search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள்"

    • விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
    • காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து நிஜாமுதீன் சம்பர் க்ராந்தி விரைவு ரெயிலில் நேற்று அதிகாலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    இவர்கள் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரியில் கர்நாடக அரசு மாதா மாதம் தண்ணீர் திறக்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்.

    • வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
    • விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சம் அடைந்து வருகின்றனர். நேற்று முன் தினம் ஈரோடு மாவட்டத்தில் தமிழகத்தில் இதுவரை பதிவாகாத 109 டிகிரி வெயில் பதிவாகி புதிய உச்சத்தை தொட்டது. வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான தாளவாடி மலை பகுதியில் நேற்று மதியம் தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான இக்கலூர், சிக்கள்ளி, நெய்தாள புரம் திகினாரை, கும்டாபுரம், தொட்டகாஜனூர் உள்ளிட்ட கிராமங்களில் 20 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது.

    சிக்கள்ளி பகுதியில் விவசாய தோட்டத்தில் மழைநீர் தேங்கி அங்கு சிறு ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதே போல் தாளவாடி அருகே பனகள்ளி கிராமத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. பலத்த சூறைக்காற்று வீசியதில் பனஹள்ளி கிராம த்தில் உள்ள ஆசீப் (வயது 35), பிரகாஷ் (45), சிக்கராஜ் (48), வரதராஜ் (51), திகனாரை ஜோரகாடு சித்தராஜ் (40) என 5-க்கும் மேற்ட்ட விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே போல் பனஹள்ளியில் இருந்து பையணாபுரம் செல்லும் சாலையில் உள்ள புளியமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டனர்.

    சுமார் 3 மணிநேரத்திக்கு பிறகு நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் போக்குவரத்து சீரானது. சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி பகுதியில் மழை பெய்த அதே நேரத்தில் ஈரோடு மாநகர பகுதி பிறப்பகுதியில் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் பதிவானது.

    மாவட்டத்தில் ஒரு புறம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மற்றொரு புறம் தாளவாடி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஒரே நாளில் இரு வேறுபட்ட காலநிலை மாற்றத்தால் ஒரு பகுதி மக்கள் கவலையும், இன்னொரு பகுதி மக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர். 

    • 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த தோராயமாக 10,000 விவசாய உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
    • பரிசோதனைகளின் மூலம் மண்ணில் உள்ள அங்கக கரிமத்தின் அளவு, பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துகள், மண்ணின் பண்புகள் உள்ளிட்டவை பிரித்து அறியப்படும்.

    கோவை பூலுவப்பட்டியில் ஈஷா அவுட்ரீச் சார்பில் அதிநவீன மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் இன்று (16/04/24) திறக்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூடத்தின் மூலம் ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த தோராயமாக 10,000 விவசாய உறுப்பினர்கள் இலவசமாக பயனடைய உள்ளனர்.

    விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் மண்ணின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பெரும் பொருட்செலவில் இந்த ஆய்வுக்கூடம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதிநவீன வசதிகள் மற்றும் கருவிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மண் பரிசோதனை ஆய்வு கூடத்தின் மூலம் விவசாயிகளின் நிலத்தில் உள்ள மண் பரிசோதனை செய்யப்பட்டு தேவையான பரிந்துரைகள் துல்லியமாக வழங்கப்பட உள்ளது.

    இந்த ஆய்வுக்கூடத்தில் பேரூட்ட, நுண்ணூட்ட சத்துக்கள் குறித்து அறியும் முழுமையான தானியங்கி கருவிகள், மண்ணின் அங்கக கரிம அளவை அறியும் கருவிகள் மற்றும் பயிற்சி பெற்ற ஆய்வக தொழிற்நுட்ப வல்லுனர் குழுக்களோடு மிக சிறப்பான வகையில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த மண் பரிசோதனை சேவை முதற்கட்டமாக ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த தோராயமாக 10,000 விவசாய உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    இந்த சேவையை பெறும் விவசாயிகளின் நிலத்திற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சார்ந்த பிரதிநிதிகள் நேரடியாக செல்வார்கள். அங்கு நிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு கூடத்திற்கு அனுப்புவார்கள். பிறகு விவசாயிகளின் நிலத்தில் இருந்து பெறப்பட்ட மண், ஆய்வுக்கூடத்தில் பலகட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.


