என் மலர்tooltip icon

    செய்திகள்

    • மனுதாரரின் கணவர் எந்தவொரு சுயாதீனமான முடிவுகளையும் அல்லது நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத கோமா நிலையில் இருக்கிறார்.
    • தாயை பாதுகாவலராக நியமிப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அந்த தம்பதியரின் இரு குழந்தைகளும் பிரமாண பத்திரங்களை சமர்ப்பித்து உள்ளனர்.

    டெல்லி ஐகோர்ட்டில் ஒரு பெண் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் எனது கணவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால், தொடர்ச்சியாக சுய நினைவற்ற நிலையில்(கோமா) உள்ளார். கணவரின் மருத்துவத் தேவைகளையும் செலவுகளையும் நிர்வகிப்பதற்காக, அவரது அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் கணவருக்கு பாதுகாவலராக என்னை நியமிக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறி இருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி சச்சின் தத்தா விசாரித்து வந்தார்.

    நேற்று இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், 'மனுதாரரின் கணவர் எந்தவொரு சுயாதீனமான முடிவுகளையும் அல்லது நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத கோமா நிலையில் இருக்கிறார். மருத்துவ அறிக்கையின் படி, அவர் 100 சதவீதம் மாற்றுத்திறனாளி என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரது நலனுக்காக, ஒரு சட்டப்பூர்வ பாதுகாவலரை நியமிப்பது அவசியமாகிறது.

    தாயை பாதுகாவலராக நியமிப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அந்த தம்பதியரின் இரு குழந்தைகளும் பிரமாண பத்திரங்களை சமர்ப்பித்து உள்ளனர்.

    எனவே, மனுதாரரின் கணவர் மருத்துவ கோளாறு காரணமாக சுயநினைவற்ற நிலையில் இருப்பதால் அவரது மனைவியை சட்டப்பூர்வ பாதுகாவலராக இந்த கோர்ட்டு நியமிக்கிறது' என கூறி உள்ளார்.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • ‘டார்ச்லைட்' படத்தில் விலைமாதுவாக நடித்து ஆச்சரியப்படுத்தினார்.
    • புகைப்பட கலைஞராக மாறி, வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து வருகிறார்.

    'ஜெயம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த சதா, அடுத்தடுத்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து கவனம் ஈர்த்தார். தமிழ் தாண்டி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்தார்.

    பின்னர் திடீரென படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். இதையடுத்து 'டார்ச்லைட்' படத்தில் விலைமாதுவாக நடித்து ஆச்சரியப்படுத்தினார். தற்போது முழுவதுமாகவே சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்ட சதா, புகைப்பட கலைஞராக மாறி, வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து வருகிறார்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு லேசாக கவர்ச்சி காட்டும் தனது படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதன்மூலம் மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய கதைகளும் கேட்டு வருவதாக தகவல்.

    41 வயதாகும் சதா மீண்டும் சினிமாவுக்கு வந்து சாதிப்பாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர்.

    • ரேஷன் கார்டு தாரர்களுக்கு இந்த மாதம் வழங்க வேண்டிய சர்க்கரை, அரிசி போன்றவை வந்துவிட்டன.
    • பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க வேண்டிய பொருட்கள் இன்னும் 2 நாட்களில் வந்துவிடும்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் ரேஷன் கார்டு தாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பரிசு தொகுப்பும், சில நேரங்களில் ரொக்க பணமும் வழங்கப்படும். கடந்த 2022-ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ரொக்க பணம் கொடுக்கப்படவில்லை. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டுமே வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்க பணம் வழங்கப்படலாம் என பொதுமக்கள் ஆர்வமுடன் எதிர்ப்பார்த்துள்ளனர். இதற்கிடையில் தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு -2026 என்ற தலைப்பில் டோக்கன் அச்சிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

    இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ரேஷன் கார்டு தாரர்களுக்கு இந்த மாதம் வழங்க வேண்டிய சர்க்கரை, அரிசி போன்றவை வந்துவிட்டன. பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க வேண்டிய பொருட்கள் இன்னும் 2 நாட்களில் வந்துவிடும். ஏற்கனவே இலவச வேட்டி, சேலைகள் ரேஷன் கடைகளுக்கு வந்துள்ளன. நேற்று டோக்கன் வரப்பெற்றுள்ளன. அதில் கடையின் பெயர், எண், டோக்கன் எண், ரேஷன் கார்டு தாரரின் பெயர், ரேஷன் அட்டை எண், கிராமம், தெரு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் அச்சிடப்பட்டுள்ளது.

