

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் இக்கோவிலில் நடைபெறும் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா இன்று அதிகாலை பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முன்னதாக மேள தாளங்கள் முழங்க கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மாதேஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் முன்பு மேளதாள இசைக்கு ஏற்ப பக்திப் பரவசத்துடன் நடனமாடினர்.
மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று பண்ணாரி அம்மன் சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நாளை முதல் சுற்று வட்டார கிராமங்களில் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா மார்ச் 31ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.