என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் தேரோட்டம்"

    • ஒடிசா மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
    • பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டுக்கான ரத யாத்திரைக்காக மூன்று பிரமாண்ட தேர்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுக்கத் தொடங்கினர். வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களும் பூரி நகரின் வீதிகளில் அசைந்தாடி செல்லும் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில், ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தேரின் வடங்களைப் பிடிக்க பக்தர்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஒடிசா மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார்.

    • செங்கோதை, பூங்கோதைத் தாயார்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாலமலை ஸ்ரீ அரங்கநாதர் கோவில் சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதில் பெருமாள் 7-ந் தேதி அன்ன வாகனத்திலும், 8-ந் தேதி அனுமந்த வாகனத்திலும், 9-ந் தேதி கருட வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். 10-ந் தேதி செங்கோதையம்மன் அழைப்பு விழாவும், 11-ந் தேதி செங்கோதை, பூங்கோதைத் தாயார்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வைபவம் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கியது. இதில் முதலில் யானை வாகன உற்சவம், சின்னத்தேர் உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் பெருமாள் தேரில் எழுந்தருளி கோவிலின் மாட வீதிகளில் வலம் வந்தார். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணை பிளக்கும் அளவிற்கு கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு அரங்கநாதர் சிறப்பு அலங்காலத்தில் அருள் புரிந்தார். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று பரிவேட்டை, குதிரை வாகன உற்சவமும், 14-ந் தேதி சேஷவாகன உற்சவம், 15-ந் தேதி சந்தன சேவை சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ப.ஜெகதீசன் செய்திருந்தார்.

    • கருடவாகனத்தில் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.

    இக்கோவிலில் வருடம்தோறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்து தேவநாதசுவாமி கோவிலில் 12 நாட்கள் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஹம்ச வாகனம், சூரிய பிரபை, வெள்ளி சிம்ம வாகனம், யாளி வாகனம், அனுமந்த வாகனம் வேணுகோபாலன் சேவை தங்க விமானம், சேஷ வாகனத்திலும், தங்கப்பல்லக்கு நாச்சியார் திருக்கோலத்திலும் சாமி வீதி உலா நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கருட மகா உற்சவத்தன்று கருடவாகனத்தில் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் முக்கிய வீதிகளில் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் முக்கிய வீதியில் சாமி வீதி உலா நடைபெற்று பின்னர் நிலையை வந்து அடைந்தது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன. மேலும் ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று இரவு பானக பூஜையும், நாளை மட்டையடி மற்றும் தங்க பல்லக்கில் வீதி உற்சவமும், இரவு தெப்ப உற்சவம், நாளை மறுநாள் காலை துவாதச ஆராதனம் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • 3-ந் தேதி நடைபெற உள்ளது.
    • போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    அன்னூர்,

    அன்னூரில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேர்த்திரு விழா வருகிற 3-ந் தேதி நடைபெற உள்ளது.

    கோவை மாவட்டம், அன்னூரில் சுமார் 1300 ஆண்டு பழமை வாய்ந்த அருந்தவச்செல்வி உடன மர் ஸ்ரீ மன்னீஸ்வர சுவாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் தேரோட்டம் வெகுவிம ரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகு தியாக நடப்பாண்டின் தேர்த்திருவிழா கடந்த 27-ந் தேதி கிராம தேவதை வழி பாடு, கிராம சாந்தியுடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து நேற்று கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தினமும் பல்வேறு அலங் காரமும், அபிஷேக ஆராத னைகளும் நடைபெற உள்ளன. ஜனவரி 2-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. விழா வின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித் தல் நிகழ்ச்சியானது 3-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ் வரர் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    பகல் 11 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது. கோவை,திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ள தால் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடு பட உள்ளனர். 

    • முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
    • மூன்று தேர்களும் கோவிலைச் சுற்றிவந்து நிலையை அடைந்தன.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் கோட்டப்பட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில். இப்பூவுலகில் அவதாரம் எடுத்த ராமபிரான், ராவணனை சம்ஹாரம் செய்து திரும்புகையில் முதல்கால பூஜையை ராமேஸ்வரத்திலும், இரண்டா ம்கால பூஜைக்காக தீர்த்தகிரி மலை (தீர்த்தமலை) மீது அம்பு எய்தி, தீர்த்தம் உண்டாக்கி அந்த தீர்த்தத்தை கொண்டு பூஜைகளை முடித்தார்.

    அந்த தீர்த்தமே தீர்த்தமலையிலுள்ள ராமர் தீர்த்தமாகும். ஸ்ரீ ராமர், பார்வதி தேவி, குமரக்கடவுள், அக்னிதேவன், அகத்திய முனிவர்ஆகியோர் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலம் இந்த திருத்தலமாகும்.

    தருமபுரி மாவட்டத்தில் அருணகிரிநாத சுவாமிகளால் திருப்புகழ் அருளி செய்யப்பட்ட ஒரே திருத்தலம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருத்தலமாகும்.

    வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கோவில் மாசிமகத் தேரோட்டம் மார்ச் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து, பல்வேறு கட்டளைதாரர்கள், உபயதாரர்கள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள், சுவாமி திருவீதி உலா, பூஜைகள், திருக்கல்யாணம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று தொடங்கியது. கோவில் எதிரே விநாயகர், தீர்த்தகிரீஸ்வரர், வடிவாம்பிகை ஆகிய சுவாமிகளின் தேர்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

    இதையடுத்து, பக்தர்கள் பொரி, உப்பு, முத்துக்கொட்டை உள்ளிட்ட நவ தானியங்களை தேர்கள் மீது இறைத்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தி சுவாமிகளை வழிபட்டனர்.

    முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, தீர்த்தகிரீஸ்வரர், வடிவாம்பிகை சுவாமிகளின் தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    மூன்று தேர்களும் கோவிலைச் சுற்றிவந்து நிலையை அடைந்தன. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர், பெங்களூரு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் திருவிழாவில் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

    தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தேர் திருவிழாவுக்காக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    • 100 அடி உயர அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மனை வைத்து மேள,தாளம் முழங்க கிராம வீதிகளில் தேர் இழுத்துச் செல்லப்பட்டது.
    • இந்த தேரினை, மாடுகள் இழுத்துச் செல்வது ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பம்சமாகும்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லைப்பகுதியில் உஸ்கூர் கிராமம் உள்ளது. இங்கு மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ மத்தூரம்மா என்ற அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள், 3 நாட்கள் நடைபெற்றன. முதல் நாள் நிகழ்ச்சியாக, மா விளக்கு ஊர்வலம் மற்றும் பூஜையும், தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம்,100 அடி உயர அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மனை வைத்து மேள,தாளம் முழங்க கிராம வீதிகளில் தேர் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த தேரினை, மாடுகள் இழுத்துச் செல்வது ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பம்சமாகும். விழாவில், ஓசூர், அத்திப்பள்ளி, ஆனேக்கல், எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் சுற்று வட்டாரங்களிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவையொட்டி நாட்களும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • நினைத்தது நிறைவேற வேண்டி வாழைப்பழத்தில் தவணை இலை அருகம்புல் சுற்றி தேரின் மீது எறிந்தனர்.
    • நகர மெங்கும் அன்னதானம், நீர்மோர், பானகம், பாசிப்பருப்பு ஆகியவை தேர் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள ஸ்ரீ சவுந்தரவல்லி சமேத ஸ்ரீ பேட்டராய் சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமான வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    பழமையும் சிறப்புமிக்க இந்தக் கோவிலின் தேர் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு தேர் திருவிழா நிகழ்ச்சிகள் கல்யாண உற்சவத்துடன் தொடங்கி கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், அம்சவாசன உற்சவம் நடைபெற்றது. நேற்று இரவு திங்கள்கிழமை 9 மணிக்கு கஜேந்திர மோக்ஷம் என்ற ராமபாணம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தளி எம்.எல்.ஏ ராமசந்திரன், ஒசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ், தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    முதலில் சவுந்தரவல்லி தாயார் தேரை இழுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி பேட்டராய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு 5 அடுக்கு தேரில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து வேத மந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தி கோஷத்துடன் கோஷங்களை முழங்கினார்கள் விழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் மனதில் நினைத்தது நிறைவேற வேண்டி வாழைப்பழத்தில் தவணை இலை அருகம்புல் சுற்றி தேரின் மீது எறிந்தனர்.

