search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Impact"

    • இரட்டை அடுக்கு நீட் தேர்வை நடத்தும் முடிவு ஒரு பிழையை மறைப்பதற்காக இன்னொரு பெரும் பிழையை செய்வதற்கு ஒப்பானதாகும்.
    • மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் தான் நீட் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடப்பாண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், முறைகேடுகளைத் தடுப்பதற்காக இரட்டை அடுக்கு நீட் தேர்வை இரு அமைப்புகளின் மூலம் நடத்த மத்திய அரசு திட்டம் வகுத்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இரட்டை அடுக்கு நீட் தேர்வை நடத்தும் முடிவு ஒரு பிழையை மறைப்பதற்காக இன்னொரு பெரும் பிழையை செய்வதற்கு ஒப்பானதாகும்.

    எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5-ஆம் நாள் நடைபெற்றது. அதில் வினாத்தாள் கசிவு தொடங்கி, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது வரை ஏராளமான முறைகேடுகள் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் புதிய நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற பெரும்பான்மையான மாணவர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி வரும் உச்சநீதிமன்றம், வெகுவிரைவில் தீர்ப்பளிக்கவுள்ளது. இத்தகைய சூழலில் தான் இரட்டை அடுக்கு நீட் தேர்வை, இரு தேர்வு அமைப்புகள் மூலம் நடத்துவது பற்றி மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    இந்திய தொழில்நுட்பக் கழகங்களான ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கைக்காக நடத்தபடும் கூட்டு நுழைவுத்தேர்வு போன்று நீட் தேர்வையும் முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு ஆகிய இரு அடுக்குகளில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. முதனிலைத் தேர்வில் பங்கேற்பவர்களில் இருந்து, நாடு முழுவதும் உள்ள மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை விட 4 அல்லது 5 மடங்கு மாணவர்களை தேர்ந்தெடுத்து முதன்மைத் தேர்வு நடத்துவது தான் மத்திய அரசின் திட்டம் ஆகும். இவற்றில் முதனிலைத் தேர்வை ஓர் அமைப்பின் மூலமாகவும், முதன்மைத் தேர்வை இன்னொரு அமைப்பின் மூலமாகவும் நடத்துவது குறித்தும் அரசு ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    மத்திய அரசின் இந்தத் திட்டம் எதிர்பார்க்கும் பயன்களைத் தராது. இரட்டை அடுக்கு நீட் தேர்வை அறிமுகம் செய்வதன் மூலம், நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க முடியாது. மேலும், நீட் தேர்வை இரு அடுக்குகள் கொண்டதாக மாற்றுவதன் மூலம் நீட் தேர்வு மேலும் கடுமையானதாக மாற்றப்படும். அதற்காக மாணவர்கள் கூடுதல் பயிற்சி எடுக்க வேண்டிய நிலை உருவாகும். அதனால், நீட் பயிற்சி வகுப்பு நடத்தும் நிறுவனங்கள் தான் செழிக்குமே தவிர மாணவர்களுக்கு பயன் ஏற்படாது.

    நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி, தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின்படி பார்த்தால், இராஜஸ்தான் மாநிலம் கோட்டா, சிகார், ஹரியானா மாநிலம் ரோட்டக், குஜராத் மாநிலம் ராஜ்கோட், கேரள மாநிலம் கோட்டயம் ஆகிய நகரங்களில் மையங்களில் தேர்வெழுதிய மாணவர்கள் தான் அதிக மதிப்பெண் எடுத்துள்ளனர் என்பதும், அங்குள்ள பயிற்சி மையங்கள் தான் மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்கச் செய்யும் தொழிற்சாலைகளாக செயல்பட்டு வருகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.

    இந்த நகரங்களில் உள்ள மையங்களில் தங்களின் பிள்ளைகளைச் சேர்த்து பயிற்சி பெறச் செய்வதற்காக ஒவ்வொரு பெற்றோரும் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை செலவு செய்கின்றனர். இனி வரும் காலங்களில் நீட் இரட்டை அடுக்கு கொண்டதாக மாற்றப்பட்டால் இன்னும் கூடுதலாக பயிற்சி எடுக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, இதுவரை பயிற்சி பெறாமல், சொந்த முயற்சியில் நீட் தேர்வை எதிர்கொண்டவர்களால் கூட, இனி இரட்டை அடுக்கு நீட்டை பயிற்சி இல்லாமல் எழுத முடியாது. அதனால், அனைத்து மாணவர்களும் நீட் பயிற்சி மையங்களை நோக்கி படையெடுக்க வேண்டியிருக்கும்.

