என் மலர்
இந்தியா
- தனக்கு பிரசவம் நடந்த 2 நாட்களிலேயே கைக்குழந்தையுடன் தேர்வு எழுதியுள்ளார்.
- வறுமை காரணமாக கல்வியை இடையில் நிறுத்தி இருந்தார்.
மும்பை:
ஆண் கல்வியறிவு பெற்றால் ஒரு தனிநபர் பயன் பெறுவார், ஆனால் ஒரு பெண் கல்வியறிவு பெற்றால் ஒரு தலைமுறையே பயன்பெறும் என்பது பெண் கல்வியின் மகத்துவத்தை போற்றும் பொன்மொழியாகும்.
அந்தவகையில் கல்வியை பிரதானமாக கருதிய பெண் ஒருவர், தனக்கு பிரசவம் நடந்த 2 நாட்களிலேயே கைக்குழந்தையுடன் தேர்வு அறைக்கு வந்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மற்ற பெண்களுக்கு ஆகச்சிறந்த முன்உதாரணமாக திகழ்ந்துள்ளார்.
மராட்டிய மாநிலம் நாந்தெட்டை சேர்ந்தவர் சீத்தல்(வயது21). வறுமை காரணமாக கல்வியை இடையில் நிறுத்தி இருந்தார். கல்வியின் முக்கியத் துவத்தை அறிந்து பின்னர் கல்வியை தொடர்ந்தார். 2 ஆண்டுகளுக்கு முன் அவர் மணமாலை சூடினார். திருமணத்துக்கு பிறகும் கல்வியை கைவிட அவரது மனது சம்மதிக்கவில்லை. அங்குள்ள ஸ்ரீபாசவேஷ்வர் ஜூனியர் கல்லூரியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இல்லற வாழ்க்கை காரணமாக 10 நாட்களுக்கு முன் அவருக்கு குழந்தை பிறந்தது. பொதுத்தேர்வு சமயத்தில் குழந்தை பிறந்தாலும், அது பரீட்சை எழுத அவருக்கு தடையாக அமையவில்லை. அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்காமல் பொதுத்தேர்வை எழுதியே ஆக வேண்டும் என்று தீர்க்கமான முடிவை எடுத்தார்.
தனக்கு குழந்தை பிறந்த 2 நாட்களில், அதாவது கடந்த 10-ந்தேதி நடந்த ஆங்கில தேர்வை அவர் தனது சகோதரியுடன் வந்து எழுதி அனைவரை யும் வியக்க வைத்தார். நேற்றுமுன்தினம் அரசியல் அறிவியல் தேர்வை எழுதினார்.
பச்சிளம் குழந்தையுடன் தேர்வு எழுத வந்த மாணவிக்கு தேவையான வசதிகளை தேர்வு மைய அதிகாரிகள் செய்தனர். தேர்வு மையத்தில் குழந்தையை தூங்க வைப்பதற்கான தொட்டில் உள்ளிட்ட உதவிகளை செய்து கொடுத்தனர். கல்வியை தனது இரு கண்களாக கருதிய பெண் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையுடன் வந்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய சம்பவம் மராட்டியத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கோரக்பூரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
- அதில் 30 பேருக்கு கண்புரை ஆபரேஷன் செய்யப்பட்டது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. அதில் 30 பேருக்கு கண்புரை ஆபரேஷன் செய்யப்பட்டது. பலர் மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின்கீழ் ஆபரேஷன் செய்து கொண்டனர்.
ஆபரேஷனுக்கு பிறகு அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் மறுநாள் அவர்களில் பலருக்கு ஆபரேஷன் செய்த கண்ணில் கடுமையான வலி ஏற்பட்டது. ரத்தம் வழிந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர்கள், அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று கேட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களது கண்ணில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
அவர்கள் மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மற்றும் லக்னோ. வாரணாசி ஆகிய ஊர்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொற்று மேலும் பரவுவதை தடுப்பதற்காக, 9 பேருக்கு ஒரு கண் அகற்றப்பட்டது. மேலும் 9 பேருக்கு பார்வை பறிபோனது. ஒரு நோயாளி மட்டும் பார்வையை திரும்பப் பெற்றார்.
