என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவுமுறை"

    • பழங்களின் பலன்களைப் பெற, அதை எப்படிச் சாப்பிடுகிறோம், எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம்.
    • வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக்கொள்வது நல்லது.

    சிலர் உடல் ஆரோக்கியத்திற்காக பழங்கள் சாப்பிடுவார்கள். சிலர் பசிக்காக சாப்பிடுவார்கள். சிலர் பழத்தின் ருசி பிடிக்கும் என்பதற்காக விரும்பிய பழத்தை சாப்பிடுவார்கள். சிலர் சருமம் மிளிர வேண்டும் என்பதற்காக சாப்பிடுவார்கள். ஆனால் பழத்தை எப்போது சாப்பிடவேண்டும் என்பது பலருக்கும் தெரியாது. பழத்தை எப்போது எடுத்துக்கொண்டால் உடலுக்கு நல்லது? அதுகுறித்த பதிவுதான் இது. 

    காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடலாமா?

    பலரும் காலைநேரத்தில் உணவுக்கு பதிலாக பழங்கள் எடுத்துகொள்ள விரும்புகின்றனர். ஆனால் எந்தெந்த பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவு இருக்கவேண்டும். காலை உணவுக்குப் பதிலாக பழங்களை சாப்பிட முடிவு செய்தால் வெவ்வேறு பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    • தர்பூசணி
    • பப்பாளி
    • அன்னாசிப்பழம்
    • ஆப்பிள்
    • கிவி
    • வாழைப்பழம்
    • பேரிக்காய்

    மேற்குறிப்பிடப்பட்டுள்ள பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். காலையில் ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறும். தர்பூசணி உடலுக்கு நீரேற்றத்தை அளிக்கும். பப்பாளி எடைகுறைவிற்கு உதவுவதோடு, செரிமானத்திற்கு உதவும். மேலும் மலச்சிக்கலை தடுக்கும். பசிக்கும் போது சாப்பிட அன்னாசிப்பழம் ஒரு சிறந்த பழம். நோயெதிர்ப்பு மண்டலத்தையும், எலும்புகளையும் வலுப்படுத்த அன்னாசி உதவும். ஆப்பிள் செரிமானத்திற்கு ஒரு சிறந்த உணவாகும். கிவி நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது இதயத்திற்கு நல்லது. பேரிக்காய் பழம் நமது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக நமது சிறுநீரகங்கள், குடல் மற்றும் இதயத்திற்கு நன்மை பயக்கும். ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு குணங்கள் இருக்கும். முழுமையாக பழத்தில் இருந்து ஊட்டச்சத்துகள் கிடைக்க வெறும் வயிற்றில் பழங்களை எடுத்து கொள்ள வேண்டும்.

    தர்பூசணி உடலுக்கு நீரேற்றத்தை அளிக்கும்

    எப்போது பழங்கள் எடுத்துக்கொள்ளலாம்?

    வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் நம்மில் பலருக்கும் உணவு சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இது மிகவும் தவறான உணவு பழக்கம். ஏனெனில் உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு எந்த பழங்களும் எடுத்து கொள்ளக் கூடாது. உணவுக்கு பிறகு பழங்களை எடுத்து கொள்வதால், செரிமான பிரச்சனையை தரும். உணவு முழுமையாக செரிமானம் ஆகாமல், ஊட்டச்சத்துகள் முழுமையாக உணவில் இருந்து உடலுக்கு கிடைக்காது. மேலும் பழங்களின் மூலம் கிடைக்கவேண்டிய ஊட்டங்களும், பலன்களும் முழுமையாகக் கிடைக்காது. பொதுவாக விரைவில் செரிமானமாகிவிடும் பழங்கள், மற்ற உணவுகளோடு சேர்ந்து செரிமானத்துக்கு ஆட்படும்போது, செரிமானமடைய கூடுதல் நேரம் எடுத்துக்கொள்கின்றன. மேலும் உணவின் மூலம் கிடைத்த சர்க்கரையுடன் பழத்தின் மூலம் கிடைக்கும் சர்க்கரையும் கூட்டு சேர்ந்து, ரத்தச் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கும். அதனால் உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்போ, அல்லது உணவு சாப்பிட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகோ பழத்தை எடுத்துக்கொள்ளலாம். 

    பழங்களைச் சாப்பிடுவதால் உள்ளுறுப்புகளின் செயல்பாடு அதிகரிக்கும். மூளையின் செயல்திறன் கூடும். சருமத்தின் மினுமினுப்பைக் கூட்டும். ஆனால் அதன் பலன்களைப் பெற, அதை எப்படிச் சாப்பிடுகிறோம், எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம். அதனால் எந்த பழத்தை எப்போது சாப்பிட வேண்டும், எந்தளவு சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து சாப்பிடுங்கள். 

    • உடல்நலம் பாதிக்கும்போதுதான் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.
    • சத்தான சாப்பாடு, நல்ல உறக்கம் மிகவும் அவசியமானது.

