என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "weight loss"

    • உணவு, தங்கும் வசதிகளை ஜிம் நிர்வாகமே அளிக்கிறது.
    • இதுபோன்று எடைக்குறைப்பது உடல் நலத்திற்கு கேடு என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

    இன்றைய காலக்கட்டத்தில் மாறிவரும் உணவு பழக்கத்தால் பலர் உடல் பருமனால் அவதிக்குள்ளாகினர். அவ்வாறு அவதிக்குள்ளாகுபவர்கள் டயட் மற்றும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர். இதனால் பலரும் ஜிம்-மை நோக்கி படையெடுக்கின்றனர். இதன் காரணமாக தற்போது வீதிக்கு ஒரு உடற்பயிற்சி கூடம் திறக்கப்படுகிறது.

    அவ்வாறு உடற்பயிற்சி கூடத்தை நோக்கி வருபவர்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை ஜிம் நிர்வாகத்தினர் அறிவிக்கின்றனர். அந்த வகையில் சீனாவில் ஜிம் நிர்வாகம் அறிவித்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் உறைய வைத்துள்ளது.

    அதாவது, 3 மாதங்களில் 50 கிலோ எடையை குறைப்பவர்களுக்கு சுமார் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள Porsche காரை பரிசாக அளிக்க உள்ளதாக ஜிம் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சவாலில் பங்கேற்க அனுமதி கட்டணமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. மேலும் உணவு, தங்கும் வசதிகளை ஜிம் நிர்வாகமே அளிக்கிறது. இதனால் பலரும் அந்த உடற்பயிற்சி கூடத்தை நோக்கி படையெடுக்கின்றனர்.

    இதனிடையே, இதுபோன்று எடைக்குறைப்பது உடல் நலத்திற்கு கேடு என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

    உடற் பயிற்சி கூடத்திற்கு சென்றால் உடல் எடை குறைக்கலாம், உடல் நலம் காக்கலாம் என்று பலரும் நினைக்கையில் இது போன்ற அறிவிப்பு லாப நோக்கத்திற்காக அறிவிக்கப்பட்டது என்று இணையதள வாசிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஊழியர்கள் 500 கிராம் எடையை குறைத்தால் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.6,100 வழங்கியுள்ளது.
    • இளம்பெண் ஒருவர் 90 நாட்களில் 20 கிலோ எடையை குறைத்து, ரூ.2.47 லட்சம் பெற்றுள்ளார்.

    சீனாவில் Arashi Vision Inc என்ற நிறுவனத்தில் உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    ஊழியர்கள் 500 கிராம் எடையை குறைத்தால் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.6,100 வழங்கியுள்ளது.

    இந்த சவாலில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் 90 நாட்களில் 20 கிலோ எடையை குறைத்து, ரூ.2.47 லட்சம் பெற்றுள்ளார்.

    ஊழியர்களிடையே ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த, இந்த சவாலை கொண்டு வந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    2022 முதல், இந்த நிறுவனம் உடல் எடையை குறைக்கும் சவாலை நடத்தி, தோராயமாக ₹2.47 கோடி வெகுமதிகளை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், 99 ஊழியர்கள் மொத்தமாக 950 கிலோ எடையை குறைத்து ரூ.1.23 கோடியை பிரித்துக் கொண்டனர்.

    • அவர்கள் 16 வாரங்கள் ஒரு உணவு முறையைப் பின்பற்றினர்.
    • இது வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

    குறைந்த கொழுப்பு சைவ உணவு (low-fat vegan diet) உடல் எடை குறைப்பதற்கு நண்பை பயக்கும் கருவியாக இருக்கும் என்று ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது.

    "Physicians Committee for Responsible Medicine" என்ற அமைப்பு நடத்திய இந்த ஆய்வு முடிவு "Frontiers in Nutrition" இதழில் வெளியிடப்பட்டது. இதில் மெடிட்டரேனியன் உணவு (Mediterranean diet) மற்றும் குறைந்த கொழுப்பு சைவ உணவு (low-fat vegan diet) இடையே ஒப்பீடு செய்யப்பட்டது.

