என் மலர்tooltip icon

    இந்தியா

    • தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • 2024-25-ம் ஆண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாயை தொடும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் அவர் கூறியதாவது:

    தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024-25 மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

    மின்சாரத்தில் இயங்கும் கார்களின் விற்பனை 20.8 சதவீதமும், இருசக்கர வாகனங்களின் விற்பனை 33 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 18 சதவீதமும் அதிகரித்துள்ளது.

    அதேபோல், பெட்ரோல், டீசல் கார்களின் கார்களின் விற்பனை 4.2 சதவீதமும், இரு சக்கர வாகனங்களின் விற்பனை 14 சதவீதமும் மூன்று சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 6 சதவீதமும் அதிகரித்துள்ளது.

    வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்களின் சந்தை 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டும். ஆண்டுக்கு 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் 400-க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களின் ஸ்டார்ட் அப் சந்தையை உருவாக்கும் என தெரிவித்தார்.

    • இருதரப்பினரும் அங்கிருந்த நாற்காலி, தட்டு என கையில் கிடைத்ததை வைத்து மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர்.
    • வரதட்சணைக் கேட்டதே திருமணம் நிற்க காரணம் என மணமகள் தரப்பு விளக்கம்

    பீகாரின் புத்தகயாவில் ரசகுல்லா பற்றாக்குறையால் திருமணம் நின்றுபோனது ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 29 அன்று புத்த கயாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    திருமண சடங்குகள் முடிந்த நிலையில், ரசகுல்லா பற்றவில்லை என பெண்ணின் வீட்டார் பிரச்சனையை தொடங்கியதாக புத்தகயா போலீசார் தெரிவித்தனர். பேச்சு திடீரென மோதலாக மாற இருதரப்பினரும் அங்கிருந்த நாற்காலி, தட்டு என கையில் கிடைத்ததை வைத்து மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் பலரும் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மணமகளின் குடும்பத்தினர் பொய்யான வரதட்சணை வழக்கைப் பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர். சண்டை நடந்து கொண்டிருக்கும் போது, மணமகளுக்கு பரிசளிக்க கொண்டு வந்த நகைகளை மணமகளின் குடும்பத்தினர் எடுத்துச் சென்றதாக மணமகனின் தாயார் முன்னி தேவி குற்றம் சாட்டினார். மேலும் ஹோட்டல் புக்கிங்கையும் அவர்களே செய்ததாக மணமகனின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    மணமகனின் குடும்பத்தினர் திருமணத்தைத் தொடர ஒப்புக்கொண்டாலும், மணமகளின் குடும்பத்தினர் மறுத்ததாக, மணமகன் தரப்பு உறவினர் தெரிவித்தனர்.


    • ஆந்திர அரசு ஒதுக்கிய 480 ஏக்கர் நிலத்தினை அதானி நிறுவனத்திற்கு மாற்ற ரெய்டன் இன்ஃபோடெக் ஒப்புதல்
    • மாநில அரசு ரூ.22,000 கோடியை ஊக்கத்தொகையாக வழங்குகிறது

    ஏஐ தரவு மையங்கள் அமைப்பதற்காக ஆந்திர அரசு ஒதுக்கிய 480 ஏக்கர் நிலத்தினை அதானி நிறுவனத்திற்கு மாற்ற ரெய்டன் இன்ஃபோடெக் ஒப்புதல் அளித்துள்ளது.

    ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் அனகப்பள்ளி மாவட்டங்களில் அமையவுள்ள இந்த திட்டத்தில் அதானி இன்ஃப்ரா (இந்தியா) பிரைவேட் லிமிடெட், அதானி கோனெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், அதானி பவர் இந்தியா பிரைவேட் லிமிடெட், பாரதி ஏர்டெல் லிமிடெட், என்எக்ஸ்ட்ரா டேட்டா லிமிடெட் மற்றும் என்எக்ஸ்ட்ரா விசாக் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் தங்கள் கூட்டாளிகள் என முன்னரே மாநில அரசிடம் கூகிளுக்கு சொந்தமான ரெய்டன் தெரிவித்தது.