    இப்போதெல்லாம் வேலையால் சரியான தூக்கம் இல்லை, சாப்பாடு இல்லை என பலரும் சொல்கின்றனர். ஆனால் சம்பாதிப்பதே சாப்பாடுக்காகத்தான் என்பதை மறக்கின்றனர். ஒருகட்டத்தில் உடல்நலம் பாதிக்கும்போதுதான் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். நல்ல ஆரோக்கியமான உடல் நலத்திற்கென்று தனியாக எதுவும் செய்ய வேண்டாம். சத்தான சாப்பாடு, நல்ல உறக்கம் என்பதை சரியாக செய்தாலேபோதும். ஆனால் இதைத்தான் அனைவரும் செய்ய மறுக்கின்றனர்.

    காலையில் அரக்க பரக்க எழுந்து, பாதி உடல் நனைந்தும், நனையாமலும் குளித்து, அரைவயிறு கூட நிரம்பாமல் அவசரமாக சாப்பிட்டு அலுவலகம் செல்கின்றனர். சிலர் அதைக்கூட சாப்பிடுவது இல்லை. பின்னர் இரவு வந்து சோம்பேறித்தனமாக இருக்கிறது எனக்கூறிவிட்டு கடையில் உணவு வாங்கி சாப்பிடுவது... இடையில் டீக்குடித்து வயிறை நிரப்பிக்கொள்வது. பின்னர் மொபைல் ஃபோனை பார்த்துக்கொண்டே நள்ளிரவில் தூங்குவது. சரியான உணவு, சரியான தூக்கம் இல்லை என்றால் மனித உடல் என்னென்ன விளைவுகளை சந்திக்கும் என்பதை பார்ப்போம்.

    உணவை தவிர்ப்பதால் வரும் ஆபத்துகள்

    பெரும்பாலும் அலுவலகம் செல்பவர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் அனைவரும் காலையில் சாப்பிடமாட்டார்கள். இதனால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். மாணவர்கள் பசியால் சரியாக பாடத்தில் கவனம் செலுத்த இயலாது. பெரியவர்களும் வேலையில் கவனம் செலுத்த இயலாது. காலை உணவைத் தவிர்ப்பவர்கள், அடுத்தவேளை அளவுக்கதிகமாக சாப்பிடுவார்கள். இடையில் உட்செல்லும் நொறுவைகளும் அதிகமாகும். இதனால் உடலுக்கு கிடைக்கும் கலோரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன்மூலம் உடல் எடை உயரும். உணவைத் தவிர்ப்பதால் உடலில் சுரக்கும் 'டோபமைன்' (Dopamine) மற்றும் செரடோனின் (Serotonin) ஹார்மோன்களின் அளவுகள் குறையும். இந்த இரண்டு ஹார்மோன்களும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுபவை. இதன் காரணமாக பிறரிடம் எரிச்சல், கோபத்தை காட்டுவது என இருப்போம். குளுக்கோஸிலிருந்து அதிக ஆற்றலை எதிர்பார்ப்பது மூளைதான். சாப்பிடாமல் இருப்பதால், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்பட்டு, மூளைக்குத் தேவைப்படும் ஆற்றல் முழுமையாகக் கிடைக்காமல் மறதி அதிகரிக்கும். அறிவாற்றலும் குறையும். செய்யும் வேலையிலும் முழு ஈடுபாடு இருக்காது. இதனால் காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. 


    தூக்கமின்மை தலைவலிக்கு வழிவகுக்கும்

    தூக்கத்தை தவிர்ப்பதால் வரும் ஆபத்துகள்

    மனதுக்கும், உடலுக்கும் தூக்கம் மிகவும் அவசியம். அதனால்தான் சரியாக தூங்காவிட்டால் நாம் சோர்வாக தெரிவோம். தூக்கமின்மை நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், மனநோய், டிமென்ஷியா, எடை அதிகரிப்பு, மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்தம் போன்றவைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் முக்கிய ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை சீர்குலைக்கிறது. ஒரு நாளைக்கு எட்டு மணிநேர தூக்கம் என்பது கண்டிப்பாக அவசியமாகிறது. இந்த எட்டு மணிநேர தூக்கம் ஐந்து அல்லது ஆறு மணிநேரம் எனும் குறையும்போது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது. ஹார்மோன் ஒழுங்குமுறையில் மாற்றம் ஏற்படுவதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. சரியான தூக்கம் இல்லாதது தலைவலிக்கு வழிவகுக்கும். மன அழுத்தம் ஏற்படும். தூக்கமின்மையின் போது வேலை செய்ய முயற்சிப்பது வேலை செயல்திறனை கணிசமாக பாதிக்கும். சரியான தூக்கம் இல்லாவிட்டால் உடல் முழுவதும் நடைபெறவேண்டிய செயல்முறைகள் சரியாக இருக்காது. இதனால் மூளையில் உள்ள நியூரான்கள் அதிகமாக வேலை செய்து, சிந்தனையை பலவீனப்படுத்தி, உடல் எதிர்வினைகளை மெதுவாக்கி, மக்களை உணர்ச்சி ரீதியாக சோர்வடையச் செய்கின்றன. நாள்பட்ட தூக்கமின்மை இன்னும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் அனைவரும் உணவு மற்றும் உறக்கத்தில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும். 