    மெடிட்டரேனியன் டயட்டில், அதிகளவிலான காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், தானியங்கள் மற்றும் தானிய பொருட்கள் அடங்கியிருக்கும். இருப்பினும் மிதமான அளவிலான மீன், வெள்ளை இறைச்சி மற்றும் சில பால் பொருட்களும் இதில் அடங்கும்.

    இந்த ஆய்வில் 62 அதிக எடை கொண்ட வயது வந்தவர்கள் (adults) சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு பிரிவுக்கு  மெடிட்டரேனியன் உணவு (Mediterranean diet)  மற்றும் மற்றொரு பிரிவுக்கு குறைந்த கொழுப்பு சைவ உணவு (low-fat vegan diet) வழங்கப்பட்டது.

    Mediterranean diet

    அவர்கள் 16 வாரங்கள் ஒரு உணவு முறையைப் பின்பற்றினர். பின்னர் நான்கு வாரங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு, மீண்டும் 16 வாரங்கள் மற்றொரு உணவு முறையைப் பின்பற்றினர். 

    சோதனையின் முடிவில், குறைந்த கொழுப்பு சைவ உணவு முறையைப் பின்பற்றியவர்களுக்கு உணவு அமிலச் சுமை கணிசமாகக் குறைந்தது கண்டறியப்பட்டது. உணவு அமிலச் சுமை குறைந்ததால், சைவ உணவு முறையைப் பின்பற்றியவர்கள் சராசரியாக 13.2 பவுண்டுகள் (சுமார் 6 கிலோ) எடை இழந்தனர். மெடிட்டரேனியன் உணவு முறையை பின்பற்றியவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.

     விலங்குப் பொருட்கள் அதிக அமிலத்தை உற்பத்தி செய்யும் என்பது அறியப்படுகிறது. இது வீக்கம் மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.

    ஆய்வின்படி, இறைச்சி, முட்டை, பால் பொருட்கள் போன்ற அமிலத்தை உற்பத்தி செய்யும் உணவுகளை உட்கொள்வது உடலில் உணவு அமிலச் சுமையை அதிகரிக்கும். இது வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

    ஆனால் இவற்றுக்கு பதிலாக கீரைகள், பெர்ரி பழங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற தாவர அடிப்படையிலான சைவ உணவுகளை உட்கொள்வது எடை இழப்பை ஊக்குவிக்கும் மற்றும் ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை உருவாக்கும் என்று ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர் ஹனா காலியோவா தெரிவித்துள்ளார். 

    • சில சமயங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு வர தாமதமாகிவிடும்.
    • இரவில் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

    உடல் உடையை குறைக்க முயற்சிப்பவர்கள் உணவுக்கட்டுப்பாடு விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் இரவு உணவை உண்ணும் விஷயத்தில் நேரக்கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும். ஏனெனில் இரவு தூக்கத்திற்கு எவ்வளவு நேரத்திற்கு முன்பு சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியமானது. உடல் பருமனாக இருப்பவர்கள் இரவு 7 மணிக்கு சாப்பிடுவது நல்லதா? இரவு 9 மணிக்கு சாப்பிடுவது ஏற்புடையதா? இந்த இரண்டு மணி நேர வித்தியாசம் உடலில் என்னென்ன மாற்றங்கள், பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது பற்றி பார்ப்போம்.

    இரவு உணவு ஏன் முக்கியமானது?

    நமது உடல் சர்க்காடியன் ரிதம் எனப்படும் உள் அட்டவணையை கொண்டு செயல்படுகிறது. அதுதான் தூக்கம், உடல் ஆற்றல், ஹார்மோன்கள், வளர்சிதை மாற்றம், செரிமானம் என ஒட்டுமொத்த உடலமைப்பையும் நிர்வகிக்கிறது.

