search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "court order"

    • அப்பாவுக்கு எதிரான வழக்கு சிறப்பு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
    • இந்த வழக்கில் செப்டம்பர் 9-ந்தேதி நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன்.

    சென்னை:

    அவதூறு வழக்கில் செப்டம்பர் 9-ந்தேதி நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்ப எம்.பி.-எம்.எல்.ஏ. க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

    இவரது பேச்சு அ.தி.மு.க. வின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக கூறி சபாநாயகருக்கு எதிராக, அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

    இதனையடுத்து இந்த வழக்கை கோப்புக்கு எடுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, வழக்கின் விசாரணையை எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி உத்தர விட்டிருந்தார்.

    இந்த வழக்கு சிறப்பு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணைக்கு செப்டம்பர் 9-ந் தேதி நேரில் ஆஜராகும்படி, சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்ப சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    • கொலைக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தது யார்?
    • கொலையின் பின்னணியில் யார் இருப்பது?

    பெரம்பூரைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கடந்த 5ம் தேதி இரவு ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் இதுவரை 11 நபர்களை செம்பியம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்தாண்டு ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

    இந்த வழக்கில் யார் யார் பின்னணியில் உள்ளனர்? என்பது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட நபர்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக கொலையாளிகளை காணொலி மூலம் போலீசார் ஆஜர் படுத்தினர்.

    இந்நிலையில் ஆம்ஸ்ட்ராவ் வழக்கு: 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதை தொடர்ந்து 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில் 5 நாள் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    கொலை சம்பவத்தை நேரில் பார்த்த உறவினர்களை அழைத்து கொலையாளிகளை நிற்க வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தவும், கொலையாளிகளுக்கு நிதி உதவி, சட்ட உதவி அளித்தது, கொலையின் பின்னணியில் யார் இருப்பது? என்பது குறித்து விசாக்க திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பொன்னை பாலுவுக்கும், கொலைக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தது யார் என்பது தொடர்பாகவும் விசாரிக்க முடிவு எடுத்துள்ளனர்.

    • கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கவும் புலன் விசாரணை அதிகாரிக்கு உத்தரவு.
    • பள்ளி தாளாளர் ரவிக்குமார் தாக்கல் செய்த மனு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த வன்முறை தொடர்பான வழக்கை 4 மாதங்களில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், பள்ளியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கவும் புலன் விசாரணை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    4 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றால் மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், வன்முறை தொடர்பான வழக்கை வேறு புலனாய்வு குழுவுக்கு மாற்றக்கோரி பள்ளி தாளாளர் ரவிக்குமார் தாக்கல் செய்த மனு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    • கோவை மாவட்ட நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி, சில குண்டர்கள் அத்துமீறல்.
    • மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் 24 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    ஈஷா சார்பில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு மின் மயான கட்டுமான பகுதிக்குள், நீதிமன்ற உத்தரவை மீறி சமூக விரோத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, காவல்துறையினரும், கிராம மக்களும் குண்டர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

    இதுதொடர்பாக, ஈஷா சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோவை ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்டகால கோரிக்கைகளின் அடிப்படையில், அவர்களின் பயன்பாட்டிற்காக முறையான அனுமதிகளோடு ஈஷா சார்பில் நவீன எரிவாயு மின் மயானம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த கட்டுமான பகுதிக்குள் நேற்று கோவை மாவட்ட நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி, சில குண்டர்கள் அனுமதியின்றி அத்துமீறி உள்ளே நுழையவும், அங்கு ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கவும் முயற்சி செய்தனர். 

    அவர்களை ஈஷாவைச் சுற்றியுள்ள கிராம மக்களும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

    ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள இக்கரை போளுவாம்பட்டி, மடக்காடு, முள்ளாங்காடு, பட்டியார் கோவில்பதி, முட்டத்துவயல், தாணிக்கண்டி ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் பல ஆண்டுகளாக தங்களின் பயன்பாட்டிற்காக மின் மயானம் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்தனர்.

