search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • தற்போது விடுமுறை காலம் என்பதால் மூணாறுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
    • ஊருக்குள் புகும் காட்டுயானைகளை விரட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று மூணாறு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் பல கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி இருக்கின்றன. இந்த கிராமங்களுக்குள் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. அவ்வாறு புகும் வனவிலங்குகளால் மனிதர்கள் மற்றும் வீட்டில் வளர்க்கக்கூடிய விலங்குகள் கொல்லப்படும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

    இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் காரை காட்டு யானை தாக்கி சேதப்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மூவாட்டுபுழா பகுதியை சேர்ந்தவர்கள் மனோஜ்குமார் மற்றும் தாமஸ். இவர்கள் இடுக்கி மாவட்டம் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். அப்போது அவர்கள் மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளியான சுப்பிரமணியன் என்பவரை பார்க்க சென்றனர்.

    அவர்கள் தாங்கள் வந்த காரை சாலையோரம் நிறுத்தி விட்டு சென்றனர். அப்போது அங்கு வந்த காட்டு யானை, அவர்களது காரை சேதப்படுத்தியது. இதில் அவர்களது கார் உடைந்து சேதமானது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஊருக்குள் புகுந்திருந்த காட்டி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    காட்டு யானைகளால் அடிக்கடி இடையூறு ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் தெரவித்தனர். தற்போது விடுமுறை காலம் என்பதால் மூணாறுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் காரை காட்டு யானை தாக்கியிருப்பது, சுற்றுலா பயணிகளின் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே ஊருக்குள் புகும் காட்டுயானைகளை விரட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று மூணாறு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போதையில் இருந்த மணமகன் திருமணத்தை நடத்துவதற்காக வந்திருந்த பாதிரியாரிடமும், மணமகளின் உறவினர்களிடம் தகராறு செய்தார்.
    • இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த சிலர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி அருகே தடியூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    திருமணத்தன்று காரில் இருந்து இறங்கிய மணமகன் மதுபோதையில் தள்ளாடியபடி மணமேடை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

    இதை பார்த்த மணப்பெண் உள்பட அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் போதையில் இருந்த மணமகன் திருமணத்தை நடத்துவதற்காக வந்திருந்த பாதிரியாரிடமும், மணமகளின் உறவினர்களிடம் தகராறு செய்தார்.

    இதனை நேரில் பார்த்து கொண்டிருந்த மணமகள் அதிர்ச்சியடைந்தார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மணமகள் 'தனக்கு இந்த திருமணமே வேண்டாம்' என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் திருமணம் நின்றது.

    இதுதொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த சிலர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மணமகளின் குடும்பத்தினர், தங்களுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றும் திருமணத்துக்காக பெரும் தொகை செலவு செய்ததால் மணமகனின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் திருமணத்துக்காக செலவு செய்த தொகையை நஷ்டஈடாக தரவேண்டும் என்றனர்.

    இதை தொடர்ந்து நஷ்ட ஈடாக ரூ.6 லட்சம் கொடுக்க மணமகன் வீட்டார் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருமணத்துக்காக தயார் செய்திருந்த உணவு அனைத்தும் வீணானது.

    இதற்கிடையே மதுபோதையில் ரகளை செய்ததாக மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுதந்திரத்துக்கு பிறகு 1951-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், நாடு முழுவதும் 479 தொகுதிகளில் போட்டியிட்டது.
    • பா.ஜனதாவின் வளர்ச்சியாலும், மாநில கட்சிகளில் ஆதிக்கத்தாலும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மெல்ல மெல்ல குறைந்தது.

    காங்கிரஸ்...

    1885-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கட்சி, இந்திய சுதந்திர போராட்டத்தை முன்னின்று நடத்தியது என்ற பெருமையும் அதற்கு உண்டு.

    இந்தியா சுதந்திரம் பெற்றப்பிறகு சற்றேறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டை ஆட்சி செய்தது.

    சுதந்திரத்துக்கு பிறகு 1951-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், நாடு முழுவதும் 479 தொகுதிகளில் போட்டியிட்டது. 364 இடங்களில் வெற்றியை பெற்றது.

    இந்திரா காந்தியின் மறைவுக்கு பிறகு 1984-ம் ஆண்டு, ராஜீவ் காந்தி தலைமையில் 517 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 414 தொகுதிகளை கைப்பற்றி, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. காங்கிரஸ் கட்சியின் இந்த சாதனையை இதுவரை வேறு எந்த கட்சிகளும் முறியடிக்கவில்லை. ஏன்... காங்கிரஸ் கட்சி கூட அந்த சாதனையை மீண்டும் நிகழ்த்தவில்லை.

