search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜ.க."

    • பிரதமர் பதவிக்காக நான் கனவு கண்டதில்லை.
    • நான் சமரசம் செய்ய மாட்டேன்.

    நாக்பூர்:

    மத்திய மந்திரி நிதின் கட்காரி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    பிரதமர் பதவிக்காக நான் கனவு கண்டதில்லை. ஆசைப்பட்டதும் கிடையாது. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு வந்தது எனக்கு நினைவிக்கிறது.

    எதிர்கட்சியை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு விரும்பினால் என்னை ஆதரிப்பதாக தெரிவித்தார். அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டேன். அந்த அரசியல் தலைவர் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை. பிரதமர் பதவி எனது லட்சியம் அல்ல.

    நான் ஒரு சித்தாந்தத் தையும் நம்பிக்கையையும் பின்பற்றுபவன் என்று அந்த தலைவரிடம் கூறி னேன். அவற்றில் நான் சமரசம் செய்ய மாட்டேன் என்று அவரிடம் உறுதியாகக் கூறினேன்.

    நான் கனவில் கூட நினைக்காத அனைத்தையும் கொடுத்த கட்சியில் இருக்கிறேன். எந்த சலுகையும் என்னை கவர்ந்து இழுக்க முடியாது. நான் சார்ந்துள்ள அமைப்புக்கு என்றும் நம்பிக்கையாக இருப்பேன்.

    இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

    2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பா.ஜனதாவுக்கு பெரும் பான்மை கிடைக்காது, மேலும் சில எதிர்கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் என்று கருதப்படும்போது, ஒரு குறிப்பிட்ட எதிர்க்கட்சியின் தலைவர் தன்னை அணுகியதாக நிதின் கட்காரி சுட்டிக்காட்டி உள்ளார்.

    • தேசிய கல்வி கொள்கையை கட்டாயமாக திணிக்க முயற்சி செய்கிறது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த மறுப்பதால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி வழங்க மறுத்து வருகிறது.

    மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழும் தமிழ்நாட்டுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது. அது மட்டுமின்றி தேசிய கல்வி கொள்கையை கட்டாயமாக திணிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் சமத்துவத்தை ஒன்றிய அரசு ஊக்குவிக்கும் லட்சணம் இதுதானா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    கல்வி, சமூக திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுப்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை மறுப்பது, அதேவேளையில் குறிக்கோள்களில் வெற்றி அடையாதோருக்குத் தாராளமாக நிதி ஒதுக்குவது இப்படித்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு தரமான கல்வியையும் சமத்துவத்தையும் ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளதா?

    முடிவை நாட்டுக்கும், நாட்டு மக்களின் புரிதலுக்குமே விட்டுவிடுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் தீவிர ஆலோசனை.
    • தேர்தல் வியூகம் குறித்து விவாதிப்படுகிறது.

    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் செப்டம்பர் 18, 25-ந்தேதி, அக்டோபர் 1-ந்தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல் தொடர்பாக பா.ஜனதாவின் மூத்த தலைவரான மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் அவரது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இதில் தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, ராம் மாதவ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்படுகிறது.

    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
    • பா.ஜ.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் பா.ஜ.க சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிரீன் சர்க்கிளில் இருந்து கோட்டை வரை பைக்கில் பேரணியாக வந்து கோட்டை கொத்தளத்திற்கு தேசிய கொடியுடன் செல்ல உள்ளதாக அறிவித்து இருந்தனர்.

    கோட்டைக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்க வில்லை. இதனால் பா.ஜ.க.வினர் கோட்டைக்குள் செல்வதை தடுப்பதற்காக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன் தலைமையில், டிஎஸ்பிக்கள் திருநாவுக்கரசு, சரவணன் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் கோட்டை வாயில் முன்பாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். காலை முதல் பொதுமக்கள் யாரையும் கோட்டைக்குள் அனுமதிக்கவில்லை.