    மேலும் தங்களின் விளை நிலங்களில் தானியங்கள் நன்கு விளையும் வேண்டும் என வேண்டிக் கொண்டு தேரின் மீது நவதானியங்களை எறிந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

    தேன்கனிக்கோட்டை நகர மெங்கும் அன்னதானம், நீர்மோர், பானகம், பாசிப்பருப்பு ஆகியவை தேர் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இத்திருவிழாவில் தேன்கனிக் கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் கர்நாடக, ஆந்திர மாநில இருந்தும் பல்லா யிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இன்று இரவு சம்பூர்ண இராமாயணம் நாடகம் நடைபெறுகிறது. நாளை காலை 8 மணி அளவில் எருதுவிடும் விழா, இரவு 8மணிக்கு பாட்டு கச்சேரி தொடர்ந்து பல்லக்கு உற்சவ வாணவேடிக்கை நடைபெறும்.

    தேன்கனிகோட்டை டி.எஸ்.பி. தலைமையில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • 150 கிராம மக்களுக்கு காளியம்மன் திருவீதி உலா 11 நாட்கள் சென்று திரும்பி கோவிலுக்கு வந்த பிறகு மகா தேரோட்டம் நடைபெறும்.
    • காளியம்மன் கோவில் மகா தேரோட்டம் 300 ஆண்டுகளைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை பகுதியில் கால பைரவர் கோவில் சென்றாய பெருமாள் கோவில் உள்ளிட்ட புகழ்பெற்ற கோவில்கள் அமைந்துள்ள பகுதியில் அருகிலேயே சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த காளியம்மன் கோவிலில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் தொடங்கி சித்திரை மாதம் வரை சுமார் 15 நாட்கள் தேர்த்திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    தேர் திருவிழாவிற்கு முன்னதாக காளியம்மனை குலதெய்வம் ஆகும். கண் கண்ட தெய்வமாகவும் வணங்க க்கூடிய 150 கிராம மக்களுக்கு காளியம்மன் திருவீதி உலா 11 நாட்கள் சென்று திரும்பி கோவிலுக்கு வந்த பிறகு மகா தேரோட்டம் நடைபெறும்.

    இந்த திருவிழாவின் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் வாரச்சந்தையும் மாட்டுச்சந்தை உள்ளிட்டவை நடைபெறும் என்பதால் சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் பொதுமக்கள் பக்தர்கள் என அனைவரும் திருநள்ளாக திருவிழாவிலும் வாரச்சந்தையிலும் மாட்டு சந்தையிலும் கலந்து கொள்வார்கள்.

    அதேபோல் நேற்று காளியம்மன் கோவில் மகா தேரோட்டம் 300 ஆண்டுகளைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. (கொரோனா பேரிடர் காலத்தில் மட்டும் இரண்டு ஆண்டுகள் தேர் திருவிழா நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).

    தேர் திருவிழா நடைபெறும் 15 நாட்களும் கோவில் வளாகத்தின் அருகிலேயே காலை முதல் மாலை வரை கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் பசியாற கூழ் அமுது தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கூழ் அமுது 150 கிராம மக்களின் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது.

    மேலும் இந்த பகுதியில் மட்டும் தேர் திருவிழாவில் விற்பனையாகும் தேங்காய் மிட்டாய் சுவைப்பதற்காகவே பல்வேறு பகுதியில் இருந்தும் பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர்.

