என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில்"

    • ஹயக்ரீவனுக்கு உலகிலேயே இவ்வூரில்தான் முதலில் கோவில் ஏற்பட்டது.
    • வைதீக ஆகமத்தின்படி 6 கால பூஜைகள் தினம் நடந்து வருகிறது.

    அஹீந்த்ரன் என்றால் ஆதிசேஷன் என்று பொருள். இந்த ஊர் ஆதிசேஷனால் நிர்மானிக்கப்பட்டது ஆகும். அருகிலுள்ள மலை பிரம்மா தவம் செய்த இடம். அதனால் பிரம்மாசலம் என்றும், ஆஞ்சநேயரால் கொண்டு வரப்பட்ட அவுசத மலையின் ஒரு பாகம் இதில் சேர்ந்திருப்பதால் அவுசதாசலமென்றும் பெயர் பெற்றது. கருடனால் கொண்டு வரப்பட்ட நதி பக்கத்தில் ஓடுகிறது. இந்த நதி கரும் நதியென்று பெயர் பெற்றது. ஆதி சேஷனால் நிர்மானிக் கப்பட்டது என்றும் கோவிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கோவிலில் உள்ள பிரதானமூர்த்தி தேவ நாதன். இவர் அச்சுதன், ஸ்திரமோதில், அநக ஜோதிஸ், மேவு ஜோதி, மூவராகிய மூர்த்தி, அடியவர்க்கு மெய்யன், தெய்வநாயகன், தாசஸத் தியன் போன்ற பல பெயர்களில் உள்ளவர், பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, பிருகு, மார்க்கண்டேயர், ததிசி முனிவர் போன்ற பலரும் தவம்புரிந்து தரிசித்து வரம் பெற்ற தலமிது.

    கோவிலில் பிரதானமாகிய தாயார்-அம்புருகவாசினி. இவர் ஹேமாப்ஜநாயகி, பார்கவி, தரங்கமுக நந்தினி, செங்கமலநாயகி போன்ற பல திருநாமங்கள் அமையப்பெற்றவள்.

    பெருமாளும், தாயாரும் மகாவரப்பிரசாதி. பாடல் பெற்ற 108 வைணவதலங்களில் முக்கியமானது இத்தலம். இது திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்றது. வேதாந்த தேசிகன் இங்குள்ள அவுசதாசலத்தில் தவம்புரிந்து ஸ்ரீ ஹயக்ரீவனையும், கருடனையும் பிரத்யக்ஷமாகக் கண்டு வரம் பெற்றார்.

    ஹயக்ரீவனுக்கு உலகிலேயே இவ்வூரில்தான் முதலில் கோவில் ஏற்பட்டது. ஸ்ரீதேசிகன் இந்த ஊரில் சுமார் 40 ஆண்டு காலம் வசித்து வந்தார், அநேக நூல்களை இவ்வூரில் இயற்றினார். அவர் எழுந்தருளியிருந்த இடம் ஸ்ரீதேசிகன் திருமாளிகை என்ற பெயரோடு விளங்குகிறது. இக்கோவிலுக்குள் இருக்கும்ஸ்ரீ தேசிகன் திவ்ய மங்கள விக்ரகம் ஸ்ரீ தேசிகன் தன் திருக்கரங்களாலேயே செய்யப்பட்டதாகும். ஸ்ரீதேசிகன் தன் திருக்கரங்களாலேயே கட்டிய கிணறு இன்றும் ஸ்ரீதேசிகன் திருமாளிகையில் உள்ளது.

    வைதீக ஆகமத்தின்படி 6 கால பூஜைகள் தினம் நடந்து வருகிறது. வேதபாராயண அத்தியாயம் (திவ்யபிரபந்த) கோஷ்டிகள் இத்திவ்ய தேசத்தில் ஒரு கவுரவ கைங்கர்யமாகவே இன்றும் நடந்து வருகிறது. சித்திரை மாதம் ஸ்ரீ பெருமாளுக்கும், புரட்டாசி மாதம் ஸ்ரீ தேசிகனுக்கும் மிகவும் விமரிசையாக பிரம் மோற்சவங்கள் நடைபெறுகின்றன.