    • வெறும் வயிற்றில் வாழைப்பழம் மட்டுமின்றி எந்த பழத்தையும் சாப்பிடுவது சிறந்ததல்ல.
    • காலை வேளையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல.

    வாழைப்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்வது நல்லதல்ல. வாழைப்பழத்தில் இருக்கும் சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றல் கொடுக்கக்கூடியது.

    அதில் அமிலத்தன்மையும் இருப்பதால் குடல் இயக்கமும் பாதிக்கப்படும். சர்க்கரையும், அமிலத்தன்மையும் இணைந்து குடலுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்திவிடும். அதனால் காலை வேளையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல.

    ஏதேனும் ஒரு உணவை சாப்பிட்ட பிறகு வேண்டுமானால் வாழைப்பழம் சாப்பிடலாம். வெறுமன வாழைப்பழம் சாப்பிடாமல் ஆப்பிள் போன்ற மற்ற பழங்களுடன் கலந்து சாப்பிடுவது சிறப்பானது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. இயற்கையாகவே அமிலங்களும் உள்ளடங்கி இருக்கிறது. பிற பழங்களுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடும்போது அதில் இருக்கும் அமிலங்களின் வீரியம் குறையும்.

    வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும்போது, அதில் இருக்கும் மக்னீசியம், ரத்தத்தில் கலந்துவிடும். இதனால் ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரித்துவிடும். அதன் காரணமாக கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு ரத்தத்தில் சமநிலையில் இருக்காது. அதன் தாக்கம் இதயத்தில் எதிரொலிக்கும். இதய ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரித்துவிடும்.

    ஆயுர்வேதத்தின்படியும் வெறும் வயிற்றில் வாழைப்பழம் மட்டுமின்றி எந்த பழத்தையும் சாப்பிடுவது சிறந்ததல்ல. மேலும் பழங்கள் விளைவிப்பதற்கு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பழங்களில் படிந்திருக்கும். அப்படி இருக்கும்போது வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு உகந்ததல்ல.

    அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் உடலில் படிந்து நோய்த்தொற்றுகளை ஏற்படுத்திவிடும். ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்களை கொண்டுள்ளன. அவை உடலுக்கு நன்மை தந்தாலும், எந்த நேரத்தில் எப்பொழுது எவற்றுடன் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமானது. பழங்களை சரியான நேரத்தில், சரியான அளவில் சாப்பிடுவதன் மூலம் அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெறலாம். ஆரோக்கியத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

    • தேன் காயத்தை குணப்படுத்துவதற்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவக்கூடியது.
    • இது எல்லோரும் பருகுவதற்கு ஏற்ற பானம் இல்லை என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

    காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீருடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். எலுமிச்சையில் வைட்டமின் சி, பிளாவனாய்டுகள், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. தேன், காயத்தை குணப்படுத்துவதற்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவக்கூடியது. எனினும் இது எல்லோரும் பருகுவதற்கு ஏற்ற பானம் இல்லை என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இதுபற்றி ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்சா பாவ்சார் கூறுகையில், ''எலுமிச்சை சாறு, தேன் கலந்த நீர் உடலில் உள்ள கொழுப்பை உருக்குவதற்கு உதவும். ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது'' என்று எச்சரிக்கை விடுக்கிறார்.

    ''காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து பருகுவது உடல் எடையை குறைக்க உதவும் என்பது பெரும்பாலானோர் கேள்விப்பட்ட விஷயம். ஆனால் உங்களில் எத்தனை பேர் இதை நம்புகிறீர்கள்? இந்த பானத்தை பருகியவர்களில் சிலர் தனக்கு உடல் எடை குறைந்திருப்பதாக கூறுகிறார்கள். சிலர் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்கிறார்கள். ஒருசில பக்கவிளைவுகளை அனுபவித்ததாக சிலர் கூறுகிறார்கள்'' என்பவர், இந்த பானத்தை பருகுவதால் ஏற்படும் நன்மைகளையும், சிலருக்கு ஏற்படும் பக்கவிளைவுகளையும் பகிர்ந்து கொள்கிறார்.

    நன்மைகள்

    * எலுமிச்சை மற்றும் தேன் கொழுப்பை எரிக்க, உருக வைக்க உதவும். ஆனால் இந்த பானத்தை பருகுபவர்கள் உடற்பயிற்சி செய்பவர்களாக இருக்க வேண்டும். உணவு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

    * இந்த பானம் கல்லீரலில் சேரும் நச்சுத்தன்மையை போக்க உதவும்.

    * அடிவயிற்றில் கொழுப்பு சேருவதை தடுக்கும். உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.

    யாரெல்லாம் பருகக்கூடாது?