    இந்நிலையில்," 28/11/2025 ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன்படி, விசாகப்பட்டினம் மற்றும் அனகப்பள்ளி மாவட்டங்களில் உள்ள 480 ஏக்கர் நிலத்தை அதானி இன்ஃப்ரா (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு அரசாங்கம் இதன் மூலம் அனுமதி அளிக்கிறது" என டிசம்பர் 2 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திராவில் ஏஐ தரவு மையங்களை அமைக்க ரெய்டன் நிறுவனம் ரூ. 87,500 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ள நிலையில், மாநில அரசு ரூ.22,000 கோடியை ஊக்கத்தொகையாக வழங்குகிறது.

    • இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் டெல்லி வருகிறார்.
    • இந்தியாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் யார் வந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை சந்திப்பது வழக்கம்.

    பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை ரஷிய அதிபர் புதின் டெல்லி வருகிறார்.

    இந்த சூழலில், டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் புதினுக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தியிடம் புதின் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "பொதுவாக இந்தியாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் யார் வந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை சந்திப்பது வழக்கம். வாஜ்பாய், மன்மோகன் சிங் அரசாங்கத்தில் இதுதான் நடந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. நான் சந்திப்பதை மோடி அரசு விரும்பவில்லை. நான் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம், எதிர்கட்சித் தலைவரை சந்திக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்படுவதாக அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • இண்டிகோ விமான நிறுவனம் ஒரே நாளில் முக்கிய 3 நகரங்களில் விமானங்களின் சேவையை ரத்துசெய்தது.
    • மும்பை விமான நிலையத்தில் 86 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    மும்பை:

    நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ பல்வேறு காரணங்களுக்காக இன்று ஒரே நாளில் 150-க்கும் அதிகமான விமானங்களின் சேவையை ரத்து செய்தது.

    மும்பை விமான நிலையத்தில் 86 விமானங்களும், பெங்களூருவில் 73 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் விமானப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    கடந்த நவம்பரில் மட்டும் ,1000க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்களின் சேவை ரத்துசெய்யப்பட்டது. ஊழியர்கள் வேலைநிறுத்தம், வான் போக்குவரத்து கட்டுப்பாடு கோளாறு மற்றும் விமானம், விமான நிலையத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு ஆகியவற்றால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமானங்கள் ரத்து தொடர்பாக இண்டிகோ நிர்வாகம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • காற்று மாசு பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேனர்களை வைத்திருந்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் காற்று மாசுப் பிரச்சனை அதிக அளவில் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

    டெல்லியில் காற்று மாசுப் பிரச்சனையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று பாராளுமன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் முகக்கவசத்துடன் வந்தனர்.

    இந்த நிலையில் டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் என்று முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    காங்கிரஸ் பாராளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரியங்கா, டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அப்போது சோனியா காந்தி நிருபர்களிடம் கூறும்போது, 'குழந்தைகள் இறந்து கொண்டு இருப்பதால் அரசு காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை போன்ற வயதானவர்களும் காற்று மாசு'வால் சிரமப்படுகிறார்கள் என்றார்.

    பிரியங்கா கூறும்போது, 'காற்று மாசுபாடு ஒரு அரசியல் பிரச்சனை அல்ல. இந்த பிரச்சனை குறித்து விவாதம் நடத்தி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் அனைவரும் காற்று மாசுடன் தான் இருக்கிறோம். மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்' என்றார்.

