search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brain death"

    • தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவின் மூளைச்சாவு அடைந்தார்.
    • சங்ககிரி தாசில்தார் வாசுகி தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு கவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் மேற்கு கிராமம் வேங்கிபாளையம் சென்னாயக்கன்காடு பகுதி சேர்ந்த நெசவு தொழிலாளி பழனிசாமி அவரது மனைவி அனிதா தம்பதியின் மகன் கவின் (வயது 21).

    இவர் டெக்ஸ்டைல் டிப்ளமோ படித்துவிட்டு நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கவினுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவின் மூளைச்சாவு அடைந்தார்.

    அதனையடுத்து பெற்றோர் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட கவின் உடலானது சென்னாயக்கன்காடு பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சங்ககிரி தாசில்தார் வாசுகி தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு கவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    அப்போது மோரூர் மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாமோகன்ராஜ், வருவாய் ஆய்வாளர் மலர்விழி, கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    • சுடர் கொடிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
    • உடல் உறுப்புகள் தேவைப்படுபவர்களுக்கு ஆபரேசன் மூலம் பொருத்தப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் உகாயனூர் பகுதியை சேர்ந்தவர் தனபாண்டியன். இவரது மனைவி சுடர்கொடி (வயது 35) . இவர்களுக்கு சின்னத்தங்கம், அட்சயநிதி என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் சின்ன த்தங்கம் பிளஸ்-2 முடித்து முதலாம் ஆண்டு கல்லூரி செல்ல உள்ளார். அட்சய திதி 11-ம் வகுப்பு முடித்து 12ம் வகுப்பு செல்ல உள்ளார். தனபாண்டியன், சுடர்கொடி தம்பதியினர் திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள ஜே.ஜே.நகர் பகுதியில் தள்ளுவண்டி கடையில் உணவு வியாபாரம் செய்து வந்தனர்.

    கடந்த 21-ந் தேதி இரவு சுடர்கொடி வியாபாரத்தை முடித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தனது மகள்களுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். வீரபாண்டி அருகே வந்தபோது, கண்ணில் பூச்சி அடித்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய சுடர்கொடி தனது மகள்களுடன் வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் சுடர் கொடிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மகள்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் சுடர் கொடியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சுடர் கொடியின் உறவினர்கள் அவரை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று அங்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இருப்பினும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.


    இதையடுத்து சுடர் கொடியை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மீண்டும் உறவினர்கள் அழைத்து வந்தனர். இதையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுடர்க்கொடி மூளை சாவு அடைந்ததாக தெரிவித்தனர். மேலும், உடல் உறுப்பு தானம் செய்வதால் சுடர்கொடி இறந்தாலும் மற்றவர்கள் உடலில் அவர் வாழலாம் என மருத்துவர்கள் எடுத்துரைத்தனர். இதைத்தொடர்ந்து கணவர் மற்றும் மகள்கள் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் குழு 5 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொண்டு சுடர்கொடி உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகம், கண் ஆகிய உறுப்புகளை பாது காப்பாக அகற்றினர். பின்னர் ஐஸ் பாக்சில் வைத்து, மருத்துவர்களின் உதவியோடு ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்து வமனைகளுக்கு உடல் உறுப்புகள் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல் உறுப்புகள் தேவைப்படுபவர்களுக்கு ஆபரேசன் மூலம் பொருத்தப்பட்டது.

    திருப்பூர் அரசு மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்வதற்கான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் உடல் உறுப்புகள் தானம் செய்த சுடர்கொடியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    • மோட்டார் சைக்கிளில் சித்தோடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட துளசிமணி படுகாயம் அடைந்தார்.
    • தானமாக பெறப்பட்ட 2 கண்களையும் ஈரோடு அகர்வால் கண் மருத்துவமனைக்கும், தோல் கோவை கங்கா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    பெருந்துறை:

    ஈரோடு மாமரத்துபாளையம் அருகே கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் துளசிமணி (46). கூலித் தொழிலாளியான துளசிமணிக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் துளசிமணி கடந்த 19-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் சித்தோடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட துளசிமணி படுகாயம் அடைந்தார்.

    அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் துளசிமணியை பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 21-ந் தேதி மூளைச்சாவு அடைந்தார்.