    நீட் தேர்வை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்ப்பதற்கு காரணமே அது கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு எதிரானது என்பதால் தான். கடந்த சில ஆண்டுகளில் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் பின்னணியை ஆய்வு செய்தால், அவர்களில் 85%க்கும் அதிகமானவர்கள் குறைந்தது 2 அல்லது 3 முறை நீட் தேர்வு எழுதியவர்களாக உள்ளனர். எத்தனை முறை மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்களோ, அதை விட அதிக ஆண்டுகள் அவர்களுக்கு நீட் பயிற்சி பெற்றிருக்கின்றனர். இவை எதுவும் ஏழை மாணவர்களால் சாத்தியமாகாது, பயிற்சி இல்லாமல் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவும் முடியாது என்பதால் தான் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் வகையில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. அத்தகைய சமவாய்ப்பை ஏற்படுத்தி தருவதை நோக்கி பயணிக்காமல், இரட்டை அடுக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு வாய்ப்பை முழுமையாக பறிப்பதை நோக்கி பயணிப்பது சமூக அநீதி.

    மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் தான் நீட் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், நீட் அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் இந்த இரு நோக்கங்களையும் நீட் நிறைவேற்றவில்லை. எனவே, நீட் தேர்வை ரத்து செய்வது தான் நிரந்தரத் தீர்வாக இருக்குமே தவிர, ஒரு பிழைக்கு மாற்றாக இன்னொரு பிழை என்பதன் அடிப்படையில், ஓரடுக்கு நீட் தேர்வுக்கு பதிலாக இரட்டை அடுக்கு நீட் தேர்வை அறிமுகம் செய்வது சரியல்ல. எனவே, இந்தத் திட்டத்தை கைவிட்டு நீட் தேர்வை ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • ஆற்றின் கிராம மக்கள் சூழ நின்றுகொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து செய்தி வழங்கிக்கொண்டிருந்தார்
    • கிராம மக்களின் உதவியுடன் அவர் மீண்டு வரும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள பாதிப்புகள் கடுமையாக ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி சுமார் 96 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 5.98 லட்சம் மக்கள் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கைக்கு  திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மாநிலத்தில் பல பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளது.

    இந்நிலையில் ஆற்றின் கிராம மக்கள் சூழ நின்றுகொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைக்காட்சி நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டிருந்த  தொலைக்காட்சி  ரிப்போர்ட்டர் ஒருவர் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

    கேமராவை பார்த்தபடி பேசிக்கொண்டிருக்க்கும் போது ஈரமான மணல் பகுதியால் நிலைதடுமாறி அவர் ஆற்றில் விழுந்தார். சமாளித்துக்கொண்டு நீந்தி வந்த அவரை கிராம மக்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால்  மேலே வர முடியாமல் அவர் திணறினார். கடைசியாக ஒருவழியாக சமாளித்துக்கொண்டு கிராம மக்களின் உதவியுடன் அவர் மீண்டு வரும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

    • ஏற்கனவே வாரத்துக்கு 55 மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 35 சதவீதம் அதிகம் உள்ளது
    • வாரத்துக்கு 55 மணி நேர வேலை வருடத்துக்கு சராசரியாக 8 லட்சம் பேரின் உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைத்துள்ளது

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல ஐடி நிறுவனமான இன்ஸ்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி வயது குறைந்த ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் [ ஒரு நாளைக்கு சுமார் 14 மணி நேரம் வேலை] என்று கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். உடனே இதற்கு பல்வேறு நிறுவனங்களின் முதலாளிகள் மத்தியில் பெரும் ஆதரவு கிளம்பியது.

     

    ஆனால் ஊழியர்களின் உடல்நலன், மனநலன் ஆகியவற்றைக் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஊழியர்களை அடிமைகளைப் போல் நடத்துவதற்கு இது ஒப்பாகும் என்று எதிர்ப்புக்குரல்கள் எழத் தொடங்கின. இந்த விவகாரம் இபப்டியாக புகைந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்தியாவில் கார் வாடகை சர்வீஸ் துறையில் கோலோச்சி வரும் பிரபல ஓலா நிறுவனத்தின் சிஇஓ பாவிஸ் அகர்வால் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஓலா நிறுவன ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

     

     

    ஆனால் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்வது என்பது மரணத்துக்கு கூட வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றி வரும் பிரபல நரம்பியல் நிபுணர் சுதிர் குமார் கூறுவதாவது, ஏற்கனவே வாரத்துக்கு 55 மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 35 சதவீதம் அதிகம் உள்ளது , இதய நோய் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் 17 சதவீதம் அதிகம் உள்ளது.