    இந்த பரிசோதனைகளின் மூலம் மண்ணில் உள்ள அங்கக கரிமத்தின் அளவு, பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துகள், மண்ணின் பண்புகள் உள்ளிட்டவை பிரித்து அறியப்படும். இந்த பரிசோதனையின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு நிபுணத்துவம் வாய்ந்த வேளாண் வல்லுநர் குழு பயிர் ஆலோசனை மற்றும் உரப் பரிந்துரைகளை வழங்கும். அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு தொடர் வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    இந்த இலவச மண் பரிசோதனைகள் மற்றும் பரிந்துரைகள், விவசாயிகள் தங்கள் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு மற்றும் மண்ணின் அங்கக வளம் பற்றி அறிந்து கொள்ளவும், பயிர்வாரியான ஊட்டச்சத்து தேவை மற்றும் மண்ணின் தன்மை முதலியவற்றை கருத்தில் கொண்டு உர மேலாண்மை செய்திடவும், பயிரின் உற்பத்தியை அதிகரித்து இலாபத்தை பெருக்கவும், மண் வளத்தை மேம்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பெருமளவில் உதவி புரியும்.

    மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகளில் ஈடுபடும் 33 "மண் காப்போம்" இருசக்கர வாகனங்களின் பயணம் ஆதியோகி முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. இவ்வாகனங்கள் தமிழகம் மற்றும் கர்நாடகா முழுவதிலும் சென்று உழவன் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்தி, தொலைதூர கிராமங்கள் மற்றும் பண்ணை நிலங்களுக்கு விரைவாக சென்று சேவையாற்ற முடியும். மேலும் விவசாயிகளை விரைவில் அணுகவும், புதிய சந்தைகளை திறம்பட கண்டறியவும் இந்த வாகனங்கள் உதவும் என்பதால் இது ஒரு முக்கிய முன்னெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

    • குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது.
    • கோடை மழை பெய்து வருவதையடுத்து பொது மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. இதனால் பொது மக்கள் குழந்தைகள் தவிப்பிற்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. ஆனால் நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் தொடர்ந்து வெயில் அடித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. இன்று அதிகாலையில் நாகர்கோவிலில் லேசான சாரல் மழை பெய்தது. அதன் பிறகு காலை 9 மணி முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாகவே காணப்பட்டது. அதன் பிறகு மழை பெய்ய தொடங்கியது. விட்டு விட்டு மழை பெய்தது. இடி மின்னலுடன் கொட்டிய மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது.

    கொட்டாரம், சாமிதோப்பு, சுசீந்திரம், குளச்சல், குழித்துறை, தக்கலை, மார்த்தாண்டம், தடிக்காரன்கோணம், பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. தக்கலையில் அதிகபட்சமாக 6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கோடை மழை பெய்து வருவதையடுத்து பொது மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பேச்சிபாறை அணையை பொருத்தமட்டில் அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.16 அடியாக உள்ளது. அணைக்கு 122 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.75 அடியாக உள்ளது.

    அணைக்கு 20 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 21 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • மனிதர்களையும் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
    • அரசியல் கட்சிகளை புறக்கணிக்கும் வகையில் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறோம்.

    மேட்டுப்பாளையம்:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு சமூக அமைப்புகள் பிரசாரம் செய்து வருகின்றன. ஆனால் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகள், மான், சிறுத்தை, மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை தின்று சேதப்படுத்துவதுடன், மனிதர்களையும் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வன அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் அரசியல் கட்சிகளை புறக்கணிக்கும் வகையில் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அணைக்கட்டும் திட்டம் என்பதால் 750க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.
    • தமிழ்நாட்டில் நிர்வாகம் மிக மோசமாக நடைபெற்று வருவதற்கு முன்னுதாரணமாக உள்ளது.

    தாராபுரம்:

    நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்து 20 ஆண்டுகள் ஆகிய பின்பும் இழப்பீடு வழங்காததை கண்டித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பொன்னிவாடி கிராமம், நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பு செய்து தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன், அமைப்பு செயலாளர் கோனேரிப்பட்டி.பாலு ஆகியோர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு கடந்த 1997ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் நல்லதங்காள் ஓடைக்கு குறுக்கே நல்ல தங்காள் அணையை கட்டியது. அணைக்கட்டும் திட்டம் என்பதால் 750க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது, விவசாயிகளும் முழு சம்மதத்தோடு நிலத்தை கொடுத்தார்கள்.

    இழப்பீடு மிக குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டதால், உரிமையியல் நீதிமன்றத்தில் இழப்பீட்டு தொகையை அதிகரிக்க கோரி வழக்கு தாக்கல் செய்து அந்த கோரிக்கையும் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இழப்பீட்டு தொகை இன்று வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்காமல் நீர்வள ஆதாரத்துறை மிகப்பெரிய துரோகத்தை செய்து வருகிறது.

