என் மலர்
இந்தியா
- கடனை அடைக்க சகோதரரை கொலை செய்ய முடிவு செய்தார்.
- மறுநாள் காலை சகோதரர் லாரி மோதி இறந்து விட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர், ராமதுருவை சேர்ந்தவர் நரேஷ் (வயது30). இவரது சகோதரர் வெங்கடேஷ் ( 37). மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் நரேஷ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாத தவணையில் 2 லாரிகளை வாங்கி வாடகைக்கு விட்டார். தொழில் சரியாக நடக்காததால் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் பங்கு சந்தையில் அதிக அளவு பணத்தை முதலீடு செய்தார். பங்கு சந்தையிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் மாதாந்திர தவணை கட்ட முடியாமல் தவித்து வந்தார். தனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி மாதத் தவணை செலுத்தி வந்தார்.
இதன் மூலம் நரேஷுக்கு ரூ.1.50 கோடி கடன் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கொடுக்குமாறு நரேஷுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
கடனை அடைக்க சகோதரரை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 4 தனியார் காப்பீட்டு நிறுவனம் மற்றும் ஒரு அரசு காப்பீட்டு நிறுவனத்தில் சகோதரர் வெங்கடேஷ் பெயரில் தனித்தனியாக ரூ. 4.14 கோடிக்கு காப்பீடு செய்தார்.
ராகேஷ் என்பவர் நரேஷ் தனக்கு தரவேண்டிய ரூ. 7 லட்சத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.
ராகேஷை அணுகிய நரேஷ் தனது சகோதரரை கொலை செய்ய ஒத்துழைத்தால் கடன் தொகையுடன் மேலும் கூடுதலாக ரூ.13 லட்சம் தருவதாக தெரிவித்தார். இதேபோல் தன்னிடம் வேலை செய்யும் லாரி டிரைவர் பிரதீப்பை அணுகி அவருக்கு ரூ.2 லட்சம் தருவதாக ஒப்பந்தம் செய்தனர்.
கடந்த 29-ந்தேதி லாரி டிரைவர் பிரதீப், நரேஷ்க்கு போன் செய்து லாரி புறநகரில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நரேஷ் தனது சகோதரர் வெங்கடேஷை பைக்கில் லாரி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் வெங்கடேஷை லாரி சக்கரத்திற்கு அடியில் படுக்க வைத்து லாரியை முன்னோக்கி இயக்கினர். லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி வெங்கடேஷ் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மறுநாள் காலை சகோதரர் லாரி மோதி இறந்து விட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகள் நேற்று நரேஷிடம் விபத்து எப்படி ஏற்பட்டது என கேள்வி எழுப்பினர்.
அப்போது நரேஷ் விபத்து குறித்து கூறிய விதம் காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் நரேஷை பிடித்து விசாரணை செய்தபோது கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நரேஷ், ராகேஷ், பிரதீப் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- ஒரு கட்டத்தில் தனது வாயில் திணித்து வைக்கப்பட்டிருந்த துணியை உருவி எடுத்து காப்பாற்றுமாறு கத்தத் தொடங்கினார்.
- பெருநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் வடசேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் என்ற பத்ரோஸ் ஜான்(வயது64). இவரது பக்கத்து வீட்டில் 94 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார்.
இதனை நோட்டமிட்ட முதியவர் ஜோஸ், சம்பவத்தன்று அந்த மூதாட்டியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். பின்பு மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி, முதியவருடன் போராடினார்.
ஒரு கட்டத்தில் தனது வாயில் திணித்து வைக்கப்பட்டிருந்த துணியை உருவி எடுத்து காப்பாற்றுமாறு கத்தத் தொடங்கினார். இதனால் பயந்துபோன முதியவர் ஜோஸ், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டுக்கு வந்தனர்.
அவர்களிடம் முதியவர் ஜோஸ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற விவரத்தை கூறினார். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அதுகுறித்து பெருநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முதியவர் ஜோஸ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தப்பியோடிய அவரை தீவிரமாக தேடிவந்தனர். இந்தநிலையில் முதியவர் ஜோசை போலீசார் கைது செய்தனர்.