    இந்த திருத்தலம்தமிழ் நாட்டில் கடலூர் திருப்பா திரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் இருந்து 6 கி.மீ தூரம் மேற்கில் அமைந்துள்ளது. வருடத்தில் 12 மாதங்களிலும், உற்சவம் நடந்து கொண்டிருக்கிறது. எப்பொழுதும் திரளான பக்தர்கள் வந்து சேவித்து பயனடைந்து வருகிறார்கள்.

    குறிப்பு : உற்சவ கைங்கர்யதாரர்கள் உற்சவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே திருக்கோவில் அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து உற்சவத்திற்கான திட்டத்தினைபெற்றுச் செல்வதுடன், உற்சவ கைங்கர்யத்தினை காலத்தே வந்திருந்து நடத்தி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    கைகட்டி வணங்கும் கருடன்

    திருவந்திபுரம் தேவநாதசுவாமி முன்பு உள்ள கருடன் தேவநாதசுவாமிக்கு அதிக மரியாதை கொடுக்கும் விதமாக கை கட்டி நின்ற நிலையில் உள்ளார். பெரும்பாலான கோவில்களில் கருடன் கை கூப்பிய நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இது இந்த கோவிலின் ஒரு மிக சிறப்புவாய்ந்த அம்சமாகும்.

    • கருடவாகனத்தில் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.

    இக்கோவிலில் வருடம்தோறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்து தேவநாதசுவாமி கோவிலில் 12 நாட்கள் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஹம்ச வாகனம், சூரிய பிரபை, வெள்ளி சிம்ம வாகனம், யாளி வாகனம், அனுமந்த வாகனம் வேணுகோபாலன் சேவை தங்க விமானம், சேஷ வாகனத்திலும், தங்கப்பல்லக்கு நாச்சியார் திருக்கோலத்திலும் சாமி வீதி உலா நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கருட மகா உற்சவத்தன்று கருடவாகனத்தில் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் முக்கிய வீதிகளில் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் முக்கிய வீதியில் சாமி வீதி உலா நடைபெற்று பின்னர் நிலையை வந்து அடைந்தது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன. மேலும் ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று இரவு பானக பூஜையும், நாளை மட்டையடி மற்றும் தங்க பல்லக்கில் வீதி உற்சவமும், இரவு தெப்ப உற்சவம், நாளை மறுநாள் காலை துவாதச ஆராதனம் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • சித்திரை மாதம் முடிந்து இன்று வளர்பிறை முகூர்த்த நாட்கள் என்பதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெற தொடங்கியது.
    • திருமண ஜோடிகள் திருவந்திபுரம் முகப்பு பகுதியில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். தேவநாதசாமி கோவிலில் திருமணம் செய்து கொள்ள பிராத்தனை செய்து கொண்டவர்கள் இங்கு திருமணம் செய்து கொண்டு தேவநாதசாமியை தரிசித்து சென்று வருகின்றனர். இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் 100 முதல் 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்று வருகிறது.

    திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் முன்பு உள்ள மலையில் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்று வருகிறது. மேலும் முகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணம் நடைபெற்று வருவதால் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் இந்து சமய அறநிலைய துறை சார்பில் திருவந்திபுரத்தில் புதிதாக திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    சித்திரை மாதம் முடிந்து இன்று வளர்பிறை முகூர்த்த நாட்கள் என்பதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெற தொடங்கியது. இதனை தொடர்ந்து திருவந்திபுரம் ஊர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. மேலும் திருமண ஜோடிகள் திருவந்திபுரம் முகப்பு பகுதியில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்றனர்.