    இந்நிலையில் இக்கிராம மக்களின் பயன்பாட்டிற்காக அரசின் உரிய அனுமதிகளான கிராம பஞ்சாயத்தின் கட்டட அனுமதியும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் Consent to Establish CTE ஆகியவைகளை பெற்ற பின்னர் ஈஷாவின் சார்பில் எரிவாயு மின் மயானம் கட்டப்பட்டுள்ளது.

    இதனை தடுக்கும் பொருட்டு தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக சிவஞானம், சுப்ரமணியன், காமராஜ் ஆகியோர் மயானக் கட்டுமானத்திற்கு எதிராக செயல்பட்டு வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஈஷா சார்பில் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மயான கட்டுமானப் பகுதிக்குள் தொடர்பில்லாத நபர்கள் யாரும் உள்ளே நுழைய கூடாது என்று நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.

    ஆனாலும் சுப்ரமணியன் மற்றும் சிவஞானம் அவர்களின் ஆட்களோடு மயான கட்டுமான பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, கட்டிட பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, அங்குப் பணியில் இருந்தவர்களை மிரட்டியும் சென்றார்.

    மேலும், இவர்களின் குழு எரிவாயு மயானத்திற்கு எதிராக கிராம மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரவச் செய்து ஊர் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனைக் குறிப்பிட்டு, இவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி 6 கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் 24 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இது தொடர்பாக கிராம மக்கள் சார்பில் பேரூர் துணை கண்கானிப்பாளரிடமும் முறையிடப்பட்டு, ஆலாந்துறை காவல் நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் இது தொடர்பான வழக்கு ஒன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. அதில் உரிய அனுமதிகளோடு மட்டுமே ஈஷா எரிவாயு மயானம் கட்டியள்ளதை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வறிக்கையை கேட்டுள்ளது.

    இவ்வழக்கை தொடர்ந்த சுப்ரமணியன் என்பவரின் நிலம் முறைகேடான முறையில் வாங்கப்பட்டு உள்ளதையும், அங்கு கட்டப்பட்டு இருக்கும் குடியிருப்பும் முறையான அனுமதி பெறாமல் இருப்பதையும் சுட்டிகாட்டி அவருக்கு அபராதம் விதித்து இவ்வழக்கை தள்ளுபடி செய்ய ஈஷா சார்பில் கோரப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தாங்கள் தொடர்ந்த வழக்கு கைவிட்டு போவதையும், மேலும் அவ்வழக்கு தங்களுக்கே பாதகமாக முடிய இருப்பதால், தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் இடத்தின் அமைதியை குலைக்கும் நோக்கிலும், வீண் சச்சரவுகளை உருவாக்கும் விதமாகவும் சில அமைப்புகளின் மூலம் சுப்ரமணியன் அராஜக செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

    அதனைத் தொடர்ந்தே உண்மைக் கண்டறியும் குழு என்ற போலி பெயரில் சில உதிரி அமைப்புகளைச் சேர்ந்த விஷமிகள் ஈஷாவின் நவீன எரிவாயு மயான கட்டுமான பகுதிக்குள் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி உள்ளே நுழையவும், அங்கே ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கவும் முயற்சி செய்தனர். அவர்களை ஈஷாவின் நுழைவாயிலிலேயே காவல்துறையினரும், கிராம மக்களும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
    • அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை ஒட்ட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை.

    வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    அந்த மனுவில் வாகனங்களின் கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை ஒட்ட தடை விதிக்க வேண்டும்.

    பேருந்துகளின் பின்புறம் மற்றம் இருபுறங்களில் வணிக விளம்பரங்கள் செய்வதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • 2004ம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தை ரத்து செய்யக் கோரி இருவரும் மனு தாக்கல்.
    • விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு.

    நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    2004ம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தை ரத்து செய்யக் கோரி இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • கோவில் அதிகாரிகள், வங்கி, கோர்ட்டு அதிகாரிகள் வருவதற்காக திறந்து மூடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ஐகோர்ட்டு உத்தரவு என்பதால் இதில் அதிகாரிகள் தலையிட முடியாது.

    பழனி:

    பழனி கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், ஆக்கிரமிப்பு கடைகளாலும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்களை அனுமதிக்க கூடாது, கோவிலை சுற்றியுள்ள வீதிகளை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மார்ச் 8ம் தேதிக்குள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது. அதன்படி பழனி கிரிவலப்பாதைக்கு வரும் 9 இணைப்புச்சாலைகளில் 8 சாலைகளில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வாகனங்கள் வருவது தடுக்கப்பட்டது. கொடைக்கானலில் இருந்து வரும் வாகனங்கள் பாதையில் மட்டும் அடைப்பு ஏற்படுத்தாமல் தற்காலிக கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக கோவில் அதிகாரிகள், வங்கி, கோர்ட்டு அதிகாரிகள் வருவதற்காக திறந்து மூடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


    இந்நிலையில் கிரிவலப்பாதை அடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் ஊர்வலம் நடத்தி ஆர்.டி.ஓ.விடம் மனு அளித்தனர். ஐகோர்ட்டு உத்தரவு என்பதால் இதில் அதிகாரிகள் தலையிட முடியாது. கோர்ட்டு உத்தரவு இன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது. கிரிவலப்பாதை வாகனங்கள் எதுவுமின்றி வெறிச்சொடி காணப்பட்டது. 

    • 587 முதலீட்டாளர்கள் 3800-க்கும் மேற்பட்ட முதலீடுகளை செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
    • குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை அடையாறு காந்திநகரில் 'விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்' என்கிற பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் சுப்பிரமணியன் இவர் சுபிக்ஷா என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட்டையும் நடத்தி வந்தார்.

    இதனால் சுபிக்ஷா சுப்பிரமணியன் என்று அழைக்கப்பட்டு வந்த அவர், தான் நடத்தி வந்த நிதி நிறுவனத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார். தங்களது நிதி நிறுவனத்தில் 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறி நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து ஏராளமானோர் சுபிக்ஷா சுப்பிரமணியத்தின் நிதி நிறுவனத்தில் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்தனர்.

    ஆனால் விஸ்வபிரியா பைனான்ஸ் நிறுவனம் தாங்கள் கூறியது போல பொதுமக்களின் முதலீடு பணத்துக்கு உரிய வட்டியை தராமல் ஏமாற்றி வந்தது. முதலீட்டு பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு புகார்கள் எழுந்தன. இதையடுத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் விஸ்வபிரியா பைனான்ஸ் நிறுவனத்தை நடத்திய சுபிக்ஷா சுப்பிரமணியன் 17 துணை நிறுவனங்களையும் நடத்தி 500-க்கும் மேற்பட்டவர்களிடம் மோசடியாக பணம் பறித்தது தெரியவந்தது. இது தொடர்பாக 587 முதலீட்டாளர்கள் 3800-க்கும் மேற்பட்ட முதலீடுகளை செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து நிதி நிறுவனத்தின் இயக்குனர்களான சுபிக்ஷா சுப்பிரமணியன், நாராயணன், ராஜரத்தினம், பால சுப்பிரமணியன், அகஸ்டின், கணேஷ் உள்பட 17 பேர் மீது பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் மோசடி வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கு விசாரணை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    கடந்த 2020-ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட் டது. மொத்தம் 51 கோடியே 47லட்சத்து 29 ஆயிரத்து 861 ரூபாய் அளவுக்கு சுபிக்ஷா சுப்பிரமணியனும் அவரது கூட்டாளிகளாக குற்றம் சாட்டப்பட்டவர்களும் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியன் மற்றும் நிதி நிறுவனம் முறைகேடு தொடர்பாக குற்றம் சாட்டப் பட்ட 17 பேரும் நேர்மையற்ற முறையில் முறைகேட்டில் ஈடுபட்டது, மோசடியாக செயல்பட்டது, பொதுமக் களை அச்சுறுத்தியது, சொத்துக்களை மறைத்தது, கிரிமினல் சதியில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்தனர்.