    இந்த டோக்கன்கள் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வரும்போது அந்த டோக்கன் திரும்ப பெறப்படும். டோக்கன் பெறாதவர்கள், பரிசு தொகுப்பு வாங்க வரும்போது அவற்றை நிரப்பி கொடுக்க வேண்டும். இதன் மூலம் அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொருட்கள் வழங்குவது உறுதி செய்யப்படும் என்றார்கள்.

    • சமூக, பொருளாதார பிரச்சனைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
    • கடந்த ஆண்டு 10 கோடிக்கும் குறைவான குழந்தைகளே அங்கு பிறந்துள்ளன.

    உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவில் சுமார் 140 கோடி பேர் வசிக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த கடந்த 1994-ம் ஆண்டு ஒரு குழந்தை கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இதனால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து முதியோர் மக்கள் தொகை உயர்ந்தது. இது சமூக, பொருளாதார பிரச்சனைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து ஒரு குழந்தை கொள்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. ஆனால் அங்குள்ள மக்கள் தற்போது ஒரு குழந்தை முறைக்கு பழகி விட்டனர். இதனால் கடந்த ஆண்டு 10 கோடிக்கும் குறைவான குழந்தைகளே அங்கு பிறந்துள்ளன. இந்தநிலையில் குழந்தை பிறப்பை ஊக்குவிக்க தற்போது கருத்தடை சாதனங்கள், மாத்திரைகள் போன்றவற்றுக்கு அரசாங்கம் 13 சதவீதம் வரி விதித்து உள்ளது.

    • கைது செய்த 11 மீனவர்களை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
    • விசாரணை நடத்தியபோது கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் என தெரியவந்தது.

    தமிழக-புதுச்சேரி மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி சென்றதாக கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலுக்கு மின்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி சென்றதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த 11 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன் துறைமுகம் வடமேற்கு கடற்பரப்பில் இன்று காலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகை பறிமுதல் செய்து 11 மீனவர்களையும் கைது செய்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்கள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    கைது செய்த 11 மீனவர்களையும் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் விசாரணை நடத்தியபோது கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் என தெரியவந்தது.

    விசாரணை முடிந்து மீனவர்கள் 11 பேரும் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    தமிழக-புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வரும் நடவடிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து தீர்வு காணவேண்டும் என்று மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    • மகாராஷ்டிரா மாநிலத்தில் 38 புலிகளும், கேரளாவில் 13 புலிகளும், அசாமில் 12 புலிகளும் இறந்துள்ளன.
    • கடைசியாக, கடந்த 28-ந்தேதி, மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு ஆண் புலி உயிரிழந்தது.

    உலகிலேயே அதிகமான புலிகள் கொண்ட நாடு, இந்தியா. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 2025-ம் ஆண்டில் 166 புலிகள் இறந்துள்ளன. இவற்றில் 31 புலிக்குட்டிகளும் அடங்கும்.

    அதற்கு முந்தைய 2024-ம் ஆண்டில் 126 புலிகள்தான் இறந்தன. அதனுடன் ஒப்பிடுகையில், 2025-ம் ஆண்டில் 40 புலிகள் அதிகமாக உயிரிழந்துள்ளன.

    இவற்றில் புலிகள் மாநிலம் என்று அழைக்கப்படும் மத்தியபிரதேசத்தில் அதிகபட்சமாக 55 புலிகள் இறந்துள்ளன.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 38 புலிகளும், கேரளாவில் 13 புலிகளும், அசாமில் 12 புலிகளும் இறந்துள்ளன.

    கடந்த ஆண்டு, முதலில் புலி பலியான சம்பவம், ஜனவரி 2-ந்தேதி, மகாராஷ்டிரா மாநிலம் பிரம்மபுரி வனக்கோட்டத்தில் நடந்துள்ளது. அது ஒரு ஆண் புலி ஆகும். அதற்கு 3 நாட்கள் கழித்து, மத்தியபிரதேச மாநிலம் பெஞ்ச் புலிகள் சரணாலயத்தில் ஒரு பெண் புலி இறந்தது. கடைசியாக, கடந்த 28-ந்தேதி, மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு ஆண் புலி உயிரிழந்தது.