    வாரத்துக்கு 55 மணி நேர வேலை வருடத்துக்கு சராசரியாக 8 லட்சம் பேரின் உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைத்துள்ளது. மேலும், அதீத மன அழுத்தம், உடல் பருமன், பிரீ சர்க்கரை நோய், டைப் 2 சர்க்கரை நோய் ஆகிய இணை நோய்கள் மூலம் மரணம் ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

    முதலாளிகள் தங்களின் சொத்துமதிப்பை அதிகரித்துக்கொள்ள ஊழியர்களை ஆபத்தில் தள்ளுவது ஏற்புடையது அல்ல. அதிக வேலை நேரத்தால் ஊழியர் நோய்வாய்ப்படும் அவர்களை நீக்கிவிட்டு அவர்களின் இடத்தை குறைந்த சம்பளத்தில் வேறொருவரை நியமித்து அதன்மூலமும் முதலாளிகள் லாபம் சமபாதிக்க முயல்கின்றனர் என்று அவர் கண்டித்துள்ளார். 

    • கஞ்சா வியாபாரிகள் தாக்கியதில் காயம் அடைந்த செல்வமும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
    • சின்னமனூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் கருங்கட்டான் குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவர் அதே பகுதியில் சிறிய அளவில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சீப்பாலக்கோட்டை மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் அவர் மீது மோதி கீழே விழ வைத்தனர். அதற்கு செல்வம் பார்த்து வரக்கூடாது என கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் செல்வத்தை தரக்குறவைான வார்த்ததைகளால் திட்டி தாக்க முயன்றனர்.

    அவர் தடுத்தபோதும் பைக்கில் விழுந்தவரை காப்பாற்றாமல் சரமாரியாக தாக்கினர். அப்போது அவர்கள் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள் கீழே விழுந்தது. இதை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் கஞ்சா வாலிபர்களை பிடித்து தடுத்தனர். மேலும் இது குறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

    பைக்கில் இருந்து தவறி விழுந்ததாலும் பொதுமக்கள் தாக்கியதாலும் கஞ்சா வாலிபர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கே.கே.பட்டி மந்தயம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (22), கிருஷ்ணன் வாத்தியார் தெருவை சேர்ந்த நவீன் (22) என தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    கஞ்சா வியாபாரிகள் தாக்கியதில் காயம் அடைந்த செல்வமும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனிடையே கஞ்சா வியாபாரிகள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெப்பநிலை அதிகரிப்பு நிலத்தடி நீரை சார்ந்துள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளை கடுமையாக பாதிக்கக்கூடும்.
    • ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும்.

    உலகளவில் நிலத்தடி நீரின் வெப்ப நிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2.1 முதல் 3.5 டிகிரி செல்சியஸ் வரை நிலத்தடி நீரின் வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் நடந்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள நியூகேஸ்டில் மற்றும் சார்லஸ் டார்வின் பலக்லைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய உலகளாவிய நிலத்தடி நீர் வெப்பநிலை மாதிரி மூலம் நடந்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.




     


    முக்கியமாக மத்திய ரஷியா, வடக்கு சீனா மற்றும் வட அமெரிக்கா, அமேசான் மழைக்காடுகள் ஆகிய பகுதிகளில் அதிகப்படியாக நிலத்தடி நீர் வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. உலகில் உயிர்வாழ்தலுக்கு நிலத்தடி நீர் இன்றியமையாததாக உள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு நிலத்தடி நீரை சார்ந்துள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளை கடுமையாக பாதிக்கக்கூடும்.


     



    நிலத்தடி நீர் முக்கிய குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வரும் நிலையில் இந்த வெப்ப நிலை அதிகரிப்பு அதன் பாதுகாப்பு தன்மையை சீர்குலைக்கக்கூடும். 2099 வாக்கில் உலகம் முழுவதும் உள்ள சுமார் 59 முதல் 588 மில்லியன் மக்கள் அருந்தும் நிலத்தடி நீர் அதிக வெப்பநிலை கொண்டதாக மாறியிருக்கும். அதிக வெப்பம் கொண்ட நிலத்தடி நீரில் நோய்க்கிருமிகள் வளரும் சாத்தியக்கூறுகளும் இருப்பதால் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடாக அமையும்.

    ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும். நிலத்தடி நீரை சார்ந்துள்ள விவசாயம், உற்பத்தி ஆகியவை பாதிக்கப்படும். அதிக வெப்பநிலை கொண்ட நீரில் கரைந்தநிலை ஆக்சிஜன் குறைவாக இருக்கும் என்பதால் நிலத்தடி நீரை ஆதாரமாக கொண்டுள்ள நதிகளில் உள்ள மீன்கள் உயிர்வாழமுடியாது.