    இரவில் தாமதமாகவோ அல்லது அதிகமாகவோ சாப்பிடும்போது அதனை ஜீரணமாக்குவதற்கு உடல் அதிக நேரம் போராட வேண்டியிருக்கும். குறிப்பாக இரவில் தூக்கத்தின்போது ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் உடல் இந்த வேலையை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

    அதேவேளையில் மற்ற நேரங்களை விட இரவு நேரத்தில் உடல் கொழுப்பை வேகமாக எரிக்காது. வளர்சிதை மாற்றத்தையும் குழப்பி இறுதியில் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்துவிடும்.

    எப்போதாவது தாமதமாக உண்ணலாமா?

    சில சமயங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு வர தாமதமாகிவிடும். போக்குவரத்து நெரிசலில் சிக்குவதும் தாமதத்தை ஏற்படுத்திவிடும். அந்த மாதிரியான சூழலில் இரவு உணவை தாமதமாகத்தான் சாப்பிட நேரிடும். அப்போது வழக்கமாக சாப்பிடும் உணவுப்பழக்கத்திற்கு மாறாக சாப்பிடுவது சிறந்தது.

    அதாவது வறுத்த புரதம் (கிரில் சிக்கன், பொரித்த மீன்), காய்கறி சாலட், காய்கறி சூப், பருப்பு கலந்த சாலட் உள்ளிட்ட உணவு பொருட்களை உட்கொள்வது சிறந்தது. கொழுப்பு நிறைந்த உணவு பொருட்கள், பீட்சா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வதும் செரிமானத்திற்கும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவிடும். இரவில் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.



    இரவு 7 மணிக்கு சாப்பிட்டால்....

    தூங்குவதற்கு முன்பு சீக்கிரமாக அதாவது 7 மணி அளவில் சாப்பிடும்போது அந்த உணவு செரிமானம் செய்வதற்கு உடலுக்கு போதுமான நேரம் கிடைக்கும். கொழுப்பையும் சரி செய்து அதிக கொழுப்பை எரிக்க வாய்ப்பு கிடைக்கும்.

    தூங்க ஆரம்பிக்கும்போது செரிமான செயல்பாடு முடிவடைந்துவிடும் என்பதால் உடலுக்கு போதுமான ஓய்வு நேரம் கிடைக்கும். அதனால் இடையூறு இன்றி ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.

    தூங்குவதற்குள் செரிமான செயல்பாடு முடிவடைந்துவிடும் என்பதால் வயிறும் வீக்கமின்றி இயல்பாக இருக்கும். நள்ளிரவில் பசி எடுப்பதும் குறையும். இரவு 7 மணியில் இருந்து காலை 7 மணி வரை நீண்ட இடைவெளி கிடைப்பதால் கொழுப்பின் அளவையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

    இரவு தாமதமாக சாப்பிடும்போது என்ன நடக்கும்?

    இரவு 9 மணிக்கோ அதற்கு பிறகோ சாப்பிடும்போது வளர்சிதை மாற்றம் மெதுவாக நடப்பதற்கு வழிவகுப்பதோடு கூடுதல் பசி உணர்வையும் உருவாக்கி விடும். அதனால் அதிகம் சாப்பிட நேரிடும். சோர்வையும் உணரக்கூடும்.

    அதிலும் இரவில் எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள், கிரீம் வகை உணவுகள், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உட்கொண்டுவிட்டு உடனே தூங்க சென்றால் உடலுக்கு அந்த உணவை ஜீரணிக்க போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை. செரிமான செயல்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தி தூக்கத்தையும் பாதிக்கும். உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிவிடும்.