    பலவீனமான பற்கள், பலவீனமான எலும்புகள், வாய் புண்கள் போன்றவை இருந்தால் இந்த பானத்தை பருகக்கூடாது. கீல்வாதம், அசிட்டிட்டி பிரச்சினை கொண்டவர்களும் உட்கொள்ளக்கூடாது.

    கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

    1. தண்ணீர் மிகவும் சூடாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் தேனை சூடான நீரில் சேர்த்தால் நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிடும். தண்ணீர் ஓரளவுக்கு சூடு குறைந்து வெதுவெதுப்பாக இருக்கும் சமயத்தில்தான் தேன் கலக்க வேண்டும். ஒரு டேபிள்ஸ்பூனுக்கு அதிகமாக தேன் சேர்ப்பதும் கூடாது.

    2. எலுமிச்சை பழத்தில் பாதியைத்தான் பயன்படுத்த வேண்டும். உங்கள் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றால் முழுப்பழத்தையும் சாறு பிழிந்து கொள்ளலாம்.

    3. ஆனால் இந்த பானம் உங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்கிறதா? என்பதை சில நாட்கள் பரிசோதித்து பார்க்க வேண்டும். ஏதேனும் அசவுகரியத்தை ஏற்படுத்துகிறதா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    எப்படி கண்டறிவது?

    இந்த பானத்தை பருகியதும் எந்த அசவுரியமும் ஏற்படாது. குறிப்பாக நெஞ்செரிச்சல் உண்டாகாது. பற்களில் கூச்சமோ, புளிப்பு தன்மையோ தென்பட்டால் வாய் புண்ணுக்கு வழி வகுத்துவிடும். ஏதேனும் வித்தியாசமாகவோ, சங்கடமாகவோ, உணர்ந்தால் இந்த பானத்தை தவிர்க்க வேண்டும்.

    • நோய் எதிர்ப்பு சக்தி என்பது பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது.
    • உடல் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் தேவைப்படுகின்றன.

    கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி சத்து அதிகம் கொண்ட உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் வைட்டமின் சி சத்து மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க போதுமானது அல்ல. ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது.

    அதனால் வைட்டமின் சி மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சீரான உணவை உண்பது அவசியமானது. மேலும் நன்றாக தூங்கவும் வேண்டும். உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது. பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டு வருவதும் நல்லது.

    ஆண்டு முழுவதும் உடல் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் தேவைப்படுகின்றன. அவை பெரும் பாலும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எனப்படும் இரண்டு முக்கிய கூறுகளால் ஆனவை. மனித உடல்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைத் தாங்களே உற்பத்தி செய்யும் திறன் கொண் டவை அல்ல. ஆதலால் போதுமான ஊட்டச்சத்துக்களை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

    அனைத்து நுண்ணூட்டச்சத்துக்களும் தனித்துவமான குணங்களைக் கொண்டிருக்கின்றன. சாப்பிடும் உணவில் அவை போதுமான அளவு இல்லாதபோது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையக்கூடும். அதனால் நோய்க்கிருமிகள் எளிதாக குடிகொண்டுவிடும். உடலுக்கு தேவையான அளவு ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்காக பால் பொருட்கள், இறைச்சி பொருட்கள், முழு தானியங்கள் மற்றும் தினைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    நுண்ணூட்டச்சத்துக்களைத் தவிர, அன்றாடம் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது சீரான உடல் இயக்க செயல்பாட்டிற்கு உதவும். அது குடல் ஆரோக்கியத்தையும், மூளையின் சரியான செயல்பாட்டிற்கான நீரேற்றத்தையும் உறுதி செய்துவிடும். எந்த ஊட்டச்சத்துக்களை எவ்வளவு சாப்பிட வேண் டும் என்பது பற்றி உணவியல் நிபுணரை கலந்தாலோசித்துக்கொள்வதும் அவசியம்.

    • கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.
    • வெண்டைக்காய் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

    வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்ட ஒரு காய்கறியாகும். அது வழவழப்பான தன்மை கொண்டதால் பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. அதிலுள்ள பெக்டின் மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்குக் காரணம். பெக்டின் மற்றும் கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.

    வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் உள்ளன.

    வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும், மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும். இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.

    1. வெண்டைக்காயில் உள்ள அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்து கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் மிகவும் குறைவு.

    2. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது போலிக் அமிலம், இது வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது.

    3. வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவப் பலன்கள் மறைந்துள்ளது. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. மேலும் மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடியது.

    4. பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு தடுக்கப்படுகிறது. பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்கு உண்டு.

    5. நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

    6. வெண்டைக்காய் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்கு செயல்பட தொடங்கும்.

    7. வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏற்படும் பசி உணர்வை கட்டுபடுத்தும். வெண்டைகாய் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும், மேலும் உடலின் எடையும் சீக்கிரமாக குறையும்.

    8. வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

    9. சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் ஊறவைத்த நீரைப் குடித்தால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளால் ஏற்படும் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.

    • சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரவு உணவுக்கு சிறந்த தேர்வாகும்.
    • இரவில் இறைச்சி உண்ண விரும்புபவர்கள் மீன் சாப்பிடலாம்.

    நீங்கள் இரவில் நன்றாக தூங்க முடியாமல் சிரமப்படுபவர்களாக இருந்தால் உணவு பழக்கங்களில் சில மாற்றங்களை கொண்டு வருவது அவசியம். அவை நல்ல தூக்கத்தை வரவழைக்கும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    * மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு காபின் கலந்த பானங்களையும், உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் அவை தூக்கத்தை மோசமாக பாதிக்கும். ''காபி, தேநீர் ஆகியவை தூக்கத்தை தடுக்கும் காபினை கொண்டிருப்பவை. நல்ல தூக்கத்தை வரவழைப்பதற்கு சாக்லேட், குளிர்பானம் மற்றும் எனர்ஜி பானங்களை கூட தவிர்க்க வேண்டும். படுக்கைக்கு செல்வதற்கு 4 முதல் 6 மணி நேரத்திற்கு முன்பே அவைகளை தவிர்க்க வேண்டும்'' என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது.

    * தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் மூன்று வேளை சாப் பிடுவதற்கு பதிலாக குறைந்தது ஐந்து வேளையாக பிரித்து உண்ண வேண்டும். இது செரிமானத்திற்கு உதவுவதோடு தூக்கத்தையும் மேம்படுத்தும். ''நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் இரண்டு மணி நேர இடைவேளையில் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். அப்படி செய்தால் வயிறு எப்போதும் நிரம்பி இருக்கும். ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிடுவதும் தவிர்க்கப்படும். எடை குறைப்பு, வளர்சிதை மாற்றத்திற்கும் உதவும். இரவில் சாப்பிடும் உணவில் புரதம் மற்றும் கொழுப்புகள் குறைவாக இருக்க வேண்டும். தூங்க செல்வதற்கு முன்பு வயிறு நிரம்ப சாப்பிடுவது அஜீரணம், வீக்கம் போன்ற சிக்கல்களை உருவாக்கக்கூடும். இரவில் நிம்மதியாக தூங்க விடாமல் தடுக்கும்'' என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

    * இரவு உணவில் சேர்க்கப்படும் காய் கறிகள், இறைச்சிகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். "முட்டைக்கோஸ், வெங்காயம் போன்ற காய்கறிகள் இரைப்பை பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். அதே வேளையில், சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரவு உணவுக்கு சிறந்த தேர்வாகும். மேலும், இரவில் இறைச்சி உண்ண விரும்புபவர்கள் மீன் சாப்பிடலாம். அதில் இருக்கும் புரதம் இரவு தூக்கத்திற்கு நலம் சேர்க்கும்'' என்கிறார், டாக்டர் பாலியா.

    * இரவில் தூங்க செல்வதற்கு முன்பு காரமான உணவை உட்கொள்வது உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும். தூக்கத்தையும் பாதிக்கும். இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரவில் சாப்பிடப்படும் காரமான உணவு, தூக்க சுழற்சியை சீர்குலைத்து உடல் வெப்பநிலையின் அளவை உயர்த்துவதாகவும், அதன் காரணமாக தூக்கத்தின் தரம் குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

    * நள்ளிரவில் எழுந்து பசியுடன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இதுபற்றி டாக்டர் பாலியா கூறுகையில், ''நள்ளிரவில் பசியை போக்குவதற்கு பர்கர், பீட்சா, ஐஸ்கிரீம் சாப்பிட்டால் அது உடலுக்கு கேடு தரும். நன்றாக தூங்குவதற்கு அனுமதிக்காது. பசியோடு வெறும் வயிற்றில் தூங்க நேர்ந்தால், பாலுடன் சிறிதளவு தேன் சேர்த்து பருகலாம். அல்லது தின்பண்டங்கள் ஏதாவது சிறிதளவு சாப்பிடலாம்'' என்கிறார்.

    * படுக்கை அறை தூய்மையும் தூக்கத்தை வரவழைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மெத்தை, படுக்கை விரிப்புகள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். படுக்கை அறையில் அதிக வெளிச்சமோ, அதிக இருளோ சூழ்ந்திருக்கக்கூடாது.

    • எல்லா பொருட்களையும் பிரீசரில் வைக்கக்கூடாது.
    • பால், பால் சார்ந்த பொருட்களை பிரீசரில் வைப்பது தவறானது.

    கொரோனா ஏற்படுத்தி இருக்கும் பீதியால் நிறைய பேர் அத்தியாவசிய பொருட்களை அதிகமாக வாங்கி சேமித்து வைக்கிறார்கள். அவை கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பிரிட்ஜிலும், அதிலிருக்கும் பிரீசரிலும் அடுக்கிவைக்கிறார்கள். பிரிட்ஜில் இருக்கும் 'ரேக்குகளை' விட உள்பகுதியில் இருக்கும் பிரீசரில் குளிர்ச்சி தன்மை அதிகமாக இருக்கும் என்பதால் அதில் விரைவாக கெட்டுப்போகும் பொருட்களை சிலர் பாதுகாப்பாக வைக்கிறார்கள். அப்படி எல்லா பொருட்களையும் பிரீசரில் வைக்கக்கூடாது.