    காற்று மாசு பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேனர்களை வைத்திருந்தனர். மேலும் பிரதமர் நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்களையும் எழுப்பினார்கள்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக நேற்று முன்தினமும், புதிய தொழிலாளர்கள் சட்டத்துக்கு எதிராக நேற்றும் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    3-வது நாளாக இன்று டெல்லி காற்று மாசு பிரச்சனையை தடுக்க கோரி பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 




    • கோவில்களில் பாதுகாப்பு-கூட்டத்தை கட்டப்படுத்துவது காவல்துறை மற்றும் தேவசம்போர்டின் பொறுப்பு.
    • பவுன்சர்களை நியமிப்பது தவறான நடைமுறை என்று மனுதாரர் வாதிட்டார்.

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திரிபுனித்துராவில் பூர்ணத்ரயீசர்கோவில் இருக்கிறது. மிகவும் பழமையான விஷ்ணு கோவிலான இங்கு பெரிய தீபம் ஏற்றும் விழாவில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் பவுன்சர்கள் நியமிக்கப்பட்டதற்கு எதிராக மராடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் எனபவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனு ஐகோர்ட்டு நீதிபதிகள் ராஜா, விஜயராகவன், ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மற்றும் தேவசம்போர்டு தரப்பில் ஆஜரானவர்கள் வாதிட்டனர்.

    கூட்டத்தை கட்டுப்படுத்தும் பவுன்சர்கள் கருப்பு ஆடைகள், பேண்ட் மற்றும் காவி சால்வைகள் அணிந்திருந்தனர். அவர்கள் அணிந்திருந்த டி-சர்ட்டில் பவுன்சர் என்று எழுதப்பட்டிருந்தது. கோவில்களில் பாதுகாப்பு-கூட்டத்தை கட்டப்படுத்துவது காவல்துறை மற்றும் தேவசம்போர்டின் பொறுப்பு. அதற்காக பவுன்சர்களை நியமிப்பது தவறான நடைமுறை என்று மனுதாரர் வாதிட்டார்.

    அதே நேரத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பவுன்சர்கள் அனுப்பப்பட்டனர் என்று தேவசம்போர்டு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், கோவில்களில் பாதுகாப்புக்காக மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பவுன்சர்களை நியமிக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் பவுன்சர் என்று எடிதப்பட்டிருக்கும் டிசர்ட் அணிந்தும், பொருத்தமற்ற உடைகளை அணிந்தும் பணியாளர்கள் மற்றும் பவுன்சர்களை கோவில்களில் பாதுகாப்பு பணியில் நியமிக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு தெளிவுபடுத்தியது.

    • இந்​தியா-அமெரிக்கா இடையே வரி விவ​காரத்​தில் இன்​னும் உடன்​பாடு ஏற்​ப​டா​மல் உள்​ளது.
    • இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்​பந்​தத்​தில் இழுபறிநிலை நீடித்து வரு​கிறது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அந்நிய செலாவணி சந்தையில் நேற்று வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. முதல் முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90.30 வரை சரிந்தது.

    இந்த நிலையில் இன்றும் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடைந்தது. ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு 90.43 வரை சரிந்தது.

    இந்தியா-அமெரிக்கா இடையே வரி விவகாரத்தில் இன்னும் உடன்பாடு ஏற்படாமல் உள்ளது. இதனால் இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் இழுபறிநிலை நீடித்து வருகிறது. அதன் தாக்கம் அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பில் மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக அந்நிய செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

    • சிறுமி கடைசியாக ஒரு பெண்ணுடன் மாடிப்படி ஏறி சென்றது தெரியவந்தது.
    • எதுவும் நடக்காதது போல கதவை பூட்டிவிட்டு திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    அரியானா மாநிலம் பானிபட் அருகிலுள்ள நவுலதா கிராமத்தில் ஒரு வீட்டில் திருமண விழா நடந்தது. விழா கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்த நிலையில் அங்கு விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை திடீரென காணவில்லை.

    சிறுமியின் உறவினர்கள் அவளை தேடினர். திருமண மண்டபத்தில் பல பகுதிகளில் சிறுமியை தேடியும் அவளை காணவில்லை. இதனால் திருமண வீட்டில் பரபரப்பு உண்டானது. சிறுமியை காணாததால் பெற்றோர், உறவினர்கள் கவலை அடைந்தனர்.

