search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pongal Worship"

    • கிராம மக்களிடம் அன்பாக பழகிய அவர் கிராமத்திலுள்ள குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்துள்ளார்.
    • அம்மனின் வடிவமாகக் கருதிய கிராம மக்கள் அந்த பெண்ணிற்கு எட்டிமரத்தடியிலேயே சிலை வைத்து கோவில் கட்டினர்.

    வாழப்பாடி:

    கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஏ.குமாரபாளையம் மெட்டுக்கல் கிராமம் வழியாக நிறைமாத கர்ப்பிணியான மலைவாழ் லம்பாடி இனப்பெண் ஒருவர் வந்துள்ளார். சொந்த கிராமத்திற்கு செல்ல முடியாத அவர் மெட்டுக்கல் மற்றும் குமாரபாளையம் கிராம எல்லையில் சாலையோரத்தில் இருந்த எட்டி மரத்தடியில் தங்கியுள்ளார்.

    கிராம மக்களிடம் அன்பாக பழகிய அவர் கிராமத்திலுள்ள குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்துள்ளார். சில தினங்களில் அந்த மரத்தடியிலேயே அழகான குழந்தையை பெற்றெடுத்த அவரும் குழந்தையும் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளனர். இவரை அம்மனின் வடிவமாகக் கருதிய கிராம மக்கள் அந்த பெண்ணிற்கு எட்டிமரத்தடியிலேயே சிலை வைத்து கோவில் கட்டினர். இச்சிலைக்கு அருகில் முறுக்கு மீசை முனியப்பன் சாமியையும் பிரதிஷ்டை செய்து எட்டிமரத்து முனியப்பன், லம்பாடி அம்மன் கோவில் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர்.

    குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் குழந்தையுடன் சென்று லம்பாடி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டால் குழந்தைகளின் அழுகையை அம்மன் கட்டுப்படுத்தி நோய்நொடி வராமல் பாதுகாப்பதாக இப்பகுதி மக்களிடையே நம்பிக்கை தொடர்ந்து வருகிறது. இதன்படி ஏ.குமாரபாளையம் மெட்டுக்கல் கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் குழந்தையை அம்மன் சன்னதியில் படுக்க வைத்து குழந்தைப் பொங்கல் வைத்து நேற்று சிறப்பு பூஜை, வழிபாடு நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    • பொங்கல் வழிபாடு கோவில் வளாகத்தில் நடத்தப்பட்டது.
    • மண் பானைகள் மற்றும் வெண்கல பானைகளில் பொங்கலிட்டு வழிபட்டு நேர்த்திகடன் செலுத்தினர்.

    குமரி மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படும் பிரசித்தி பெற்ற கோவிலான கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பத்தாம் நாள் பொங்கல் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த பொங்கல் வழிபாட்டில் தூக்கநேர்ச்சை நடத்திய பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வேண்டி பொங்கலிட்டு வழிபடுவது சிறப்பம்சம் ஆகும். அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் வழிபாடு நேற்று கோவில் வளாகத்தில் நடத்தப்பட்டது. காலை 10.15 மணிக்கு பண்டார அடுப்பில் கோவில் தந்திரி கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன் போற்றி தீ மூட்டி பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைத்தார்.

    அதைதொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் கோவிலை சுற்றியுள்ள இடங்களில் மண் பானைகள் மற்றும் வெண்கல பானைகளில் பொங்கலிட்டு வழிபட்டு நேர்த்திகடன் செலுத்தினர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • ஆடு, கோழி பலியிட்டு வணங்கினர்
    • தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த அடியத்தூரில் காணும் பொங்கல் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் காலையில் கொடியேற்றப்பட்டது.

    கன்னிப் பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து, ஆடு, கோழி போன்றவற்றை பலியிட்டு அம்மனை வணங்கினர். மேலும் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம், தீச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    • மேலூர் அருகே கோவில் திருவிழாவில் 1008 பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
    • மக்கள் நலனுக்காகவும், விவசாயம் செழிக்கவும் இந்த வழிபாடு நடப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    மேலூர்

    மேலூர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது சூரக்குண்டு. இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா நடைபெற்றது. இதில் பெரிய சூரக்குண்டில் இருந்து1008 பெண்கள் கிராம மந்தையில் இருந்து தலையில் பொங்கல் பானையுடன் ஊர்வலமாக சின்ன அடக்கி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சின்ன அடக்கி, பெரிய அடக்கி மற்றும் ஆண்டி அரசன் ஆகிய தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இவ்வாறு செய்வதால் பாரம்பரியம் பின்பற்றப்படுவதாகவும் மக்கள் நலனுக்காகவும் விவசாயம் செழிக்கவும் பொங்கல் வழிபாட்டை ஒவ்வொரு ஆண்டும் செய்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
    • ஆடி மாதம் பொங்கல் வைப்பது வழக்கம்

    போளூர்:

    போளூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராம தேவதையான துன்ப நாச்சியம்மனுக்கு ஆண்டு தோறும் போளூர் மக்கள் ஆடி மாதம் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.

    போளூரிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று பொங்கலிட்டு வழிபட்டனர்.

    விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி பண்ணையார் கிருஷ்ணமூர்த்தி, என் கே.பாபு, பார்த்திபன், பழனி பன்னீர்செல்வம் போன்றவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிபடுகின்றனர்.
    • சில பக்தர்கள் நேர்த்திக்க டனாக பொம்மை உரு வங்களை தலை மீது சுமந்து கொண்டு கோயிலை 3 முறை வலம் வந்தனர்.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிபடுகின்றனர்.

