என் மலர்
நீங்கள் தேடியது "public examination"
- தனக்கு பிரசவம் நடந்த 2 நாட்களிலேயே கைக்குழந்தையுடன் தேர்வு எழுதியுள்ளார்.
- வறுமை காரணமாக கல்வியை இடையில் நிறுத்தி இருந்தார்.
மும்பை:
ஆண் கல்வியறிவு பெற்றால் ஒரு தனிநபர் பயன் பெறுவார், ஆனால் ஒரு பெண் கல்வியறிவு பெற்றால் ஒரு தலைமுறையே பயன்பெறும் என்பது பெண் கல்வியின் மகத்துவத்தை போற்றும் பொன்மொழியாகும்.
அந்தவகையில் கல்வியை பிரதானமாக கருதிய பெண் ஒருவர், தனக்கு பிரசவம் நடந்த 2 நாட்களிலேயே கைக்குழந்தையுடன் தேர்வு அறைக்கு வந்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மற்ற பெண்களுக்கு ஆகச்சிறந்த முன்உதாரணமாக திகழ்ந்துள்ளார்.
மராட்டிய மாநிலம் நாந்தெட்டை சேர்ந்தவர் சீத்தல்(வயது21). வறுமை காரணமாக கல்வியை இடையில் நிறுத்தி இருந்தார். கல்வியின் முக்கியத் துவத்தை அறிந்து பின்னர் கல்வியை தொடர்ந்தார். 2 ஆண்டுகளுக்கு முன் அவர் மணமாலை சூடினார். திருமணத்துக்கு பிறகும் கல்வியை கைவிட அவரது மனது சம்மதிக்கவில்லை. அங்குள்ள ஸ்ரீபாசவேஷ்வர் ஜூனியர் கல்லூரியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இல்லற வாழ்க்கை காரணமாக 10 நாட்களுக்கு முன் அவருக்கு குழந்தை பிறந்தது. பொதுத்தேர்வு சமயத்தில் குழந்தை பிறந்தாலும், அது பரீட்சை எழுத அவருக்கு தடையாக அமையவில்லை. அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்காமல் பொதுத்தேர்வை எழுதியே ஆக வேண்டும் என்று தீர்க்கமான முடிவை எடுத்தார்.
தனக்கு குழந்தை பிறந்த 2 நாட்களில், அதாவது கடந்த 10-ந்தேதி நடந்த ஆங்கில தேர்வை அவர் தனது சகோதரியுடன் வந்து எழுதி அனைவரை யும் வியக்க வைத்தார். நேற்றுமுன்தினம் அரசியல் அறிவியல் தேர்வை எழுதினார்.
பச்சிளம் குழந்தையுடன் தேர்வு எழுத வந்த மாணவிக்கு தேவையான வசதிகளை தேர்வு மைய அதிகாரிகள் செய்தனர். தேர்வு மையத்தில் குழந்தையை தூங்க வைப்பதற்கான தொட்டில் உள்ளிட்ட உதவிகளை செய்து கொடுத்தனர். கல்வியை தனது இரு கண்களாக கருதிய பெண் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையுடன் வந்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய சம்பவம் மராட்டியத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சிசிடிவியை ஆய்வு செய்ததில் மாணவி எல்லா பாடங்களையும் எழுதியிருப்பது தெரியவந்தது.
- தேர்வுக்கு வராத மாணவருக்கு 52% மதிப்பெண்களுடன் தேர்ச்சி எனவும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது
குஜராத்தில் கடந்த மே 8 ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. சோட்டா உதேபூரில் வசிக்கும் அகிக்ஷா பர்மர் என்ற மாணவி தனது 10 ஆம் வகுப்பு முடிவுகளை பார்த்து அதிர்ச்சியில் உரைந்தார்.
அதாவது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களும் தேர்வெழுதிய தனக்கு, ஆப்சன்ட் என்பதால் ஃபெயில் என ரிசல்ட் வந்ததால் அவர் குழம்பிப்போனார்.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் கொடுத்த பிறகு, சிசிடிவியை ஆய்வு செய்ததில் மாணவி எல்லா பாடங்களையும் எழுதியிருப்பது தெரியவந்தது.
சோட்டா உதேபூர் மாவட்ட கல்வி அதிகாரி (DEO) ஆனந்த் பர்மர், தேர்வு மேற்பார்வையாளர் ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர் உட்பட ஆறு பேருக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வுக்கு வராத மாணவருக்கு 52% மதிப்பெண்களுடன் தேர்ச்சி எனவும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி ஆனந்த் பர்மர் தெரிவித்தார்.
- அபிஷேக் 600க்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.
- அக்கம்பக்கத்தினர் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள பசவேஸ்வரா இங்கிலீஸ் மீடியம் பள்ளியில் அபிஷேக் சோழச்சகுடா என்ற சிறுவன் 10 ஆம் வகுப்பு படித்து வந்தான்.