    இதையடுத்து சிறப்பு கோர்ட்டு நீதிபதி கருணாநிதி 543 பக்கங்களை கொண்ட தீர்ப்பை இந்த வழக்கில் வழங்கியுள்ளார். அதில் குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஸ்ரீ வித்யாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற இயக்குனர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் மொத்தமாக ரூ.191.98 கோடி அபராதமாக விதிக்கப்படுவதாகவும் அதில் ரூ.180 கோடியை டெபாசிட் செய்த அனைவருக்கும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கருணாநிதி தீர்ப்பளித்து உள்ளார். சம்பந்தப்பட்ட நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • கருப்பசாமி கோவில் பீடம் ஆக்கிர மிப்பில் இருந்தது தெரிய வந்தது.
    • அந்த கோவில் பீடத்தை போலீசார் பாது காப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சா லைத்துறையினர் அகற்றினர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் - போடி இடையே மாநில நெடுஞ்சாலை கோம்பை வழியாக செல்கிறது. இங்கு சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறைக்கு ஆக்கிரமிப்பின் உண்மை த்தன்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி நெடுஞ்சாலைத்துறையினர் உரிய அறிவிப்பு ஆணை வழங்கினார்.

    இதனையடுத்து அப்பகுதி யில் உள்ள கருப்பசாமி கோவில் பீடம் ஆக்கிர மிப்பில் இருந்தது தெரிய வந்தது. அந்த கோவில் பீடத்தை போலீசார் பாது காப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சா லைத்துறையினர் அகற்றி னர். மேலும் கோம்பை போலீஸ் நிலையம் அருகே உள்ள பாலம் முதல் கால்ந டை ஆஸ்பத்திரி வரை நெடுஞ்சாலையோரத்தில் இருந்து 2 வீடுகள் உள்பட நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர்.

    ஆண்டு தோறும் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர ஆக்கிரமிப்பு களை தொடர்ந்து அகற்றி வருகின்றனர். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அதே இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்படு கிறது. எனவே அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தனியார் பஸ்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் இயக்காததால் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.
    • பஸ்கள் உத்தரவை மீறி இயக்குவதால் அனைத்து தரப்பு பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரத்தில் ஏராளமான தனியார் பஸ்கள் பல்வேறு கிராமங்களுக்கு தினமும் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பயணம் செய்து வருகின்ற னர்.

    கடந்த சில மாதங்களாக ஒரு சில தனியார் பஸ்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பஸ்களை இயக்காமல் மற்ற தனியார் பஸ்கள் இயங்கும் நேரத்தில் பஸ்களை இயக்குவதால் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தங்கள் ஊருக்கு செல்வதாக பல மணி நேரம் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்படு கின்றனர்.

    சில தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் போலீஸ் நிலையங்கள், வட்டார மற்றும் மண்டல போக்கு வரத்து அலுவலகங்கள் ஆகியவற்றில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கோர்ட்டில் முறையிட்டனர். பஸ்கள் முறையாக நேரத்துக்கு இயக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அதை மீறி தனியார் பஸ்கள் இயக்கப்படுவதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறி தடை ஆணை பெற்றனர்.

