search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Noyal river"

    • அதிக அளவு நீர் பாலத்தின் மேலே சென்றதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
    • வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் நல்லம்மன் தடுப்பணை நிரம்பியும், தடுப்பணையின் நடுவே நல்லம்மன்கோவிலை வெள்ளம் சூழ்ந்து தீவு போல காணப்படுகிறது.

    திருப்பூர்:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்ட அணைகள் நிரம்பி தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் இருந்து பாய்ந்து வரும் நொய்யல் ஆறு திருப்பூர் மாநகரின் மையப்பகுதி வழியாக கடந்து செல்கிறது. இன்று காலை முதல் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. நேரம் செல்ல செல்ல வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது. இதனால் காலேஜ் ரோட்டையும், மங்கலம் ரோட்டையும் இணைக்கும் அணைப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியது.

    அதிக அளவு நீர் பாலத்தின் மேலே சென்றதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் வந்து பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். இரும்பு தடுப்புகள் அமைத்து இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தரைப்பாலத்தில் வெள்ளத்தை கடக்காத வகையில் எச்சரிக்கை விடுத்தனர்.

    திருப்பூர் மங்கலம் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே நல்லம்மன் தடுப்பணை உள்ளது. நல்லம்மன் தடுப்பணையில் நொய்யல் வெள்ளம் அருவிபோல கொட்டிவருகிறது. வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் நல்லம்மன் தடுப்பணை நிரம்பியும், தடுப்பணையின் நடுவே நல்லம்மன்கோவிலை வெள்ளம் சூழ்ந்து தீவு போல காணப்படுகிறது. நல்லம்மன் கோவிலுக்கு செல்லும் சிறுபாலம் வெள்ளத்தால் மூழ்கி காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நொய்யல் வெள்ளம் நுரையுடன் செல்கிறது. 

    • ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • தன்னார்வலர்கள் பங்களிப்போடு நொய்யல் கரையோரத்தை அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்ளாட உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நொய்யல் ஆற்றின் இருகரைகளும் மேம்படுத்த திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக இருபுறமும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் நொய்யல் ஆறு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆற்றின் இருபுறமும் கரைகளை சீரமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர துணை பொறியாளர் வாசுகுமார் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    நொய்யல் ஆற்றின் கரையோரம் சிறுவர் பூங்கா, பொழுதுபோக்கு அம்சங்கள், சைக்கிள் பாதை உள்ளிட்டவை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த திட்டப்பணிகளை தனியார் நிறுவனம் தயாரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தன்னார்வலர்கள் பங்களிப்போடு நொய்யல் கரையோரத்தை அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் தன்னார்வலர்களுடன் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

    • புது வெள்ளத்தில் மீன்கள் துள்ளிக்குதிக்கின்றன
    • புது வெள்ளத்தில் மீன்கள் துள்ளிக்குதிக்கின்றன

     வடவள்ளி,

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள குளங்கள் நிரம்பின.

    நொய்யல் ஆற்றில் பல மாதங்களாக தண்ணீர் இல்லை. எனவே ஆறு வறண்டு காணப்பட்டது. இங்கு தற்போது வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    நொய்யல் ஆற்றின் சித்திரைசாவடி தடுப்ப ணையில் தண்ணீர் பெரு க்கெடுத்து ராஜவாய்க்கால் வழியாக பாசனத்திற்கு செல்கிறது. இதனால் தொண்டாமுத்தூரில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

    எனவே தொண்டா முத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆற்றுக்கு வந்து நீரில் குளித்து மகிழ்கின்றனர்.

    ஒரு சிலர் தூண்டில் போட்டு மீன் பிடிக்கின்றனர். இதில் தற்போது பெரிய அளவில் மீன்கள் கிடைத்து வருகின்றன. எனவே பலரும் ஆர்வமிகுதியில் கூட்டம் கூட்டமாக வந்திருந்து போட்டி போட்டு மீன்களை பிடித்து வருகின்றனர்.

    தொண்டாமுத்தூரின் கிளை ஆறுகளில் இருந்தும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் செல்வதால், அங்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும் என விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

    • நாம் முயற்சி செய்தால், தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், அரசு நிச்சயமாக நிதி ஒதுக்கி நொய்யல் ஆற்றை மீட்க செய்ய முடியும்.
    • கொங்கு செழிக்க வேண்டும் என்றால் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும்.