    இந்த நிலையில் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் தேசிய கொடியுடன் பைக்கில் கோட்டை நுழைவு வாயிலுக்கு வந்தனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கோட்டைக்குச் செல்ல அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் பா.ஜ.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து பா.ஜ.க.வினர் ஊர்வலமாக நடந்து சென்று சிப்பாய் புரட்சி நினைவு தூண் அருகே ஊர்வலத்தை முடித்தனர்.

    பா.ஜ.க.வினரின் பைக் பேரணி காரணமாக அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கோட்டை நுழைவுவாயில் முன்பாக பரபரப்பு ஏற்பட்டது. 

    • தமிழக பா.ஜனதா தலைவராக அண்ணாமலையே நீடிப்பார்.
    • தேசிய தலைமையும் அதைத்தான் விரும்புகிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்பை மேற்கொள்ள லண்டன் செல்ல இருக்கிறார். இதனால் அவர் அதற் கான பணிகளையும் கவ னித்து வருகிறார். லண்டனில் 3 மாதம் தங்கியிருந்து, அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து படிக்க உள்ளார்.

    இந்த நிலையில், அண்ணாமலை லண்டன் சென்றால், தமிழக பா.ஜ.க.வில் மாநில தலைவர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி பா.ஜ.க.வினர் இடையே நிலவுகிறது.

    இதுதொடர்பாக டெல்லி தலைமையும் ஆலோசனை மேற்கொண்டது. இது குறித்து பா.ஜனதா நிர்வாகிகள் கூறியதாவது:-

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந் தேதி லண்டன் செல்ல உள்ளார். ஆக்ஸ் போர்டு பல்கலைக் கழகத்தில் செப்டம்பர் 2-ந்தேதி முதல் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பை தொடங்க உள்ளார். 3 மாத காலம் லண்டனில் தங்கி இருக்கும் அவர், அங்கிருந் தபடியே, கட்சி விவகாரங்களை கவனித்துக் கொள்வார்.

    2026 சட்டப்பேரவை தேர்தலிலும் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலையே நீடிப்பார். தேசிய தலைமையும் அதைத்தான் விரும்புகிறது. கட்சியின் அமைப்பு ரீதியான பணிகளை வழக்கம்போல கேசவ விநாயகம் கவனித்துக் கொள்வார்.

    அடுத்த 3 மாதங்களில், தேவைப் பட்டால் பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் காணொலியில் அண்ணா மலையுடன் கலந்து ஆலோசித்து, முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

    இவ்வாறு கட்சி நிர்வாகிகள் கூறினர்.

    • புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
    • புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. தேசிய தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஜே.பி. நட்டா இருந்து வருகிறார். தற்போது அவர் எம்.பி.யாகி மத்திய மந்திரியாகவும் பதவியை பெற்றுள்ளார்.

    அவருக்கு பதில் பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய ஆலோசனை நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் பா.ஜ.க. புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவீஸ், ராதாமோகன் சிங், டாக்டர் சுதா யாதவ், வினோத் டவ்தே, சுனில் பன்சல், டாக்டர் கே.லட்சுமண் ஆகியோரது பெயர் பா.ஜ.க. தலைவர் பதவிக்கு அடிபடுகிறது.

    உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு சற்று வீழ்ச்சி ஏற்பட்டு இருப்பதால் அந்த மாநிலத்தை சேர்ந்த மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்கை தலைவர் பதவியில் அமர்த்தலாமா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    அதற்கு முன்னதாக நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளை இந்த இறுதிக்குள் செய்து முடிக்க வேண்டியது உள்ளது.

    அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி முதல் பா.ஜ.க. கட்சிக்கு நாடு முழுவதும் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி தொடங்குகிறது. செப்டம்பர் மாதம் 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மிக தீவிரமாக உறுப்பினர்கள் சேர்க்கை பணி நடைபெறும்.