    20 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தராமல் ஒரு நிர்வாகம் இயங்கி வருவது என்பது, தமிழ்நாட்டில் நிர்வாகம் மிக மோசமாக நடைபெற்று வருவதற்கு முன்னுதாரணமாக உள்ளது.

    எனவே நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இன்று 1-4-2024 முதல் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்து தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 35 நாட்களுக்கு மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • விவசாயிகள், பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்து உப்பாறு அணை உள்ளது. இந்த அணையை நம்பி 6500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் வந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து உபரி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கூறி கடந்த ஒரு வருடமாக பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.

    35 நாட்களுக்கு மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயத்திற்கு கூட தண்ணீர் வேண்டாம். குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படாததை கண்டித்து அணை பகுதியை சேர்ந்த விவசாய கிராமங்களான கெத்தல் ரேவ், தாசம்பட்டி, பொன்னாளிபாளையம், வண்ணாம்பட்டி, தேர் பாதை, தொண்டாமுத்தூர், ரங்கம் பாளையம், நடுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.அரசியல்வாதிகள் யாரும் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஹோலி பல வண்ணங்களால் ஆன பண்டிகை. ஆனால் நம் நாட்டில் சிலருக்கு சில நிறங்கள் பிடிக்கவில்லை
    • உத்தரபிரதேசத்தில் வினாத்தாள் கசிய விடாமல் அரசு தேர்வு நடப்பது இல்லை

    பாஜக இன்னும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால், இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் அவர்களுக்கு திருமணம் கூட நடக்காது" என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் நேற்று தனது சொந்த கிராமமான சைஃபாயில் தனது கட்சியினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.

    அப்போது பேசிய அவர், "ஹோலி பண்டிகை ஒருவரையொருவர் கொண்டாடுவதற்கும் அரவணைப்பதற்கும் வாய்ப்பளிக்கிறது. அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று நீங்களும் நானும் இந்த சமயத்தில் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

    ஹோலி பல வண்ணங்களால் ஆன பண்டிகை. ஆனால் நம் நாட்டில் சிலருக்கு சில நிறங்கள் பிடிக்கவில்லை, அவர்களுக்கு ஒரே ஒரு நிறம் மட்டும் தான் பிடிக்கும். ஆனால், இந்தியா பலதரப்பட்ட மக்களின் பல்வேறு சித்தாந்தங்களையும், மாறுபட்ட சிந்தனைகளையும் கொண்டிருக்கும் ஒரு ஜனநாயக நாடு என்பதே உண்மை.

    உத்தரபிரதேசத்தில் வினாத்தாள் கசிய விடாமல் அரசு தேர்வு நடப்பது இல்லை. வேலை கொடுக்க வேண்டும் என்றால், இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். ஆனால் உயர்சாதியினருக்கு மட்டுமே அரசு வேலை கொடுக்க விரும்பும் பாஜக அரசு, வேண்டுமென்றே வினாத்தாள்களை கசியவிடுகிறது.

    கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இதுவரை ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாடு எப்படி வளர்ந்த நாடாக மாற முடியும்?

    தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த கட்சிக்கு அதிக பணம் சென்றது என்பது அனைவருக்கும் தெரியும். நன்கொடைகள் என்பது தானாக முன்வந்து அல்லது மக்களுக்கு உதவுவதற்காக வழங்கப்படுகின்றன. ஆனால் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்றவற்றின் மூலம் அழுத்தம் கொடுத்து பணத்தை பெறுவது என்பது வழிப்பறியாகவே கருதப்படும். தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜக செய்தது வழிப்பறி தான்.

    பாஜகவுக்கு யாராவது பணம் கொடுத்தால் அது நன்கொடை, வேறு யாருக்காவது கொடுத்தால் அது கருப்பு பணம் என்று மோடி, அமித் ஷா நினைக்கின்றனர். வரும் தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட வேண்டும்" என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

    • உழவர் சந்தைக்கு வெளியே வியாபாரிகளும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
    • நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. நாமக்கல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய காய்கறிகளை அவர்களின் சொந்த வாகனங்களில் கொண்டு வந்து உழவர் சந்தையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இதேப்போல் உழவர் சந்தைக்கு வெளியே வியாபாரிகளும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் விவசாயிகளின் வாகனங்களை வெளியில் நிறுத்தக்கூடாது தங்களுக்கு வியாபாரம் செய்ய சிரமமாக இருப்பதாக கூறி வெளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இருத்தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் உழவர் சந்தை விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென சந்தைக்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாயிகளின் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும், வெளியில் உள்ள வியாபாரிகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் டி.எஸ்.பி. ஆனந்தராஜ் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். 