    இதனிடையே மண்டபத்தின் ஒரு பகுதியில் உள்ள தண்ணீர் நிரம்பிய பெரிய வாளியில் சிறுமி தலை நீரில் மூழ்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பளிச் என்று உடை அணிந்து அங்கும் இங்கும் விளையாடி திரிந்த சிறுமி அலங்கோலமாக இறந்து கிடப்பதை பார்த்து உறவினர்கள் கதறினர்.

    உடனடியாக என்.சி. மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி குழந்தையின் தாத்தா பால் சிங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வந்து விசாரணை நடத்தியபோது அந்த சிறுமி நீரில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். சிறுமி திருமண வீட்டில் விளையாடியது, அவர் யார் யாருடன் பேசினார் என வீடியோ பதிவுகளை வைத்து விசாரித்தனர்.

    அப்போது சிறுமி கடைசியாக ஒரு பெண்ணுடன் மாடிப்படி ஏறி சென்றது தெரியவந்தது. அந்த பெண் திருமண வீட்டினரின் அத்தை பூனம் (வயது 34) என்றும் தெரியவந்தது. உடனே பூனத்தை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. பூனம் தன்னைவிட யாரும் அழகாக இருக்கக் கூடாது என்ற பொறாமையில் சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது. திருமண வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியின் அழகு கொலையாளி பூனத்துக்கு பொறாமையை ஏற்படுத்தியது.

    தனது குடும்பத்தில் இப்படி ஒரு அழகான சிறுமியா என்று அவளிடம் பேச்சு கொடுத்த பூனம் பின்னர் அவளை ஏமாற்றி மாடிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியிடம் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவருமாறு கூறியுள்ளார்.

    தன் உயிரையே பறிக்கத்தான் தண்ணீர் கொண்டுவர பூனம் சொல்கிறார் என்பதை அறியாத சிறுமி வாளியில் தண்ணீரை மாடிக்கு கொண்டு சென்றார். ஒரு அறைக்குள் சிறுமியை அழைத்து சென்ற பூனம் வாளியில் உள்ள தண்ணீருக்குள் சிறுமியின் தலையை அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் எதுவும் நடக்காதது போல கதவை பூட்டிவிட்டு திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் பூனம் இதுபோன்று 3 குழந்தைகளை கொலை செய்தது தெரியவந்தது. பூனத்துக்கு 2019-ம் ஆண்டு திருமணம் ஆனது. இயல்பாகவே பூனத்துக்கு தன்னைவிட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்ற கர்வம் இருந்தது. 2023-ம் ஆண்டில் அவரது மைத்துனியின் 9 வயது சிறுமி இஷிகாவை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றார். இதை அவரது 3 வயது மகன் சுபத் பார்த்து விட்டான்.

    அவன் இஷிகா கொலையை வெளியில் சொல்லிவிடுவான் என பயந்து சுபத்தையும் கொலை செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது தாய் வீட்டில் உறவினரின் 6 வயது மகள் ஜியாவை நீரில் மூழ்கடித்து கொன்றார். அடுத்தடுத்த இந்த கொலைகளை உறவினர்கள் தற்செயலாக நடந்த விபத்து என்று நம்பப்பட்ட நிலையில் சிறுமி கொலை தொடர்பாகப் பூனத்திடம் போலீசார் விசாரித்த போது, பொறாமையின் காரணமாகத் தான் இந்த கொலைகளைச் செய்ததாக ஒப்புக் கொண்டார். இந்த கொடூர சம்பவம் அரியானாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    • PM SHRI நிதி விடுவிப்பு தொடர்பாக கேரள எம்.பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார்.
    • சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

    மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய தொடர்ந்து மறுத்தது. இதனால் மத்திய அரசு அந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது.