    இதையடுத்து துளசி மணியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தார் முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்து உடல் உறுப்புகளை பெறுவதற்காக காத்திருந்த உறுப்பு மாற்ற ஆணையத்தின் விதிமுறைப்படி 21-ந் தேதி மாலையில் துளசிமணியின் உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இதையடுத்து துளசிமணியின் கல்லீரல், இரு சிறுநீரகங்கள், இரு கண்கள் மற்றும் தோல் ஆகியவை பாதுகாப்பாக எடுக்கப்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் கல்லீரல் தானம் பெறுவதற்காக காத்திருந்த ஒருவருக்கும், 2 சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சைக்காக காத்திருந்த ஒருவருக்கும், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நோயாளிக்கும் சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டது. அதேபோல தானமாக பெறப்பட்ட 2 கண்களையும் ஈரோடு அகர்வால் கண் மருத்துவமனைக்கும், தோல் கோவை கங்கா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    உடல் உறுப்பு தானம் வழங்கிய துளசிமணியின் குடும்பத்தாருக்கு அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.வள்ளி சத்யமூர்த்தி நன்றி தெரிவித்ததுடன் துளசி மணியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தினார். அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புதான அறுவை சிகிச்சை செய்யப்படுவது 9-வது முறை என மருத்துவக் கல்லூரி சேகர் தெரிவித்தார்.

    • படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை ஊராட்சிக்குட்பட்ட, மேலப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். (வயது 58) விவசாயி. இவர் கடந்த 12-ந்தேதி இரவு 7 மணி அளவில் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே வடபழனியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வக்குமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுபற்றி மருத்துவமனை டாக்டர்கள் செல்வக்குமார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து வேறு சிலரது உயிர்களை காப்பாற்ற உதவ வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    பின்னர் அரசு உடல் உறுப்பு தானம் திட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி ஈரோடு தனியார் மருத்துவமனையில் செல்வக்குமார் உடலில் இருந்து கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் ஆகியவை அகற்றப்பட்டு கோவை மருத்துவமனைக்கு தானமாக அனுப்பப்பட்டது.மேலும் காங்கயம் வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினர் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் செல்வக்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது. செல்வகுமாருக்கு ஜானகி என்ற மனைவியும், சதீஷ்குமார் என்ற மகனும், கல்பனாதேவி என்ற மகளும் உள்ளனர்.

    • குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில் அவரது நுரையீரல் தானமாகப் பெறப்பட்டது.
    • உறுப்பை கொண்டுவர மாநகர போலீசார் பசுமை வழித்தட வசதி செய்து தரப்பட்டது.

    சென்னை:

    காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நுரையீரல் செயலிழப்புக்கு உள்ளான 50 வயது நோயாளி ஒருவர், வடபழனி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் பெருமூளை ரத்த நாள அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்த 43 வயது பெண் ஒருவர் அண்மையில் மூளைச் சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில் அவரது நுரையீரல் தானமாகப் பெறப்பட்டது.

    அங்கிருந்து 2 மணி நேரத்துக்குள் சென்னைக்கு நுரையீரல் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது. குறிப்பாக பெருங்களத்தூரில் இருந்து வடபழனி வரை போக்குவரத்து தடைகளோ, நெரிசலோ இல்லாமல் உறுப்பை கொண்டுவர மாநகர போலீசார் பசுமை வழித்தட வசதி செய்து தரப்பட்டது.

    இதன் காரணமாக, விரைந்து கொண்டுவரப்பட்ட நுரையீரல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தற்போது அவர் நலமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்டம் பானாமூப்பன்பட்டிக்கு பைக்கில் சென்றார்.
    • மூளைச்சாவு அடைந்த வேலுச்சாமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்.

    நிலக்கோட்டை:

    தமிழகத்தில் முதல்முறையாக உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குன்னூத்துபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது56). விவசாயி. இவர் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்டம் பானாமூப்பன்பட்டிக்கு பைக்கில் சென்றார்.

    மீண்டும் ஊர் திரும்பியபோது எஸ்.மேட்டுப்பட்டி பகுதியில் நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மூளைச்சாவு அடைந்த வேலுச்சாமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். இதற்காக அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்ட கலெக்டர் பூங்கொடி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

    • சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு மூளைச்சாவு அடைந்தார்.
    • கல்லீரல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா உள்ளார் கிராமம்- தென்காசி மெயின்ரோட்டை சேர்ந்தவர் வெள்ளதுரை. இவரது மகன் சண்முக துரை(வயது 52). இவர் சம்ப வத்தன்று விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

    பின்னர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு மூளைச்சாவு அடைந்தார்.

    இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தனர். தொடர்ந்து இன்று காலை அவரது உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதன்படி விபத்தில் உயிரிழந்த சண்முகதுரை யின் நுரையீரல் சென்னை காவேரி மருத்துவ மனைக்கும், கல்லீரல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும், ஒரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கும், கருவிழிகள் நெல்லை அரசு மருத்துக்கல்லூரிக்கும் தானமாக வழங்கப்பட்டது.

    தொடர்ந்து அரசின் வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்புகளை தானம் வழங்கிய சண்முகத்துரையின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    • கோவிந்தராஜ் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உறவினர் முன் வந்தனர்.
    • அரசின் சார்பாக இன்று கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த கோத்தகோட்டா கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது40) என்பவர் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.

    இதனால் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மூளை செயல் இழந்தது தெரிய வந்தது.

    பின்னர் உறுதி செய்து கொண்ட மருத்துவ குழுவினர் அவர்களது உறவினர்களுக்கு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கோவிந்தராஜ் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உறவினர் முன் வந்தனர்.

    இதனை தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ குழுவி னர், உடல் உறுப்புக்கள் தானமாக பெற்றனர். முதலில் தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் முதலில் இருதயம் பிரத்தேயகமாக தயார் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் காவல் துறை பாதுகாப்புடன் சென்னையில் உள்ள எம் ஜி எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் அவரது உடலில் இருந்து 2 சிறுநீரகங்களில், ஒன்று சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் கோவை மருத்துவமனைக்கும், கல்லீரல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

    மேலும் 2 கண்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே கண் பார்வை வேண்டி பதிவு செய்தவர்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்தவுடன் கோவிந்தராஜன் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது பிரேத பரிசோதனை கூடம் அருகே மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், உடலுக்கு மலர் மாலை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதனை அடுத்து பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்து அமரர் ஊர்திக்கு எடுத்துச் செல்கின்ற வரை, சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு இருபுறமும், அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அதேப்போல் பயின்று வருகின்ற மருத்துவ, செவிலியர் மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று, இறந்தாலும், சில உயிர்களை வாழ வைக்கு உடல் உறுப்புகளை தானம் செய்த கோவிந்தராஜனின் உடலுக்கு மலர் தூவி மரியாதை செய்து, வழி அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதயம் அறுவை சிகிச்சை செய்துவுடன், போதிய பாதுகாப்பு வசதிகள், ஏற்படுத்தப்பட்டு, காவல் துறையினர் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் சென்னைக்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டது.

    தமிழக அரசின் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வெளியிட்ட அறிவிப்புகள் இனி வரும் காலங்களில் பல உயிர்களை காப்பாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடல் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கோவிந்தராஜின் உடல் அவரது சொந்த ஊரான போச்சம்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    அங்கு உடல் உறுப்பு தானம் செய்த கோவிந்தராஜூக்கு அரசின் சார்பாக இன்று கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

    • வாலிபரின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுத்தனர்.
    • 25 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு 25 நபர்கள் வாழ்க்கையில் நலம் பெற்று இருக்கிறார்கள் என்றார்.

    தஞ்சாவூர்:

    நாகை மாவட்டம் மாங்கோட்டை பகுதியை சேர்ந்த 29 வயது நபர் சாலை விபத்து ஏற்பட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்தபோது அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது தெரிய வந்தது.

    இது குறித்து டாக்டர்கள் அந்த வாலிபரின் உறவினர்களிடம் தெரியப்படுத்தினர். இதையடுத்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது என அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாமாக முன்வந்து ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து வாலிபரின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுத்தனர். இதயம் மற்றும் நுரையீரரை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கும், கல்லீரல் திருச்சி ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று தஞ்சை அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கும், மற்றொன்று மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கும் மற்றும் தோல் மதுரை ஆஸ்பத்திரிக்கும், தமிழ்நாடு உறுப்பு மற்றும் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி தானமாக வழங்கப்பட்டது. இந்த உறுப்பு தானம் மூலம் 6 நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

    இது குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் கூறுகையில், தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மூளைச்சாவது அடைந்து உறுப்பு தானம் நிகழ்த்தப்படுவது இது 5-வது முறையாகும். இதுவரை ஆஸ்பத்திரியில் 8 நோயாளிகளுக்கு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து மொத்தம் 25 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு 25 நபர்கள் வாழ்க்கையில் நலம் பெற்று இருக்கிறார்கள் என்றார்.

