

கவுண்டம்பாளையம்:
கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாலமலை ஸ்ரீ அரங்கநாதர் கோவில் சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் பெருமாள் 7-ந் தேதி அன்ன வாகனத்திலும், 8-ந் தேதி அனுமந்த வாகனத்திலும், 9-ந் தேதி கருட வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். 10-ந் தேதி செங்கோதையம்மன் அழைப்பு விழாவும், 11-ந் தேதி செங்கோதை, பூங்கோதைத் தாயார்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வைபவம் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கியது. இதில் முதலில் யானை வாகன உற்சவம், சின்னத்தேர் உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் பெருமாள் தேரில் எழுந்தருளி கோவிலின் மாட வீதிகளில் வலம் வந்தார். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணை பிளக்கும் அளவிற்கு கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு அரங்கநாதர் சிறப்பு அலங்காலத்தில் அருள் புரிந்தார். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று பரிவேட்டை, குதிரை வாகன உற்சவமும், 14-ந் தேதி சேஷவாகன உற்சவம், 15-ந் தேதி சந்தன சேவை சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ப.ஜெகதீசன் செய்திருந்தார்.