- இந்த குற்றவாளிகளின் சொத்துக்களில் இருந்து 33 சதவீதம், அதாவது ரூ.19,187 கோடி மீட்கப்பட்டுள்ளது
- கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா ரூ.11,960 கோடியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
பிரபல தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட நாட்டை விட்டு தப்பி ஓடிய 15 பொருளாதார குற்றவாளிகள் பொதுத்துறை வங்கிகளுக்கு மொத்தம் ரூ.58,082 கோடி கடன்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மக்களவையில் எம்.பி ஒருவர் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி இதனைத் தெரிவித்தார்.
இந்த மொத்த நிலுவைத் தொகையில், அசல் தொகை ரூ.25,645 கோடி, அதே நேரத்தில் அதற்கான வட்டி ரூ.31,437 கோடியை எட்டியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை, இந்த குற்றவாளிகளின் சொத்துக்களில் இருந்து 33 சதவீதம், அதாவது ரூ.19,187 கோடி மீட்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.38,895 கோடி வசூலிக்கப்பட வேண்டி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உட்பட மொத்தம் 12 பொதுத்துறை வங்கிகளுக்கு அவர்கள் கடன்பட்டுள்ளனர்.
கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா ரூ.11,960 கோடியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்தத் தொகையை அவர் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு மட்டும் கடன்பட்டுள்ளார்.
அவருக்குப் பிறகு, வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,799 கோடி கடன்பட்டுள்ளார். அவர்களுடன் சேர்ந்து, சந்தேசரா குழுமமும் ரூ.900 கோடி முதல் ரூ.1,300 கோடி வரை கடன் வாங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம், 2018 இன் கீழ் அவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இதற்கிடையே விஜய் மல்லையா, மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி அவ்வப்போது லண்டனில் பார்ட்டி நடத்தி நடனமாடி கொண்டாடும் வீடியோக்கள் வெளியான வண்ணம் உள்ளன.
- இந்தத் திட்டத்தின் கீழ் இன்னும் 0.79 கோடி பயனாளிகள் அடையாளம் காணப்படவில்லை.
- எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
2020 முதல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் 2.49 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் நிமுபன் ஜெயந்திபாய் பம்பானியா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், இந்தியாவில் தற்போது சுமார் 20 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருக்கிறது. தற்போது, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ரேஷன் கடைகள் மூலம் சுமார் 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு இலவச உணவு தானியங்களை வழங்கி வருகிறது
இருப்பினும், இந்தத் திட்டத்தின் கீழ் இன்னும் 0.79 கோடி பயனாளிகள் அடையாளம் காணப்படவில்லை.
டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளின் விளைவாக, 2020 மற்றும் 2025 க்கு இடையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தோராயமாக 2.49 கோடி ரேஷன் கார்டுகளை அகற்ற முடிந்துள்ளது.
போலி கார்டுகள், தகுதியற்ற பயனாளிகள், e-KYC முரண்பாடுகள், பயனாளிகளின் இறப்பு மற்றும் நிரந்தர இடம்பெயர்வு ஆகிய காரணங்களின் அடிப்படையில் அவை நீக்கப்பட்டுள்ளன.
ரேஷன் கார்டுகளை தவறாக ரத்து செய்ததாக பயனாளிகளிடம் இருந்து அரசாங்கத்திற்கு எந்த குறிப்பிட்ட புகார்களும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மன அழுத்தத்தால் நோய்வாய்ப்பட்ட நான்கு வாக்குச்சாவடி அதிகாரிகள் உட்பட 13 அதிகாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பொதுமக்களிடையே பரவலான அச்சத்தையும் பீதியையும் உருவாக்கியுள்ளது.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளால் மன அழுத்தத்தில் தற்கொலை மற்றும் திடீர் மரணம் அடைந்த 39 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
நான்கு வாக்குச்சாவடி அதிகாரிகள் உட்பட இறந்த 39 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். அதே நேரத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் மன அழுத்தத்தால் நோய்வாய்ப்பட்ட நான்கு வாக்குச்சாவடி அதிகாரிகள் உட்பட 13 அதிகாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
நவம்பர் 4 முதல் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பொதுமக்களிடையே பரவலான அச்சத்தையும் பீதியையும் உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.
- பெரிய பானிபூரியை வாயில் வைக்க அவர் வாய் திறந்த நிலையில் அதன் பிறகு மூட முடியவில்லை.
