என் மலர்
இந்தியா
- 100 மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள மலைகளில் சுரங்கத்தை அனுமதிப்பது சுரங்க மாஃபியாவுக்கு திறந்த அழைப்பாகும்.
- நரேந்திர மோடி அரசு அவற்றுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
ஆரவல்லி மலைத்தொடரில் நூறு மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள மலைகளில் சுரங்க நடவடிக்கைகளை அனுமதிக்க மத்திய சுற்றுலா அமைச்சகம் கொள்கைகளில் திருத்தம் செய்துள்ளது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார்.
அதில், குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பரவியுள்ள இந்த மலைகள், நாட்டின் வரலாறு மற்றும் புவியியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
சட்டவிரோத சுரங்கத்தால் அவற்றின் இயற்கை வளம் ஏற்கனவே குறைந்து வரும் நிலையில், நரேந்திர மோடி அரசு அவற்றுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
100 மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள மலைகளில் சுரங்கத்தை அனுமதிப்பது சுரங்க மாஃபியாவுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் திறந்த அழைப்பாகும்.
இது சுற்றுச்சூழல் மீதான அரசாங்கத்தின் அலட்சியத்திற்கு சான்றாகும். இது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதாகும். மத்திய அரசு கொண்டு வந்த இந்தப் புதிய கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.
- தனது முதுகுத்தண்டு, இடுப்பு மற்றும் தோள்பட்டையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாக தெரிவித்தார்.
- தனது கணவரின் மது மற்றும் போதைப்பொருள் பழக்கம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் மறைக்கப்பட்டன.
கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் உடைய பேரன் மீது வரதட்சணை கொடுமை புகார் சுமத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த தாவர் சந்த் கெலாட் உடைய பேரன் தேவேந்திர கெலாட் கடந்த 2018 இல் திவ்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயது பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளார்.
திவ்யா அளித்த புகாரில், தனது மாமனார் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் வரதட்சணை கோரியதாகவும், தன்னை மீண்டும் மீண்டும் உடல் மற்றும் மனரீதியான கொடுமைகளுக்கு ஆளாக்கியதாக தெரிவித்துள்ளார். பணம் கொண்டுவரவில்லை என்றால் உணவு கிடையாது என கூறி சித்திரவதை செய்ததாக கூறியுள்ளார்.
கடந்த 2025, ஜனவரி 26 அன்று மதுபோதையில் இருந்த தனது கணவர் தன்னைத் தாக்கி, வீட்டின் மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டதாகவும், இதனால் தனது முதுகுத்தண்டு, இடுப்பு மற்றும் தோள்பட்டையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறியுள்ளார்.
திருமணத்திற்கு முன்பே, தனது கணவரின் மது மற்றும் போதைப்பொருள் பழக்கம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் உள்ளிட்ட பல முக்கியமான தகவல்கள் தன்னிடம் மறைக்கப்பட்டதாக திவ்யா தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மகளை பார்க்க விடாமல் தன்னை தடுப்பதாகவும் திவ்யா குற்றம்சாட்டி உள்ளார். இந்த புகாரின் பேரில் மத்திய பிரதேச போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஜிதேந்திரா கெலாட், "யாராலும் எவர் மீதும் குற்றச்சாட்டுகளை வைக்க முடியும்" என்று கூறி, விரைவில் உண்மைகளை தெளிவுபடுத்துவதாக தெரிவித்தார்.
- வலியால் அவர் துடித்தபோதும் மான் சிங் தொடர்ந்து அவரை தாங்கியபடி இருந்தார்.
- கண்ணீருடன் தனது பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நொண்டியபடி சென்றார்.
பிளாட்பாரத்தில் படுத்திருந்த ஒரு மாற்றுத்திறனாளியிடம் ரெயில்வே போலீஸ்காரர் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட வீடியோ கண்டனத்தை குவித்து வருகிறது.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள நாக்டா ரெயில் நிலையத்தில் நடந்த சம்பவத்தை ஒரு பயணி தனது தொலைபேசியில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
பிளாட்பாரத்தில் படுத்திருந்த மாற்றுத்திறனாளியை நோக்கி கோபத்துடன் வந்த சீருடையில் இல்லாத ஆர்பிஎஃப் தலைமை கான்ஸ்டபிள் மான் சிங் அவரை உதைத்து அங்கிருந்து விரட்டினார். வலியால் அவர் துடித்தபோதும் மான் சிங் தொடர்ந்து அவரை தாக்கியபடி இருந்தார்.