    இந்த நிலையில் கோவில் திருமண மண்டபத்தில் 70 திருமணங்களும், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 30 திருமணங்கள் என 100 திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து இன்று ஏராளமான பொதுமக்கள் தேவநாத சாமி கோவிலில் நீண்ட நேரம் வரிசையில் தேவநாத சாமியை கும்பிட்டு சென்றனர். மேலும் புதுமண தம்பதிகள் நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிட்டு சென்றனர்.

    மேலும் கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அதிகாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததோடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி வந்தனர்.

    • திருவந்திபுரம் ஊர் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன.
    • பொதுமக்கள் அதிகளவில் குவிந்ததால் கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். மேலும் பிராத்தனை செய்து கொண்டவர்கள் இங்கு திருமணம் செய்து கொண்டு தேவநாதசாமியை தரிசித்து சென்று வருகின்றனர்.

    திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் முன்பு உள்ள மலையில் முகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணம் நடைபெற்று வருவதால் கூட்ட நெரிசல் அதிகரித்து வந்தது. இதனால் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருவந்திபுரத்தில் புதிதாக திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் நாளையுடன் ஆவணி மாதம் முடிந்து நாளை மறுநாள் புரட்டாசி மாதம் தொடங்குவதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியது. இதனை தொடர்ந்து திருவந்திபுரம் ஊர் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. மேலும் திருமண ஜோடிகள் திருவந்திபுரம் முகப்பு பகுதியில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்றனர்.

    கோவில் திருமண மண்டபத்தில் 75 திருமணங்களும், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 25 திருமணங்கள் என 100 திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் பொதுமக்கள் அதிகளவில் குவிந்ததால் கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அதிகாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோவில் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்று தற்போது 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 2023-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் கும்பாபிஷேகம் 2-ந்தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று மூலவர் சன்னிதானம் மூடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோவில் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. இதனைத் தொடர்ந்து வருகிற 2-ந்தேதி கும்பாபிஷேகம் முடிவடைந்து சாமி தரிசனம் செய்ய வழக்கம் போல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    முன்னதாக காலை புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, மகா சாந்தி ஹோமம் நடைபெற்றது. பின்னர் மாலையில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் நேரில் வந்தார். தொடர்ந்து திருப்பதி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 75 பட்டாச்சாரியார்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை தொடங்கியது.

    தொடர்ந்து அங்குரார்ப் பணம், வேத திவ்யபிரபந்த தொடக்கம் மற்றும் பூர்ணாஹதி நடைபெற்றது. இதில் ஜி.ஆர்.கே.குழும நிறுவன இயக்குநர் ஜி.ஆர்.துரைராஜ், இயக்குனர் கோமதி துரைராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இன்று (30-ந்தேதி) அக்னி பாராயணம், நித்ய ஹோமங்கள் நடைபெற்றது. இன்று மாலை மற்றும் நாளை (31-ந் தேதி) கும்ப ஆராதனம் நடைபெறுகிறது. பிப்ரவரி (1-ந் தேதி) காலை அதிவாஸத்ரய ஹோமம், மஹா சாந்தி திருமஞ்சனம், கடம் புறப்பாடு, மாலை சயனா திவாஸம் மற்றும் பூர்ணாஹதி நடைபெறுகிறது.

    இதைத் தொடர்ந்து சிகர விழாவான கும்பாபிஷேக விழா வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று காலை விஸ்வரூபம் தரிசனம், பிரதான ஹோமம், மகா பூர்ணாஹதி நடைபெற்று கும்ப புறப்பாடு ஊர்வலமாக சென்று கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    இதனை தொடர்ந்து வேத, திவ்ய பிரபந்த சாற்று முறை, பிரம்ம கோஷம் நடைபெற்று பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இரவு தங்க விசேஷ வாகனத்தில் தேவநாதசுவாமி உபய நாச்சியாருடன் வீதியுலா நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

    ×