    பால், பால் சார்ந்த பொருட்கள் சட்டென்று கெட்டுவிடும் என்பதற்காக அதை பிரீசரில் வைப்பது தவறானது. ஏனெனில் அவை குளிர்ந்து உறைந்துபோய்விடும். பாலை அதில் வைத்து எடுத்து காய்ச்சினால் உருகிபோய்விடும். பால் பொருட்களை பிரீசரில் வைப்பதால் அதன் ஆயுள் அதிகரிக்காது.

    பழங்களை பிரீசரில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் அதில் இருக்கும் ஊட்டச்சத்து மதிப்பு குறைந்துபோய்விடும். பழங்களின் மேல் பகுதியும், சுவையும் மாறி போய்விடும். உலர் பழவகைகளை வேண்டுமானால் பிரீசரில் வைக்கலாம்.

    தக்காளி, மிளகாய் போன்ற சாஸ் வகைகளை பிரீசரில் வைக்கக்கூடாது. அதில் கலந்திருக்கும் மூலப்பொருட்களெல்லாம் தனித்தனியாக பிரிந்துவந்துவிடும்.

    பாக்கெட்டில் இருந்து எடுத்து பயன்படுத்திய காபி தூளை பிரீசரில் வைக்கக்கூடாது. அதன் சுவையும், மணமும் குறைந்துபோய்விடும். உபயோகிக்காத காபி தூள் பாக்கெட்டை இரண்டு வாரம் வரை பிரீசரில் வைத்துக்கொள்ளலாம்.

    நூடுல்ஸ் பாக்கெட்டுகளையும் பிரீசரில் வைத்து பயன்படுத்தக்கூடாது. அது குளிர்ந்து போய் மென்மை தன்மைக்கு மாறி போய்விடும். அதன் ருசியும் மாறுபட்டுவிடும்.

    வெள்ளரிக்காயை பிரீசரில் வைத்து சாப்பிடக்கூடாது. அதன் சுவையும், ஊட்டச்சத்து தன்மையும் மாறிப்போய்விடும். கண்களுக்கு பயன்படுத்துவதாக இருந்தால் பிரீசரில் வைத்துக்கொள்ளலாம்.

    வறுத்த உணவு தானியங்களை பிரீசரில் வைக்கக்கூடாது. அவற்றின் மொறுமொறு தன்மையும், சுவையும் குறைந்துபோய்விடும்.

    கீரை வகைகளை பிரீசரில் வைத்து பயன்படுத்தலாம். அவற்றின் தன்மை மாறாது.

    காலிபிளவரில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். கலோரிகளும் குறைவு. அதனை பிரீசரில் வைத்து பயன்படுத்தலாம். அதன் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படாது.

    குடைமிளகாயில் ஆன்டிஆக்ஸிடென்டுகள் அதிகம் உள்ளது. அதனையும் பிரீசரில் வைத்து உபயோகப்படுத்தலாம்.

    • குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதும் முக்கியமானது.
    • 10 மணி, 11 மணியை கடந்த பிறகு சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்.

    உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிப்பதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்வது அவசியமானது. அதுபோலவே குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதும் முக்கியமானது. நிறைய பேர் 9 மணிக்குள்ளோ, அதற்கு பிறகோ தான் இரவு உணவை சாப்பிடுகிறார்கள். 10 மணி, 11 மணியை கடந்த பிறகு சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி சாப்பிடுவது செரிமான மண்டலத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். அந்த நிலை தொடர்ந்தால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

    இரவு 7 மணிக்குள் சாப்பிடுவதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். முன்னோர்கள் அத்தகைய வழக்கத்தைத்தான் கடைப்பிடித்தார்கள். அவர்களின் ஆரோக்கியத்திற்கு அதுவும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம்.

    இரவில் தாமதமாக சாப்பிடும்போது உணவு நன்றாக ஜீரணமாகாது. இரவு உணவிற்கும், தூங்க செல்லும் நேரத்திற்கும் இடையே இரண்டு மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். தாமதமாக சாப்பிட்டால் அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    இரவில் தாமதமாக சாப்பிட்டுவிட்டு உடனே தூங்க செல்லும்போது அது தூக்க சுழற்சிக்கும் இடையூறு விளைவிக்கும். இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு 9 மணிக்கு மேல் தூங்க செல்வது சிறந்தது. அது நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகை செய்யும். காலையில் எழும்போது சோர்வும் தோன்றாது. உடலில் புத்துணர்ச்சி வெளிப்படும்.