    • இங்கிலாந்து, ஐரோப்பாவில் மவுஞ்சாரோ மருந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவிலும் அறிமுகம்.
    • முறையான மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே எடைக்குறைப்பு மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இந்தியாவின் முதல் எடைக்குறைப்பு மருந்து குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு பின் எடைக்குறைப்பு மருந்தான மவுஞ்சாரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    முறையான மருத்துவ ஆலோசனைக்கு பிறகே எடைக்குறைப்பு மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று Eli Lilly நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும், இந்த எடை குறைப்பு மருந்தை வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் மருந்தை தயாரித்துள்ள Eli Lilly நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    உடல் பருமன், நீரிழிவு நோயின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளதால் அதற்கு தீர்வு காணும் வகையில் மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து, ஐரோப்பாவில் மவுஞ்சாரோ மருந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    • எடையை குறைக்க உடற்பயிற்சியுடன் உணவிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
    • நட்ஸ் பசி உணர்வை கட்டுப்படுத்த உதவுகின்றன

    தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த 4 நட்ஸ் வகைகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்து பயன்பெறுங்கள்

    ஆரோக்கியமான முறையில் தொப்பையை குறைப்பதற்கான வழியை தேடுகிறீர்களா? இந்த பதிவு உங்களுக்கு நிச்சயம் சிறந்ததாக இருக்கும்.

    உடல் எடையை குறைக்க பல வழிகள் இருக்கலாம், உணவு கட்டுப்பாடு முதல் கடுமையான உடற்பயிற்சி வரை எடையை குறைக்க பலரும் பலவிதமான முயற்சிகளை செய்து வருகின்றனர். இதற்கு கடின உழைப்பும், பொறுமையும், விடா முயற்சியும் அவசியம். எடையை குறைக்க உடற்பயிற்சியுடன் உணவிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டு ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.

    உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஆரோக்கியமான உணவுகளை தங்கள் அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நட்ஸ் வகைகள் சரியான தேர்வாக இருக்கும். இதில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. நீங்கள் இதுவரை டயட்டில் நட்ஸ் வகைகளை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், இதற்கான முயற்சியை இன்றே தொடங்கலாம். இதற்கு உதவக்கூடிய நான்கு நட்ஸ் வகைகளை இன்றைய பதிவில் காணலாம்.

    பாதாம்

    பாதாம் ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாகும். இருதய ஆரோக்கியத்தை பராமரிப்பது முதல் எடை இழப்பு வரை பாதாமில் நன்மை பயக்கக்கூடிய சத்துக்கள் ஏராளமாக உள்ளன. நார்ச்சத்து மற்றும் புரதம் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமின்றி இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.

    புரதம் நிறைந்த பாதாம் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இதை சரியான அளவுகளில் எடுத்துக்கொண்டால் உடல் எடை நிச்சயமாக குறையும். சிறந்த பலன்களைப் பெற பாதாமை ஊற வைத்து சாப்பிடலாம்.

    பிரேசில் நட்ஸ்

    இதில் தாவர அடிப்படையிலான புரதம் நிறைந்துள்ளது. விடாப்படியான தொப்பை கொழுப்பை குறைக்க இது உதவும். மேலும் பிரேசில் நட்சில் குறைந்த அளவு கலோரி மட்டுமே உள்ளது. இதை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

    எடை இழப்புக்கு உதவக்கூடிய நார்ச்சத்தும், புரதமும் பிரேசில் நட்ஸ்களில் அதிகமாக உள்ளன. மேலும் இதில் உள்ள செலினியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்கள் கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகின்றன.

    அக்ரூட் பருப்பு

    இதில் உள்ள நல்ல கொழுப்பு இதய ஆரோக்கியத்திற்கும் எடை இழப்புக்கும் நன்மை பயக்கின்றன. இவை பசி உணர்வை கட்டுப்படுத்த உதவுகின்றன.

