என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எங்களுக்குள் மோதல் இருந்தது உண்மைதான்.. ஆனால்! கூட்டம் முழுவதும் பங்காளி சண்டை குறித்து பேசிய டிடிவி
- எடப்பாடி கே.பழனிசாமியை முழுமனதாக ஏற்றுக்கொண்டு கூட்டணிக்குள் வந்துள்ளோம்.
- எங்களுக்குள் இருந்த சண்டையால் பிரிந்திருந்தோம் என்பது உண்மை.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான எடப்பாடி கே.பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன்,
"தமிழ்நாட்டில் நடக்கும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர அமமுக தே.ஜ.கூட்டணியில் இடம்பெற வேண்டும் என பிரதமர் மோடி விரும்பினார். இந்தக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் எடப்பாடி கே.பழனிசாமியை முழுமனதாக ஏற்றுக்கொண்டு கூட்டணிக்குள் வந்துள்ளோம். நாங்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள், புரட்சித்தலைவர் வழிவந்தவர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டனர். எங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் இருந்தது உண்மைதான். ஆனால் தமிழ்நாட்டின் நலனுக்காகவும், அ.ம.மு.க.வின் நலனுக்காகவும் பிரதமரின் அழைப்பை ஏற்று, மனதில் இருந்த எல்லா கோப, தாபங்களையும் விட்டுவிட்டு மீண்டும் அம்மா ஆட்சியை மலரசெய்ய இந்த கூட்டணியில் இணைந்துள்ளோம்.
ஒரு விஷயத்தை எதிர்ப்பது என்றால் அதிலும் உறுதி, ஆதரிப்பது என்றால் அதிலும் உறுதியாக இருக்கக்கூடிய தன்மையை ஜெயலலிதா எனக்கு கொடுத்திருக்கிறார். ஒரேக் குடும்பத்தை சேர்ந்தவர்கள்; பங்காளிகளாக இருந்தவர்கள். எங்களுக்குள் இருந்த சண்டையால் பிரிந்திருந்தோம் என்பது உண்மை. ஆனால் மக்களாட்சியை தமிழ்நாட்டில் நிறுவவேண்டும் என்பதற்காக நாங்கள் முழுமனதோடு இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறோம் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடே இன்று கொலை, கொள்ளை நாடாக மாறிக் கிடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. போதைப்பொருள் புழக்கம். தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் வருத்தத்தில் இருக்கும்போது மகனை முதலமைச்சராக துடித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அந்தக் குடும்ப ஆட்சியை முழுமையாக முறியடிப்போம்" என தெரிவித்தார்.