இதைத்தொடர்ந்து, அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு 'சீல்' வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் தீபக் மீனா தெரிவித்தார். விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தவறு செய்தவர்களின் பதிவு ரத்து செய்யப்படும் என்று அவர் கூறினார்.
விசாரணை அறிக்கை அடிப்படையில், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை மருத்துவ அதிகாரி ராஜேஷ் ஜா கூறினார்.
- டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏ.ஐ. உச்சி மாநாடு கடந்த 16-ம் தேதி முதல் நடந்து வருகிறது.
- இந்த மாநாட்டில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏ.ஐ. உச்சி மாநாடு கடந்த 16-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த மாநாட்டில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பிரான்ஸ், பிரேசில், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இலங்கை, நெதர்லாந்து, பின்லாந்து, குரோசியா, எஸ்டோனியா, சொ்பியா, சுலோவாகியா, மொரீஷியஸ், பூடான், கஜகஸ்தான், கிரீஸ், சீஷெல்ஸ், பொலிவியா, கயானா, அபுதாபி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, கூகுள் மற்றும் ஆல்பா பெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து அதிபர் கெய் பார்மலின் மாநாட்டில் பேசுகையில், அடுத்த ஆண்டு ஏ.ஐ. உச்சி மாநாடு ஜெனீவாவில் நடைபெறும் என அறிவித்தார்.
- நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- எஸ்.ஐ.ஆர். பணிகள் மூலம் தமிழகத்தில் சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.
புதுடெல்லி:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக பீகாரிலும், 2-வது கட்டமாக தமிழகம், கேரளம், மேற்குவங்கம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் சத்தீஸ்கர், கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிகோபர் தீவுகள் என யூனியன் பிரதேசங்களுக்கும் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, தமிழகத்தில் சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.
இந்நிலையில், கர்நாடகம் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்வதற்கான பணிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், சண்டீகர், தாத்ரா-நகர் ஹவேலி, டாமன்-டையூ, அரியானா, இமாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகம், லடாக், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, டெல்லி, ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
- உபகரணங்கள் கிடைக்காமல் பெரும் காலதாமதத்தைச் சந்தித்து வந்தன.
- தடையை தற்போது உற்பத்தித் திறனைக் கருத்தில் கொண்டு அரசு தளர்த்தியுள்ளது.
2020-ஆம் ஆண்டு எல்லையில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, சீன நிறுவனங்கள் மற்றும் தயாரிப்புகள் மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு தற்போது தளத்தியுள்ளது.
சீன உபகரணங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் இந்தியாவின் மின்சாரம் மற்றும் நிலக்கரித் துறை உட்பட முக்கிய துறைகளில் உள்கட்டமைப்புத் திட்டங்கள், உபகரணங்கள் கிடைக்காமல் பெரும் காலதாமதத்தைச் சந்தித்து வந்தன.
இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில் கட்டுபாடுகளில் தற்போது மத்திய அரசு அளித்துள்ள தளர்வுகளின்படி, சீனாவிலிருந்து மின் விநியோக மற்றும் நிலக்கரி உற்பத்தி உபகரணங்களை வாங்குவதற்கு பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 750 பில்லியன் டாலர் மதிப்புள்ள அரசு ஒப்பந்தங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகக் கொண்டுவரப்பட்ட இந்தத் தடையை தற்போது உற்பத்தித் திறனைக் கருத்தில் கொண்டு அரசு தளர்த்தியுள்ளது.
- வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்
- பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தியது.
அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் பேசினார்.
இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்" என்று தெரிவித்தார்.