    அதேபோல் 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 529 தொகுதிகளில் போட்டியிட்டது. இதுதான் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் அதிகபட்சமாக போட்டியிட்ட தொகுதியாகும்.

    இதுவரை நடைபெற்றுள்ள 17 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 முறை 500-க்கும் மேற்பட்ட இடங்களிலும், ஒரு முறை 500 இடங்களிலும் போட்டியிட்டது. 11 முறை 400-க்கும் அதிகமான தொகுதிகளில் களம் கண்டு உள்ளது.

    இதுவரை பல வெற்றி தோல்விகளை கண்டபோதிலும், காங்கிரஸ் கட்சி 400-க்கும் மேற்பட்ட இடங்களிலேயே போட்டியிட்டுள்ளது.

    பா.ஜனதாவின் வளர்ச்சியாலும், மாநில கட்சிகளில் ஆதிக்கத்தாலும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மெல்ல மெல்ல குறைந்தது. இதனால் காங்கிரஸ் கட்சி, கூட்டணி அமைத்து போட்டியிட்டதால், அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வந்தது.

    ஆட்சியை இழந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், வாழ்வா...சாவா என்ற நிலையில் 18-வது பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சி, இந்தமுறை வெறும் 330 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.

    இதுதான் அந்த கட்சி போட்டியிடும் மிக குறைந்த எண்ணிக்கையாகும்.

    மொத்தம் 543 தொகுதிகளில், ஆட்சி அமைக்க தேவையான அந்த 'மேஜிக்' எண்ணிக்கை 272 வேண்டும். ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி 330 தொகுதிகளிலேயே போட்டியிடுகிறது.

    மேலும் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்காளம், பீகார், தமிழகம் ஆகிய 5 மாநிலங்கள் 249 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி வெறும் 65 தொகுதிகளில் மட்டுமே களம் காண்கிறது.

    இந்த மாநிலங்களில் எல்லாம், அங்குள்ள மாநில கட்சிகள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இதில் மேற்கு வங்காளம் தவிர மற்ற 4 மாநிலங்களில் காங்கிரஸ், அந்தந்த மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. எனவே அவர்கள் கொடுக்கும் எண்ணிக்கையிலேயே போட்டியிட வேண்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளது. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் இருந்தாலும், மாநிலத்தில் தனித்தே போட்டி என்று அறிவித்துவிட்டார். இதனால் அங்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சியுடன் மட்டும் கூட்டணி உள்ளது.

    கணிசமான தொகுதிகளை கொண்ட இந்த 5 மாநிலங்களில், மிக சொற்ப எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு, வெற்றி சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுகிறது.

    இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    இந்தமுறை காங்கிரஸ் குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட்டாலும், வெற்றி என்பது நம்பிக்கை தரும் வகையில் உள்ளது. நாங்கள் இந்த தேர்தலை இந்தியா கூட்டணி என்ற பெயரிலேயே சந்திக்கிறோம். எனவே 2004-ம் ஆண்டு ஏற்பட்டது போன்ற சூழல் 2024-ம் ஆண்டும் ஏற்படும்.

    உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதியுடனும், பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனும், மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுடனும் வலுவான கூட்டணி அமைத்துள்ளோம். அங்கு அவர்களுடன் தொகுதி பங்கீட்டில் நாங்கள் விட்டுக்கொடுத்துள்ளோம். இது எங்களது தேர்தல் வியூகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேற்கு திரிபுரா தொகுதியில் மாநில முன்னாள் முதல்-மந்திரி பிப்லாப் குமார் தேவ் பா.ஜனதா சார்பில் களமிறங்கி இருக்கிறார்.
    • மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி மகாராஷ்டிரத்தின் நாக்பூர் தொகுதியில் களம் காண்கிறார்.

    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி (நாளை) முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. இதற்காக நாடு முழுவதும் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்ட தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.

    இதில் முக்கியமாக, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரேயொரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதைத்தவிர மகாராஷ்டிரா, அசாம், அருணாசல பிரதேசம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு உட்பட்ட சில தொகுதிகளிலும் நாளை தேர்தல் நடக்கிறது.

    இந்த முதற்கட்ட தேர்தல் 8 மத்திய மந்திரிகள், 3 முன்னாள் முதல்-மந்திரிகள், ஒரு முன்னாள் கவர்னரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமைந்து உள்ளது.

    அந்தவகையில் தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் களமிறங்கி இருக்கிறார்.

    இவர் போட்டியிடும் தென் சென்னை தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. கவர்னர் மாளிகையில் இருந்து பாராளுமன்றத்துக்கு செல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது.

