என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஒன்றிணைய முயலும் ஓபிஎஸ்... இல்லாவிட்டாலும் பலமே எனக்கூறும் நயினார்; இழுக்கும் டிடிவி தினகரன்... இபிஎஸ் ரியாக்ஷன்?
    X

    ஒன்றிணைய முயலும் ஓபிஎஸ்... இல்லாவிட்டாலும் பலமே எனக்கூறும் நயினார்; இழுக்கும் டிடிவி தினகரன்... இபிஎஸ் ரியாக்ஷன்?

    • இன்று திமுகவை விமர்சித்து அறிக்கை விட்டுள்ளார் ராமதாஸ்.
    • அதிமுகவால் 3 முறை முதல்வரான ஓபிஎஸ் தன்னை வாழவைத்த கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது

    தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியை அரசியல் கட்சிகள் ஒருங்கிணைத்து வருகின்றன. திமுக தனது நாடாளுமன்ற தேர்தலின்போது இணைந்த கூட்டணி கட்சிகளுடனேயே தேர்தலை சந்திக்கிறது. ஆனால் நடுநடுவே திமுக-காங்கிரஸ் மோதல் புகைந்துகொண்டே இருக்கிறது. இருப்பினும் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கூட்டணியில் உறுதியாக இருக்கிறார்கள்.

    இதனிடையே ராமதாஸ் தரப்பு திமுகவில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இன்று திமுகவை விமர்சித்து அறிக்கை விட்டுள்ளார் ராமதாஸ். மேலும் பாமக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம் என திருமாவளவன் உறுதியாக உள்ளார். இதனால் ராமதாஸ் தரப்பு பாமக, திமுக கூட்டணியில் இடம்பெறாது என கூறப்படுகிறது.

    மறுபுறம் பிரிந்த அதிமுக ஒண்றிணைந்து வருகிறது. ஓபிஎஸ் மட்டும் இன்னும் இணையவில்லை. இதனிடையே ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அதற்கு மூன்றுமுறை அதிமுக முதலமைச்சராக இருந்தவர் எப்படி திமுகவிற்கு செல்வார், அதிமுகவால் 3 முறை முதல்வரான ஓபிஎஸ் தன்னை வாழவைத்த கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதனால் ஓபிஎஸ் தே.ஜ.கூட்டணியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது ஓபிஎஸ் கூட்டணியில் இருந்தால் எவ்வளவு பலமாக இருக்கும்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு,

    "இப்போது இருக்கும் கூட்டணியே பலமான கூட்டணிதான். மற்ற பலனும் நல்லப் பலன்தான். கூட்டணிகள் பலமாக வந்துசேர்கின்றன. நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். " என தெரிவித்துள்ளார்.

    இதனிடையே இந்த யூகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள ஓபிஎஸ்,

    "எனது ஒற்றை கோரிக்கை, வேண்டுகோள் என்னவென்றால், பிரிந்திருக்கும் அதிமுகவின் அனைத்து சக்திகளும் ஒன்றிணையவேண்டும். இதன்மூலம் தேர்தலை சந்திக்கவேண்டும் என்பதுதான். மீண்டும் ஒன்றிணையவது பற்றி ஆண்டவன் கையிலேயே உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து என்னிடம் யாரும் பேசவில்லை. கூட்டணிக்கு என்னை யாரும் இதுவரையில் அழைக்கவுமில்லை" என தெரிவித்துள்ளார்.

    ஆனால் இவை அனைத்திற்கும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருக்கிறார் இபிஎஸ். திமுகவை வீழ்த்த, டிடிவி தினகரனுடன் கைக்கோர்த்தது போல ஓபிஎஸ் உடனும் கைக்கோர்ப்பாரா? பாஜக ஓபிஎஸை இணைக்கக் கோரினால் இணைப்பாரா? என கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பதிலை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    Next Story
    ×