என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல் கொள்முதல் விலையை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை
- டீசல் மற்றும் கூலி உயர்வு அதிகரித்துள்ளதால் லாபம் இல்லை.
- ஐந்து சதவீதம் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.
திருப்பூர்:
நெல் விவசாயிகள் நலன் கருதி கடந்த ஆண்டு மத்திய அரசு நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு, 72 ரூபாய் உயர்த்தியது. இந்தாண்டு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.இதனால் நடப்பாண்டு கொள்முதல் விலையை 100 ரூபாயாக உயர்த்தியுள்ளது. மாநில அரசின் ஊக்கத்தொகை 75 ரூபாயுடன் சேர்த்து சன்ன ரக நெல்லுக்கு 2,160 ரூபாயும் மோட்டாரக நெல்லுக்கு 2,115 ரூபாயும் கிடைக்கிறது.
இது குறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயல் தலைவர் வெற்றி கூறியதாவது :-
மத்திய அரசு 2014 தேர்தல் அறிக்கையில் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையின்படி உற்பத்தி செலவுடன்50 சதவீதம் உயர்த்தப்படும் என்று அறிவித்தது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். டீசல் மற்றும் கூலி உயர்வு அதிகரித்துள்ளதால் லாபம் இல்லை. குவின்டாலுக்கு100 ரூபாய் உயர்வால் பலன் இல்லை. இது மகிழ்ச்சி அளிக்கவில்லை.
பி.ஏ.பி., பாசன சபை தலைவர் கோபால் கூறுகையில், கொள்முதல் விலை உயர்வு போதாது. நடவு, உழவு, பூச்சி மருந்து, களை எடுப்பு, விதை என அனைத்தும் உயர்ந்துள்ளது. இது பயன் தரக்கூடியதாக இல்லை. ஒரு குவின்டாலுக்கு 3,000 ரூபாய் கொடுத்தால்தான் கட்டுப்படியாகும்.
உழவர் உழைப்பாளர் கட்சி ஒன்றியசெயலாளர் நடராஜ் கூறுகையில்,
இந்த விலை போதாது. ஐந்து சதவீதம் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. ஆனால், உற்பத்தி செலவு தாறுமாறாக உயர்ந்துள்ளது. விவசாயம் அழிவை நோக்கிச் செல்கிறது. அதை காப்பாற்ற வேண்டுமானால் 1,000 ரூபாய் உயர்த்தித் தரவேண்டும். ஒரு குவின்டால் நெல் 3,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.