    இந்தத் திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்றால், அந்த நிதியே வேண்டாம் என தமிழக அரசு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. இதே நடைமுறையை கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பின்பற்றியது.

    இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கொண்டு வர சம்மதம் தெரிவித்து பின்னர் எழுந்த எதிர்ப்பினால் பின்வாங்கியது.

    இந்நிலையில், மக்களவையில், PM SHRI நிதி விடுவிப்பு தொடர்பாக கேரள எம்.பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "மத்திய அரசின் கல்வி நிதியைப் பெற சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நிபந்தனைகளை ஏற்கும் பட்சத்தில், நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்று தெரிவித்தார்.

    • அவரின் பாதுகாப்பு கவச வாகனமான 'அராஸ் செனட்' சொகுசு கார் மாஸ்கோவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறது.
    • புதின் தங்கியிருக்கும் ஹோட்டலைத் தவிர, ராஜ்காட், ஐதராபாத் ஹவுஸ் மற்றும் பாரத் மண்டபம் போன்ற அவர் செல்லும் அனைத்து இடங்களையும் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.

    பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை ரஷிய அதிபர் புதின் டெல்லி வருகிறார்.

    இந்த சூழலில், டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் புதினுக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பணியில் ரஷிய அதிபர் பாதுகாப்புப் படையினர், இந்திய தேசிய பாதுகாப்புப் படை (NSG) கமாண்டோக்கள், ஸ்னைப்பர்கள், டிரோன்கள், சிக்கினல் ஜாமர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) கண்காணிப்பு அமைப்புகள் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இதற்காக ரஷியாவிலிருந்து 48 உயர்மட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் ஏற்கனவே டெல்லியை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டெல்லி காவல்துறை மற்றும் NSG அதிகாரிகளுடன் புதினின் பயணத்தின் அனைத்து வழிகளையும் அவர்கள் முழுமையாகச் சரிபார்த்து வருகின்றனர்.

    NSG,டெல்லி காவல்துறை, ரஷிய அதிபர் பாதுகாப்புப் படையினர் சுற்றியிருக்க பிரதமர் மோடி புதினுடன் இருக்கும்போது சிறப்பு பாதுகாப்புக் குழு (SPG) கமாண்டோக்களும் இந்தப் பாதுகாப்பில் பணியாற்றுவர்.

    இந்தப் பயணத்தின் புதின் சாலை மார்க்கமாக பயணிக்க அவரின் பாதுகாப்பு கவச வாகனமான 'அராஸ் செனட்' சொகுசு கார் மாஸ்கோவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறது.

    புதின் தங்கியிருக்கும் ஹோட்டலைத் தவிர, ராஜ்காட், ஐதராபாத் ஹவுஸ் மற்றும் பாரத் மண்டபம் போன்ற அவர் செல்லும் அனைத்து இடங்களையும் பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.  

    • முன்பதிவில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே இந்த விதியை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
    • அனைத்து ரெயில் நிலையங்களிலும் உள்ள முன்பதிவு கவுன்டர்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

    முன்பதிவு கவுன்டர்களில் வாங்கப்படும் தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய OTP கடவுச்சொல்லை ரெயில்வே கட்டாயமாக்கவுள்ளது.

    முன்பதிவில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே இந்த விதியை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

    OTP அடிப்படையிலான தட்கல் டிக்கெட் முன்பதிவு முறை நவம்பர் 17 முதல் ஒரு சில ரெயில் நிலையங்களின் முன்பதிவு கவுன்டர்களில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த முறையை அனைத்து ரெயில் நிலையங்களிலும் உள்ள முன்பதிவு கவுன்டர்களுக்கு விரிவுபடுத்தத் தயாராகி வருவதாக ரெயில்வே அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    எனவே இனிமேல், கவுன்டர்களில் முன்பதிவு படிவத்தை நிரப்பிய பிறகு, முன்பதிவு செய்யும் போது மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடுவதன் மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். 

    ×