    இதையடுத்து அக்டோபர் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை உறுப்பினர் சேர்க்கையை ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பிறகு புதிய நிர்வாகிகள் தேர்தல் தொடங்கும்.

    நவம்பர் மாதம் 10-ந் தேதி மண்டல அளவிலான தலைவர்கள் தேர்தல் தொடங்கும். நவம்பர் 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் பிறகு மாநில நிர்வாகிகள், மத்திய குழு உறுப்பி னர்கள் ஒருங்கிணைந்து தேசிய நிர்வாகிகளை தேர்வு செய்வார்கள்.

    தேசிய தலைவருக்கான தேர்தல் டிசம்பர் 1-ந்தேதி தொடங்கி நடத்தி முடிக்கப்படும்.

    • ரத்தத்தில் சர்க்கரை அளவு 5 முறை குறைந்துள்ளது.
    • ஆம் ஆத்மி கட்சிக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே கெஜ்ரிவாலின் எடை 8.5 கிலோ குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. மார்ச் 21 அன்று அமலாக்கத் துறை கைது செய்த போது கெஜ்ரிவாலின் எடை 70 கிலோவாக இருந்தது என்றும், தற்போது அவரது எடை 61.5 கிலோவாக குறைந்துள்ளது என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

    மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு 5 முறை குறைந்துள்ளது என்று டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்தார்.

    இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கெஜ்ரிவாலின் எடை 2½ கிலோ மட்டுமே குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தென் இந்தியாவிலும் பா.ஜ.க. வலுவாகி வருகிறது.
    • கேரள சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிக்காக காத்திருக்கிறோம்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் மட்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதன்மூலம் கேரளாவில் கால்பதித்த பெருமையை அக்கட்சி பெற்றது.

    அது மட்டுமின்றி கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலை விட, தற்போது நடந்த தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீத மும் அதிகரித்தது. இதனால் கேரள மாநி லத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    வருகிற உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தல்களில் பெரும்பான்மையான வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன் பா.ஜ.க. செயல்படத் தொடங்கியிருக்கிறது.

    இந்நிலையில் பா.ஜ.க. புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.

    அதில் பா.ஜ.க. தேசிய தலைவரும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியுமான ஜெ.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஊழல் மற்றம் குடும்ப அரசியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கட்சிகள் அதிகாரத்தை பெற பொய் தகவல்களை பரப்புகின்றன. அந்த கட்சிகள் பா.ஜ.க.வை வடமாநில கட்சி போல் சித்தரிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டன.

    ஆனால் அவை அனைத்தும் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் உடைத்தெறியப்பட்டது. இந்த தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் முன்பைவிட அதிக வாக்குகளை பா.ஜ.க. பெற்றது. தென் இந்தியாவிலும் பா.ஜ.க. வலுவாகி வருகிறது.

    கேரள மாநிலத்தில் நடந்த மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் மட்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் 75 ஆயிரம் வாக்குகள் பெரும்பான்மையை பெற்றார்.

    திருவனந்தபுரம் மற்றும் அட்டிங்கல் தொகுதியில் தோல்வியடைந்தாலும் பா.ஜ.க.வுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. 6 மாநகராட்சிகளில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் 36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இது வெற்றிக்கு சமம்.

    கேரளாவில் எதிர் அணியாகவும், அகில இந்திய அளவில் ஒரே அணியாகவும் பயணிக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் காலாவதியான கொள்கைகளை மக்கள் நிராகரித்துள்ளனர். இங்கு பா.ஜ.க.வினர் உயிரை பணயம் வைத்து போராடி வருகின்றனர்.

    2016-ம் ஆண்டு நடைபெற உள்ள கேரள சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிக்காக காத்திருக்கிறோம். அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழ்நாட்டிலும் பிரதான கட்சியாக பா.ஜ.க. உருவெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

    இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

    • வியூகங்களை தற்போதே பா.ஜ.க. வகுக்க தொடங்கிவிட்டது.
    • மாநிலம் தழுவிய கூட்டம் திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 18 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது.