சமீபத்தில், அவர் தனது பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுதினார். சில நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தன. எல்லா படங்களிலும் ஃபெயில் ஆன அபிஷேக் 600க்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.
இருப்பினும், அபிஷேக் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த பிறகு, அவரது பெற்றோர் அவரிடம் எதுவும் சொல்லவில்லை. அக்கம்பக்கத்தினர் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. கொண்டாட்டத்தில் அபிஷேக் கேக்கை வெட்டினார்.
இந்த சந்தர்ப்பத்தில், அபிஷேக்கின் பெற்றோர், 'நீ தேர்வில் மட்டும்தான் தோல்வியடைந்தாய். வாழ்க்கையில் இல்லை. நீ மீண்டும் முயற்சி செய்யலாம். வெற்றிக்கான வாய்ப்பும் உள்ளது" என்று ஊக்கப்படுத்தினர்.
பெற்றோரின் ஆதரவை கண்டு அபிஷேக் கண்ணீர் விட்டார். 'நான் தோல்வியடைந்தாலும் என் பெற்றோர் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். நான் மறுபடியும் தேர்வு எழுதுவேன். நான் தேர்வில் வெற்றி பெறுவேன். வாழ்க்கையிலும் வெற்றி பெறுவேன்" என்று அபிஷேக் ஊடகத்திடம் தெரிவித்தார்.
- பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவு தேடல் மற்றும் வாசிப்பு திறன்கள் மேம்படுத்தப்படும்.
- கடந்த ஆண்டை விட குறைந்தபட்சம் 50 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
சென்னை:
சட்டசபையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசினார் அப்போது அவர் 25 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை வருமாறு:-
அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் 13 லட்சம் மாணவர்களின் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணித திறன்களை மேம்படுத்தும் வகையில் வரும் கல்வி ஆண்டில் பள்ளி வேலை நேரத்தில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களின் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்படும். இந்த திட்டம் ரூ.19 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இதன் மூலம் 13 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள்.
பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவு தேடல் மற்றும் வாசிப்பு திறன்கள் மேம்படுத்தப்படும். இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பின் கீழ் தேச தலைவர்கள் அறிவியல் அறிஞர்கள் விளையாட்டு வீரர்கள் பிடித்த விளையாட்டுகள் சுற்றுச்சூழல் நடப்பு நிகழ்வுகள் முதலியவற்றில் பேச்சுப்போட்டி கதை சொல்லுதல் நடித்துக் காட்டுதல் ,குழு விவாதம் பட்டிமன்றம் ஆகியவற்றின் மூலம் வாசிப்பு திறன்கள் மேம்படுத்தப்படும் .
பள்ளி மாணவர்களிடம் வாழ்வியல் திறங்கள் விழுமியங்கள், பாலின சமத்துவம், நேர்மறை எண்ணங்கள், போதைப் பொருட்களின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றில் விரும்பத்தக்க நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த விழிப்புணர்வு கட்டகம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படும் .
இதற்காக பள்ளிகளின் வாராந்திர கால அட்டவணையில் வகுப்புக்கு ஒரு பாடவேளை ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் .
அரசு பள்ளி மாற்று திறன் மாணவர்களின் உடல் நலம் மற்றும் மனநலத்தை மேம்படுத்த 46 ஆயிரம் மாற்றுத்திறன் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தகுந்த விளையாட்டு சாதனங்கள் பயிற்சிகள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் அரசு பள்ளிகளுக்கும் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
கடந்த ஆண்டை விட குறைந்தபட்சம் 50 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 8 வது மாடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய 300 இருக்கைகள் கொண்ட கருத்தரங்க கூடம் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்படும்.
இசை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்க்கை பெரும் பொருட்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் அறிவித்தார்.
- 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்றார்.
- மருத்துவ கல்லூரியில் படிக்க உறுதுணையாக இருந்து ஊக்கம் தந்த ஆசிரியர்கள்.
பேராவூரணி:
பேராவூரணி அருகே மரக்காவலசை கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல், ஜீவா லட்சுமி இவர்களது மகள் பிரதீபா (வயது 18). இவர் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மரக்காவலசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் அதனை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்று வந்தார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு மையத்தில் சேர்ந்து படித்து வெற்றி பெற்றார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.
இதனை அறிந்த பேராவூரணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா. கோவிந்தராஜன் மரக்காவலசையில் உள்ள மாணவி பிரதீபா வீட்டிற்கு நேரடியாக சென்று வாழ்த்துக்கள் தெரிவித்து படிப்பதற்கு நிதி உதவி வழங்கினார்.
