என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்
- எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ்.சை சேர்த்து கொள்ள தயாராக இல்லை.
- மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் மாற்றுக்கட்சிகளில் சேர்ந்து விட்டனர்.
சென்னை:
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜயின் த.வெ.க என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. தற்போது அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டி வருகின்றன.
இப்படி அரசியல் களம் ஒருபக்கம் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.
கடந்த முறை தனியாக போட்டியிட்ட பா.ஜ.க இந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் ஓ.பி.எஸ்.சையும் சேர்த்து கொள்ள முயற்சிகள் நடந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ்.சை சேர்த்து கொள்ள தயாராக இல்லை.
இதனை தொடர்ந்து ஓ.பி.எஸ். தேர்தல் தொடர்பாக எந்தவொரு நிலையான முடிவையும் எடுக்காததால் அவருடன் பயணித்த மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் அவரை விட்டு விலகி மாற்றுக்கட்சிகளில் சேர்ந்து விட்டனர்.
இதனிடையே, தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் தை மாதத்திற்குள் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிப்பதாக கூறிவந்த ஓ.பன்னீர்செல்வம், என்னை முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கியதற்கு என்ன காரணம் என்பதை தற்போது பொறுப்பில் உள்ளவர்கள் தெரிவிக்க வேண்டும். நான் தவறு செய்தேன் என்று தெரிந்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்தார். அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துக்கொண்டார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது ஆதரவாளர்களும் தி.மு.க.வில் இணைந்தனர்.
முன்னதாக தி.நகரில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும் அமைச்சர் சேகர்பாபுவும் ஒரே காரில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.