மான் சிங்கால் தாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி, கண்ணீருடன் தனது பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நொண்டியபடி சென்றார்.
இதற்கிடையில் மான் சங், மாற்றுத்திறனாளி நபர் குடிபோதையில் இருந்ததாகவும், நடைமேடையில் மக்களை தொந்தரவு செய்ததாகவும் , அதனாலேயே இவ்வாறு செய்ததாகவும் கூறினார்.
ஆனால் உயர் அதிகாரிகள் இந்த விளக்கத்தில் திருப்தி அடையதாக நிலையில் அவரை இடைநீக்கம் செய்து சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
- தந்தேவாடாவுக்கு அருகிலுள்ள ககல்லூர் வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) அன்று பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 12 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
தந்தேவாடாவுக்கு அருகிலுள்ள ககல்லூர் வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.
இந்தச் சண்டையில், மாவட்ட ரிசர்வ் கார்டை சேர்ந்த மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது. உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றபட்டன.
- 12 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 10 மையங்களில் தொடங்கியது.
- பாஜக வேட்பாளர்கள் சுமன்குமார் குப்தா, தனிகா ஜெயின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
டெல்லி சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆம்ஆத்மியிடம் இருந்து ஆட்சியை கைப் பற்றியது.
டெல்லி மாநகராட்சியில் உள்ள 12 வார்டுகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ந்தேதி நடைபெற்றது. இதில் 9 வார்டு பாஜக வசமும், எஞ்சிய 3 வார்டுகள் ஆம்ஆத்மி வசமும் இருந்தன.
12 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 10 மையங்களில் தொடங்கியது.
இதில் பா.ஜனதா, ஆம் ஆத்மி ஆகியவை தலா 2 வார்டுகளில் வெற்றி பெற்றன. காங்கிரஸ், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிகள் தலா 1 வார்டுகளை கைப் பற்றியது. மற்ற சில வார்டு களில் பா.ஜனதா முன்னி லையில் உள்ளன.
பாஜக வேட்பாளர்கள் சுமன்குமார் குப்தா, தனிகா ஜெயின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
- பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நேற்று முன்தினம் (டிசம்பர் 1) தொடங்கியது.
- எதிர்க்கட்சிகள் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர்.
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நேற்று முன்தினம் (டிசம்பர் 1) தொடங்கியது.
எதிர்க்கட்சிகள் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டதால் 2 நாட்களாக இரு அவைகளும் முடங்கியது.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் தோள்பட்டை வலியால் தவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ராகுல் காந்தி தோள்பட்டை பிடித்து விட்டார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
- இணைய உலகில் உள்ள மோசடியாளர்களிடம் இருந்து குடிமக்களுக்கு உதவுவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இதுவரை 1.4 கோடி பயனர்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்
இந்தியாவின் அனைத்து மொபைல் உற்பத்தி நிறுவனங்களும் புதிய சாதனங்களில் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. சஞ்சார் செயலியை கட்டாயம் பதிவிறக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த முடிவு திரும்ப பெறப்பட்டுள்ளது. ஆனால் செயலிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகவே "கட்டாயம்" என்ற முடிவை திரும்ப பெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
"அனைத்து குடிமக்களுக்கும் இணைய பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன், அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டது. இந்த செயலி பாதுகாப்பானது மற்றும் இணைய உலகில் உள்ள மோசடியாளர்களிடம் இருந்து குடிமக்களுக்கு உதவுவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது மக்கள் பங்கேற்புடன் அனைத்து பயனர்களையும் பாதுகாப்பதோடு, சைபர் மோசடி பற்றிய புகார் அளிக்க உதவுகிறது. எப்போது வேண்டுமானாலும் இந்த செயலியை நீக்கலாம் என்று அரசால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 1.4 கோடி பயனர்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர் மற்றும் ஒரு நாளைக்கு 2,000 மோசடி சம்பவங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. கடந்த ஒருநாளில் 6 லட்சம் குடிமக்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்ய பதிவு செய்துள்ளனர். இதன் பயன்பாடு 10 மடங்கு அதிகரித்துள்ளது. இது இந்த செயலியில் குடிமக்கள் நம்பிக்கையுடன் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
சஞ்சார் சாத்தி செயலிக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், செல்போன் உற்பத்தியாளர்களுக்கு முன் நிறுவலை கட்டாயமாக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சஞ்சார் சாத்தி என்றால் என்ன?