    மேற்கு திரிபுரா தொகுதியில் மாநில முன்னாள் முதல்-மந்திரி பிப்லாப் குமார் தேவ் பா.ஜனதா சார்பில் களமிறங்கி இருக்கிறார். இந்த தொகுதியில் இவருக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் ஆஷிஷ் குமார் சகாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    அருணாசல் மேற்கு தொகுதியில் அந்த மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான நபம் துகி களமிறக்கப்பட்டு உள்ளார். ஆனால் இந்த தொகுதியில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு 4-வது முறையாக மீண்டும் களமிறங்கி உள்ளார். இதனால் களம் சூடுபிடித்து இருக்கிறது.

    மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை மந்திரி சர்பானந்தா சோனோவால் போட்டியிடும் அசாமின் திப்ரூகார் தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருக்கும் இவரும் முன்னாள் முதல்-மந்திரி ஆவார்.

    மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி மகாராஷ்டிரத்தின் நாக்பூர் தொகுதியில் களம் காண்கிறார். கடந்த தேர்தல்களில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்து வரும் கட்காரி, இந்த முறையும் வெற்றிக்கோட்டை தொடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் தமிழகத்தின் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் அவரை எதிர்த்து தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான அ.ராசா களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மும்முனைப்போட்டி நிலவும் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் மத்திய மந்திரி சஞ்சீவ் பல்யான் பா.ஜனதா வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார். அந்த தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளர் ஹரிந்திர மாலிக், பகுஜன் சமாஜ் வேட்பாளர் தாராசிங் பிரஜாபதி ஆகியோர் இவருக்கு கடும் சவால் அளித்து வருகின்றனர்.

    மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மெக்வால் போட்டியிடும் ராஜஸ்தானின் பீகானேர் தொகுதியும் கவனிக்கத்தக்க தொகுதியாக மாறியிருக்கிறது.

    மேலும் காஷ்மீரின் உதம்பூர் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றிக்காக களமிறங்கி இருக்கும் மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங், ராஜஸ்தானின் அல்வார் தொகுதியில் போட்டியிடும் மத்திய மந்திரி பூபேந்திர யாதவ் ஆகியோரும் நாளைய தேர்தலில் குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் ஆவர்.

    தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள இந்த வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந்தேதி தெரியவரும்.

    • தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டி.
    • தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அதன்படி, தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்ளை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்.
    • உங்களைப் போன்ற அணியினர் எனக்கு பெரும் சொத்து.

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், "இது சாதாரண தேர்தல் அல்ல, மக்களின் ஆசீர்வாதத்துடன், பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெற்று, பாராளுமன்றத்தில் அடியெடுத்து வைப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக" குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, வேட்பாளர்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரையும் வாழ்த்தியுள்ளார்.

    கோவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில், "எனது சக காரியகர்த்தாவுக்கு. ராம நவமியின் நன்னாளில் கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்... ஒரு மதிப்புமிக்க வேலையை விட்டுவிட்டு நேரடியாக மக்களுக்கு சேவை செய்ய முடிவெடுத்ததற்கு உங்களை வாழ்த்துகிறேன். தமிழகம் முழுவதும் பா.ஜனதாவின் அடிமட்ட இருப்பை வலுப்படுத்தவும், சட்ட அமலாக்கம், நிர்வாகம் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளை முன்னிறுத்துவதில் நீங்கள் உண்மையிலேயே முக்கிய பங்காற்றியுள்ளீர்கள். உங்கள் அர்ப்பணிப்புள்ள தலைமையால் கோவைக்கு மகத்தான பலன் கிடைக்கும்.

    "மக்களின் ஆசியுடன், நீங்கள் பாராளுமன்றத்தை அடைவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களைப் போன்ற அணியினர் எனக்கு பெரும் சொத்து. ஒரு அணியாக, தொகுதி மக்களின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பாடுபடுவோம்" என்று அதில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் பைக் ஒட்டி வந்த நபர் மீது ஒரு லாரி மோதியது.
    • இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் பைக் ஒட்டி வந்த நபர் மீது ஒரு லாரி மோதியது. இதனால் பைக் லாரியின் அடியில் சிக்கி சேதமடைந்தது. உடனே பைக் ஒட்டி வந்த நபர் லாரி மீது ஏறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ஆனால் அதைப் பொருட்படுத்தாது ஓட்டுநர் லாரியை ஓட்டிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அன்றைய தினம் இதே லாரி மற்றொரு விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. 

