என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

TN Assembly Election 2026: தொகுதியை மாற்றும் செந்தில் பாலாஜி... காரணம் என்ன?
- சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் மீண்டும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் போட்டியிடவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, கட்சியில் பணியாற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவும், சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் மீண்டும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் போட்டியிடவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் செந்தில் பாலாஜி தனது தொகுதியை மட்டுமல்லாமல், தான் போட்டியிடும் மாவட்டத்தையே மாற்றத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அவர் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான வியூகங்களை வகுத்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேற்கு மண்டலத்திற்கான தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி கோவையில் தி.மு.க.வின் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" போன்ற கட்சி நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். எதிர்வரும் தேர்தல்களில் தி.மு.க.வின் பலத்தை மேற்கு மண்டலத்தில் வலுப்படுத்தும் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராகவும், பின்னர் தி.மு.க. ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகவும் செந்தில் பாலாஜி பதவி வகித்துள்ளார். தற்போது கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், ஏப்ரல் மாதம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