    அக்ரூட் பருப்புகளில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் புரதம், வைட்டமின் `ஏ', `டி' மெக்னீசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் உடல் எடையை குறைக்கின்றன. இதில் உள்ள சத்துக்கள் இருதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் மற்றும் வயது முதிர்வின் அறிகுறிகளை குறைக்கவும் உதவுகின்றன.

    பிஸ்தா

    சுவை நிறைந்த இந்த பிஸ்தா பருப்புகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை தினமும் சாப்பிட்டு வர தொப்பை மற்றும் உடல் எடையை விரைவில் குறைக்கலாம். இதில் உள்ள புரதம் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். இதன் மூலம் தேவையற்ற உணவுகள் சாப்பிடுவதை கட்டுப்படுத்தலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வீக்கத்தை குறைக்கவும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகின்றன.

    இதில் அதிக அளவு கலோரி இருந்தாலும், நல்ல கொழுப்புகள் உள்ள இந்த நட்ஸ்களை சரியான அளவுகளில் தினமும் சாப்பிட்டு வந்தால் எடையை குறைக்கலாம்.

    தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க தினமும் ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் கலவைகளை எடுத்துக்கொள்ளலாம். இதனுடன் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியை செய்தால் எடை நிச்சயம் குறையும்.

    • உடற்பயிற்சிக்கு முன்பு வயிறுநிறைய சாப்பிடக்கூடாது.
    • டீ, காபி குடிப்பது உடலின் நீர்ச்சத்து அளவை குறைக்கச் செய்யும்.

    உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் செய்த பின்னரும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவை பொருத்து, அதற்கான பலன் நமக்கு கிடைக்கும். அதோடு உடற்பயிற்சி செய்வதற்கான தசைவலிமையை அந்த உணவுகளின் மூலம் தான் கிடைக்கும். அதனால் என்ன மாதிரியான உணவுமுறை உடற்பயிற்சிக்கு முன்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

    எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்கிறோம், என்ன மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்கிறோம் என்பது எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல அதற்கு முன்னும் பின்னும் எடுத்துக்கொள்ளும் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

    காலையில் வெறும் வயிற்றில் எதுவும் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்வது, பெட்ரோல் இல்லாமல் காரை ஓட்ட முயற்சி செய்வது போன்றது. நம்முடைய உடலுக்கு உடற்பயிற்சி செய்யும்போது அதிக எனர்ஜி தேவைப்படும். அதனால் கட்டாயமாக வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யக் கூடாது.

    உடற்பயிற்சி செய்வதற்கு போதுமான சக்தி இல்லாமல் போனால் உடலில் இருக்கும் நம்முடைய இயக்கத்துக்கு தேவையான ஆற்றலை உடற்பயிற்சியே உறிஞ்ச ஆரம்பிக்கும். எனவே வெறும் வயிற்றில் பயிற்சி செய்தால் உடலில் ரத்த சர்க்கரை அளவில் மாற்றங்கள் ஏற்படும். அது பயிற்சிக்குப் பின்பு அதிக சோர்வை உண்டாக்கும்.

    காலையில் டீ அல்லது காபி குடிப்பது உங்களை புத்துணர்ச்சியாக வைக்க உதவும். ஆனால் அதேசமயம் அது உங்களுடைய உடலின் ஆற்றலை குறைக்கவும் செய்யும்.

    டீ, காபி குடிப்பது உடலின் நீர்ச்சத்து அளவை குறைக்கச் செய்யும். குறிப்பாக உடற்பயிற்சிக்குப் பின்பு டீ, காபி எடுத்துக்கொள்வது மேலும் அதிக நீர்ச்சத்து குறைபாட்டை உண்டாக்கும். அதனால் உடற்பயிற்சியின் போதும், அதற்குப் பின்பும் உங்கள் உடலும் தசைகளும் அதிகமாக சோர்வடைந்துவிடும்.