கிராமப்புற மாணவர்கள் மருத்துவராக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி க்கு நன்றி தெரிவித்தார்.
சேதுபாவாசத்திரம் தெற்கு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கே.எஸ்.அருணாச்சலம், பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ, பேராவூரணி நகர செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா அப்துல் ஜபார் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் மாணவி பிரதீபாகூ றியதாவது, மருத்துவ கல்லூரியில் படிக்க உறுதுணையாக இருந்து ஊக்கம் தந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் உதவி செய்தவர்களுக்கு நன்றி. நான் மருத்துவராகி ஏழை, எளிய மக்களுக்கு பணியாற்றுவேன் என கூறினார்.
- ஆசிரியர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் மாணவரின் பெற்றோர் கேட்க மறுத்தனர்.
- உங்களின் வறுமை நிரந்தரமாக நீங்கவே, நான் உங்களை வற்புறுத்துகிறேன் என்று கல்வியின் முக்கியத்துவத்தை புரிய வைத்தார்.
ஐதராபாத்:
தெலங்கானா மாநிலம், சித்திபேட்டை மாவட்டம், பெஜ்ஜிங்கி உயர்நிலைப்பள்ளியில் மொத்தம் 64 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இதில், வரும் மார்ச் மாதத்தில் 6 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் நவீன் என்ற மாணவன் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. தலைமையாசிரியர் உத்தரவின் பேரில், ஆங்கில ஆசிரியர் பிரவீன் குமார், நவீன் வீட்டிற்கு சென்று விசாரித்தார்.
குடும்ப வறுமை காரணமாக நவீனை பள்ளிக்கு அனுப்ப அவனது பெற்றோர் மறுத்துவிட்டனர்.
ஆசிரியர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் மாணவரின் பெற்றோர் கேட்க மறுத்தனர். இதனால், மாணவரின் வீட்டுமுன் தரையில் அமர்ந்து ஆசிரியர் பிரவீன் குமார் தர்ணாவில் ஈடுபட்டார்.
உங்களின் வறுமை நிரந்தரமாக நீங்கவே, நான் உங்களை வற்புறுத்துகிறேன் என கூறி கல்வியின் முக்கியத்துவத்தை புரிய வைத்தார்.
அதன் பிறகு நவீனை பள்ளிக்கு அனுப்ப அவனது பெற்றோர் ஒப்புக் கொண்டனர். நவீனை பள்ளிக்கு அழைத்து வந்த பிரவீன் குமாரை, தலைமை ஆசிரியர் உட்பட பலரும் பாராட்டினர்.
- பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கான செய்முறை தேர்வும் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
- மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.
பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கான செய்முறை தேர்வும் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
இதற்கான தேர்வு மையங்களை கண்டறிதல் பெயர்ப் பட்டியல், ஹால் டிக்கெட் தயாரிப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகளை தேர்வுத் துறை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பொதுத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளின் நிலை தொடர்பாக தேர்வுத்துறை சார்பில் இன்று சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில் வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது.
பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துறை சார்ந்த இயக்குனர்கள் அனைத்து முதன்மை, மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 6 முதல் 10-ந்தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் முன் கூட்டியே நடத்தும் வகையில் தற்போது இதை மார்ச் 1-ந்தேதியில் இருந்து 9-ந்தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று மாற்றி அமைத்துள்ளோம்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட செய்முறை தேர்வுகளுக்கான அவகாசம் போதுமானதாக இல்லை என்றும் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்டதால் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதே போல் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17-ந்தேதி வெளியாகும். பிளஸ்-1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 19-ந்தேதியும், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 5-ந்தேதியும் வெளியாகும்.
பொதுத் தேர்வை தனி தேர்வாக எழுத விரும்பும் மாணவர்கள் இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
பள்ளி கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோரை வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லும் திட்டமும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மார்ச் 19 மற்றும் 26-ந் தேதிகளில் சிறப்பு யாகபூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
திருப்பூர் :
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மிகுந்த நினைவாற்றல் பெற்று தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆற்றல் வழங்க வேண்டி திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில் திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் சிறப்பு யாக பூஜையுடன், மாணவர்கள் பெயரில் சிறப்பு வழிபாடு நடத்தி அருளாசி வழங்கப்படும்.
அவ்வகையில் நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு வருகிற 26-ந் தேதி மற்றும் மார்ச் 5-ந் தேதி, பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 12-ந் தேதி,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 19 மற்றும் 26-ந் தேதிகளில் சிறப்பு யாகபூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் காலை9 மணிக்கு சிறப்பு வேள்வி, 10:30 மணிக்கு மூலவர் திருமஞ்சனம், 11 மணிக்கு நாம சங்கீர்த்தனம், 11:30 மணிக்கு சாத்துமறை மற்றும் மகாதீபாராதனை, 12 மணிக்கு மாணவ, மாணவிகளுக்கு பிரசாத வினியோகம் நடைபெறும்.