- இது மிகவும் சீரியசான விஷயம் என கூறி அவரை மற்றொரு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
உத்தரபிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தை சேர்ந்தவர் இன்கிலா தேவி. இவர் சந்தைக்குச் சென்றபோது ஒரு பானி பூரி தள்ளுவண்டி கடையில் நின்று பானி பூரி வாங்கி சாப்பிட்டுள்ளார்.
பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இன்கிலா தேவியின் தாடை எலும்பு இடம்பெயர்ந்தது. பெரிய பானிபூரியை வாயில் வைக்க அவர் வாய் திறந்த நிலையில் அதன் பிறகு மூட முடியவில்லை.
இதனால் அவர் கடுமையான வலியை சந்தித்தார். உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் இது மிகவும் சீரியசான விஷயம் என கூறி அவரை மற்றொரு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
எனவே அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இன்கிலா தேவியின் தாடை எலும்பு இடப்பெயர்வை அங்குள்ள மருத்துவர்கள் நீண்ட முயற்சியின் பின் சரி செய்தனர்.
- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கேள்விக்கு பதிலளிக்கப்பட்டது.
- மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி கணக்கெடுப்பும் முடிக்கப்படும்.
மத்திய அரசு 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளது.
நாட்டின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பான இது 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு என்று அழைக்கப்படுகிறது. இது சுதந்திரம் பிறகு நடத்தப்படும்எட்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.
முதல் கட்டம் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலும், இரண்டாம் கட்டம் 2027 பிப்ரவரியிலும் நடைபெறும் என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களைக் கொண்டிருக்கும் என்று கூறினார்.
முதல் கட்டத்தில், வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடத்தப்படும். இரண்டாம் கட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
முதல் கட்டம் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடத்தப்படும். இரண்டாம் கட்டம் பிப்ரவரி 2027 இல் தொடங்கி மார்ச் 1 இல் முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி கணக்கெடுப்பும் முடிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு பயனர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு கேள்வி படிவங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் தரவு சேகரிக்கப்பட்டு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
- தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
- விசாரணை நடவடிக்கைகள் தொடங்கவிருந்த நிலையில் எடியூரப்பா உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 13 அன்று கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடியூரப்பா தனது வீட்டில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சதாசிவ நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பின்னர் அதை சிஐடியிடம் ஒப்படைத்தனர்.
சிஐடி போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, விசாரணை நடவடிக்கைகள் தொடங்கவிருந்த நிலையில் எடியூரப்பா உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
இருப்பினும், உயர் நீதிமன்றம் நடவடிக்கைகளை ரத்து செய்ய மறுத்ததால், அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இந்த சூழலில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்து எடியூரப்பாவுக்கு சத்தமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- சரக்கு ரெயிலின் கீழ் கைகோர்த்தபடி அமர்ந்து காதல் மொழி பேசிக்கொண்டிருந்தனர்.
- சரக்கு ரயில், திடீரென பலத்த சத்தத்துடன் மெதுவாக நகரத் தொடங்கியது.
காதலுக்கு கண்ணில்லை என்ற ஒரு சொல்லாடல் உண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் கீழ் கைகோர்த்தபடி அமர்ந்து காதல் மொழி பேசிக்கொண்டிருந்த ஜோடி மயிரிழையில் உயிர்தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
அவர்கள் காதலில் மூழ்கியிருந்தபோது அதுவரை நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில், திடீரென பலத்த சத்தத்துடன் மெதுவாக நகரத் தொடங்கியது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜோடி சுயநினைவுக்கு திரும்பி, தண்டவாளத்தில் இருந்து தவழ்ந்துசென்று விலகி தங்கள் உயிரை காத்துக் கொண்டனர்.
அவர்கள் விலகிய சில நிமிடங்களில், ரெயில் முன்னோக்கி நகர்ந்து சென்றது. ஒரு கணம் தாமதம் ஏற்பட்டிருந்தாலும் அவர்களின் உயிர் பறிபோயிருக்கும்.
இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பலவிதமாக பதிவிட்டு வருகின்றனர். இது எங்கு எப்போது நடந்தது என்பது குறித்த விவரம் வெளியாவில்லை. எனினும் வீடியோ படு வைரலாகி வருகிறது.
- சஞ்சய் சிங் அனிதா ஷியோரானாவை தோற்கடித்தார்.