இதையடுத்து, அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நுழையவும் இந்தியா ஒப்புக்கொண்டது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியாவின் BPCL நிறுவனம் 2 ஆண்டுகளுக்குப் பின், வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளது.
பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தியதை அடுத்து, BPCL மற்றும் HPCL மிட்டல் எனர்ஜி நிறுவனங்கள் தலா 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை தற்போது வெனிசுலாவிடம் இருந்து வாங்கியுள்ளன.
- ராகுல் காந்திக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டல் ஒரு திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதி
- மத்திய உள்துறை அமைச்சருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையா?
ராகுல் காந்தி மற்றும் 25 காங்கிரஸ் எம்.பி.க்களை வீடு புகுந்து சுட்டுக் கொல்வேன் என்று வீடியோ வெளியிட்டு மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்ணி சேனா என்ற வலதுசாரி அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ராஜ் சிங் என்ற அந்த நபர் ராஜஸ்தானின் கோட்டா நகரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வீடியோவில் பேசிய ராஜ் சிங், " மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை அவதூறாகப் பேசியதால் காங்கிரஸ் எம்.பிக்கள் 25 பேர் மீதும் அவர்களுக்கு உத்தரவுகளை வழங்கிய ராகுல் காந்தி மீதும் பாஜக மற்றும் கர்ணி சேனா தொண்டர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்தால், உங்கள் வீட்டிற்குள் புகுந்து உங்களைச் சுட்டுக் கொல்வோம்" என்று மிரட்டியிருந்தார்.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைக் கடுமையாகச் சாடியுள்ளது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, "பாஜக-ஆர்.எஸ்.எஸ் வலையமைப்பு என்பது ஒரு 'கோட்சே தொழிற்சாலை'. ராகுல் காந்திக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டல் ஒரு திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதி" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேத் "நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பொதுவெளியில் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது.
இது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையா?
ஒரு குண்டர் பகிரங்கமாகத் துப்பாக்கியால் சுடுவேன் என்று மிரட்டியும் அரசு ஏன் மௌனமாக இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ள தகவல்களை வைத்தே கண்டறிய முடியும்.
- முறைகேடுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்.
மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ம் தேதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவருடன் மேலும் நால்வர் உயிரிழந்தனர்.
அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளாட்சி தேர்தலில் பாஜவுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். மேலும் அவர் உடைந்த தேசியவாத காங்கிரசை ஒன்றிணைக்க இருந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்ளாட்சிகளில் பாஜக ஊழல் செய்வதாக அஜித் பவார் பிரசாரங்களில் விமர்சித்து வந்தார். எனவே அவரின் மரணம் விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட ஒன்றா என எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி வந்தன.
இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட கருப்பு பெட்டி தீயில் கருகி சேதமடைந்திருந்தது. கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ள தகவல்களை வைத்தே விமான விபத்து எப்படி நடந்தது என்பதை கண்டறிய முடியும்.
இந்நிலையில் விபத்து தொடர்பாக அவரது இளைய மகன் ஜய் பவார் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்ட சமூக வலைதள பதவில், "விமானத்தின் பிளாக் பாக்ஸ் அவ்வளவு எளிதில் அழிந்துவிடக் கூடியது அல்ல. மகாராஷ்டிர மக்களுக்கு இந்த விபத்தின் முழுமையான மற்றும் வெளிப்படையான உண்மையை அறியும் உரிமை உண்டு.
விபத்துக்குள்ளான லியர்ஜெட் விமானத்தை இயக்கிய VSR வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கு உடனடியாகத் தடை விதித்து அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜெய் பவார் தாயாரும் தற்போதைய துணை முதல்வருமான சுநேத்ரா பவார் மற்றும் சகோதரர் பார்த் பவார் ஆகியோர் முதல்வர் பட்நாவிஸை சந்தித்து இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி இருந்தனர்.