    • ஆனந்த்னாக்-ரஜோரி தொகுதியில் மெஹபூபா முப்தி போட்டியிடுகிறார்.
    • குலாம் நபி ஆசாத் கட்சி முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின், தனிக்கட்சி தொடங்கினார். அவர் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறது. இந்த கட்சி சார்பில் குலாம் நபி ஆசாத் அனந்த்னாக்-ரஜோரி தொகுதியில் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் தேர்தலில் போட்டியிடமாட்டார் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் அவர் போட்டியிடவில்லை என்ற காரணத்தை தெரிவிக்கவில்லை. அவருக்குப் பதிலாக சலீம் பர்ரே போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிடிபி கட்சி தலைவர் மெஹபூபா முப்தி இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். தேசிய மாநாடு கட்சி சார்பில் மியான் அல்டாஃப் போட்டியிடுகிறார்.

    "சில விசயங்களை குலாம் நபி ஆசாத் தெரிவித்திருந்தார். அதன்பின் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என அக்கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின் ஆசாத் கட்சி சந்திக்கும் முதல் போட்டி இதுவாகும்.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக உமர் அப்துல்லா, குலாம் நபி ஆசாத் தைரியம் இருந்தால் தன்னை எதிர்த்து பாரமுல்லா தொகுதியில் போட்டியிடட்டும் பார்க்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.

    அதற்கு உமர் அப்துல்லாவை ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா பயணி என அழைத்தார். அவர் கோடைகாலத்தை லண்டனிலும், குளிர்காலத்தை வெப்பமான இடங்களிலும் கழிக்கிறார் என விமர்சித்திருந்தார்.

    • மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் கூச்பெஹர் பகுதிக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
    • தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறவேண்டாம் என தேர்தல் ஆணையம் அவருக்கு அறிவுறுத்தியது.

    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

    மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 3 தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன.

    இதற்கிடையே, மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் நாளை கூச் பெஹர் பகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். கவர்னரின் இந்தப் பயணம் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு சென்றது.

    இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளது. நன்னடத்தை விதிகள் அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, கவர்னருக்கும் பொருந்தும் என்பதால் கவர்னர் இதனை மீறக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    • உயிரிழந்த 10 பேரும் காரில் பயணம் செய்தவர்கள் ஆவார்கள்.
    • விபத்து காரணமாக 93 கிலோ மீட்டர் நீள எக்ஸ்பிரஸ்வே சாலையில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    குஜராத் மாநிலம் வதோதரா- அகமதாபாத் எக்ஸ்பிரஸ்வேயில் டிரக் மீது மாருதி சுசிகி எரிடிகா கார் மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். 10 பேரும் காரில் பயணம் செய்தவர்கள் ஆவார்கள். சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

    இந்த விபத்து காரணமாக 93 கிலோ மீட்டர் நீள எக்ஸ்பிரஸ்வே சாலையில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    டிரக் பழுதாகி இடது புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், வேகமாக வந்த கார் டிரக் மீது பயங்கரமாக மோதியது. டிரைவர் பிரேக் பிடித்தும் பயன் அளிக்கவில்லை என விசாரணையில் தெரிய வந்தது.

    • ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என ஆட்சிக்கு வந்து,
    • 10 ஆண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தாரா?.

    தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மற்றும் தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 22 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்துள்ளேன். மக்களுடைய முகத்தில் தெரியும் மகிழ்ச்சி மற்றும் எழுச்சியை வைத்து 40-க்கும் 40-ஐ நாம்தான் வெல்லப் போகிறோம் என்பதை சொல்கிறேன். 40-ஐயும் நமது கூட்டணிதான் ஆளப்போகிறது.

    தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை வீசிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் பிரதமர் மோடியின் சர்வாதிகர மனப்பான்மை. மாநிலங்களை நசுக்கிற எதேச்சதிகாரம். ஒற்றுமையாக வாழுகின்ற மக்களிடையே பிளவை உருவாக்குகின்றன மதவாத பேச்சு. எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கின்ற பாசிச எண்ணம்.

    ஹேமந்த் சோரன், அரவிந்த் ஜெக்ரிவாலை சிறையில் அடைத்துள்ளார். தேர்தல் களம் சமமாக இருந்தால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வங்கி கணக்குகளை முடக்கும் தீய செயல்களில் ஈடுபட்டார்.

    மக்களை பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட்டர்கள் மட்டுமே முன்னேற வேண்டும் என சிந்தித்து திட்டங்களை தீட்டியதில் விலைவாசி உயர்ந்து, அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது.

    ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என ஆட்சிக்கு வந்து, 10 ஆண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தாரா?. இல்லை. கேள்வி கேட்ட இளைஞர்களை பகோடா சுடச் சொன்னவர்தான் மோடி.

