search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நொய்யல் ஆற்று தண்ணீரால் நிரம்பும் குளங்கள் -  விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    கோப்புபடம். 

    நொய்யல் ஆற்று தண்ணீரால் நிரம்பும் குளங்கள் - விவசாயிகள் மகிழ்ச்சி

    • 4 நாட்களில் குளம் முழுமையாக நிரம்பியது.
    • மாணிக்காபுரம் குளத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே நொய்யல் ஆற்றின் மூலம் நீர் நிரம்பும் வகையில் சுமார் 320 ஏக்கர் பரப்பில் 16 அடிக்கு தண்ணீர் தேங்கும் வகையில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கத்தாங்கன்னி குளம் அமைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுக்கு முன் பொதுப் பணித்துறை சார்பில் குளம் முழுவதும் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த பருவ மழையினால், நொய்யல் ஆற்றின் மூலம் நீர் நிரம்பும் வகையில் அமைந்துள்ள கத்தாங்கன்னி குளத்துக்கு பொதுப்பணித்துறையினர் நொய்யல் ஆற்று நீரைத் திறந்து விட்டனர்.

    4 நாட்களில் குளம் முழுமையாக நிரம்பியது. இதனை அடுத்து பாசனத்துக்கு திறந்து விட்டது போக மீதம் சுமார் 3 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது.இந்நிலையில் கடந்த கோடையின் போது குளம் வற்றும் நிலைக்கு சென்றது‌. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு காவிரிக்கு சென்றது.

    நொய்யலில் செல்லும் மழை நீரை குளத்துக்கு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து கத்தாங்கன்னி தடுப்பணையில் இருந்து வெள்ள நீர் கடந்த வெள்ளி அன்று குளத்துக்கு திறந்து விடப்பட்டது. ஒரு அடிக்கு மட்டுமே நீர் இருந்த கத்தாங்கன்னி குளத்துக்கு கடந்த சில நாட்களாக நொய்யல் வெள்ள நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக குளத்தில் சுமார் 7அடிக்கு மேல் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    இதே போல் நொய்யல் ஆற்றின் வடகரையில் ஊத்துக்குளி அருகே உள்ள அணைப்பாளையத்தில் 12 அடிக்கு தண்ணீர் தேங்கும் வகையில் 56 ஏக்கர் பரப்பளவில் அணைப்பாளையம் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தினை அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து சீமை கருவேல மரங்களை அகற்றி கரைகளை பலப்படுத்தி வைத்திருந்தனர்‌. தற்போது இந்த குளத்துக்கும் நொய்யல் ஆற்றில் இருந்து வெள்ள நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது குளத்தில் 2 அடிக்கு தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    குளத்துக்கு நீர் வரும் பாதையில் ஆகாயத்தாமரை மற்றும் திருப்பூர் நகரின் பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்து கொண்டதால்,தண்ணீர் வாய்க்கால் உபரி போக்கி வழியாக, குளத்துக்கு திறந்து விடப்பட்ட நீரில் பெரும் பகுதி மீண்டும் நொய்யலுக்கே செல்வதால் குளத்துக்கு நீர் வரத்து குறைவாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். குப்பைகளை அகற்றி குளம் முழுமையாக நிரம்ப அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் மாணிக்காபுரம் குளத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் வந்தால் 4 நாட்களில், ஆற்றின் மூலம் நீர் பெறும் குளங்கள் அனைத்தும் நிரம்பும். அதே நேரத்தில் நொய்யலில் வெள்ளம் வரும்போது அதை பயன்படுத்தி கடந்த காலங்களில் சாய நீரை ஆற்றில் திறந்து விட்ட சம்பவங்களும் நடைபெற்றதால்,மாசுகட்டுப்பாட்டு துறையினர் சாய கழிவு நீர் நொய்யலில் திறந்து விடாமல் இருப்பதை உறுதி செய்ய தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு குளங்கள் நிறைய உதவி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×