    பா.ஜ.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. மாநிலத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்டு கட்சிக்கு இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அதே நேரத்தில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும், அந்த வெற்றியின் மூலம் கேரளாவில் கால் பதித்துவிட்டது மற்றும் வாக்கு சதவீதம் அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர்கள் தங்களின் வெற்றிக் கொண்டாட்டத்தை தொடர்ந்தபடி இருக்கின்றனர்.

    கேரளாவில் அவர்களது அடுத்த இலக்கு நடைபெற உள்ள பாலக்காடு மற்றும் செலக்கரா சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலாக இருக்கிறது.

    மேலும் அடுத்தடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சட்டசபை தேர்தலும் பா.ஜ.க.வின் இலக்காக உள்ளது.

    இந்த தேர்தல்களில் அதிகமான இடங்களில் வெற்றியை பெற்றாக வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. அதற்கான வியூகங்களை தற்போதே பா.ஜ.க. வகுக்கத் தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக அமைப்பு நிர்வாகிகள் 3 ஆயிரம் பேருடனான மாநிலம் தழுவிய கூட்டம் திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற உள்ளது.

    நாளை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் கூட்டத்தில் பஞ்சாயத்து கமிட்டி அளவிலான தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மாலையில் நடக்கும் நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொள்கிறார்.

    நட்டா வருகையால் கேரள மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.

    • இன்று முதல் 2 நாட்கள் டெல்லியிலேயே முகாமிட்டு சந்திப்புகளை நடத்த முடிவு.
    • மாநிலத்திற்கு தேவையான நிதி குறித்தும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளன.

    திருப்பதி:

    பாராளுமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மை பெறாத நிலையில் பா.ஜ.க. சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் கட்சி எம்.பி.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

    இதனால் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் இருவரும் எதையும் பெற்றுக் கொள்ளும் சக்தி வாய்ந்த தலைவர்களாக மாறி உள்ளனர்.

    சந்திரபாபு நாயுடு கட்சி எம்பிக்கள் 3 பேருக்கு மத்திய மந்திரி பதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி சென்றார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

    இதனை தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா விவசாய மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மந்திரி சிவராஜ் சவுகான், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி மனோகர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

    இதற்காக அவர் இன்று முதல் 2 நாட்கள் டெல்லியிலேயே முகாமிட்டு சந்திப்புகளை நடத்த முடிவு செய்துள்ளார்.

    ஆந்திர மாநிலத்தில் நிலுவையில் உள்ள போலவரம் உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்கள், அமராவதி தலைநகர் திட்டம், மாநில நெடுஞ்சாலைகள், சாலைகள் உள்ளிட்ட உள் கட்டமைப்புகளின் நிலை குறித்து டெல்லி செல்வதற்கு முன்பாக அதிகாரியுடன் கலந்து ஆலோசித்து அறிக்கை ஒன்றை சந்திரபாபு நாயுடு தயார் செய்தார்.

    மேலும் ஆந்திர மாநிலத்திற்கு தேவையான நிதி குறித்தும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த நீண்ட பட்டியலுடன் டெல்லியில் சந்திரபாபு நாயுடு முகாமிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி மற்றும் மத்திய மத்திரிகளுடன் சந்திப்பின்போது ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து, ஆந்திர மாநிலத்திற்கு கூடுதல் நிதி சலுகைகள் மற்றும் வரி சலுகைகளை சந்திரபாபு நாயுடு கேட்க முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

    அரசியல் அனுபவம் வாய்ந்த சந்திரபாபு நாயுடு தற்போது பா.ஜ.க கூட்டணியில் சக்தி வாய்ந்த தலைவராக உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை அவர் ஒருபோதும் நழுவ விட மாட்டார். ஆந்திராவிற்கான அனைத்து திட்டங்களையும் கேட்டு பெறுவதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

