search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple chariot"

    • மத்தூரம்மா கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளிக்கு அருகில் உஸ்கூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு, பிரசித்தி பெற்ற மத்தூரம்மா என்ற கிராம தேவதை கோவில் தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    திருவிழாவில் அதிக உயரத்தில் மிக பிரம்மாண்டமான தேர் அமைக்கப்பட்டு அதில் அம்மனை வைத்து ஊர்வலமாக இழுத்துச் செல்வது வழக்கம். மேலும் டிராக்டர் மற்றும் எருதுகளை கட்டி தேரை இழுத்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விழாவில் 25-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டும், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றும் மத்துரம்மாவை வழிபட்டு செல்வார்கள்.

    அந்த வகையில், மத்தூரம்மா கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மிக பிரம்மாண்டமான 127 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தேரில், அம்மனை வைத்து இழுத்துச் சென்ற போது, ஹிலல்லிகே என்ற கிராமத்தில், எதிர்பாராதவிதமாக தேர் சரிந்து கீழே விழுந்தது. அப்போது அந்த பகுதியில் பக்தர்கள், பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • பொங்கல் வைத்து ஆடு, கோழி, பலி கொடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.

    சென்னிமலை:

    சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது. நவம்பர் 8-ந் தேதி இரவு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது.

    அன்று முதல் இரவு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடந்தது. கடந்த 14-ந் தேதி இரவு கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மன்கோவில்புதூர், வாய்கால்மேடு பகுதி மக்கள் வந்து வழிபாடு நடந்தினர்.

    நேற்று இரவு புதன்கிழமை காவிரி சென்று தீர்த்தம் கொண்டு வந்து இரவு 8.30 மணிக்கு மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேக ஆராதனை நடந்தது.

    அதைத்தொடந்து இரவு கொமாரபாளையம், பனங்காட்டுபுதூர் மக்கள் காவடி எடுத்து வந்து மாரியம்மனை வழிபட்டனர். அதன் பின்பு இரவு 12 மணி அளவில் காளிக்காவலசு, முருங்கத்தொழுவு ஊர் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து மாவிளக்கு பூஜை நடத்தினர்.

    தொடர்ந்து இன்று காலை 7.20 மணிக்கு உற்சவ அம்மைக்கு மகா அபிஷே கமும், அதன் பின்பு காலை 8.10 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதை தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி, பலி கொடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.

    மாலை 3.30 மணிக்கு குழந்தைகள் சேற்று வேஷம் இட்டு மாரியம்மனுக்கு காணிக்கை செலுத்துவர். மாலை 5:20 மணிக்கு தேர் நிலை சேரும். இரவு மலர் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா காட்சி நடக்கும்.

    நாளை மதியம் மஞ்சள் நீர் உற்சவத்துடன் 15 நாள் விழா நிறைவு பெறுகிறது. முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை தொடர்ந்து முருங்கத்தொழுவு சுற்று பகுதியில்உள்ள 14-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

    • விநாயகர், சிவன் மற்றும் பிரம்மா திருத்தேரோட்டம் நடந்தது.
    • பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு எனும் மும்மூர்த்திகள் அருள் பாலிக்கும் தலமாக பிரசித்தி பெற்ற கொடுமுடி மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவில் திகழ்ந்து வருகிறது.

    மேலும் தமிழகத்தில் சிறந்த பரிகார தலமாக கொடுமுடி சிறந்து விளங்குகிறது. இதனால் தினமும் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் புனித நீராடி மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாளை வழிபடுகிறார்கள்.

    கொடுமுடி மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடப்பது வழக்கம்.

    இந்த நிலையில் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்ட விழா கடந்த 24-ந் தேதி கிராம சாந்தி பூஜையுடன் தொடங்கி நடந்து வருகிறது. 25-ந் தேதி சிவன், பெருமாள் கெடியேற்றம் நடந்தது.

    இதையொட்டி அன்று முதல் தினமும் சுவாமிகள் திருவீதி உலா நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    மேலும் தினமும் சாமி புறப்பாட்டுடன் ஒதுவா மூர்த்திகள் குழுவினரின் திருமுறை பாராயணம் நடந்தது. இதை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி திருக்கல்யாணம் நடந்தது.

    இதையொட்டி இன்று (புதன்கிழமை) காலை தேரோட்டம் நடந்தது. முன்னதாக சாமிகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து விநாயகர், சிவன் மற்றும் பிரம்மா திருத்தேரோட்டம் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய பகுதிகள் வழியாக சென்றது.

    விழாவில் கொடுமுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதை தொடர்ந்து இன்று மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவையொட்டி நாளை காலை சிவன், பெருமாள் புறப்பாடும், சூல தேவர், சக்கரத்தாழ்வார் காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும் நடக்கிறது.