    • விவசாய பாசனத்திற்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
    • விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    பொன்னேரி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் தலைமையில் நடைபெற்றது. நேர்முக உதவியாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட பொன்னேரி கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    வண்ண மீன் வளர்ப்பு, மீஞ்சூர், பழவேற்காடு, தாங்கல் பெரும்புலம், வெள்ளக்குளம் பள்ளிபாளையம் பகுதி சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆறு ஏரி குளங்களில் விடுவதால் நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், மெரட்டுர் ஏரியில் இருந்து விவசாய பாசனத்திற்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் ரூ.70,000 கோடி கடன்களை தள்ளுபடி செய்தோம்
    • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் நடைபெற்ற ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் சரத் பவார், சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது பேசிய ராகுல்காந்தி, "மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் ரூ.70,000 கோடி கடன்களை தள்ளுபடி செய்தோம். ஆனால் விவசாயிகளின் கடனை பாஜக ஒருபோதும் தள்ளுபடி செய்யவில்லை. பாஜக அரசு ஒரு சில பணக்காரர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. பாஜக அரசால் பணக்காரர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியுமானால், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்களின் கடன்களை ஏன் தள்ளுபடி செய்ய முடியவில்லை.

    விவசாயிகள் தற்போது டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் விவசாயிகளின் குறைகளை தீர்க்க பாஜக அரசுக்கு நேரமில்லை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க பாஜக அரசு தவறி விட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவோம்.

    அதானி 18 சதவீத ஜி.எஸ்.டி செலுத்துகிறார். அதே சமயம் விவசாயிகள் கூட ஜி.எஸ்.டி செலுத்துகின்றனர். ஜி.எஸ்.டி மட்டுமில்லாமல், விவசாயிகள் பல்வேறு வகையான வரிகளால் சிரமப்படுகின்றனர். இது விவசாயிகளின் வருமானத்தை கணிசமாக குறைக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் ஏதேனும் ஒரு வரி மட்டும் செலுத்துவதை உறுதிசெய்வோம். மேலும், ஜிஎஸ்டி வரி வரம்பிலிருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிக்க முயற்சிப்போம்" என்று அவர் தெரிவித்தார்.

    • மிளகாய் தோட்டங்களுக்கு கடுமையான பாதுகாப்பும் போட்டு இருந்தனர்.
    • விவசாயிகள் போலீசாரையும் கற்களை வீசி தாக்க தொடங்கினர்.

    பெங்களூர்:

    கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் விவசாயிகள் மிளகாய் பயிரிட்டுள்ளனர். குறிப்பாக கர்நாடகாவில் விளையும் மிளகாய்க்கு சந்தையில் அதிக வரவேற்பு இருப்பதால் விவசாயிகள் இதில் அதிகம் ஆர்வம் காட்டி வந்தனர். மிளகாய் தோட்டங்களுக்கு கடுமையான பாதுகாப்பும் போட்டு இருந்தனர்.

    விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் மிளகாய்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தனர். இந்த மிளகாய்களை வாங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் திரண்டு வந்தனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் உள்ள மிளகாய் சந்தையில் விவசாயிகள் கூட்டுறவு மையம் இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக மிளகாய் விலை உச்சத்தில் இருந்து வந்தது.


    கடந்த வாரம் 100 கிலோ மிளகாய் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை விற்பனையானது. இந்த நிலையில் நேற்று 100 கிலோ மிளகாய் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரம் வரை மட்டுமே விற்பனையானது. விலை குறைந்ததால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் சந்தை பகுதியில் உள்ள விவசாய சேவா கூட்டுறவு மையத்துக்குள் நுழைந்து அங்குள்ளள இருக்கைகளை அடித்து நொறுக்கி தாக்கினர்.

    மேலும் அலுவலகத்துக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சங்கத்தின் தலைவர் கார் உள்பட 5 கார்களை தீவைத்து எரித்தனர். மேலும் 10 இரு சக்கர வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் நடுரோட்டில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இது பற்றி தெரியவந்ததும், தீயணைக்க வந்த வாகனங்களையும் விவசாயிகள் தாக்கினர். இதனால் மிளகாய் சந்தை பகுதி போர்களமாக மாறியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு ஏராளமான போலீசார் விரைந்து வந்தனர். விவசாயிகள் போலீசாரையும் கற்களை வீசி தாக்க தொடங்கினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. போராட்டகாரரர்களை விட குறைந்த அளவே போலீசார் இருந்ததால் நிலமையை கட்டுக்குள் கொண்டுவர மிகவும் சிரமமடைந்தனர்.

    ×