லால் தாக்கட் தெரிவித்தார்.

    "இந்த நூதன போராட்டம் தொடர்பாக பேசிய மற்றொரு விவசாயி, "வெங்காயம் எங்கள் குழந்தை போன்றது. இந்த விவசாயம் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி. அதிக கனமழையால் இரண்டாவது பயிரும் வீணானது. இப்போது வெங்காயமும் காய்ந்துவிட்டது. அதனால்தான் இறுதி ஊர்வலம் நடத்தினோம். எங்கள் செலவை ஈடுகட்டும் விலையைக்கூட அரசு வழங்கவில்லை" என தெரிவித்தார்.

    வெங்காயத்தின் மீதான நீண்டகால வரியால்தான் சர்வதேச சந்தைகளில் இந்தியா போட்டியிட முடியவில்லை எனவும், இதன் விளைவாக ஏற்றுமதி சரிந்து உள்நாட்டில் இருப்பு அதிகமாவதால், மண்டியில் குறைவான விலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த இறுதி ஊர்வலம் வெறும் ஆரம்பம்தான் எனவும், நியாயமான விலை உறுதி செய்யப்படாவிடில் பிராந்தியம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர். 

    • மருமகள் ஸ்ரீதேவி கிராம மக்கள் உதவியுடன் இறுதி சடங்குகளை செய்தார்.
    • ஆதிலட்சுமியின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

    ஆந்திர மாநிலம் கோன சீமா மாவட்டம் சி.எச்.குன்னே பள்ளியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி. இவரது கணவர், மகன் ஏற்கனவே இறந்து விட்டனர். இவரது மருமகள் ஸ்ரீதேவி மற்றும் பேரன், பேத்திளுடன் வசித்து வந்தார்.

    ஆதிலட்சுமியை அவருடைய மருமகள் ஸ்ரீதேவி கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். இந்த நிலையில் ஆதிலட்சுமி நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அவருக்கு இறுதி சடங்குகள் செய்ய யாரும் இல்லை. இதனால் மருமகள் ஸ்ரீதேவி கிராம மக்கள் உதவியுடன் இறுதி சடங்குகளை செய்தார்.

    ஆதிலட்சுமியின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். அங்கு கொள்ளிக்குடம் உடைத்து ஸ்ரீதேவி கொள்ளிவைத்தார். இதனைக் கண்ட கிராம மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

    மாமியாரும் மருமகளும் கீரியும், பாம்புமாக உள்ள காலத்தில் மாமியாருக்கு மருமகள் இறுதி சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

    • இந்த மறுவாழ்வு மையம் கன்னியாஸ்திரிகளால் நடத்தப்பட்டு வருகிறது.
    • தான் இறந்த பின், இந்து வழக்கப்படி இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என்று அப்பெண் கோரியுள்ளார்.

    கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்த இந்து பெண்ணுக்கு இந்து முறைப்படி இஸ்லாமியர் இறுதி சடங்கு செய்த சம்பவம் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருவனந்தபுரம் கடினம்குளம் மறுவாழ்வு மையத்தில் சத்தீஸ்கரை சேர்ந்த ராக்கி என்ற 44 வயது பெண் சிகிச்சை பெற்று வந்தார். இந்த மறுவாழ்வு மையம் கன்னியாஸ்திரிகளால் நடத்தப்பட்டு வருகிறது.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராக்கி, தான் இறந்த பின், இந்து வழக்கப்படி இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

    உயிரிழந்த பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இஸ்லாமியரான சஃபீர் தானே முன்வந்து இந்து முறைப்படி அப்பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார்.

    இந்து பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு இஸ்லாம் மதம் எனக்கு தடையாக இருக்கவில்லை என்று சஃபீர் தெரிவித்தார்.

    சஃபீரின் இச்செயலுக்கு உள்ளூர் ஜமாத் மற்றும் கிராமத்தினர் பாராட்டி வருகின்றனர்.

    • விபத்தில் படுகாயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.

    பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள மக்கள் சிலர் இறந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்காக நேற்று இறுதி சடங்கு ஊர்வலம் சென்றுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென இறுதி சடங்கு ஊர்வலத்திற்குள் வேகமாக புகுந்து விபத்துக்குள்ளானது. இதில், ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறித்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, கார் ஓட்டுனர் போதையில் இருந்ததாக குற்றம்சாட்டினர்.

    இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முகுவா தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகன் இறுதி சடங்கில் பங்கேற்ற கூட்டத்தினர் மீது சரமாரியாக சுட்டார்.
    • முகுவா ஏன் இந்த செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கின்சாகா:

    காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. கடற்படை வீரரான இவரது மகன் திடீரென இறந்து விட்டார். இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது.இதில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது திடீரென ஆவேசம் அடைந்த முகுவா தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகன் இறுதி சடங்கில் பங்கேற்ற கூட்டத்தினர் மீது சரமாரியாக சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உயிருக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் 9 குழந்தைகள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    முகுவா ஏன் இந்த செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
    • ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியில், பெற்றோருடன் வசித்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுமி திடீரென மாயமானாள். தொடர்ந்து நடைபெற்ற போலீசாரின் விசாரணையில், அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    அந்த பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டிருந்த சிறுமி உடலை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக அதே பகுதியில் வசித்த அஸ்பாக் ஆலம் (வயது 23) என்பவன் கைது செய்யப்பட்டான். இவனும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவன் என்பதும் வேலைக்காக கேரளாவில் இருப்பதும் தெரியவந்தது.

    களமசேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் உடல், அவள் படித்த பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது சிறுமியின் தாயார் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடன டியாக அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து சிறுமியின் உடல் ஆலுவா கீழ்மடுவில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அப்போது சிறுமியின் தோழி ஒருவர், தகனப்பெட்டியின் மீது கரடிப் பொம்மையை வைத்து கதறினார்.

    இது அங்கிருந்தவர்களை மேலும் சோகத்திற்கு ஆளாக்கியது. சிறுமியின் உடல் தகனத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில் கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கூறினர். இதுகு றித்து மந்திரி வீணா ஜார்ஜ் கூறுகையில், நீதிக்கான அவர்களது போராட்டத்தில் அரசு துணை நிற்கும் என்றார். அவர்கள் என்னிடம் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என கூறினர். அதனை நான் உறுதி செய்வேன் என்றும் அவர் கூறினார்.

    இதற்கிடையில் கைது செய்யப்பட்ட அஸ்பாக் ஆலத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவனுக்கு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அஸ்பாக் ஆலம் மீது வேறு ஏதும் வழக்குகள் உள்ளனவா? அவனது பின்னணி என்ன என்பது பற்றி அறிய, ஆலுவா போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு பீகார் செல்ல உள்ளது.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் காவலில் ஆலுவா துணை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அஸ்பாக் ஆலத்துக்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிராமத்தில் ஒருவர் இறந்து போனால் உறவினர்கள் கூடுவார்கள்.
    • வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதமில்லாமல் எல்லோரும் இறுதி யாத்திரையில் பங்கெடுப்பார்கள்.

    வாழும் வரை வாழ்ந்து முடித்த பிறகு வெற்றுடலை சுடுகாட்டுக்கு தூக்கி செல்ல நாலு பேர் தேவை!

    ஆனால் அந்த நாலு பேரை கூட சம்பாதித்து வைக்காததாலும், நகர்ப்புற வாழ்க்கை மாற்றத்தாலும் பிணத்தை தூக்கி செல்லவும், இறுதிச் சடங்குகள் செய்யவும் தொழில் நுட்பங்களை தேட வேண்டிய காலம் வந்திருக்கிறது.

    தொழில் ரீதியாக இதற்காக நிறுவனங்கள் வந்து விட்டன. தலைநகர் டெல்லி முதல் நாடு முழுவதும் சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த நிறுவனங்களும் லாபம் கொழிக்கும் நிறுவனங்களாக வளர்ந்து கொண்டிருக்கின்றன.

    ஒரு நிறுவனம் உறுப்பினராக சேர ரூ.37,500 கட்டணமாக வசூலிக்கிறது. ஊரார், உறவினர்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

    செத்துப்போனால் அந்த நிறுவனத்தில் இருந்து வந்து உரிய சடங்குகளை நடத்தி தகனமோ, அடக்கமோ செய்துவிடுகிறார்கள்.

    ஆன்லைனில் தொடர்பு கொண்டு பதிவு செய்தாலும் போதும். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியர் என்று எந்த சமூகமாக இருந்தாலும் சரி. அந்த சமூகத்துக்கு உரிய முறையில் இறுதிச் சடங்கை செய்கிறார்கள். பின்னர் உடலை ஆம்புலன்சில் தூக்கி சென்று தகனம் செய்கிறார்கள். சாம்பலை சேகரித்து எங்கு கரைக்க வேண்டும் என்கிறோமோ அங்கு கரைக்கவும் செய்கிறார்கள்.

    உடலை எடுத்து செல்வது, பிரீசர் பாக்ஸ், அலங்காரம் செய்தல், பண்டிதர்களை ஏற்பாடு செய்தல், பிரார்த்தனை செய்தல், இரங்கல் நிகழ்ச்சி நடத்துவது, பஜனை குழுக்களை ஏற்பாடு செய்தல், உணவு, தேனீர் ஏற்பாடு செய்தல் உள்பட இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமோ அதை சொல்லி அதற்கான கட்டணத்தை செலுத்தினால் போதும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கட்டணம் உள்ளது.