    இதை தொடர்ந்து நாளை மாலை கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணி அம்மன் கோவில் உள்ளது.
    • இந்த ஆண்டும் வழக்கம்போல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த் திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெற்று வருவது வழக்கம்.

    இந்த ஆண்டும் வழக்கம்போல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது. விழாவில் பக்தர்கள் வேப்பிலை அணிந்து உருளதண்டம் போட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இக்கோவில் திருவிழாவையொட்டி, ஆங்கிலேயர் காலத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றம் 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்றும் சிறப்பு நீதிமன்றம் நடந்தது.

    ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரெஹினாபேகம் வழக்குகளை விசாரித்தார். அடி தடி, சிறு விபத்துக்கள், மது விற்பனை போன்ற 7 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு அபராதம் விதித்தார். இன்றும் சிறப்பு நீதிமன்றம் நடந்தது.

    • வட்டமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து வந்தனர்.
    • கொங்கண சித்தர் வழிபட்டதாகவும், அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் எனவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தாராபுரம் சாலையில் வட்டமலை கிராமத்தில் சிறுமலை மீது முத்துக்குமாரசாமி கோவில் அமைந்துள்ளது. சுமார் 1,600 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவில் சேர மன்னர்களால் கட்டப்பட்டதாகவும், இங்கு கொங்கண சித்தர் வழிபட்டதாகவும், அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் எனவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    இக்கோவிலில் புரட்டாசியில் நவராத்திரி விழாவும், ஐப்பசியில் சூரசம்ஹார விழாவும், கார்த்திகையில் தீபத்திருவிழாவும், பங்குனி உத்திர தேரோட்ட நிகழ்வும் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுக்கு முன் நடைபெற்ற பங்குனி உத்திர தினத்தில் நடந்த தேரோட்டத்தில், முத்துக்குமாரசாமி தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் வட்டமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து வந்தனர்.

    கடந்த 10 ஆண்டு முன்புவரை தேரோட்டம் நடந்து வந்தது. தற்போது கோவில் திருத்தேர் முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் காலம் காலமாக தொன்று தொட்டு நடந்த தேரோட்ட திருவிழாவும் நடத்த முடியாமல் தடைபட்டு நின்று விட்டது. இது பக்தர்களின் மனதில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து பக்தர்கள் தரப்பில் மேலும் கூறுகையில், வட்டமலை முத்துகுமாரசாமி கோவில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதிக வருமானம் வரும் ஏராளமான கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. அது போல பெரும் வருமானம் வரும் கோவில்களிலிருந்து நிதியை பெற்று வருமானம் குறைந்த இதுபோன்ற கோவில்களின் திருப்பணி, திருத்தேர் புனரமைப்பு மற்றும் இதர பணிகளுக்கு பயன்படுத்தினால் கோவில்களில் அன்றாட பூஜைகள் மற்றும் ஏனைய நிகழ்வுகள் தடையின்றி நடக்கும்.

    இந்த கோவில் பழனி முருகன் கோவில் போல மேற்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பாகும். எனவே சிதிலமடைந்து காணப்படும் வட்டமலை கோவில் திருத்தேருக்கு பதிலாக புதிய தேரை உடனடியாக நிர்மாணித்து தேரோட்ட திருவிழா நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    கடந்த 2013 ஆம் ஆண்டு ரோகித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் பலர் நடித்த திரைப் படத்தின் சில பாடல் காட்சிகள் இக்கோவிலில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் திருத்தேர் புனரமைப்பு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும் எனவும், அப்போது தான் அனைத்து கோவில்களிலும் பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் தடையின்றி நடக்க வாய்ப்பு உண்டாகும் எனவும் பக்தர்கள் தரப்பில் எழுந்துள்ள நியாயமான கோரிக்கையாக உள்ளது. அதனை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை படம்பிடிக்க முயன்ற போலீஸ்காரர் செல்போனை தீட்சிதர் பறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    சிதம்பரம்:

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று காலை ஆனித்திருமஞ்சன திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

    தேரானது முக்கிய வீதிகளின் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் தேரோட்டத்தை தனது செல்போனில் படம் பிடிக்க முயன்றார். இதைபார்த்த தீட்சிதர், செல்போனில் படம் பிடிக்கக்கூடாது என கூறினார். திடீரென அவர் அந்த போலீஸ்காரரிடமிருந்து செல்போனை பறித்ததாக தெரிகிறது.

    இதனால் அவர்களுக் கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு நடந்தது. பின்னர் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து பறிக்கப்பட்ட செல்போன் போலீஸ்காரரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×