    இடப்பற்றாக்குறை காரணமாக ஏற்படும் மோதல்தான் புலிகள் இறப்புக்கு முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். வேட்டையாடுதல், மின்சார தாக்குதல், இயற்கை மரணம் ஆகிய காரணங்களும் இருப்பதாக கூறுகிறார்கள்.

    • ரசிகர்களின் வேண்டுகோளை படக்குழுவினர் புறந்தள்ளினார்கள்.
    • எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்ற நிலையில் ‘பராசக்தி' படக்குழு உள்ளது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்த 'பராசக்தி' படம் விரைவில் திரைக்கு வருகிறது. ஏற்கனவே தணிக்கை வாரியத்தின் சிக்கலை கடந்து வந்திருக்கும் 'பராசக்தி' படத்துக்கு இந்த முறை சிவாஜி ரசிகர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

    நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''நடிகர் திலகம் சிவாஜி நடித்த 'பராசக்தி' படத்தின் பெயரை மீண்டும் அதேபெயரில் எடுக்கவேண்டாம் என்று ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் ரசிகர்களின் வேண்டுகோளை படக்குழுவினர் புறந்தள்ளினார்கள்.

    இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தீ பரவட்டும் என்று சிவாஜியிடம் இருந்து சிவகார்த்திகேயன் தீப்பந்தம் பெறுவது போல ஒரு போஸ்டர் தயாரித்து, அதை சிவகார்த்திகேயனிடம் கொடுத்து 'பராசக்தி' படத்துக்கு விளம்பரம் செய்துள்ளார்கள். சிவாஜிகணேசன் வாரிசுகளாக பிரபு, அவரைத்தொடர்ந்து விக்ரம் பிரபு இருக்கையில், அவரது வாரிசு என்ற ரீதியில் இப்படி விளம்பரம் தேடிக்கொள்ள யார் அனுமதி கொடுத்தது? எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்ற நிலையில் 'பராசக்தி' படக்குழு உள்ளது. 'பராசக்தி' பெயரை அபகரித்ததோடு, சிவாஜி புகைப்படத்தை வணிக நோக்கம் மற்றும் சுயலாபத்துக்காக பயன்படுத்துவதை அவரது ஆன்மா மன்னிக்காது'', என்று குறிப்பிட்டுள்ளார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வருகிற 5-ந்தேதி ஸ்ரீரங்கத்தில் ‘மோடி பொங்கல்' நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
    • ஜனவரி 4-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுக்கோட்டைக்கு வர உள்ளார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தித்திக்கும் பொங்கலுடன் தொடங்க இருக்கிறது. தொடர்ந்து 2 மாதங்களுக்கு தீவிர பிரசாரத்தை முன்னெடுக்கவும் பா.ஜ.க. வியூகங்கள் அமைத்து வருகிறது.

    அந்த வகையில் வருகிற 5-ந்தேதி ஸ்ரீரங்கத்தில் 'மோடி பொங்கல்' நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு உள்ளது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்க உள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஜனவரி 4-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுக்கோட்டைக்கு வர உள்ளார். அன்றைய தினம் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும் 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற யாத்திரையின் நிறைவு விழா நடக்கிறது. இந்த விழாவில் அவர் பங்கேற்று பேசுகிறார்.

    இதில், சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்க இருக்கின்றனர். இதையடுத்து, திருச்சியில் அமித்ஷா தங்குகிறார். பின்னர், மறுநாள் (5-ந்தேதி) திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்கிறார். இதையடுத்து காலை 11 மணி அளவில் மன்னார்புரம் ராணுவத்திடலில் ஏறக்குறைய 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் "மோடி பொங்கல்" விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார்.