    மேலும் பல தொழில் நிறுவனங்களையும் ஆந்திராவுக்கு கொண்டு செல்வதில் கில்லாடியாக செயல்படுவார். அவருடைய கோரிக்கைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். சந்திரபாபு நாயுடு முகாமிட்டிருப்பது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தொகுதி வாரியாக ஆய்வு நடத்தும்படி மேலிடம் உத்தரவிட்டது.
    • அறிக்கை தயார் செய்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்குகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றி பெறாதது கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் கூட 2-ம் இடத்தையே பெற்றது. ஏற்கனவே இந்த தொகுதிகளில் நடத்தி இருந்த தேர்தலுக்கு முந்தைய ஆய்வுகள், கணிப்புகள் எல்லாம் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருந்தும் அந்த தொகுதிகள் கை நழுவியது எப்படி? என்று மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

    இதையடுத்து தொகுதி வாரியாக ஆய்வு நடத்தும்படி மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் ஆய்வு நடந்தது.

    இந்த கூட்டங்களில் வேட்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் அழைக்கப்பட்டு காரணங்கள் கேட்கப்பட்டது.

    தென் சென்னையில் கனகசபாபதி முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது கட்சி தேர்தல் செலவுக்காக வழங்கிய பணத்தை முறையாக விநியோகிக்கவில்லை. கோஷ்டிகளால் தேர்தல் வேலைகளில் உள்ளடி வேலைகளும் நடந்தன என்று பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.

    இதனால் சில தொகுதிகளில் நிர்வாகிகளிடையே மோதல், கைகலப்பு வரை நடந்தது. மாநிலம் முழுவதும் நடத்தப்படும் இந்த ஆய்வு கூட்டம் நாளையுடன் முடிவடைகிறது. தொகுதி வாரியாக தோல்விக்கான காரணம், நிர்வாகிகள் செயல்பாடு பற்றிய விரிவான அறிக்கை தயார் செய்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்குகிறார்கள்.

    நாளை மறுநாள் (6-ந் தேதி) பா.ஜனதா மாநில செயற்குழுக் கூட்டம் மதுரவாயல் ஸ்ரீவாரி மண்டபத்தில் நடக்கிறது. இதில் மாநில நிர்வாகிகள், அணிகளின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மண்டலத் தலைவர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்திலும் தேர்தல் தோல்வி தொடர்பாக விவாதிக்க திட்டமிட்டு உள்ளார்கள்.

    செயற்குழு கூட்டத்துக்கு பிறகு மாவட்ட வாரியாக தேர்தல் பணியில் புகாருக்கு ஆளான நிர்வாகிகள் பதவிகளை பறிக்க திட்டமிட்டுள்ளனர். செயற்குழு முடிந்ததும் இந்த வேலைகள் தொடங்கும் என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.
    • பா.ஜ.க.விற்கு கால் பிடிக்கும் வேலையை செய்கின்றது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாசிச அரசியல், மதவாத அரசியல், ஜாதி அரசியலை, முன்னெடுத்த பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.

    நாட்டு மக்கள் விரும்புவது நாட்டின் முன்னேற்றம், வளம், சமூக வளர்ச்சி, ஆகியவற்றை முன்னெடுத்த திராவிட நாயகன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சமூக கட்டமைப்பு வளர்ச்சியைத்தான். இதனால் தான் இந்திய அளவில் 40-க்கு 40 தொகுதியிலும் வெற்றியினை பெற்று மகுடம் சூட்டி உள்ளனர்

    சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.க. கட்சியுடன் பா.ம.க. கட்சி கூட்டணி சேர்ந்து, பா.ஜ.க.விற்கு கால் பிடிக்கும் வேலையை செய்கின்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட சட்டசபையில் தனி தீர்மானம் நிறைவேற்றியுள்ள முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினால் மட்டுமே வன்னிய மக்களுக்கு பல நல்லதிட்டங்களையும், சிறந்த இட ஒதுக்கீட்டையும் வழங்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×