    இதுபோன்ற பல்வேறு ஆபத்துகளை உள்ளடக்கிய நிலத்தடி நீர் வெப்ப நிலை அதிகரிப்பு புவி வெப்பமயமாதல் மற்றும் கால நிலை மாற்ற விளைவுகளை மனிதர்கள் தீவிரமானதாக எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது என்பதை உணர்த்துகிறது. 

    • அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது
    • தமிழகத்தில் சராசரியாக வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 33.4 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் உள்ளது

    காலநிலை மாற்றம் :

    உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் தண்ணீர் பஞ்சம், வெப்ப அலை என்ற ரூபங்களில் ருத்ர தாண்டவம் ஆடத்தொடங்கியுள்ளது. ஒருபுறம் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்கள் தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள்  அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் காலநிலை குழப்பத்தால் வெயிலுடன் சேர்ந்து திடீரென கொட்டித்தீர்க்கும் கனமழையும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அதிகரிக்கும் வெப்பத்தால் தமிழகமும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழக   மக்களுக்கு பீதியைக் கிளப்பும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

     

    ஆய்வு முடிவுகள் :

    அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, தொடர் நகரமயமாக்கல் காரணமாக தமிழக நகரங்கள் உட்பட இந்தியாவில் உள்ள 21 நகரங்களில் அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரித்து 2050 வாக்கில் தற்போது வெயில் காலத்தில் உள்ளதை விட இரண்டு மடங்கு வெப்பம் வருடத்தின் 8 மாதங்களுக்கும் வீசி மக்களை தாங்கமுடியாத அவதிக்குள்ளாக்கும் என்று தெரியவந்துள்ளது.

     

    தமிழகத்துக்கு என்ன பாதிப்பு? 

    தமிழகத்தில் கடந்த 30 வருடங்களாக சராசரியாக வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 33.4 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் உள்ளது. மேலும் சராசரி மழைப்பொழிவு 763 மி.மீ முதல் 1432 மி.மீ ஆக உள்ளது.

    தற்போதுள்ள சராசரி வெப்பநிலை 2050 இல் 0.4 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும் என்றும் 2080 இல் 1.3 டிகிரி அளவுக்கு செல்ஸியஸ் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 2100 ஆம் ஆண்டு வாக்கில் சராசரி வெப்ப நிலை 1.7 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும்.

     

    தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வரும் காலங்களில் அதிக வெப்பம் பதிவாகும். அதுமட்டுமின்றி சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் வெப்ப அலை தற்போது உள்ளதை விட 2 மடங்கு அதிகமாக வீசும். குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிக பாதிப்பு இருக்கும்.

     

    வெயில் மட்டுமின்றி வழக்கத்துக்கு மாறான மழைப்பொழிவும் தமிழகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் இயல்புக்கு மாறாக குறிகிய காலத்திலேயே அதிக மழை கொட்டித்தீர்க்கும். 2050 இல் சராசரி மழைப்பொழிவு 4 சதவீதமும், 2080 இல் 11 சதவீதமும், 2100 இல் 16 சதவீதமும் அதிகரிக்கும்.

     

    மாசுபாடு அதிகமாகும் பட்சத்தில் இதுவே 2050 இல் 7 சதேவீதமாகவும், 2100 இல் 26 சதவீதமாகவும் கூட அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் இந்த சராசரி மழைபொழிவின் மாற்றம் கண்கூடாக தெரியும். 24 மணிநேரத்தில் 6 முதல் 7 சென்டிமீட்டர் என்ற அளவில் கூட மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று  ஆய்வில் தெரியவந்துள்ளது.

    • இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் தேதி நாசா வெளியிட்டுள்ளது.
    • இந்த ஆய்வானது நாசாவின் DART (Double Asteroid Redirection Test) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட முதல் ஆய்வாகும்.

    பூமிக்கு அதிக ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று என்று அஞ்சப்படும் விண்கல் ஒன்று  பூமியைத் தாக்க 72% சதவீத வாய்ப்புகள் இருபதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விண்கல் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை தடுக்க இன்னும் நாம் தயாராகாவில்லை என்று நாசா எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    கடந்த ஏப்ரல் மாதம் நாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு, மாரிலாந்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட, கிரகங்களின் பாதுகாப்பு தொடர்பான சோதனையில், பூமிக்கு விண்வெளியிலிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் தேதி நாசா வெளியிட்டுள்ளது.