    உடற்பயிற்சிக்கு முன்பு வயிறுநிறைய சாப்பிடக்கூடாது. அதற்காக எதுவும் சாப்பிடாமலும் இருக்கக்கூடாது. குறைவாக சாப்பிட வேண்டும். ஆனால் ஆரோக்கியமான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான எனர்ஜியை கொடுக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.

    காலையில் நாம் தேர்ந்தெடுக்கும் ஆரோக்கியமான உணவு தான் தசை வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும். அதனால் அதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இது உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் தசைப்பிடிப்பு போன்றவற்றையும் தவிர்க்க உதவும்.

    சிலர் காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வார்கள். சிலர் மாலை நேரங்களில் செய்வார். எந்த நேரமாக இருந்தாலும் உடற்பயிற்சிக்கு முன்பு மிகக் குறைவாகவும் அதேசமயம் ஆரோக்கியமான உணவையும் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது தான் கலோரிகள் எரிக்கப்படுமே அதனால் நிறைய சாப்பிட்டால் தவறில்லை என்று நினைக்கக் கூடாது. உடற்பயிற்சிக்கு முன் நிறைய சாப்பிட்டால் உடற்பயிற்சி செய்யும்போது கொஞ்சம் கடினமாகவும் தூக்கம் வருவது போன்ற உணர்வும் ஏற்படும்.

    உடற்பயிற்சியை தொடங்குவதற்கு 10 - 15 நிமிடங்களுக்கு முன்பு ஏதாவது பழங்கள் அல்லது ஒரு கைப்பிடி நட்ஸ் சாப்பிடுங்கள். பயிற்சிக்குச் செல்லும் முன்பாக கொஞ்சமாக டிபன் அல்லது ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட நேர்ந்தால் உடனே பயிற்சி செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து செய்வது தான் நல்லது. ஒருவேளை நிறைய சாப்பிட்டு விட்டால் குறைந்தது அந்த உணவு ஜீரணிக்கும் வரை 90 நிமிடங்கள் பயிற்சியில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

    உடற்பயிற்சி செய்யத் தொடங்குவதற்கு முன்பு என்ன சாப்பிட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல தான் உடற்பயிற்சிக்குப் பிறகு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவும் மிக முக்கியம். அதையும் கட்டாயம் திட்டமிட வேண்டும்.

    உடற்பயிற்சிக்குப் பின் அதிக புரதங்கள் கொண்ட உணவுகளையும் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் நிறைந்தெ உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொள்ளும்போது உடற்பயிற்சி சமயத்தில் இழந்த உடல் மற்றும் தசையின் வலிமையைக் கூட்டி புத்துணர்ச்சியையும் எனர்ஜியையும் தரும்.

    குறிப்பாக, உடற்பயிற்சி செய்து முடித்த 30 நிமிடங்களுக்குள் கட்டாயம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் வலிமையான தசைகள் உண்டாகும்.

    • அதிகப்படியான உடல் எடையும் கொழுப்பும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
    • இந்த பயிற்சிகளை தினமும் இரண்டு முறை முயற்சி செய்யலாம்.

    அடிவயிறு மற்றும் உடலின் பிற பகுதிகளில் கொழுப்பு சேர தொடங்கும் போது பல வாழ்க்கை முறை நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. நீர்கட்டி, தைராய்டு, ஹார்மோன் சமநிலையின்மை, மாதவிடாய் நிறுத்தம், அசிடிட்டி போன்ற பல காரணங்களால் உடல் எடை அதிகரிக்கலாம்.

    அதிகப்படியான உடல் எடையும் கொழுப்பும் உடலுக்கு நிச்சயமாக தீங்கு விளைவிக்கும். இந்நிலையில் இதை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியை செய்ய வேண்டும். இதற்கு உணவில் அதிக கட்டுப்பாடுகள் விதித்து பல மணி நேரங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு சில எளிமையான யோகா பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் உடல் எடையை கணிசமாக குறைக்க முடியும். இந்த பயிற்சிகளை தினமும் இரண்டு முறை பயிற்சி செய்ய முயற்சி செய்யலாம்.