    தாய்-தந்தையரை முதியோர் இல்லங்களில் சேர்த்து விட்டு வெளிநாடுகளில் சொகுசாக வாழும் பிள்ளைகள் தாய்-தந்தை பெயரில் பணம் கட்டி உறுப்பினராக்கி விடுகிறார்கள். இந்த தகவலை முதியோர் இல்லத்திலும் பதிவு செய்து விடுகிறார்கள். இறக்க நேரிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்து இறுதி காரியங்களை செய்துவிட்டு வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு தகவல் தெரிவித்து விடுகிறார்கள்.

    அவர்கள் விரும்பினால் வீடியோ பதிவு செய்தும் கொடுத்து விடுகிறார்கள்.

    அதேபோல் சொந்த, பந்தம், உற்றார், உறவினர் என்ற எல்லா தொடர்புகளையும் துண்டித்துவிட்டு நகர வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டவர்களும் அந்த மாதிரி கடைசி கட்டத்தில் இந்த நிறுவனங்களையே நாடுகிறார்கள்.

    ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும், உணவு, மருந்து, மளிகைப்பொருள், துணி மணி, காய்கறி என்று தேவையான எல்லாமும் வீடு தேடி வருவது போல் இப்போது இறுதிக் கடமை செய்யவும் வீடு தேடி வந்து விடுகிறார்கள்.

    இந்த மாற்றத்தை முன்னேற்றம் என்பதா...? அல்லது...?

    தாய், மகன், அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, நண்பர்கள், உறவினர்கள், ஊரார் என்ற எல்லா உறவுகளில் இருந்தும் ஒவ்வொருவரும் விலகி தனி மனிதனாகி கொண்டிருக்கிறார்கள்.

    வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை என்ற வாழ்க்கை நியதியை கூட கைவிட்டோம்.

    கிராமத்தில் ஒருவர் இறந்து போனால் உறவினர்கள் கூடுவார்கள். வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதமில்லாமல் எல்லோரும் இறுதி யாத்திரையில் பங்கெடுப்பார்கள். கண்ணீர் சிந்துவார்கள், சுமந்து செல்லும் நாலு பேர், சுற்றி செல்லும் பலர் என்று ஊரே கூடி தன்னோடு வாழ்ந்தவரை மரியாதையோடு வழியனுப்பி வைக்கும்.

    அதுதான் மனிதனாக பிறந்து வாழ்ந்ததன் அடையாளம்.

    ஆனால் பணமும், ஆடம்பரமும் மட்டுமே வாழ்க்கை என்ற தவறான முடிவால் முற்றிலும் மாறுபட்ட, சம்பந்தமில்லாத வாழ்க்கை முறையை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார்கள்.

    எல்லாம் நடந்து முடிந்த பின்னே நல்லது, கெட்டது தெரிந்து என்ன லாபம்?

    • மதியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ரேம்போவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
    • இறுதி சடங்கு நிகழ்ச்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமத்தைச் சேர்ந்தவர் மதி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு டாபர்மேன் நாய்க்குட்டி ஒன்றை ஆசையாக வாங்கி அதற்கு ரேம்போ என பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார். ரேம்போ அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே கடந்த 10 ஆண்டாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய் ரேம்போவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் ரேம்போ திடீரென உயிரிழந்தது.

    ரேம்போவின் மறைவு மதியின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. தனது குடும்பத்தில் ஒருவராக இருந்து இறந்த செல்லப்பிராணி ரேம்போவுக்கு மனிதர்களுக்கு செய்யும் இறுதி சடங்குகள் போல் செய்து அடக்கம் செய்ய மதி குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    இதற்காக ரேம்போ இறந்ததை தெரியப்படுத்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினர். தொடர்ந்து வீட்டின் முன்பு பந்தல் அமைத்து சவப்பெட்டியில் ரேம்போவின் உடலை வைத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மதியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ரேம்போவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் மதியின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினர். இதனையடுத்து ரேம்போவுக்கு இறுதி சடங்குகள் செய்து வீட்டிற்குள்ளேயே அடக்கம் செய்தனர். இந்த இறுதி சடங்கு நிகழ்ச்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    • விமானத்தில் பயணம் செய்த ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • இறுதி சடங்கு காரணமாக அங்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவி துணை அதிபர் சொலோஸ் சிலிமா பயணம் செய்த விமானம் விபத்தில் சிக்கியது. இதில் துணை அதிபர் உள்பட விமானத்தில் பயணம் செய்த ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    துணை அதிபர் சொலோஸ் சிலிமா உடல் அவரது சொந்த கிராமமான சைப்-க்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. அந்நாட்டு தலைநகர் லிலோங்-இல் இருந்து இந்த கிராமம் 180 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தில் வைத்தே அவரது இறுதி சடங்குகள் நடைபெற இருக்கிறது. இன்று நடைபெறும் இறுதி சடங்கு காரணமாக அங்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில், துணை அதிபர் உடலை கொண்டு செல்லும் போது அவரது கான்வாய் வாகனம் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கான்வாயில் ராணுவம், காவல் துறை மற்றும் இதர வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