    இந்த உறுப்புதான அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழு நிபுணர்களான ரத்தநாள அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் மருதுதுரை, மயக்கவியல் துறை பேராசிரியர் டாக்டர் சாந்தி பால்ராஜ், சிறுநீரக மருத்துவத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் ராஜ்குமார், மயக்கவியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் லியோ, சிறுநீரக மருத்துவத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் சந்திரசேகர், சிறுநீரக அறுவை சிகிச்சை துறை உதவி பேராசிரியர் டாக்டர் அசோக் ஆகியோரை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் பாராட்டினார்.

    • பலத்த காயமடைந்த இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • மூளைச்சாவு அடைந்த முத்துக்குமரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர்.

    சென்னை:

    சென்னை கொளத்தூரில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது மனைவி மாலா. இவர்களுக்கு 5 குழந்தைகள். மாரிமுத்துவின் சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் பஞ்சந்திருத்தி இருளர் குடியிருப்பு ஆகும்.

    மாரிமுத்து தனது மூத்த மகன் முத்துக்குமரன்(13) என்பவனை திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு மற்ற 4 குழந்தைகளுடன் சென்னை யில் வசித்து வந்தார். கடந்த 27-ந்தேதி முத்துக்குமரன், தனது உறவினரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு 12 வயது நண்பனுடன் வெளியில் சென்றார்.

    திருப்பாச்சூர் அருகே திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது திருத்தணி நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கடந்த 30-ந்தேதி முத்துக்குமரன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். இந்த நிலையில் மூளைச்சாவு அடைந்த முத்துக்குமரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர். அதன்படி சிறுவனின் உடல் உறுப்புகள் மற்ற நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.

    மேலும் விபத்து தொடர்பாக திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
    • அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள அகரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 40). இவர் கடந்த 21-ந்தேதி, அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சேர்த்த னர். அங்கு உடல்நிலை மோச மானதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஜெய ராமன் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் 24-ந் தேதி ெஜயராமன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அப்போது உடல் உறுப்பு தானம் குறித்து டாக்டர்கள் குடும்பத்தினரிடம் விளக்கினர்.

    இதையடுத்து அவர்கள் ெஜயராமனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தனர். அதனை தொடர்ந்து டீன் ரத்தினவேல் அறிவுறுத்தலின் பேரில், சிறப்பு குழுவினர் மூலம் கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவை அகற்றப்பட்டன.

    இதில் கல்லீரல், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும், ஒரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துவ மனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும், கண்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கப்பட்டன. உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு, அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    • நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் ‘கிரீன் காரிடார்’ அமைக்கப்பட்டது.
    • மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது 33). இவர் கடந்த சில நாட்களுக்கு மோட்டார் சைக்கிளில் விருதுநகருக்கு சென்றபோது வாகனம் மோதியது. இதில் திருச்செல்வம் படுகாயம் அடைந்தார்.

    மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் திருச்செல்வத்துக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனின் நிலையை பார்த்து கண்கலங்கினர்.

    மூளைச் சாவு அடைந்த திருச்செல்வத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து அதற்கான நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி கோவை மருத்துவமனையில் சந்திரமோகன் என்பவருக்கு கல்லீரலும், புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புனேவை சேர்ந்த பாவுராவ் நகாடி என்பவருக்கு இதயமும் தேவைப்படுவது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் திருச்செல்வத்தின் இதயம், கல்லீரலை பத்திரமாக அகற்றி ஆம்புலன்ஸ் மூலம், சாலை மார்க்கமாக கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் பிற மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஆம்புலன்ஸ் இடையூறின்றி செல்ல உடனே நடவடிக்கை எடுத்தனர்.

    போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் வழிகாட்டுதலில் மதுரையில் இருந்து இன்று காலை கல்லீரல், இதயத்துடன் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கோவை, புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது. அதன் முன் போலீஸ் வாகனம் சைரன் ஒலித்தபடி சென்றது.

    நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் 'கிரீன் காரிடார்' அமைக்கப்பட்டது. இதன் காரணமாக மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது. இன்று மதியம் 2 மணிக்குள் ஆம்புலன்ஸ் உரிய இடத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது. 

    ×