    தற்போது நடுநிலை வாக்காளர்களும் பாஜக-வின் உண்மையான முகத்தை தெரிந்து கொண்டு வெறுக்க தொடங்கிவிட்டார்கள்.

    ஊழல் பத்திரம் மோடியின் க்ளீன் முகத்தை கிழித்து மோடியின் ஊழல் முகத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. உடனே தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள தேர்தல் பத்திரம் வந்த உடன்தான் யார்? யாருக்கு? நிதி அளித்தார்கள் என்பது தெரியவந்தது என வடை சுட ஆரம்பித்தார்.

    நாடு எத்தனையோ பிரதமரை பார்த்திருக்கிறது. இதுபோன்று வசூல் வேட்டையில் ஈடுபட்ட பிரதமரை பார்த்தது இல்லை. கொரோனாவில் கூட பிரதமர் கேர் நிதி வசூல் வேட்டை நடத்தினார். ஊழலுக்கு ஒரு யுனிவர்சிட்டி கட்டி அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்க வேண்டுமென்றால் அதற்கு பொருத்தமான நபர் மோடியை விட்டால் வேறு யாரும் கிடையாது. ஊழலை சட்டப்பூர்வமாக்கிய சாதனையாளர் மோடிதான்.

    இப்போது ஊழலுக்கு உத்தரவாதம் கொடுக்கிற Made in BJP. வாஷிங் மெஷின் வைத்து ஊழல் கறை படிந்ததை சுத்தப்படித்தியிருக்கிறார்கள். இது தொடர்பாக கேள்விமேல் கேள்வி கேட்கிறார்களே. நடுநிலையாளர்கள் கேள்வி கேட்கிறார்களே என்ற எந்தவிதமான மான உணர்ச்சி இல்லாமல் திரும்ப திரும்ப அதே செயல்களில் பாஜக ஈடுபடுகிறது.

    பா.ஜனதா ஒரு மாநிலத்தில் வளர்ச்சி அடைய தேடுவது மத பிரச்சனையைத்தான். அங்கு பிரச்சனை இல்லையென்றால் எப்படி தூண்டலாம் என ரூம் போட்டு யோசிக்கின்ற கலவர கட்சிதான் பாஜக.

    பாஜனதா குறித்து பேசினால் நம்மை ஊழல் கட்சி, குடும்ப கட்சி எனக் குறை கூறுகிறார்கள். தேய்ந்து போன டேப் ரெக்கார்டு மாதிரி மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கு பதில் அளித்தே சோர்ந்து போனோம்.

    நிறையபேர் தனியாக இருந்து இரவு 12 மணிக்குக்கூட பேய் படும் பார்த்து விடுவார்கள். ஆனால் மோடி இரவு டி.வி.யில் பேசப்போகிறார் என்றால், பலரின் நெஞ்சு படபடத்துவிடும். அந்த அளவிற்கு நாட்டு மக்களை மன ரீதியான அளவிற்கு பயத்திற்கு ஆளாக்கியிருப்பவர்தான் பிரதமர் மோடி.

    திடீரென ஒருநாள் டி.வி.யில் வந்தார். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனக் கூறினார். எந்தவிதமான திட்டமிடுதல் இல்லாமல் ஒரு திட்டத்தை கொண்டு வந்து, அதன்பின் தினந்தோறும் விதி (Rule) போட்டார். கேட்டால், கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என வசனம் பேசினார். மக்களும் அதை நம்பி சொன்னதையெல்லாம் செய்தார்கள்.

    கருப்பு பணம் ஒழிந்ததா? 99 சதவீத பணம் திரும்பி வந்ததாக ரிசர்வ் வங்கி சொன்னது. முதலில் ஆதரிவித்தவர்கள் பின்னர் கடுமையாக விமர்சித்தார்கள். அதோடு விடாமல் புதிதாக அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தார். அந்த பணமும் 97 சதவீதம் திரும்பி வந்துள்ளது. அப்போ கருப்பு பணம் ஒழிப்பு என்ன மோடி மஸ்தான் வித்தை எதற்கு? பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் ஏழை மீதான முதல் தாக்குதல்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

    • ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் பாராளுமன்ற தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது.
    • முதல் கட்டமாக மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தலானது ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது.

    தமிழ்நாடு, அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் முதல் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

    தமிழகத்தில் 39 தொகுதி, உத்தர பிரதேசத்தில் 8 தொகுதி, மத்திய பிரதேசத்தில் 6 தொகுதி, மகாராஷ்டிரா மற்றும் உத்தரகாண்டில் தலா 5 தொகுதிகள் உள்பட மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகள் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 21 மாநிலங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பிரசாரம் நிறைவடைந்த பின் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது. தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×