கடந்த 2023ஆம் சஞ்சார் சாத்தி என்ற வெப் போர்ட்டலை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தற்போது அதே பெயரில் செயலியில் தொடங்கப்பட்டுள்ளது. சஞ்சார் செயலி டிஜிட்டல் மோசடிக்கு எதிரான பாதுகாப்பு கருவி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொலைபேசியின் ஐஎம்இஐ எண், மொபைல் எண் மற்றும் நெட்வொர்க் தொடர்பான தகவல்களின் உதவியுடன் வாடிக்கையாளரின் பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறப்படுகிறது. சஞ்சார் சாத்தி இணையதளத்தின் தகவல்படி, இந்த செயலி நமக்கு தெரியாமல் நமது தனிப்பட்ட தகவல்களை சேகரிக்காது.
- புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சாமராஜ்பேட்டை தபால் நிலையத்தில் பார்சலில் வந்த 8 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறிமுதல்
புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் மூன்று வெவ்வேறு சோதனைகளின்போது ரூ.28.8 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், சம்பிகேஹள்ளி பகுதியில் பெங்களூரு நகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தான்சானிய நாட்டை சேர்ந்த 29 வயதான நான்சி ஓமரியை கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 9 கிலோ டையாக்ஸிமெத்தபெட்டமனையும் பறிமுதல் செய்தனர். இவை ரூ.18.5 கோடி மதிப்பு கொண்டவை எனவும் தெரிவித்தனர்.
2023 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் டெல்லி வந்த நான்சி, பெங்களூருவுக்கு குடிபெயர்ந்து பியூட்டிசியனாக பணிபுரிந்துகொண்டே, போதைப்பொருள் விற்பனையிலும் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூருவின் சித்தபுராவில் நடந்த மற்றொரு நடவடிக்கையில், 28 வயதான நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் அரின்சே என்பவர் கைது செய்யப்பட்டார். 2021 ஆம் ஆண்டு வணிக விசா மூலம் இந்தியா வந்த அரின்சே 2022 ஆம் ஆண்டு பெங்களூருக்கு குடிபெயர்ந்தார்.
டெல்லி, கோவா மற்றும் பிற வெளிநாட்டு வியாபாரிகளிடமிருந்து MDMA-வை வாங்கி விநியோகம் செய்துவந்துள்ளார். இவர் முன்னரே போதைப்பொருள் விற்பனை தொடர்பாக கோவிந்தபுரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ஜாமினில் வெளிவந்த நிலையில் மீண்டும் கைதாகியுள்ளார்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து பெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள வெளிநாட்டு தபால் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக பார்சல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 8 கிலோ ஹைட்ரோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சி.சி.பி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த பார்சலை அனுப்பியது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வெள்ளத்தால் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியது.
- மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பப்பட்டது.
இலங்கையில் பெய்த கனமழையால் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடருக்கு 465 பேர் பலியாகி உள்ளனர். 366 பேர் மாயமாகி இருக்கிறார்கள்.
வெள்ளத்தால் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியது. மேலும், மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பப்பட்டது. அவர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர சுகாதார உதவிகளை வழங்குவதற்காக இந்தியா ஒரு நடமாடும் மருத்துவமனையையும், 70-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களையும் இலங்கைக்கு அனுப்பி உள்ளது.
இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் ஆக்ராவிலிருந்து 73 மருத்துவப் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களுடன் புறப்பட்டு கொழும்பில் தரை இறங்கியது.
- இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.89.96 ஆக இருந்தது.
- இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தாமதம்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் முதல் முறையாக ரூ.90-யை இன்று கடந்துள்ளது. நேற்று வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு ரூ.89.92 வரை சென்றது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.89.96 ஆக இருந்தது.
காலை 10 மணியளவில் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.90.16-க்கு சரிந்தது. வர்த்தகப் பற்றாக் குறை, இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தாமதம் ஆகியவை ரூபாய் வீழ்ச்சிக்கு காரணமாக கருதப்படுகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யும்போது, நமது அன்னிய செலாவணி அதிகரிக்கும். அதேநேரம் இப்போது உலகின் மற்ற நாடுகளை விட இந்திய பங்குச்சந்தை உச்சத்தில் இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வெளியே எடுக்கிறார்கள்.
இதனால் அன்னிய செலாவணி குறைகிறது. இதுவும் ரூபாய் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
- மாநிலங்களவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
- மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்.
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்ந்து நேற்று முன்தினம் (டிச.1ம் தேதி) தொடங்கி இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாநிலங்களவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து எம்.பி. நீரஜ் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்.
அதில் அவர்," நாடு முழுவதும் 2022-ல் புற்றுநோயால் 14.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2023ம் ஆண்டில் 15.33 லட்சமாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 2500 பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.
- கடனை அடைக்க சகோதரரை கொலை செய்ய முடிவு செய்தார்.
- மறுநாள் காலை சகோதரர் லாரி மோதி இறந்து விட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர், ராமதுருவை சேர்ந்தவர் நரேஷ் (வயது30). இவரது சகோதரர் வெங்கடேஷ் ( 37). மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் நரேஷ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாத தவணையில் 2 லாரிகளை வாங்கி வாடகைக்கு விட்டார். தொழில் சரியாக நடக்காததால் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் பங்கு சந்தையில் அதிக அளவு பணத்தை முதலீடு செய்தார். பங்கு சந்தையிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் மாதாந்திர தவணை கட்ட முடியாமல் தவித்து வந்தார். தனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி மாதத் தவணை செலுத்தி வந்தார்.
இதன் மூலம் நரேஷுக்கு ரூ.1.50 கோடி கடன் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கொடுக்குமாறு நரேஷுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
கடனை அடைக்க சகோதரரை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 4 தனியார் காப்பீட்டு நிறுவனம் மற்றும் ஒரு அரசு காப்பீட்டு நிறுவனத்தில் சகோதரர் வெங்கடேஷ் பெயரில் தனித்தனியாக ரூ. 4.14 கோடிக்கு காப்பீடு செய்தார்.
ராகேஷ் என்பவர் நரேஷ் தனக்கு தரவேண்டிய ரூ. 7 லட்சத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.
ராகேஷை அணுகிய நரேஷ் தனது சகோதரரை கொலை செய்ய ஒத்துழைத்தால் கடன் தொகையுடன் மேலும் கூடுதலாக ரூ.13 லட்சம் தருவதாக தெரிவித்தார். இதேபோல் தன்னிடம் வேலை செய்யும் லாரி டிரைவர் பிரதீப்பை அணுகி அவருக்கு ரூ.2 லட்சம் தருவதாக ஒப்பந்தம் செய்தனர்.
கடந்த 29-ந்தேதி லாரி டிரைவர் பிரதீப், நரேஷ்க்கு போன் செய்து லாரி புறநகரில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நரேஷ் தனது சகோதரர் வெங்கடேஷை பைக்கில் லாரி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் வெங்கடேஷை லாரி சக்கரத்திற்கு அடியில் படுக்க வைத்து லாரியை முன்னோக்கி இயக்கினர். லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி வெங்கடேஷ் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மறுநாள் காலை சகோதரர் லாரி மோதி இறந்து விட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகள் நேற்று நரேஷிடம் விபத்து எப்படி ஏற்பட்டது என கேள்வி எழுப்பினர்.
அப்போது நரேஷ் விபத்து குறித்து கூறிய விதம் காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் நரேஷை பிடித்து விசாரணை செய்தபோது கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நரேஷ், ராகேஷ், பிரதீப் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.