    சென்னை:

    நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் பசுமைத்தாயகம் மற்றும் கொங்கு பகுதியில் உள்ள சமூகத்தொண்டு அமைப்புகள் சார்பில் கோவையில் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட ஆறுகள் இருக்கின்றன.

    காவிரி ஆற்றில் தமிழ்நாட்டில் இருந்து, மேற்கு பகுதியில் இருந்து பவானி ஆறு, நொய்யல் ஆறு அமராவதி ஆறு கிளை ஆறுகளாக கலக்கின்றன.

    40 ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் ஆற்றில் உள்ள நீரினை அள்ளி குடிக்கலாம். 2500 ஆண்டுகள் இந்த நொய்யாலாறுக்கு வரலாறு இருக்கிறது. அப்பொழுதே கிரேக்க, ரோமனியர்களுடன் வணிகம் செய்த தொல்லியல் ஆவணங்கள் இருக்கின்றன. அதன் பிறகு வந்த சேர சோழ பாண்டியர் மன்னர்களும் நொய்யல் ஆற்றுக்கு தேவையான நீர் மேலாண்மை திட்டங்களை வகுத்து பாதுகாத்து வந்து இருக்கிறார்கள். தற்போது நொய்யல் ஆறு சீர்கெட்டு கிடக்கிறது.

    நொய்யல் ஆற்றை காப்பாற்றுவது என்பது அரசு தான் செய்ய வேண்டும். அரசை நாம் அனைவரும் இணைந்து செய்ய வைப்போம். நாம் முயற்சி செய்தால், தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், அரசு நிச்சயமாக நிதி ஒதுக்கி நொய்யல் ஆற்றை மீட்க செய்ய முடியும்.

    நொய்யல் ஆற்றின் மூலம் 45 லட்சம் ஏக்கர் அளவிற்கு விவசாயம் ஒரு காலகட்டத்தில் நடந்தது. ஆனால் இப்போது அதில் 35 சதவீதம் மட்டுமே விவசாயம் நடக்கிறது. இதனை நாம் 60, 70 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த நிலப்பகுதிக்கு ஏற்ப பயிர்களை நாம் தேர்வு செய்து விவசாயத்தை முன்னுக்கு கொண்டு வர வேண்டும்.

    'கொங்கு செழிக்கட்டும்', 'கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்' என்ற அந்த வாசகம் என்னால் மறக்க முடியாத ஒன்று. கொங்கு செழிக்க வேண்டும் என்றால் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும். நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அனைத்து தன்னார்வ அமைப்பினரையும் இணைத்து, நொய்யல் நதி பாதுகாப்பு என்பதை, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.
    • தினமும் மாலை, நொய்யல் நதிக்கு ஆங்காங்கே ஆரத்தி எடுக்கப்படும்.

    திருப்பூர்:

    நொய்யல் சீரமைப்பு பெரு விழா-2023 குறித்த ஆலோசனைக் கூட்டம் திருமுருகன்பூண்டியில் நடைபெற்றது.

    அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், கொங்கு மண்டல மக்கள் சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பேரூா் சாந்தலிங்க மருதசால அடிகளாா், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமி ஆகியோா் தலைமை வகித்தனா். அஜீத் சைதன்யா, திருமுருகன்பூண்டி சுந்தரராஜ அடிகளாா், செஞ்சேரிமலை சுவாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உலகளாவிய ஆன்மிக கூட்டமைப்பு பொறுப்பாளா் கோவை சாய் சுரேஷ், உலகளாவிய ஓம் நவசிவாய அறக்கட்டளை பொறுப்பாளா் சிவ வெற்றிவேல் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

    இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம் வருமாறு:-

    நொய்யல் நதியை புனிதப்படுத்தும் விதமாக கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டங்களில் 2023 மே, ஜூன் மாதத்தில் ரத யாத்திரை நடத்துவது, பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சியாக ஓவியம், கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகள் நடத்துவது, முக்கிய நிகழ்ச்சியாக 2023 ஆகஸ்ட் 25 முதல் 31ந்தேதி வரை 7 நாட்கள் பேரூா் தமிழ்க் கல்லூரியில் கருத்தரங்கங்கள், ஆன்மிக கண்காட்சிகள் நடத்துவது, நொய்யல் மறுசீரமைப்பு பவுன்டேஷன் அமைப்பை ஏற்படுத்தி தொழில் துறையினா், கல்வித் துறையினா், தொண்டு நிறுவனத்தினா், சமூக அமைப்பினா் உள்ளிட்டோரை ஒருங்கிணைந்து 150 கிலோ மீட்டருக்கும் அதிகமாக உள்ள நொய்யல் நதியை புனிதப்படுத்தும் பணியை தொடங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலும் ஒருங்கிணைப்புக்கு 9940737262, 9943433880 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்துக்கு தலைமை வகித்து, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசியதாவது:-

    காவிரி, வைகை, பாலாறு, தாமிரபரணி போன்ற ஆறுகளில் கழிவுகள் கலந்தாலும், அந்த நீரை தொட்டு பயன்படுத்தும் வகையில் உள்ளது. ஆனால், நொய்யல் ஆறு அத்தகைய நிலையில் இல்லை. மாசுபட்டுள்ளது.

    நொய்யல் ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 'நொய்யல் பெருவிழா' நடத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்தாண்டு ஜூலையில் நொய்யல் நதிக்கரையோரம் யாத்திரையும், ஆகஸ்டு 25ல் இருந்து, 7 நாட்களுக்கு, 'நொய்யல் பெருவிழா'வும் நடத்தப்படும்.

    இதில் துறவியர் மாநாடு, சைவ, வைணவ மாநாடு, மகளிர் மாநாடு, சித்தர்கள் மாநாடு, பசு பாதுகாப்பு, நில மற்றும் நீர் மேலாண்மை, முத்தமிழ் கருத்தரங்கம் என ஆன்மிக, சுற்றுச்சூழல் மாநாடு, கருத்தரங்கு, கண்காட்சி ஆகியன இடம்பெறும். தினமும் மாலை, நொய்யல் நதிக்கு ஆங்காங்கே ஆரத்தி எடுக்கப்படும்.

    நொய்யல் பாதுகாப்பு என்பது வெறும் விழாவாக முடிந்துவிடக்கூடாது என்ற நோக்கில், நொய்யல் நதி பயணிக்கும், 150 கி.மீ.,க்கு அதிகமான நீர்வழித்தடங்கள், நல்லாறு, கவுசிகா போன்ற ஏராளமான கிளை நதிகள், இடையிடையே உள்ள குளம், குட்டைகளை சுத்தப்படுத்தி, அதில் கழிவுகள் தேங்காதவாறு மாற்ற வேண்டும்.

    அனைத்து தன்னார்வ அமைப்பினரையும் இணைத்து, நொய்யல் நதி பாதுகாப்பு என்பதை, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். பள்ளி கல்லுாரி மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட வேண்டும். ஊர்வலங்கள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
    • குண்டும், குழியுமாக எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சியில் புதுவெங்கரையாம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையை இணைக்கும் இந்த கிராமத்தின் அருகே நொய்யல் ஆறு செல்கிறது. இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரு தாழ்வான தரைப்பாலம் கட்டப்பட்டு மேலே கான்கிரீட் தளத்தில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தாழ்வான தரைப்பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் போக்குவரத்து பாதுகாப்பிற்கு தடுப்புச்சுவர் எதுவும் கட்டப்படவில்லை.

    இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள கான்கிரீட் தரைப்பாலத்தை கடந்து காங்கயம், நத்தக்காடையூர் பகுதிகளில் இருந்து தினந்தோறும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