     

     

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'உலகுக்கு வருங்காலங்களில் விண்கற்களால் அதிக ஆபத்து இருந்து வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்பதற்கு இந்த ஆராய்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விண்கலின் எடை, அளவு மற்றும் தன்மைகள் குறித்து ஆய்வில் தெரிந்துகொள்ள முடியவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    இந்த ஆய்வானது நாசாவின் DART (Double Asteroid Redirection Test) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட முதல் ஆய்வாகும். விண்கற்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பூமியைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமே DART. இதற்கிடையில், விண்கற்களை தொலைவில் இருந்து பார்க்க NEO Surveyor (Near-Earth Object Surveyor). எனப்படும் இன்பிராரெட் தொலைநோக்கியை நாசா உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

     

    • பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளது.
    • துருவ ஒளி என்பது இரவு வானத்தில் பிரகாசமான, சுழலும் திரைச்சீலைகள் போல் தோன்றும்

    கலிபோர்னியா:

    சூரியனின் மேற்பரப்பில் இருந்து கிளம்பும் மின்காந்த வெடிப்புகள் மற்றும் சக்திவாய்ந்த ஆற்றல்கள் சூரியப்புயல் என்று அழைக்கப்படுகிறது. சூரியப் புயல், புவி மற்றும் அதன் காந்த மண்டலம் உள்ளடக்கிய முழு சூரிய மண்டலத்தையும் தாக்கும்.

    இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த சூரியப்புயல் பூமியை தாக்கியது.

    ஏற்கனவே இது தொடர்பான எச்சரிக்கையை அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் தெரிவித்து இருந்தது. பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் இதனால் கலிபோர்னியா முதல் தெற்கு அலபாமா வரை அரோரா என்ற துருவ ஒளி ஏற்படும் என்றும் தெரிவித்தது.

    துருவ ஒளி என்பது இரவு வானத்தில் பிரகாசமான, சுழலும் திரைச்சீலைகள் போல் தோன்றும். பச்சை நிறத்தில் இருந்து இளஞ்சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

    அதன்படி வானத்தில் கண்கவர் வான ஒளிக் காட்சிகள் ஏற்பட்டன. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா முதல் இங்கிலாந்து வரை வான ஒளிக் காட்சிகளை பார்க்க முடிந்தது.

    லிவர்பூல், கென்ட், நார்போக் உள்பட இங்கிலாந்து முழுவதும் துருவ ஒளி தெரிந்தது. சூரியப்புயல் தாக்கிய பிறகு அமெரிக்கா, கனடா, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் துருவ ஒளி வானில் தோன்றியது. இதை பார்த்து மக்கள் பரவசமடைந்தனர். சூரியப்புயலின் தாக்கம் நீடிக்கும் என்பதால் செயற்கைக்கோள்கள், மின்கட்டமைப்புகள் பாதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மீஞ்சூர் வல்லூர் வரை சாலை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.
    • பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு நிதி ஒதுக்கப்பட்டு ரூ.14 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு சாலை பணிகள் கடந்த மாதம் ஆரம்பித்தது.

    பொன்னேரி:

    பொன்னேரி- திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வட சென்னை அனல் மின் நிலையம், தேசிய அனல் மின் நிலையம், காமராஜர் துறைமுகம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கப்பல் கட்டும் தளம், கண்டெய்னர் யார்டுகள், பெட்ரோல் நிறுவனங்கள், நிலக்கரி யார்டுகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிறுவனங்களில் இருந்து தினமும் 40 ஆயிரம் கனரக வாகனங்கள் மீஞ்சூர் வழியாக பொன்னேரி பகுதிக்கும், வல்லூர் 100 அடி சாலையில் இருந்து மணலி வழியாக சென்னைக்கும், வண்டலூர் சாலை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைக்கும் செல்கின்றன.

    இந்நிலையில் மீஞ்சூர் வல்லூர் வரை சாலை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பும் ஏற்படுகிறது. குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பள்ளம் பள்ளமாக காணப்படும் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் பலமுறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அதிகாரியிடம் மனு அளித்த நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு நிதி ஒதுக்கப்பட்டு ரூ.14 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு சாலை பணிகள் கடந்த மாதம் ஆரம்பித்தது.


    இந்நிலையில் இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மீஞ்சூர் பி.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து வல்லூர் வரை 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சாலையில் ஏற்படும் தூசிகள் கடை முழுவதும் பரவி வியாபாரம் செய்ய முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள். வாடிக்கையாளர்கள் வராததால் ஓட்டல்கள், டிபன் கடைகள், டீக் கடைகளை வியாபாரிகள் மூடி வருகிறார்கள். மேலும் காய்கறி, பழக்கடைகள் முழுவதும் தூசி மற்றும் மணலால் நிரம்பி காணப்படுவதால் கடைகளை காலை 7 மணி முதல் 9 மணி வரையும் மாலை 6 மணி முதல் 8 மணிவரையும் திறந்து வியாபாரம் செய்துவிட்டு செல்கின்றனர். சிலர் கடையை காலி செய்து விட்டு வேறு இடத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் வியாபாரிகளுக்கு கடந்த 2 வருடத்திற்கு மேலாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடையை நடத்த முடியாமல் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை மருந்து நிறுவனங்கள் நிறுத்தியது.
    • மற்ற அரசு மருத்துவமனைகளும் கொடுக்க வேண்டிய பணம் கோடிக்கணக்கில் பாக்கியாக உள்ளது.