- ஒவ்வொரு சாமானிய இந்தியருக்கும் மலிவான விலையில் கிடைக்கச் செய்வோம்.
- அனைத்து இந்திய மொழிகளிலும் உலகத் தரம் வாய்ந்த ஏஐ திறனை உருவாக்குவதே இலக்கு.
டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏஐ உச்சிமாநாடு கடந்த 16 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. நாளையுடன் நிறைவடையும் இந்த மாநாட்டில் இன்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் இன்று பங்கேற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அடுத்த 7 ஆண்டுகளில் ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
மாநாட்டில் பேசிய அவர், "ஜியோ எப்படி இணையத் சேவையை மலிவாக்கி புரட்சியை ஏற்படுத்தியதோ, அதேபோல் ஏஐ தொழில்நுட்பத்தையும் ஒவ்வொரு சாமானிய இந்தியருக்கும் மலிவான விலையில் கிடைக்கச் செய்வோம்.
இந்தியா இனி வெளிநாடுகளிடம் இருந்து தொழில்நுட்பத்தை வாடகைக்கு எடுக்கத் தேவையில்லை" என்று கூறினார்.
இந்த முதலீட்டின் மூலம் 'ஜியோ இண்டெலிஜென்ஸ்' என்ற பெயரில் முக்கியத் திட்டங்களை ரிலையன்ஸ் செயல்படுத்த உள்ளது:
குஜராத்தின் ஜாம்நகரில் பிரம்மாண்டமான ஏஐ தரவு மையங்கள், நாடு முழுவதும் அதிவேகமான மற்றும் குறைந்த செலவிலான ஏஐ சேவைகளை வழங்க 'எட்ஜ் கம்ப்யூட்டிங்' வசதி ஆகியவை இதில் அடங்கும்.
அனைத்து இந்திய மொழிகளிலும் உலகத் தரம் வாய்ந்த ஏஐ திறனை உருவாக்குவதே தங்களின் இலக்கு என்றும், இதற்காக ஸ்டார்ட்-அப்கள் மற்றும் IIT-களுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
- பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பு நுழையாமல், விந்து வெளியேறுவது, பாலியல் வன்கொடுமை ஆகாது
- கீழமை நீதிமன்றம் விதித்த 7 ஆண்டு சிறைத் தண்டனை, 'பாலியல் வன்கொடுமை முயற்சி' என்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் 6 மாதங்களாகக் குறைப்பு
இந்தியாவின் சில உயர் நீதிமன்றங்கள் அவ்வப்போது சில சர்ச்சை தீர்ப்புகளை வழங்குவது உண்டு. அதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து பின்னர் அந்த தீர்ப்புகளை நிறுத்திவைப்பதும் உண்டு. அந்த வகையில் தற்போது சத்தீஸ்கர் நீதிமன்றம் ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதாவது, பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பு நுழையாமல், விந்து வெளியேறுவது, பாலியல் வன்கொடுமை ஆகாது; அது 'பாலியல் வன்கொடுமை முயற்சி' மட்டுமே என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டு தம்தரி மாவட்டத்தில் நடந்த ஒரு வழக்கின் மேல்முறையீட்டை விசாரித்த போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மருத்துவ சான்றுகள் உயிர் பிழைத்த பெண்ணின் கன்னித்திரை சேதமடையாமல் இருப்பதாக கூறியதைத் தொடர்ந்தும், பெண்ணின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருந்ததாலும், உள்நுழைவு நடந்ததற்கான உறுதியான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இதன் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவருக்குக் கீழமை நீதிமன்றம் விதித்த 7 ஆண்டு சிறைத் தண்டனையை, 'பாலியல் வன்கொடுமை முயற்சி' என்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் 6 மாதங்களாகக் குறைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 375-ன் படி ஒரு செயலை பாலியல் வன்கொடுமை என்று உறுதி செய்ய உள்நுழைவு நடந்திருந்தால் மட்டுமே, மிகச் சிறிய அளவிலான உள்நுழைவு இருந்தாலும் அது வன்கொடுமையாகக் கருதப்படும், ஆனால் உள்நுழைவு இல்லாத நிலையில் அதை வன்கொடுமை எனக் கூற முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
- அனில் அம்பானி குடும்பத்தினா் மற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சிலா் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு.
- சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு நிலுவையில் உள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்பட அனில் அம்பானியின் பல்வேறு நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாதது, கடன் பணத்தில் முறைகேடாக வெளி நாடுகளில் சொத்துகள் வாங்கியது உள்ளிட்ட நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இதுகுறித்து அனில் அம்பானி குடும்பத்தினா் மற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சிலா் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு நிலுவையில் உள்ளது. அனில் அம்பானி குழுமத்திற்குச் சொந்தமான ரூ.12,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை முடக்கியது.
நியூயார்க்கின் மான்ஹாட்டன் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியதில் நடந்த பணப்பரிமாற்றம் தொடர்பாக அனில் அம்பானி மற்றும் அவரது மனைவியும் முன்னாள் நடிகையுமான டினா அம்பானி ஆகியோ ரிடம் தனித்தனியாக வாக்கு மூலம் பெற அமலாக்கத்துறை முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து இரு வருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கடந்த 10 மற்றும் 17-ந்தேதி ஆகிய 2 முறையும் டினா அம்பானி ஆஜராகவில்லை. இதே போல அனில் அம்பானியும் இந்த வாரம் வாக்குமூலம் அளிக்க தவறினார்.
இந்த நிலையில் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை புதிய சம்மனை அனுப்பியது. நிதி மோசடி தொடர்பான வழக்கில் வருகிற 26-ந்தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனில் அம்பானி ஒரு முறை அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.
அதேநேரத்தில் டினா அம்பானி ஆஜராக புதிய தேதி அளிக்கப்பட்டள்ளதா? என்பது தெளிவாக தெரிய வில்லை. இந்த வழக்கு தொடர்பாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தலைவர் புனித் கர்க் கைது செய்யப்பட்டுள்ளார்.
- காரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் மற்றும் பீர்பாட்டில்கள் ஏராளமாக இருந்தன.
- மதுபானம் தேவைப்படுபவர்களுக்கு, தேவையான மது வகைகளை தனது காரில் எடுத்துச் சென்று சப்ளை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருரங்காடி பகுதியை சேர்ந்தவர் அல்கு என்கிற ஷெபிக். இவர் ஏராளமான மலையாள திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். "ஆட்டோர்ஷா" என்ற மலையாள படத்தில் அறிமுகமான இவர், "ஆக்ஷன் ஹீரோ பிஜூ" என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடத்திருக்கிறார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு நேரத்தில் அவர் தனது காரில் எர்ணாகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு கலால் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் நடிகர் ஷெபிக் காரிலும் சோதனை செய்தனர்.
அப்போது அவரது காரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் மற்றும் பீர்பாட்டில்கள் ஏராளமாக இருந்தன. அதனை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது, கலால் துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நடிகர் ஷெபிக்கை கலால் அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரது காரில் இருந்த இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் 52 லிட்டர் மற்றும் 58 பாட்டில் பீர் (37.7 லிட்டர்) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து சிறிய வேடங்களில் நடித்து வந்த நடிகர் ஷாபிக், இரவு நேரத்தில் மதுபான விற்பனையில் ரகசியமாக ஈடுபட்டு வந்திருக்கிறார். அவர் மதுபானம் தேவைப்படுபவர்களுக்கு, தேவையான மது வகைகளை தனது காரில் எடுத்துச் சென்று சப்ளை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவ்வாறு மதுபானங்களை விற்பனை செய்வதற்கு எர்ணாகுளம் சென்ற போது தான், கலால் துறையினரின் சோதனையில் சிக்கிக்கொண்டார்.