    மேலும் குட்டப்பாளையம், புது வெங்கரையாம்பாளையம், சத்திரக்காட்டுவலசு, கொல்லன்வலசு உட்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவ -மாணவிகள், கிராம பொதுமக்கள் தங்களின் வாகன போக்குவரத்து வழிப்பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த தாழ்வான தரைப்பாலத்தில் அமைக்கப்பட்டு உள்ள கான்கிரீட் தள சாலை மிகவும் பழுதடைந்து கான்கிரீட் பெயர்ந்து, குண்டும், குழியுமாக எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    மேலும் பலத்த மழைக்காலங்கள் மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் அதிக அளவில் வேகமாக பாய்ந்து வரும் மழைநீர் இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தாழ்வான தரைப்பாலத்தை மூழ்கடித்துபடி, மேலே சுமார் 20 அடி வரை உயர்ந்து சீறிப்பாய்ந்து செல்லும். அப்போது இந்த நொய்யல் ஆற்றில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கனரக, இருசக்கர வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ள தாழ்வான கான்கிரீட் தரைப்பாலத்தை முற்றிலும் இடித்து அகற்றி விட்டு, இருபுறமும் புதிய தடுப்பு சுவருடன் கூடிய மேம்பாலம் கட்டி சீரான வாகன போக்குவரத்து நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள், கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவை நகரில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நொய்யல் ஆற்றில் சேர்கிறது.
    • நொய்யல் ஆற்றின் ஓரம் உள்ள குளம், குட்டைகள் நீர் ஆதாரம் பெறும்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க., தலைவர் செந்தில்வேல், முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட திருப்பூர் மாநகராட்சி பஸ் நிலையத்திற்கு முன்னாள் நகர தந்தை பழனிசாமி கவுண்டர் பெயர் வைக்க வேண்டும்.பி.என்., ரோடு புது பஸ் நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பெயரும், புதிதாக கட்டப்பட்டுள்ள டவுன்ஹால் மாநாட்டு அரங்கத்துக்கு, அந்த இடத்தை வழங்கிய ரங்கசாமி செட்டியார் பெயரும் வைக்க வேண்டும்.

    சாமளாபுரம் பாசன நீர் மேலாண்மை பாதுகாப்பு குழுவினர் அளித்த மனுவில், கோவை நகரில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நொய்யல் ஆற்றில் சேர்கிறது.இதை சுத்திகரிப்பு செய்து, மீண்டும் ஆற்றில் திறந்து விட்டால், நொய்யல் ஆற்றின் ஓரம் உள்ள குளம், குட்டைகள் நீர் ஆதாரம் பெறும். சுற்றுப்பகுதி விவசாயிகள் நிலத்தடி நீர் ஆதாரம் பெறுவர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாடு மக்கள் மன்றம், பல்வேறு வகையில் நலிவடைந்துள்ள விசைத்தறி தொழிலுக்கு மின் கட்டண உயர்வு மேலும் அவதியை ஏற்படுத்துகிறது.விசைத்தறிகளுக்கான மின் கட்டண உயர்வு முடிவை திரும்ப பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.  

    • நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் இல்லாமல் தண்ணீர் செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • திருப்பூர் பகுதி சாய தொழிற்சாலை கழிவு நீர் கலக்காமல் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் குறுக்கே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் பகுதியில் செயல்படும் சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்து வந்ததால் ஒரத்துப்பாளையம் அணை முற்றிலும் மாசுபட்டது.

    இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன் பேரில், அணைக்கு வரும் தண்ணீரில் சாயக்கழிவின் அளவு ஜீரோ டிஸ்சார்ஜாக இருக்கும் வரை அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    அதன்படி பல வருடங்களாக ஒரத்து ப்பாளையம் அணையில் தண்ணீரை தேக்கி வை க்காமல் அப்ப டியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஆனால், மழைக் காலங்களில் திருப்பூர் பகுதியில் இருந்து மழை நீரோடு சாக்கடை கழிவுகள் கலந்து வந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    ஆனால், கடந்த 8-ந் தேதி வெள்ள நீர் வர தொடங்கி அதிகரித்து வந்ததால் சாயக்கழிவுகள் கலந்த தண்ணீராக நொய்யல் ஆற்றில் ஓடியது. அப்போது உப்பு தன்மை 1,900 டி.டி.எஸ். என்ற அளவில் இருந்தது இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆனால், தொடர்ந்து அதிக படியான வெள்ள பெருக்கு அதிகரித்து தற்போது ஒரத்துப்பாளையம் அணையில் 20 அடி தண்ணீர் தேங்கியது. அணையில் இருந்து 1,505 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    தற்போது அணையில் இருந்து வெளியேறும் நீரில் கருமை நிறம் இல்லாமல் நல்ல தண்ணீராக ஓடுகிறது. நேற்று மாலை நொய்யல் ஆற்று தண்ணீரில் உப்பு தன்மை 250 டி.டி.எஸ்., சாக குறைந்துள்ளது.