    துணை அதிபரின் சவப்பெட்டியை காண ஏராளமானோர் வீதிகளில் திரண்டு வந்திருந்தனர். சில பகுதிகளில் மக்கள் சாலையில் வழிமறித்து, கான்வாயை நிறுத்தி சவப்பெட்டியை பார்த்தால் தான் வழிவிடுவோம் என்று கோரிக்கை விடுத்தனர். சில பகுதிகளில் இதுபோன்ற சம்வங்கள் அரங்கேறிய நிலையில், கான்வாய் வாகனம் வழியில் காத்திருந்தவர்கள் மீது மோதியது.

    வாகனம் மோதியதில் 2 பெண், 2 ஆண் உள்பட நான்கு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், நான்கு பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.

    • வீட்டை காலி செய்து விட்டு 2 மகள்களுடன் எங்கே செல்வது என மனவேதனை அடைந்தார்.
    • தாயின் இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் வீட்டை உள் பக்கமாக பூட்டிக்கொண்டனர்.

    தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத், புத்த நகரை சேர்ந்தவர் லலிதா (வயது 45). இவருடைய கணவர் ராஜு. உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் வேலை செய்து வருகிறார். தம்பதிக்கு ரவலிகா (24), யஷ்விகா (22) என 2 மகள்கள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக லலிதாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் லலிதா தனது தாயின் வீட்டில் மகள்களுடன் வசித்து வந்தார்.

    லலிதாவின் தாய் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தனக்கு துணையாக இருந்த தாய் இறந்து விட்டதால் லலிதா விரக்தி அடைந்தார்.

    இந்த நிலையில் 3 மாதங்களாக வீட்டு வாடகை கட்டாததால் வீட்டில் உரிமையாளர் வீட்டை காலி செய்ய வேண்டும் என கடந்த மாதம் 21-ந் தேதி தெரிவித்தார்.

    வீட்டை காலி செய்து விட்டு 2 மகள்களுடன் எங்கே செல்வது என மனவேதனை அடைந்தார். இதனால் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்ட மகள்கள் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர்.

    தாயின் இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் வீட்டை உள் பக்கமாக பூட்டிக்கொண்டனர். தாயின் பிணத்தை ஒரு அறையில் வைத்து விட்டு மறு அறையில் தங்கினர். கடந்த 9 நாட்களாக தாயின் பிணத்துடன் வசித்து வந்தனர். நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    இதனை அருகில் உள்ளவர்கள் எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் என எண்ணிய மகள்கள் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தனர். தாய் இறந்தது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லலிதாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அந்த தொகுதியின் எம்.எல்.ஏ சம்பவ இடத்திற்கு வந்து லலிதாவின் மகள்களுக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர் லலிதாவின் இறுதி சடங்குக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • மாணவியின் இறுதி சடங்கில் வெளியூர் ஆட்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்ல முயன்றனர். இதனை அறிந்த போலீசார் மாணவியின் சொந்த ஊரில் குவிக்கப்பட்டனர்.

    கடலூர்:

    சின்னசேலம் பள்ளியில் இறந்த மாணவியின் ஸ்ரீமதியின் உடல் இன்று காலை 6.50 மணிக்கு பெற்றோரிடம் ஒப்டைக்கப்பட்டது. அதன்பின்னர் ஆம்புலன்ஸ் வேன் மூலம் மாணவியின் சொந்த ஊராக பெரியநெசலூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவியின் உடல் இன்று கொண்டு வரபடுவதையொட்டி ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்ல முயன்றனர். இதனை அறிந்த போலீசார் மாணவியின் சொந்த ஊரில் குவிக்கப்பட்டனர். அப்போது போலீசார் ஜீப் மூலம் வெளியூர் நபர்கள் யாரும் மாணவியின் ஊருக்கு வரவேண்டாம். அப்படி மீறி வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். அதனை தொடர்ந்து வெளியூர் நபர்கள் வருவது கண்காணிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் இருந்து மாணவியின் ஊர் வரை போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பெரியநெசலூர் கிராமத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    ×