மாணவ, மாணவிகள் நலனுக்காக முற்றிலும் இலவசமாக நடக்கும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று, மாணவர்களும் குடும்பத்தினரும் பயன்பெறலாம் என திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
- எமிஸ் இணைய தளம் மூலம் பள்ளிக்கல்வி துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- விவரங்களில் ஒரு எழுத்துக்கூட பிழையின்றி சரியாக இருக்க வேண்டும்.
திருப்பூர்:
நடப்பு கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி துவங்கி 20ந் தேதி வரை நடத்தப்படுகிறது. தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் சார்பில் எமிஸ் இணைய தளம் மூலம் பள்ளிக்கல்வி துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுத்தேர்வுக்கான பணிகளில் பள்ளிக்கல்வித்துறை மும்முரம் காட்டி வரும் நிலையில் 'எமிஸ்' இணையதளத்தில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவ, மாணவிகளின் விவரங்களை ஏதேனும் திருத்தம் இருப்பின் அவற்றை சரி செய்து கொள்வதற்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழ் தான் மாணவ, மாணவிகளின் உயர் கல்வி துவங்கி வேலை வாய்ப்பு வரையிலான அனைத்துக்கும் பிரதான ஆதாரமாக இருக்கும் என்பதால் அந்த சான்றிதழில் மாணவ, மாணவிகளின் பெயர், விவரங்களில் ஒரு எழுத்துக்கூட பிழையின்றி சரியாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் ஏற்கனவே பள்ளி நிர்வாகங்கள் சார்பில் மாணவ, மாணவிகளின் பெயர் விவரங்கள், பெற்றோரின் ஒப்புதலுடன் சரிபார்க்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் விவரங்களை சரி பார்க்கவும், பிழையிருந்தால் திருத்திக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும், மாணவ, மாணவிகளின் விவரங்களை வருகிற 25ந் தேதிக்குள் எமிஸ் தளம் வழியாக பட்டியலில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
- விருப்பம் உள்ள சிறைக்கைதிகள் பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.
- குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு அறைக்கு வந்த 24 கைதிகள் ஆர்வத்துடன் பொதுத்தேர்வு எழுதினர்.
லக்னோ:
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 24 சிறைக்கைதிகள் எழுதினர். மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், விருப்பம் உள்ள சிறைக்கைதிகள் பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.
லக்னோவில் உள்ள மாடல் சிறையில் கைதிகள் தேர்வு எழுதுவதற்காக ஏற்பாடும் செய்யப்பட்டது.
இந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு அறைக்கு வந்த 24 கைதிகள், ஆர்வத்துடன் பொதுத்தேர்வு எழுதினர்.
- கல்லிடைக்குறிச்சி திலகர் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
- சிறப்பு விருந்தினர்களாக ஆண்டனி பாபு, ஜோசபின் விமலா, ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
கல்லிடைக்குறிச்சி :
கல்லிடைக்குறிச்சி திலகர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நெல்லை ரோட்டரி சங்கமும், கல்லிடைக்குறிச்சி வித்யா சங்கமும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பண்டாரசிவன் வரவேற்று பேசினார்.
பள்ளிச்செயலர் சங்கர், ரோட்டரி சங்க தலைவர் ஆவுடையப்ப குருக்கள் ஆகியோர் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினர்களாக ஆண்டனி பாபு, ஜோசபின் விமலா, ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியை தமிழாசிரியர் சந்தோஷ் தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சுபா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி விடப்பட்டுள்ளது.
- கல்வித்துறை சார்பில் மின்வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் பள்ளிகளில் பொதுத்தேர்வு நடப்பதால் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் முழுநேர மின்தடை இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வு துவங்கியுள்ளது. வருகிற 13-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வும், பிப்ரவரி 6-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை 10ம் வகுப்பு பொது தேர்வும் நடத்தப்பட உள்ளது. மாணவர்கள், தேர்வுக்கு நன்கு தயார்படுத்தி கொள்ளும் வகையில் ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி விடப்பட்டுள்ளது.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை முன்னிட்டு தேர்வு காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என கல்வித்துறை சார்பில் மின்வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மார்ச் - ஏப்ரல் மாதம் முழுநேர மின்தடை இருக்காது.மிக அவசர பழுது காரணமாக மின்தடை செய்ய வேண்டியிருந்தால் குறிப்பிட்ட இடம் சார்ந்த பகுதியில் மட்டும் தற்காலிகமாக மின்தடை செய்யப்பட்டு விரைவில் பழுதுநீக்கி மின்சாரம் வினியோகிக்கப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.