    தற்போது நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் இல்லாமல் தண்ணீர் செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து ஆற்றங்கரையோர விவசாயிகள் கூறுகையில், நல்ல தண்ணீராக நொய்யல் ஆற்றில் செல்கிறது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.

    இதேபோல் திருப்பூர் பகுதி சாய தொழிற்சாலை கழிவு நீர் கலக்காமல் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஆற்றில் கருப்பு நிறம் நீங்கி தண்ணீர் செல்கிறது.

    உப்பு தன்மையும் குறைந்து விட்டது இனி இந்த தண்ணீர் கால்நடைகளுக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தாலம் என்றனர்.

    • கொங்கு சோழர்கள் காலத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தடுப்பணை ஆகும்.
    • அணை நடுவிலுள்ள நல்லம்மன் கோவில் முழுமையாக மூழ்கி இருக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த மங்கலம் அருகில் நொய்யல் ஆற்றில் நல்லம்மன் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை கொங்கு சோழர்கள் காலத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தடுப்பணை ஆகும். இந்த அணை கட்டும் போது, அணை நடுவில் உடைந்து கொண்டே இருந்த காரணத்தால் உடையும் பகுதியில் நல்லம்மன் என்ற சிறுமி உயிர் தியாகம் செய்ததை அடுத்து அந்த அணை கட்டப்பட்டு வலுவாக இருப்பதாகவும், இதனால் நல்லம்மனுக்கு வழித்தோன்றல்கள் ஆண்டுக்கு ஒரு முறை பொங்கல் வைத்து படையல் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் இன்று நொய்யல் ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அணை நடுவிலுள்ள நல்லம்மன் கோவில் முழுமையாக மூழ்கி இருக்கிறது. இதனால் இந்த ஆண்டு பொங்கல் விழாவை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கோவில் விழா குழுவினர் ஆற்றங்கரையில் பொங்கல் வழிபாடு நடத்த முடிவு செய்தனர். நல்லம்மன் தடுப்பணைக்கு அருகில் செல்ல முடியாத நிலையில் வெள்ளம் தடுத்தபோதும் ஆற்றங்கரையில் பச்சை குடிசை அமைத்து நல்லம்மனுக்கு பொங்கல் வைத்து படையல் வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர். 

    • 4 நாட்களில் குளம் முழுமையாக நிரம்பியது.
    • மாணிக்காபுரம் குளத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே நொய்யல் ஆற்றின் மூலம் நீர் நிரம்பும் வகையில் சுமார் 320 ஏக்கர் பரப்பில் 16 அடிக்கு தண்ணீர் தேங்கும் வகையில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கத்தாங்கன்னி குளம் அமைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுக்கு முன் பொதுப் பணித்துறை சார்பில் குளம் முழுவதும் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த பருவ மழையினால், நொய்யல் ஆற்றின் மூலம் நீர் நிரம்பும் வகையில் அமைந்துள்ள கத்தாங்கன்னி குளத்துக்கு பொதுப்பணித்துறையினர் நொய்யல் ஆற்று நீரைத் திறந்து விட்டனர்.

    4 நாட்களில் குளம் முழுமையாக நிரம்பியது. இதனை அடுத்து பாசனத்துக்கு திறந்து விட்டது போக மீதம் சுமார் 3 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது.இந்நிலையில் கடந்த கோடையின் போது குளம் வற்றும் நிலைக்கு சென்றது‌. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு காவிரிக்கு சென்றது.