    காலை உணவுக்கும், இரவு உணவுக்கும் இடையே போதுமான இடைவெளி இருப்பது உடல் எடை குறைவதற்கும் உதவும். இரவு 7 மணிக்குள் சாப்பிடும்போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இரவு உணவிற்கும், மறுநாள் காலை உணவிற்கும் இடையே 10 மணி நேர இடைவெளி இருப்பது நல்லது.

    இரவு உணவை தாமதமாக சாப்பிடும்போது கூடுதல் கலோரிகளை எரிப்பதற்கு நேரமில்லாமல் போய்விடும். மேலும் இரவு சாப்பாட்டின் அளவு அதிகமானால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கும் வழிவகுத்துவிடும்.

    நீரிழிவு, தைராய்டு, இதயம் சார்ந்த நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் இரவு உணவை குறைவாக சாப்பிட வேண்டும்.

    • தற்போது பல்வேறு காரணங்களால் நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது.
    • நீரிழிவு நோயினால் ஆண்டுக்கு 2.1 மில்லியன் பேர் இறப்பை சந்திக்கின்றனர்.

    உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வியல் சூழல் என்பது நோயற்ற உடலையே குறிக்கிறது.

    பல்வேறு விதமான தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வரும் இவ்வுலகில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தற்போது மாறி வரும் உணவுப்பழக்கம் வெவ்வேறு வகைகான நோய் காரணிகளை உருவாக்கி விடுகின்றன. இவ்வாறு உருவாகும் நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும்.

    நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை (குளுக்கோஸ்) எரிக்கப்பட்டு உடலுக்கு சக்தியாக மாற்றப்படுகிறது. இதற்கு உடலில் உள்ள கணையம் என்கிற சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன் முக்கியமானது. இது சுரக்காமல் இருந்தாலோ, போதுமான அளவில் சுரக்காமல் போனாலோ அல்லது சுரந்தும் எதிர்ப்பு தன்மை காரணமாக பயன்படாமல் போனாலோ நீரிழிவு நோய் வந்து விடுகிறது. ஆகவே தற்போது பல்வேறு காரணங்களால் சர்க்கரை நோய் என்கிற நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. இதில் இந்தியா தற்போது 2-வது இடத்தில் உள்ளது. இந்த சூழலில் உலக நீரிழிவு கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவை இணைந்து 1991-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதியை உலக நீரிழிவு தடுப்பு தினமாக அறிமுகப்படுத்தின. இதையடுத்து 2006 ஆம் ஆண்டு இந்நாளை ஐ.நா சபை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    நீரிழிவு நோயானது முதல்வகை, 2-வது வகை, 3-வது வகை என பிரிக்கப்படுகிறது. இதில் முதல் வகை நோயான நீரிழிவானது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கே அதிகம் ஏற்படுகின்றது. இரண்டாவது வகையில், கணையத்தில் இருந்து சுரக்கப்படும் இன்சுலின் போதிய அளவு சுரக்காததாலோ அல்லது சுரக்கும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகிறது.

    மேலும் இந்த வகை நீரிழிவு நோயே 90 சதவீதம் மக்களுக்கு உண்டாவதாக தகவல்கள் கூறுகின்றன. மூன்றாவது வகை என்பது பெண்களின் கர்ப்பகாலத்தில் ஏற்படுவதாகும். இந்த வகை நீரிழிவானது 2 முதல் 4 சதவீத பெண்களுக்கு கர்ப்பக் காலத்தின் போது உருவாகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்தாலும், சிறிது காலத்திற்குபின் குழந்தைக்கும், தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும் என்றும் ஆய்வு கூறுகிறது. இவ்வாறு உருவாகும் நீரிழிவு நோயின் தாக்கம் உள்ள போது உடலில் ஏற்படும் சிறு,சிறு நோய்கள்கூட பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு உயிரிழப்பையும் உண்டாக்கி விடுகின்றன.

    2014-ம் ஆண்டு உலக அளவில் 422 மில்லியன் மக்களுக்கும், 2015-ம் ஆண்டு இந்தியாவில் 69.1 மில்லியன் மக்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நோய் முதியவர்கள் மத்தியில் 70 சதவீத இறப்பை நிகழ்த்துவது குறிப்பிடத்தக்கது. தற்போது 199 மில்லியன் பெண்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நீரிழிவு நோயினால் ஆண்டுக்கு 2.1 மில்லியன் பேர் இறப்பை சந்திக்கின்றனர். இத்தகு அபாயகரமான பாதிப்பை நிகழ்த்தி கொண்டிருக்கும் நீரிழிவு நோயை பற்றி இந்நாளில் நாம் அறிந்து கொள்வதோடு, அது பற்றிய விழிப்புணர்வை அனைவரிடத்திலும் ஏற்படுத்திட உறுதியோடு செயல்படுவோம்.

    • நம் முன்னோர்கள் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர்.
    • தற்போது நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெரிய அளவிற்கு உள்ளது.