    நேற்று இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. கிச்சிப்பாளையம் நடராஜர் பஜனை மடத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க சக்தி காளியம்மனை கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. அப்போது, அம்மன் உற்சவ மூர்த்திகளை பூசாரிகள் ஸ்ரீதர், சந்தோஷ்குமார் ஆகியோர் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    சில பக்தர்கள் நேர்த்திக்க டனாக பொம்மை உரு வங்களை தலை மீது சுமந்து கொண்டு கோயிலை 3 முறை வலம் வந்தனர். கண் நோய் வந்து குணமானவர்கள் நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பொன்னாலோ அல்லது வெள்ளியாலோ தகடுகளாலோ கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு சாத்து கின்றனர்.

    நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு குணமாகிய பின்பு நோயின் காரணமாக எந்த பகுதி பாதிக்கப்பட்டதோ அதே போன்ற உருவ பொம்மையை காணிக்கையாக அளிக்கின்றனர். பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட குறையோ அல்லது நோயோ நீங்கிட வேண்டும் என்று வேண்டி குங்குமம் கலந்த உப்பை பலிபீடத்தின் மீது போட்டு நீர் ஊற்றுகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கடந்த சில நாட்களாகவே ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகிறர்கள். நாளை தொடங்கி 3 நாட்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. திருவிழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்த வண்ணம் உள்ளனர்.

    விழாவில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வார்கள் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல், குகை மாரியம்மன், காளியம்மன், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரி யம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளி யம்மன், களரம்பட்டி புத்து மாரியம்மன் உள்பட அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் ஆடித்திருவிழாவை யொட்டி நேற்று இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில், அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். செவ்வாய்ப்பேட்டை மாநியம்மன் கோவிலில் இன்று பக்தர்கள் அலகு குத்திவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் கோவில்களில் ஆடிப்ப ண்டிகை கோலாகலமாக நடைபெறுவதால் சேலம் மாநகரமே விழக்கோலம் பூண்டுள்ளது.சேலத்தில் வசிப்பவர்கள் வெளி இடங்களில் உள்ள தங்கள் உறவினர்களை அழைத்து விருந்து உபசரித்து மகிழ்கின்றனர். குழந்தைகள் சகிதமாக அவர்கள் குடும்பம் குடும்பமாக கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள். 

    • கொங்கு சோழர்கள் காலத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தடுப்பணை ஆகும்.
    • அணை நடுவிலுள்ள நல்லம்மன் கோவில் முழுமையாக மூழ்கி இருக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த மங்கலம் அருகில் நொய்யல் ஆற்றில் நல்லம்மன் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை கொங்கு சோழர்கள் காலத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தடுப்பணை ஆகும். இந்த அணை கட்டும் போது, அணை நடுவில் உடைந்து கொண்டே இருந்த காரணத்தால் உடையும் பகுதியில் நல்லம்மன் என்ற சிறுமி உயிர் தியாகம் செய்ததை அடுத்து அந்த அணை கட்டப்பட்டு வலுவாக இருப்பதாகவும், இதனால் நல்லம்மனுக்கு வழித்தோன்றல்கள் ஆண்டுக்கு ஒரு முறை பொங்கல் வைத்து படையல் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் இன்று நொய்யல் ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அணை நடுவிலுள்ள நல்லம்மன் கோவில் முழுமையாக மூழ்கி இருக்கிறது. இதனால் இந்த ஆண்டு பொங்கல் விழாவை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கோவில் விழா குழுவினர் ஆற்றங்கரையில் பொங்கல் வழிபாடு நடத்த முடிவு செய்தனர். நல்லம்மன் தடுப்பணைக்கு அருகில் செல்ல முடியாத நிலையில் வெள்ளம் தடுத்தபோதும் ஆற்றங்கரையில் பச்சை குடிசை அமைத்து நல்லம்மனுக்கு பொங்கல் வைத்து படையல் வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர். 

    பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
    கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் திருவல்லாவை அடுத்த நீரேற்றுபுரத்தில் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் இந்த கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது ஆகும். இந்த கோவில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது. அம்மனின் அருளைப்பெற பெண்கள் பலர் இருமுடி கட்டி விரதம் இருந்து சக்குளத்துகாவு அம்மனை தரிசிக்க வருகிறார்கள்.

    இந்த கோவிலில் கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தினத்தில் தேவியின் இஷ்ட நிவேத்யமான பொங்கல் படைத்து வழிபாடு நடத்துவது சிறப்பாகும். பிரசித்திப்பெற்ற இந்த பொங்கல் வழிபாடு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவை கேரள கலாசார துறை மந்திரி சஜி செரியான் தொடங்கி வைக்கிறார்

    கோவில் முன்புறம் வைக்கப்பட்டுள்ள அடுப்பில் முக்கிய முதன்மை பூசாரி ராதாகிருஷ்ணன் திருமேனி காலை 10.30 மணிக்கு சுப முகூர்த்த வேளையில் தீயை மூட்டி தொடங்கி வைப்பார். அப்போது கருடன் கோவிலை வட்டமடித்து செல்லும். அதை தொடர்ந்து லட்சணக்கான பெண்கள் மைதானங்களிலும், சாலையின் இரு புறங்களிலும் புதிய மண் பானைகளில் ஒரே நேரத்தில தீயை மூட்டி பொங்கலிடுவார்கள்.

    பிற்பகல் 1 மணிக்கு மற்ற கீழ் சாந்தி மார் தட்டங்களை எடுத்துச் சென்று நிவேத்ய தீர்த்தம் தெளிப்பார்கள். பொங்கல் விழாவை முன்னிட்டு, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலுக்கு கூடுதலாக அரசுபஸ்கள் இயக்கப்படும். இந்த விழாவில் கோவில் முக்கிய காரிய தரிசி மணிக்குட்டன் திருமேனி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
    ×