    நொய்யலில் செல்லும் மழை நீரை குளத்துக்கு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து கத்தாங்கன்னி தடுப்பணையில் இருந்து வெள்ள நீர் கடந்த வெள்ளி அன்று குளத்துக்கு திறந்து விடப்பட்டது. ஒரு அடிக்கு மட்டுமே நீர் இருந்த கத்தாங்கன்னி குளத்துக்கு கடந்த சில நாட்களாக நொய்யல் வெள்ள நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக குளத்தில் சுமார் 7அடிக்கு மேல் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    இதே போல் நொய்யல் ஆற்றின் வடகரையில் ஊத்துக்குளி அருகே உள்ள அணைப்பாளையத்தில் 12 அடிக்கு தண்ணீர் தேங்கும் வகையில் 56 ஏக்கர் பரப்பளவில் அணைப்பாளையம் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தினை அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து சீமை கருவேல மரங்களை அகற்றி கரைகளை பலப்படுத்தி வைத்திருந்தனர்‌. தற்போது இந்த குளத்துக்கும் நொய்யல் ஆற்றில் இருந்து வெள்ள நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது குளத்தில் 2 அடிக்கு தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    குளத்துக்கு நீர் வரும் பாதையில் ஆகாயத்தாமரை மற்றும் திருப்பூர் நகரின் பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்து கொண்டதால்,தண்ணீர் வாய்க்கால் உபரி போக்கி வழியாக, குளத்துக்கு திறந்து விடப்பட்ட நீரில் பெரும் பகுதி மீண்டும் நொய்யலுக்கே செல்வதால் குளத்துக்கு நீர் வரத்து குறைவாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். குப்பைகளை அகற்றி குளம் முழுமையாக நிரம்ப அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் மாணிக்காபுரம் குளத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் வந்தால் 4 நாட்களில், ஆற்றின் மூலம் நீர் பெறும் குளங்கள் அனைத்தும் நிரம்பும். அதே நேரத்தில் நொய்யலில் வெள்ளம் வரும்போது அதை பயன்படுத்தி கடந்த காலங்களில் சாய நீரை ஆற்றில் திறந்து விட்ட சம்பவங்களும் நடைபெற்றதால்,மாசுகட்டுப்பாட்டு துறையினர் சாய கழிவு நீர் நொய்யலில் திறந்து விடாமல் இருப்பதை உறுதி செய்ய தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு குளங்கள் நிறைய உதவி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திடீர் மழை வெள்ளத்தால் அணைப்பாளையம் தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
    • தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை கருணை காட்டினால் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் குளிர் மற்றும் கோடை பருவத்தில் இயல்பான அளவை காட்டிலும் அதிக மழை பெய்துள்ளது.தென்மேற்கு பருவமழை துவங்கியதும், ஜூன் மாதம் பெய்ய வேண்டிய மழை பெய்துள்ளது. அதற்கு பிறகு பருவமழை ஏமாற்றிவிட்டது. கடந்த சில நாட்களாக திடீரென கருமேகம் திரண்டு, மழைக்கான அறிகுறி தென்படுவதும், பலத்த காற்று காரணமாக மழை பொய்த்து போவதுமாக சென்று கொண்டிருக்கிறது.

    மானாவாரி சாகுபடியை துவக்க முடியாமல் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.திருப்பூரின் நிலை இப்படியிருந்தாலும் கோவை மாவட்ட பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால், நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 3நாட்களுக்கு முன் சித்திரைச்சாவடி பகுதிகளை உற்சாகத்துடன் கடந்து வந்த புது வெள்ளம், திருப்பூரை வந்தடைந்தது.திருப்பூர் நகரப்பகுதிக்குள் நுழைந்த மழைநீர்கழிவுநீருடன் கலந்து, கருப்புநிறமாக ஆர்ப்பரித்து பாய்ந்தோடுகிறது. நொய்யல் வெள்ளத்தால் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை, திருப்பூர் அணைமேடு, அணைக்காடு தடுப்பணைகளில், வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடியது. திடீர் மழை வெள்ளத்தால் அணைப்பாளையம் தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    திருப்பூர் மாநகருக்குள் நுழைந்த மழை வெள்ளத்தை பார்க்க ஆர்வமாக சென்று பொதுமக்கள் பார்வையிட்டனர். ஆனால் கருப்பு நிறத்தில் தண்ணீர் பாய்ந்தோடியதால் மக்கள் மகிழ்ச்சியில்லாமல் பார்த்து திரும்பினர்.மதியத்திற்கு பின் நொய்யலில் பாய்ந்தோடிய வெள்ளம் தெளிந்த நிலையில் இருந்தது. கருப்பு நிறம் மாறி மழை வெள்ளமாக பாய்ந்தோடியது.இருப்பினும், நொய்யல் ஆற்றில் தேங்கிய சாக்கடை கழிவுகள் அடித்துச்செல்லப்படுகிறது. அடுத்து புது வெள்ளம் பாய்ந்து வந்தால் அருகே உள்ள குளங்களுக்கு தண்ணீர் எடுக்கலாம் என தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    நொய்யல் ஆறு மாவட்டத்தில் நுழையும், சாமளாபுரம் பகுதிகளில் ஆகாயத்தாமரை அதிகம் படர்ந்துள்ளது. ஆற்றின் ஒரு அங்குலம் கூட கண்ணில் தெரியாதபடி ஆகாயத்தாமரை அடர்த்தியாக ஆக்கிரமித்துள்ளது. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரை, தண்ணீரில் அடித்துவரப்பட்டது. அவ்வாறு, அடித்துவரப்பட்ட ஆகாயத்தாமரை அக்ரஹாரப்புதூர் பாலத்தை முழுமையாக அடைத்துவிட்டது.

