Summer Health Tips| வந்தாச்சு கோடை... வாட்டும் வெயிலில் இருந்து உடலை பாதுகாக்க பயனுள்ள டிப்ஸ்

Summer Health Tips| வந்தாச்சு கோடை... வாட்டும் வெயிலில் இருந்து உடலை பாதுகாக்க பயனுள்ள டிப்ஸ்
Published on
Summary

உடலுக்குக் குளிர்ச்சி தரும் தானியங்களான சோளம், பார்லி போன்றவற்றை கோடை காலத்தில் சேர்க்கலாம்.

மார்ச் மாத மத்தியிலேயே கோடையின் தீவிரம் தெரியத் தொடங்கிவிட்டது. இனி நாட்கள் செல்லச் செல்ல, கோடையின் கடுமை அதிகரிக்கும். இந்நிலையில், கோடை காலத்தை உடல் ஆரோக்கியப் பிரச்சனைகள் இன்றி நலமாய் கழிக்க உதவும் சில குறிப்புகளை பார்க்கலாம்...

* கோடையில் சூரிய ஒளியின் தாக்கத்தால் நம் சருமத்தில் புறஊதாக் கதிர்களால் பாதிப்பு ஏற்படலாம். ஆக்சிடேசன் எனும் வேதி மாற்றம் உங்களை களைப் படையச் செய்யும். அதிலிருந்து தப்பிக்க நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுவும் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

* உடலுக்குக் குளிர்ச்சி தரும் தானியங்களான சோளம், பார்லி போன்றவற்றை கோடை காலத்தில் சேர்க்கலாம். மேலும், சோம்பு, சீரகம், பழங்களில் திராட்சை, பேரீச்சை மற்றும் நீர்ச்சத்துள்ள பழங்கள் நல்லது.

* கோடை காலத்தில் வரும் முக்கியமான பிரச்சனை, 'புட் பாய்சனிங்' எனப்படும் உணவு நஞ்சாதல். அதைத் தவிர்க்க, சீரகத்தை வறுத்துப் பொடி செய்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு ஸ்பூன் பொடியை மோரில் கலந்து குடித்து வர, புட் பாய்சன் அபாயம் நீங்கும். வயிற்றுப்போக்கு போன்றவற்றையும் சரிசெய்யும்.

* கோடை காலத்தில் இரவில் பனங்கற்கண்டு கலந்து பாலை அருந்தி வர, உடல் சூடு தணியும். பகலில் கொத்தமல்லித் தழையை அரைத்து மோரில் கலந்து குடித்தால் உடல் சூடு குறையும். ரோஜா இதழ்களை தேனில் ஊறவைத்துச் சாப்பிடலாம்.

* உடலில் சூட்டை அதிகரிக்கும் வேர்க்காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பீட்ரூட் மற்றும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, காளான் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

* கோடை காலத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதுடன், நீரிழப்பைத் தடுக்கவும் தர்பூசணி உதவுகிறது. தர்பூசணி உங்களை நீரேற்றமாகவும், குளிர்ச்சியாகவும் வைப்பதுடன், சூரிய வெப்பத்தால் சருமம் சேதமடையாமல் பாதுகாக்கிறது. முலாம் பழம், கோடைகால வெப்பத்தால் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களைத் தவிர்த்து உடலை நீரேற்றமாக வைக்க உதவும்.

* கோடை நாட்களில் அதிக தாகம் ஏற்படும். அதற்கு, செம்பருத்தி பூவின் 5 இதழ்களை ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து குடிக்கலாம். நெல்லி வற்றலை பாக்கு போல வாயிலிட்டு மென்று வந்தாலும் தாகம் தணியும். உணவில் தேனை அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம்.

* வெயில் நேரத்தில் அவ்வப்போது முகம் கழுவிக் கொள்ளுங்கள். உடனே துணியால் துடைக்காமல் அப்படியே விட்டு விடுங்கள். சிறிது நேரத்தில் தானாகவே உலர்ந்து விடும். நல்ல புத்துணர்ச்சியும் கொடுக்கும்.

* அதிக வெப்பம் காரணமாக சில நேரங்களில் கண்கள் எரியும். அப்போது ஒரு கைக்குட்டை அல்லது தூய துணியை நீரில் நனைத்து அவ்வப்போது கண்களில் ஒற்றிக்கொள்ளுங்கள்.

* கோடை காலத்தில் கண்களின் நலன் காக்க தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வரலாம். அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரை சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும். வெளியே செல்லும்போது சன்ஸ் கிரீன் போட்டுக்கொள்வதும் நல்லது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com