- தேர்தல்கள் நியாயமானதாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படவில்லை
தேசிய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) 2023 டிசம்பரில் நடத்திய தேர்தல்களை எதிர்த்து மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் சத்யவ்ரித் காடியன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அப்போதைய WFI தேர்தலில், சஞ்சய் சிங் அனிதா ஷியோரானாவை தோற்கடித்தார். அனிதா ஷியோரானாவை பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் ஆதரித்தனர்.
எனவே, WFI தேர்தல்கள் நியாயமானதாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படவில்லை என்றும் முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றம் சாட்டி மல்யுத்த வீரர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் யாரும் ஆஜராகவில்லை, முந்தைய இரண்டு விசாரணைகளிலும் அவர்கள் ஆஜராகவில்லை. மனுதாரர்கள் தற்போதைய வழக்குகளைத் தொடர்வதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
- பிரதமர் அலுவலகத்துடன் அமைச்சரவை செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம் ஆகியவை செயல்படும்.
ஆளுநர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ரவி வைத்த கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாணிகைகளின் ராஜ் பவன் என்ற பெயர் லோக் பவன் என்று மாற்றப்பட்டது.
ஆளுநர்கள் ராஜாக்கள் அல்ல என்பதாலும் ஆளுநர் மாளிகை மக்களுக்கான தளம் என்பதாலும் லோக் (மக்கள்) பவன் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
இந்த சூழலில் டெல்லியில் பிரதமர் அலுவலகம் (PMO) செயல்பட உள்ள புதிய கட்டிட வளாகத்திற்கு 'சேவா தீர்த்' என்று பெயரிடப்பட உள்ளது. 'சேவா தீர்த்' என்பது புனிதமான சேவைத்தலம் என்று பொருள்படும்.
கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த வளாகத்தில், பிரதமர் அலுவலகத்துடன் அமைச்சரவை செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம் ஆகியவை செயல்படும்.
உலகத் தலைவர்களுடனான உயர் மட்ட சந்திப்புகளுக்கான 'இந்தியா ஹவுஸ்' கூட இதில் ஒரு பகுதியாக இருக்கும்.
பிரதமர் மோடியின் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பிரதமரின் இல்லம் அமைந்துள்ள ரேஸ்கோர்ஸ் சாலை 'லோக் கல்யாண் மார்க்' என்றும், வரலாற்று சிறப்புமிக்க ராஜ பாதையை 'கர்தவ்ய பாதை' என்றும், மத்திய செயலகம் 'கர்தவ்ய பவன்' என்றும் பெயர் மாற்றப்பட்டது.
- செயலியை நிறுவுவதை தொலைத்தொடர்புத் துறை கட்டாயமாக்கியது.
- ஜனநாயகத்தில் அனைத்தையும் கட்டாயமாக்குவது சிக்கல்.
மொபைல் போன் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் அனைத்து புதிய கைபேசிகளிலும் விற்பனைக்கு முன் சஞ்சார் சாத்தி செயலியை நிறுவுவதை தொலைத்தொடர்புத் துறை கட்டாயமாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், "எனது பொது அறிவின்படி, இதுபோன்ற செயலிகள் விருப்பத்தேர்வாக இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
தேவைப்படுபவர்கள் அவற்றைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஜனநாயகத்தில் அனைத்தையும் கட்டாயமாக்குவது சிக்கலாக இருக்கும்.
உத்தரவுகளை பிறப்பிப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் ஊடக அறிக்கைகள் மூலம் பொதுமக்களுக்கு எல்லாவற்றையும் விளக்க வேண்டும். நாம் ஒரு விவாதத்தை நடத்த வேண்டும். அரசாங்கம் இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்க வேண்டும்" என்று கூறினார்.
இதற்கிடையே சஞ்சார் சாத்தி செயலி மொபைல் போன்களில் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற உத்தரவில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, "இந்த செயலி அனைவரையும் சென்றடையச் செய்வது நமது பொறுப்பு. நீங்கள் அதை நீக்க விரும்பினால், அதை நீக்குங்கள். நீங்கள் அதைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், அதை பதிவு செய்யாதீர்கள்.
நீங்கள் செயலியில் பதிவு செய்தால், அது செயலில் இருக்கும். நீங்கள் அதைப் பதிவு செய்யாவிட்டால், அது செயலற்றதாகவே இருக்கும்" என்று தெரிவித்தார்.