    தண்ணீர் செல்லும் குழாய்கள் முழுமையாக அடைத்ததால், தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. சூலூர் மற்றும் அவிநாசி ஒன்றிய பகுதிகளை இணைக்கும் பாலத்தில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகாயத்தாமரையை அகற்றாவிட்டால், அந்த ரோட்டை யாருமே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தண்ணீர் குறைந்ததும், பொக்லைன் மூலமாக ஆகாயத்தாமரையை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள, தடுப்பணைகள் நிரம்பி வழிந்தன. மங்கலம் நல்லம்மன் தடுப்பணையில், புது வெள்ளம் பாய்ந்து ஆர்ப்பரித்து சென்றது.மழை வெள்ளப்பெருக்கால், அணையில் இருந்து வழிந்தோடிய தண்ணீரில் வெண்ணிற நுரை ஏற்பட்டது. தண்ணீரின் வேகத்துக்கு ஏற்ப நுரை பொங்கி பரவியதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.கோவை மாவட்ட கிழக்கு பகுதியில், சூலூர் தாலுகா பகுதிகளில் ரசாயனங்கள் ஆற்றில் கலப்பதால் இத்தகைய சீர்கேடு ஏற்படுகிறது.ஆற்றில் ஆபத்தான கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    திருப்பூர் பசுமை ஆர்வலர்களின் முயற்சியால், மாசுபட்டிருந்த நொய்யல் ஆறு மீட்டெடுக்கப்பட்டது. மாநகராட்சி மற்றும் தன்னார்வலர் முயற்சியால், ஆண்டு தோறும் ஆற்றை தூர்வாரி பருவமழைக்கு முன்னதாக, 'பளிச்'சென மாற்றிவிடுவார்கள்.இந்தாண்டு பருவமழையும் வந்துவிட்டது.கோடை மழையே போதும் போதும் என்ற அளவுக்கு வாரி வழங்கி சென்றுள்ளது. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை கருணை காட்டினால் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

    திருப்பூரை சுற்றிலும் உள்ள குளம், குட்டைகளை நிரப்பிவிடலாம்.இருப்பினும் இந்தாண்டு திருப்பூர் நகரப்பகுதியில் நொய்யல் ஆறு தூர்வாரி சுத்தப்படுத்தாமல், புதர்மண்டி காணப்படுகிறது. சில இடங்கள்நொய்யல் ஆறா, சோலையா என்று கேட்கும் அளவுக்கு புதர்மண்டி காணப்படுகிறது.மழை வெள்ளம் தடையின்றி செல்ல ஏதுவாக, நகரப்பகுதியில் நொய்யல் ஆற்றை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    திருப்பூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 300-க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகள் கோவை, திருப்பூர் மற்றும் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.சில பண்ணைகளில் இடநெருக்கடி மற்றும் நோயின் காரணமாக அடிக்கடி கறிக்கோழிகள் இறப்பது வாடிக்கையாக உள்ளன. இவ்வாறு இறக்கும் கோழிகளை பண்ணை உரிமையாளர்கள் சிலர் அருகில் உள்ள சிறு தடுப்பணைகள், பி.ஏ.பி., பிரதான வாய்க்கால் மற்றும் ரோட்டோரங்களில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக கொட்டி செல்கின்றனர்.

    இது குறித்து வட்டார சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-

    பண்ணைகளில் இறக்கும் கோழிகள் மற்றும் கோழி கழிவுகளை ஆழமாக குழி தோண்டி புதைத்து அதன் மீது பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். இதனை விடுத்து இறந்த கோழிகளை ரோட்டோரம் கொட்டுவது, குடியிருப்பு பகுதிகளில் வீசி எறிவது, ஓட்டல், தள்ளுவண்டி கடைக்காரர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வது போன்றவை சட்ட விரோதமான செயல். இதனை செய்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×