search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மூளைச்சாவு அடைந்த வாலிபரின் கல்லீரல், இதயம் கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு பறந்தது - ஆம்புலன்சுகள் தடையின்றி செல்ல போலீசார் நடவடிக்கை
    X

    மூளைச்சாவு அடைந்த வாலிபரின் கல்லீரல், இதயம் கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு பறந்தது - ஆம்புலன்சுகள் தடையின்றி செல்ல போலீசார் நடவடிக்கை

    • நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் ‘கிரீன் காரிடார்’ அமைக்கப்பட்டது.
    • மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது 33). இவர் கடந்த சில நாட்களுக்கு மோட்டார் சைக்கிளில் விருதுநகருக்கு சென்றபோது வாகனம் மோதியது. இதில் திருச்செல்வம் படுகாயம் அடைந்தார்.

    மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் திருச்செல்வத்துக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனின் நிலையை பார்த்து கண்கலங்கினர்.

    மூளைச் சாவு அடைந்த திருச்செல்வத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து அதற்கான நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி கோவை மருத்துவமனையில் சந்திரமோகன் என்பவருக்கு கல்லீரலும், புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புனேவை சேர்ந்த பாவுராவ் நகாடி என்பவருக்கு இதயமும் தேவைப்படுவது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் திருச்செல்வத்தின் இதயம், கல்லீரலை பத்திரமாக அகற்றி ஆம்புலன்ஸ் மூலம், சாலை மார்க்கமாக கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் பிற மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஆம்புலன்ஸ் இடையூறின்றி செல்ல உடனே நடவடிக்கை எடுத்தனர்.

    போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் வழிகாட்டுதலில் மதுரையில் இருந்து இன்று காலை கல்லீரல், இதயத்துடன் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கோவை, புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது. அதன் முன் போலீஸ் வாகனம் சைரன் ஒலித்தபடி சென்றது.

    நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் 'கிரீன் காரிடார்' அமைக்கப்பட்டது. இதன் காரணமாக மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது. இன்று மதியம் 2 மணிக்குள் ஆம்புலன்ஸ் உரிய இடத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×