    நேற்று தேர்த்திருவிழா தேரோட்டத்தின் போது சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டதால் அதியமான் கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கியது.
    • தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு‌ அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து இரவு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், செல்லாண்டி அம்மன், கொங்கலம்மன் கோவில்களில் காப்பு கட்டும் விழாவும் நடைபெற்றது.

    20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. 26-ந் தேதி இரவு மறுகாப்பு கட்டுதலும், கிராம சாந்தியும் நடைபெற்றது.

    27-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை தினந்தோறும் கட்டளை தாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    3-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், பரிவட்டம் சூட்டுதலும் நடைபெற்றது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்ஶ்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து மாலை 6 மணிக்கு நிலையை அடைந்தது.

    இதில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இன்று இரவு பொங்கல் மாவிளக்கு பூஜையும், 6-ந் தேதி அதிகாலை கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், 7-ந் தேதி மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் மகா மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் எட்டுப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். 

    • ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணி அம்மன் கோவில் உள்ளது.
    • இந்த ஆண்டும் வழக்கம்போல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த் திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெற்று வருவது வழக்கம்.

    இந்த ஆண்டும் வழக்கம்போல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது. விழாவில் பக்தர்கள் வேப்பிலை அணிந்து உருளதண்டம் போட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இக்கோவில் திருவிழாவையொட்டி, ஆங்கிலேயர் காலத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றம் 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்றும் சிறப்பு நீதிமன்றம் நடந்தது.

    ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரெஹினாபேகம் வழக்குகளை விசாரித்தார். அடி தடி, சிறு விபத்துக்கள், மது விற்பனை போன்ற 7 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு அபராதம் விதித்தார். இன்றும் சிறப்பு நீதிமன்றம் நடந்தது.

    • கூட்டுவை நிகழ்ச்சியும் நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டமும் நடந்தது.
    • அம்மனை வைத்து, கூட்டு ரோடில் உள்ள மாரியம்மன் கோவில் வரை பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மிடுகரப்பள்ளியில், ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

    விழாவையொட்டி கடந்த 10-ந்தேதி, அங்குள்ள பசவேஸ்வரர் கோவிலில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் கூட்டுவை நிகழ்ச்சியும் நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டமும் நடந்தது.

    காலையில் சிறப்பு பூஜைகளும், தொடர்ந்து கிராம மக்கள் அம்மனுக்கு மாவிளக்கு பூஜையும் நடத்தினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை வைத்து, கூட்டு ரோடில் உள்ள மாரியம்மன் கோவில் வரை பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்.விழாவில், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல குழு தலைவர் ரவி, மாநகராட்சி வரிவிதிப்பு கமிட்டி தலைவர் சென்னீரப்பா, மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. தெற்கு பகுதி செயலாளருமான பி.ஆர்.வாசுதேவன், மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை தலைவர் சாக்கப்பா மற்றும் முக்கிய பிரமுகர்களும், ஓசூர், மத்திகிரி மற்றும் சுற்றுவட்டாரத்திலிருந்தும், கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் வழிபாடு நடத்தினர்.விழாவையொட்டி, கிராமத்தின் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், பானகம், நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூரில் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது.
    • இக்கோவில் தேர் திருவிழா, கடந்த 9-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூரில் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா, கடந்த 9-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    கடந்த 16-ந் தேதி மறுகாப்பு கட்டுதலும், 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை தினந்தோறும் மாலை சப்பாரம், சிம்ம வாகனம், பூத வாகனம், அன்னபட்சி வாகனம், யானை மற்றும் பூந்தேர் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    23-ந் தேதி மாலை வடிசோறு மற்றும் வெட்டும் குதிரையில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 24-ந் தேதி பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. இதில் பொத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இன்று காலை அலகு குத்துதல் மற்றும் அக்னி சட்டி எடுத்தலும், மாலை பொங்கல், மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) கம்பம் ஆற்றில் விடுதலும், 28-ந் தேதி காலை மஞ்சள் நீராடலும், மாலை முத்துபல்லக்கில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர். 

    ×