    அமித்ஷா கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பியூஸ் கோயல், பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்கள், மேலிட பொறுப்பாளர்களும் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில் 4-ந்தேதி தமிழகம் வரும் அமித்ஷாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 5-ந்தேதி திருச்சியில் வைத்து இருவரின் சந்திப்பு நடக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    அமித்ஷாவுடனான சந்திப்பில் தொகுதி பங்கீடு, கூட்டணி விரிவாக்கம், தேர்தல் வியூகம், ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் இணைப்பு, குறித்து ஆலோசிக்க வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

    வரும் 5-ந்தேதி திருச்சியில் நடக்கும் பொங்கல் விழாவிலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

    • இலவச தரிசனத்தில் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
    • சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக பாரம்பரிய உடைகளை அணிந்து வரவேண்டும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. அதையொட்டி 30-ந்தேதி அதிகாலை 2.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. முதல் 3 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய மொத்தம் 25 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். அதில், குலுக்கல் முறையில் 1 லட்சத்து 76 ஆயிரம் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வான பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய எஸ்.எம்.எஸ். மற்றும் இ.மெயில் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டன. அதில், 30-ந்தேதி 57 ஆயிரம் பக்தர்களும், 31-ந்தேதி 64 ஆயிரம் பக்தர்களும், ஆங்கிலப் புத்தாண்டான நேற்று 55 ஆயிரம் பக்தர்களும் டோக்கன்கள் மூலம் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கான சொர்க்க வாசல் தரிசனம் முழுமையாக நிறைவடைந்தன.

    இந்தநிலையில் இன்று முதல் 8-ந்தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்துக்கான டோக்கன்கள் தேவையில்லை, டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் வருகிற 8-ந்தேதி வரை சாதாரணமாக இலவச தரிசனத்தில் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

    அதற்காக கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனம், ஆர்ஜித சேவைகள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கான தரிசனம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனங்கள் ஆகியவை இன்று முதல் 8-ந்தேதி வரை நடக்காது, அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மேலும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன டோக்கன்கள் (டைம் ஸ்லாட் டோக்கன்கள்) வழங்கும் கவுண்ட்டர்கள், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் கவுண்ட்டர்கள், வி.ஐ.பி. பிரேக் தரிசன டோக்கன் கவுண்ட்டர்கள் இந்த நாட்களில் மூடப்பட்டு இருக்கும். இதற்காக எந்தவிதமான பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்பட மாட்டாது.

    சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக பாரம்பரிய உடைகளை அணிந்து வரவேண்டும். ஆண்கள் வேட்டி அல்லது பைஜாமா அணிய வேண்டும். பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிய வேண்டும். சாமி தரிசனத்துக்கு வரும் அனைத்துப் பக்தர்களும் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள், தேவஸ்தான ஊழியர்கள் வழங்கும் அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    அதேநேரத்தில் திருமலை, திருப்பதி, ரேணிகுண்டா மற்றும் சந்திரகிரி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் உள்ளூர் பக்தர்களுக்காக 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இ.குலுக்கல் முறையின் மூலம் தினமும் 5 ஆயிரம் தரிசன டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 4 ஆயிரத்து 500 டோக்கன்கள் திருப்பதி, ரேணிகுண்டா மற்றும் சந்திரகிரி ஆகிய உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 500 டோக்கன்கள் திருமலை பாலாஜிநகரில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி கோவிலில் இன்று முதல் 8-ந்தேதி வரை இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி என்பதால் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    • ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.
    • ‘வைபை நெட்வொர்க்’ மூலம் குரல் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பவும், பெறவும் இது உதவுகிறது.

    இந்தியாவின் முதன்மையான அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நாடு தழுவிய அளவில் 'வைபை' அழைப்பு எனப்படும் 'வாய்ஸ் ஓவர் வைபை' சேவையை இந்த புத்தாண்டில், அறிமுகம் செய்துள்ளது.

    இந்த மேம்பட்ட சேவை இப்போது நாட்டின் ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். இது சவாலான சூழல்களிலும் தடையற்ற, உயர்தர இணைப்பை உறுதி செய்யும்.

    'வைபை நெட்வொர்க்' மூலம் குரல் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பவும், பெறவும் இது உதவுகிறது. வீடுகள், அலுவலகங்கள், அடித்தளங்கள், தொலைதூர பகுதிகள் போன்ற பலவீனமான 'மொபைல் சிக்னல்' உள்ள இடங்களில் தெளிவான மற்றும் நம்பகமான இணைப்பை இது உறுதி செய்கிறது. இதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை.

    வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன்களில் 'வைபை காலிங்' என்பதை மட்டும் 'செட்டிங்ஸ்' அமைப்பில் இயக்க வேண்டும்.

    இந்த தகவல்களை தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு செல்லலாம் அல்லது 18001503 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    • இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    லட்சத்தீவு- குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×