    ஆனால் ஒரு சில தனியார் பஸ்கள் உத்தரவை மீறி இயக்குவதால் அனைத்து தரப்பு பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் மண்டல போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுத்து தனியார் பஸ்களின் நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பண்ருட்டி ரங்கநாத பெருமாள் கோவில், மேலப்பாளையம் பெருமாள் கோவில் உற் சவங்களுக்கு பயன்படுத்தி வந்தனர்.
    • இந்து அறநிலையத் துறையிடம் ஓப்படைக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பஸ் நிலையம், இந்திராகாந்தி காலையில் உள்ள இடங்கள் மற்றும் மேலப் பாளையத்தில் உள்ள பல்வேறு இடங்கள் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இதனை குருலட்சுமி அறக்கட்டளை யினர் பராமரித்து வந்த னர். பின்னர் அதனை ரத்து செய்த இந்து அற நிலையத்துறை, தற்போது நேரடியாக நிர்வகித்து வருகிறது. இதில் கிடைக்கும் வாடகை, திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், பண்ருட்டி ரங்கநாத பெருமாள் கோவில், மேலப்பாளையம் பெருமாள் கோவில் உற் சவங்களுக்கு பயன்படுத்தி வந்தனர். பண்ருட்டி பஸ் நிலை யம் பின்புறம் பல கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் அளவிலான இடத்தில் வாகனங்களை வாடகைக்கு நிறுத்தும் இடம் உள்ளது. இதனை குருலட்சுமி அறக் கட்டளையினர் கணபதி என்பவருக்கு 40 ஆண்டுகள் வாடகைக்கு விட்டு சென்றனர். கணபதி இறந்த பிறகு அவரது வாரிசுகள் வாகனங்களை வாடகைக்கு நிறுத்தும் இடத்தை நிர்வகித்து வருகின்றனர்.

    வாடகை காலம் முடிந்தவுடன் இடத்தை காலி செய்ய இந்து அறநிலையத்துறையினர் நோட்டீஸ் அளித்தனர். நோட்டீசை பெற்றுக் கொண்ட வாடகை தாரர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் 12 நாட்களுக்குள் இடத்தை காலி செய்து, இந்து அறநிலையத் துறையிடம் ஓப்படைக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்தி ரன் தலைமையில் செயல் அலுவலர்கள், ஆய்வா ளர்கள் மற்றும் அறநிலையத் துறை ஊழியர்கள் வாகனங் களை வாடகைக்கு நிறுத் தும் இடத்திற்கு இன்று காலை 7 மணிக்கு வந்தனர். இதையடுத்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜ தாமரை பாண்டியன், கண் ணன், நந்தகுமார், சீனி வாசன் மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீசாரும் அங்கு வந்தனர். நீதிமன்ற உத்தரவின் படி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனகளான, பஸ், லாரி, கார், மோட்டார் சைக்கிள் போன்றவைகளை அதிரடி யாக அகற்றி அப்புறப் படுத்தினர். அங்கிருந்த கடைகளை காலி செய்த னர். கடைகளை மூடி சீல் வைத்தனர். இத்தகவல் அறிந்து இடத்தை வாடகைக்கு எடுத்த கணபதியின் வாரிசு கள் 100-க்கும் மேற்பட்ட வர்களுடன் அங்கு திரண்டு வந்துள்ளனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டி நகரப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் பாலினத்தை ஆணாகவோ, பெண்ணாகவோ தேர்வு செய்து கொள்ளலாம்
    • பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, அதுபோன்ற எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.

    சென்னை:

    மூன்றாம் பாலினத்தவர்களான கிரேஸ் பானு மற்றும் ரிஸ்வான் பாரதி ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தமிழகத்தில் காவல் துறையில் காலியாக உள்ள 615 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மே 5-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.

    அந்த அறிவிப்பில், மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் பாலினத்தை ஆணாகவோ, பெண்ணாகவோ தேர்வு செய்து கொள்ளலாம் எனவும், பெண்ணாக தேர்வு செய்தவர்களுக்கு மகளிருக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, அதுபோன்ற எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.

    அதேபோல உடற்தகுதித் தேர்விலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சலுகை வழங்கப்படாததால், தேர்வு அறிவிப்பாணையை ரத்து செய்து, மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சலுகைகளை வழங்கி புதிய அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்.

    மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு சலுகையும், சிறப்பு இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அந்த உத்தரவுகள் அனைத்தும் பரிந்துரைகள் போன்றவை எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு செப்டம்பர் 26-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அரசுக்கும், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் உத்தரவிட்டனர்.

    ×