    நாம் உண்ணுகின்ற உணவை நன்கு ரசித்து ருசித்து உண்ணாலே நம் உடல் ஆரோக்கியம் எப்போதும் சிறப்பாக இருக்கும். எனவே தான் நம் முன்னோர்கள் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர்.

    இதில் மிகப்பெரிய ரகசியமே இருக்கிறது. நாம் உண்ணுகின்ற உணவு நாம் ரசித்து உண்ண வேண்டும் என்றால் நமக்கு அது பிடித்த உணவாக இருக்க வேண்டும். பிடித்த உணவாக இருக்கும்போது நம் வாயில் போதுமான அளவு உமிழ்நீர் சுரக்கும் மேலும் நாம் நமக்கு பிடித்த உணவை சுவைத்து உண்ணும் போது போதுமான அளவுக்கு நன்கு உணவை வாயில் அரைத்து உண்போம்.

    இவ்வாறு உண்ணும் போது கிட்டத்தட்ட உணவு வாயிலேயே பாதி அளவுக்கு ஜீரணமாக கூடிய நிலையில் இருக்கும். மேலும் ஏனோ தானோ என்று உணவை மென்று முழங்குவதை விட ரசித்து ருசித்து உண்ணும் போதும் நம் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் உடலுக்கு போதுமான தெம்பை மனம் அளிக்கும். நம்முடைய தினப்படி செயல்களுக்கும் உடல் இயக்கத்திற்கும் போதுமான நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களும் சுரக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    மனம் உடலோடு நேரடியாக தொடர்புடையது. உள்ளத்தின் ஆரோக்கியம் உடலின் பூரண ஆரோக்கியத்தை அழைத்து வரும் என்றால் மிகை இல்லை. ஒருவர் என்ன மாதிரியான உணவுகள் தன் உடலுக்கு ஒத்துப் போகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். கால நேரத்துடன் அளவான பிடித்த உணவை சரியான நேரத்தில் உண்ணும் பழக்கம் நீரிழிவு நோய் வருவதை தடுக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் எனலாம். நம் தினப்படி வாழ்க்கை முறை மன அழுத்தத்தை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    தற்போது நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெரிய அளவிற்கு உள்ளது. நாம் நிறைய வாட்ஸப் காணொளிகள் மற்றும் பதிவுகளில் பார்க்கின்றோம். இவைகளில் வரக்கூடிய தகவல்களை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம் நோய் பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்கள் கூட அரைகுறையாக ஏதேனும் பதிவுகளை வெளியிட்டு இருக்கலாம். எனவே தகுந்த மருத்துவர்கள் ஆலோசனை அவசியம்.

    • சர்க்கரை நோயானது வாழ்நாள் நோயாகும்.
    • பழங்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு எதிரானது அல்ல.

    சர்க்கரை நோய் துறை தலைவர் சுப்பையா ஏகப்பன் பேசியதாவது:-

    சர்க்கரை நோயானது வாழ்நாள் நோயாகும். உணவு, உடற்பயிற்சி, யோகா, மூச்சு பயிற்சி மற்றும் தியானம் போன்ற வாழ்வியல் மாற்றங்கள் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். அன்றாட உணவு பழக்க வழக்கத்தில் சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    வாரத்தில் 4 தினங்கள் காலை உணவில் சிறு தானிய உணவுகளை பயன்படுத்த வேண்டும். அதுபோல் தட்டைப் பயறு, பாசிப்பயறு, மொச்சை பயறு, பச்சை பட்டாணி உள்ளிட்ட உணவுகளுக்கும் போதிய அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது தவிர மாவுசத்து, குறைந்த மாவு சத்து மிகுந்த காய்கறிகள், கீரைகளை அதிகம் பயன்படுத்த வேண்டும். பழங்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு எதிரானது அல்ல.

    குறிப்பாக இனிப்புடன் புளிப்பு, துவர்ப்பு சுவையுடைய பழங்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதிக இனிப்புடைய பழங்களை தவிர்க்கலாம். அது மட்டும் இன்றி நொறுக்கு தீனி சாப்பிடும் வேளையில் பழங்களை நன்கு கடித்து சாப்பிட வேண்டும். ஜூஸ் போட்டு சாப்பிடக்கூடாது.

    துவர்ப்பு, கசப்பு சுவையுடைய உணவுகளை உட்கொள்ளும் போது அது சர்க்கரை நோய்க்கு எதிராக செயல்படுகிறது. இதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். ஆனால் அதனையும் குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காய், பிஞ்சு மாங்காய், நாவல் பழம், பலாக்காய், வாழைப்பூ உள்ளிட்ட உணவுகளில் துவர்ப்பு சுவை அதிகம் உள்ளது. பாகற்காய், வெந்தயம் போன்றவற்றில் கசப்பு சுவை உள்ளது இவற்றை தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக சாப்பிடும் உணவில் காய்கறி 50 சதவீதமும், சிறு தானியம் 30 சதவீதமும், புரதம் -கொழுப்பு 20 சதவீதமும் இருந்தால் சர்கரை நோயை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×