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கோட்டயம், கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செயல்படுகின்றன. மேலும் எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட பல இடங்களில் அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன. பிரசித்தி பெற்ற தனியார் மருத்துவ மனைகளும் இங்கு ஏராளம். இருந்த போதிலும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் நோயாளிகள் அதிக அளவில் வருகிறார்கள். திருவனந்தபுரம் உள்ளிட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தனியார் ஆஸ்பத்திரிகளை போன்று நவீன மருத்துவ வசதிகள் இருக்கின்றன. இதனால் வசதி படைத்த வர்கள் கூட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற விரும்பு கின்றனர்.

    இப்படிப்பட்ட சூழலில் கேரள மாநில அரசு ஆஸ்பத்திரிகளில் ஒரு சிக்கலான நிலை உருவாகி இருக்கிறது. கேரள மாநில அரசு கடந்த சில மாதங்களாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இது இந்த மாத தொடக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் எதிரொலித்தது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு நாட்களுக்குள் அரசு ஊழியர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த மாதம் அது மிகவும் தாமதமாக வழங்கப்பட்டது. பல துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    இந்த நிதி நெருக்கடி மருத்துவத் துறையையும் பாதித்துள்ளதாக தெரிகிறது. கேரள மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான மருந்து விநியோகத்தில் ஏராளமான வினியோகஸ்தர்கள் ஈடுபடுகின்றனர்.

    அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை அரசு ஒரு குறிப்பிட்ட கால அளவில் வழங்கி வந்தபடி இருந்தது. இந்நிலையில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் நிறுவன விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை பல மாதங்களாக மாநில அரசு வழங்காமல் உள்ளது.

    2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் ரூ.143கோடி தொகையை விநியோகஸ்தர்களுக்கு மாநில அரசு வழங்காமல் பாக்கி வைத்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக திருவ னந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.50கோடி வரை பாக்கி வைத்துள்ளது.

    அதேபோல் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரூ17.55 கோடியும், கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரூ23.14 கோடியும், எர்ணாகுளம் பொது மருத்துவமனை ரூ10.97 கோடியும், கோழிக்கோடு பொது மருத்துவமனை ரூ3.21 கோடியும் பாக்கி வைத்துள்ளது. இதே போல் மற்ற அரசு மருத்துவமனைகளும் கொடுக்க வேண்டிய பணம் கோடிக்கணக்கில் பாக்கியாக உள்ளது.

    தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறு அறுவை சிகிச்சை நிறுவன விநியோகஸ்தர்கள் மாநில அரசை பலமுறை வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை கொடுக்க அரசு நடவ டிக்கை எடுக்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை ஏப்ரல் மாதம் முதல் நிறுத்த அறுவை சிகிச்சை உபகரண நிறுவனங்களின் விநியோகஸ்தர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் அந்தந்த மருத்துவமனை கண்காணிப்பாளர் களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

    அந்த கடிதத்தில் எங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கிதொகையை வருகிற 31-ந்தேதிக்குள் கட்ட தவறி னால், உபகரணங்கள் சப்ளை நிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று கடந்த ஆகஸ்ட் மாதம் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை மருந்து நிறுவனங்கள் நிறுத்தியது. அதன் எதிரொலியாக அறுவை சிகிச்சை உபகரணங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    அங்கு இருதய அறுவை சிகிச்சைகள் ஒரு வாரம் நிறுத்தப்பட்டது. பின்பு இரண்டு மாத நிலுவை தொகையான 6 கோடி ரூபாயை அரசு செலுத்தியபிறகே விநியோ கஸ்தர்கள் மீண்டும் அறுவை சிகிச்சை உபகரணங்களை சப்ளை செய்தனர். பின்பு தான் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைகள் வழக்கம் போல் நடைபெற தொடங்கின.

    இந்தநிலையில் தற்போது அறுவை சிகிச்சை உபகரணங்கள் நிறுவன விநியோகஸ்தர்கள் சப்ளையை நிறுத்துவோம் என்று கூறி இருப்பதால் தற்போது மீண்டும் பிரச்சினை உருவாகி இருக்கிறது.

    அவர்கள் கூறியிருப்பது போல் அறுவை சிகிச்சை உபகரணங்கள் சப்ளையை நிறுத்தினால் மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி களில் ஏப்ரல் மாதம் முதல் அறுவை சிகிச்சைக்கான அனைத்து உபகரணங்களும் தட்டுப் பாடு ஏற்படும்.

    இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்ய முடியாத நிலை ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நோயா ளிகள் பெரிதும் பாதிக்கப் படுவார்கள்.

    தற்போது அரசு ஆஸ்பத்திரிகளில் ஒவ்வொரு நோயாளிக்கும் தேதி குறிப்பிடப்பட்டே அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு வெகுநாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையே நிலவி வருகிறது.

    இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்வது முற்றிலும் தடைபடும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

    அறுவை சிகிச்சை நிறுவனங்களின் விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முற்றிலுமாக வழங்கி, பிரச்சனைக்கு தீர்வு காண அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

    • காய்ச்சல், உடல் வலி, தலைவலி, வாந்தி, ஜீரண மண்டல பாதிப்புகள், ரத்தப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
    • நீலகிரி மாவட்டம் சுமாா் 60 சதவீதம் வனப் பகுதிகளை கொண்ட மாவட்டம் ஆகும்.

    ஊட்டி:

    கர்நாடக மாநிலத்தில் கியாசனூர் வனநோய் என்ற குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 53 பேர் பாதிக்கப்பட்டு 2 பேர் பலியானார்கள். குறிப்பாக அங்குள்ள உத்தரகர்நாடகம் ஷிவமொகாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது.

    தொற்றுக்குள்ளான குரங்குகள், கால்நடைகள் வாயிலாக இந்த வகை வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. காய்ச்சல், உடல் வலி, தலைவலி, வாந்தி, ஜீரண மண்டல பாதிப்புகள், ரத்தப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

    இந்த வகை காய்ச்சலை பி.சி.ஆர். மற்றும் ரத்த பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யலாம். இந்த நோய் ஓரிரு வாரங்களில் குணமாகி விடும். சிலருக்கு தீவிர எதிர்விளைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள தை அடுத்து தமிழக எல்லை யோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்ப டுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ஊட்டி அரசு ஆஸ்பத்திரி டீன் கீதா லட்சுமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் சுமாா் 60 சதவீதம் வனப் பகுதிகளை கொண்ட மாவட்டம் ஆகும். கா்நாடகம், கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளதால், அந்த மாநிலங்களில் ஏற்படும் டெங்கு, குரங்கு காய்ச்சல் போன்ற பாதிப்புகள் நீலகிரி மாவட்டத்துக்குள் பரவாமல் தடுக்க மாவட்ட நிா்வாகமும், சுகாதார துறையும் நடவடி க்கை எடுத்து வருகிறது.

    இதில் நீலகிரி மாவட்டத்தில் தற்போது வரை யாருக்கும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏராளமான பொதுமக்களும் விவசாய தோட்டங்களும், கருப்பட்டி, கற்கண்டு, உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • வாழை விவசாயிகள், வாழை குலைகளை வெட்டி தண்ணீரில் எடுத்து கொண்டு வருகின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

    தூத்துக்குடி மாநகர பகுதிகள் மட்டுமின்றி திருச்செந்தூர், உடன்குடி, மெஞ்ஞானபுரம், ஆழ்வார்திருநகரி, ஏரல், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிய ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக மாறின.

    இப்பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது. வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

    அதேநேரம் இதுவரை பல ஆண்டுகளாக மழை இல்லாத பகுதிகளாக இருந்து வந்த உடன்குடி பகுதியில், கனமழை காரணமாக அனைத்து குளங்கள், குட்டைகள், ஆறு மற்றும் ஏராளமான தற்காலிகமான நீர் பிடிப்பு பகுதிகள் எல்லாமே சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் முழுமையாக நிரம்பியது.

    இந்த ஆண்டு எல்லாமே முழுமையாக நிரம்பிவிட்டது என்று விவசாயிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.

    ஸ்ரீவைகுண்டம் அணையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அத்துடன் இணைந்த சடைய நேரி கால்வாயில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக வந்து கொண்டிருந்தது.

    இதனால் உடன்குடி அருகே உள்ள சடையனேரி குளம் கிழக்கு பகுதி உடைந்தது, அதில் இருந்து வெளியேறிய வெள்ளநீர் உடன்குடி ஒன்றிய பகுதியில் உள்ள மெஞ்ஞானபுரம், மானிக்கபுரம், லட்சுமிபுரம், வேப்பங்காடு, மருதூர் கரை, செட்டியாபத்து, பரமன்குறிச்சி, என்.எஸ். நகர், சிங்கராயபுரம், வட்டன் விளை, வெள்ளாளன் விளை, சீயோன்நகர், செட்டி விளை, சிதம்பரபுரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் ஏராளமான பொதுமக்களும் விவசாய தோட்டங்களும், கருப்பட்டி, கற்கண்டு, உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    தேக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்புள்ள கருப்பட்டி, கற்கண்டு அனைத்தும் மழையிலும், வெள்ள நீரிலும் நனைந்தும் நாசமாயின.

    மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையம், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன தண்ணீர் சூழ்ந்து இருந்ததால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் தற்காலிகமாக சுமார் 10 நாட்கள் வேறு இடங்களில் செயல்பட்டது. இதன் காரணமாக உடன்குடியில் இருந்து மெஞ்ஞானபுரம் செல்லும் நேர்வழி சாலையும், உடன்குடியில் இருந்து பரமன் குறிச்சி செல்லும் நேர்வழிச் சாலையும் முழுமையாக துண்டிக்கப்பட்டது.


    நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு செல்லும் மக்கள் சுமார் 25 நாட்களாக பல கிலோமீட்டர் சுற்றி சுற்றி சென்று வந்தனர்.

    இந்நிலையில், வட்டன் விளை மற்றும் சீயோன்நகர் பகுதியில் முதல் கட்டமாக ஏராளமான பம்புசெட், நீர் மோட்டார் மூலம் தேங்கி கிடந்த தண்ணீரை அருகில் உள்ள செம்மணல் தேரியில் கொண்டு சேர்க்கும் பணி இரவு பகலாக 10 நாட்கள் நடந்தது.

    தண்ணீர் அப்புறப்படுத்தவில்லை. குறையவும் இல்லை, அடுத்து மெஞ்ஞானபுரம் அருகே உள்ள மருதூர் கரையில் சாலையை உயர்த்தி 15 நாட்களுக்கு பின் போக்குவரத்தை தொடங்கினர். உடன்குடியில் இருந்து செட்டியாபத்து மெஞ்ஞான புரம் வழியாக நெல்லைக்கு போக்குவரத்து தொடங்கியது.

    அதன் பின்பு சியோன் நகர் அருகே பல லாரி மணல் மற்றும் கற்களை கொட்டி தரைப் பாலத்தை சுமார் 25 அடி உயர்த்தி 25 நாட்களுக்குப் பின் போக்குவரத்தை தொடங்கினர்.

    ஆனாலும் இன்று வரை சுமார் 40 நாட்கள் ஆகியும் வட்டன் விளை ஊருக்குள் பரமன்குறிச்சி மெயின் ரோட்டில் இருந்து உள்ளே வர முடியாத அளவிற்கு சுமார் 10 அடி ஆழத்திற்கு இன்னும் தண்ணீர் தேங்கிகிடக்கிறது.

    இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டத்தில் உள்ள தேங்காய்கள் மற்றும் விவசாய பொருட்ககளை தோட்டத்தில் இருந்து கொண்டு வருவதற்கு தற்காலிக படகு போல அமைத்து அதில் சென்று தேங்காய் மற்றும் விவசாய பொருட்களை வெளியில் கொண்டு வருகிறார்கள்.

    தோட்டத்திற்கு நீச்சலில் செல்கிறார்கள். வாழை விவசாயிகள், வாழை குலைகளை வெட்டி தண்ணீரில் எடுத்து கொண்டு வருகின்றனர்.


    இன்று வரை விவசாயிகள் மற்றும் பல தரப்பட்ட மக்கள் வடியாத வெள்ளத்தில் தங்களது வாழ்க்கையை கடத்தி வருகின்றனர்.

    இது பற்றி விவசாயிகள் கூறும் போது, நிரந்தரமாக வடிகால் அமைத்தால் தான் இனி தண்ணீர் வடியும். தண்ணீர் வடிவதற்கு எந்த விதமான சூழ்நிலையும் தற்போது இல்லை.

    தண்ணீர் தேங்கி 40 நாட்களை கடந்து விட்டதால் அதிகமான அளவில் சேறும்சகதியும் சேர்ந்து விட்டதால் தேங்கியதண்ணீர் பூமிக்குள் இறங்கும் நிலைமை இல்லை.

    அதனால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வடிகால் அமைத்தால் தான் எங்கள் விவசாயங்களை நாங்கள் காப்பாற்ற முடியும். மீண்டும் புதியதாக விவசாயம் செய்ய முடியும் என்றனர்.

    தரைமேல்பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான் என்ற ஒரு சினிமாபாடலை பாடிக்கொண்டு விவசாயிகளும், கிராம மக்களும் தண்ணீருக்குள் சென்று தங்கள் தோட்டத்தில் உள்ள விவசாய பயிர்களை வெளியே கொண்டு வருவது மிகவும் பரிதாபமாகவும், பரிதவிப்பாகவும் உள்ளது.

    ×