    புஜங்காசனம்

    * முதலில் குப்புற படுத்துக் கொள்ளவும். பின் உங்கள் கால்களை நேராக இணைத்து வைக்கவும்.

    * உள்ளங்கைகளை மார்புக்கு அருகில் இருபுறமும் வைத்துக் கொள்ளவும்.

    * இப்போது மூச்சை உள்ளிழுத்தவாரே தலை, மார்பு மற்றும் கழுத்து பகுதியை மேலே உயர்த்தி பின்னோக்கி வளைக்க வேண்டும்.

    * 10 வினாடிகளுக்கு இந்த நிலையில் இருக்கவும் பின்பு இயல்பு நிலைக்கு திரும்பலாம்.

    ஷலபாசனம்

    * குப்புற படுத்து, உங்கள் கைகளை திறந்து உடலுக்கு அருகில் வைக்கவும்

    * கன்னத்தை முன்னோக்கி சாய்த்து தரையை தொடவும்.

    * கண்களை மூடிக்கொண்டு, உங்களால் முடிந்தவரை கால்களை மட்டும் மேல் நோக்கி தூக்க முயற்சி செய்யவும்.

    * 10 வினாடிகள் வரை இந்த நிலையில் இருக்கவும். பின்பு மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பலாம்.

    வசிஷ்டாசனம்

    * இந்த யோகாவை செய்வதற்கு முதலில் பிளாங்க் பயிற்சியின் நிலையில் தொடங்கவும்.

    * உங்களுடைய இடது உள்ளங்கையை தரையில் ஊன்றியபடி, வலது கையை தரையில் இருந்து உயர்த்தவும்.

    * இப்போது முழு உடலையும் வலது பக்கம் திருப்பவும். பின்னர் தரையில் இருக்கும் வலது காலை தூக்கி இடது காலின் மீது வைக்கவும்.

    * வலது கையை வானத்தை நோக்கி மேலே உயர்த்தி விரல்களை நீட்டவும்.

    * உங்களுடைய குதிகால் முழங்கால்கள் மற்றும் பாதங்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும்.

    * மேலும் இரு கைகளும் தோள்களும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.

    * இப்போது தலையை திருப்பி வலது கையை பார்க்கவும்.

    * சிறிது நேரம் இதேநிலையில் இருக்கவும் பின்பு இதே முறையை பின்பற்றி இடது பக்கத்திலும் பயிற்சி செய்யவும்.

    பாலாசனம்

    * இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் முட்டிப்போட்டு உட்காரவும்.

    * பிறகு மூச்சை உள்ளிழுத்து கைகளை தலைக்கு மேல் உயர்த்தவும்.

    * இப்போது மூச்சை வெளியிடும் பொழுது, மேல் உடலை முன்னோக்கி வளைக்கவும்.

    * இடுப்பை கணுக்கால்கள் மீது வைத்து உட்காரவும். இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் நெற்றி தரையை தொட வேண்டும்.

    * இந்த நிலையில் செய்யும் பொழுது பின்புறம் வளைந்து இருக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    * சிறிது நேரம் கழித்து இயல்பு நிலைக்கு திரும்பவும்.

    • துளசியை கொண்டும் பாயாசம் செய்ய முடியும்.
    • கருப்பை சுத்தமாகி புத்திர பாக்கியம் கிட்டும்.

    மூலவியாதியை விரட்டும்

    துளசியை கொண்டும் பாயாசம் செய்ய முடியும். இதை செய்யும் முறை மிகவும் எளிதானது. சித்த மருத்துவ கடைகளிலும், துளசி தோட்டங்களிலும் துளசி விதை தாராளமாக கிடைக்கும். இதில் ஒரு பங்கு எடுத்துக் கொண்டு அந்த அளவில் மூன்று மடங்கு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு (மண் சட்டி என்றால் மிகவும் நல்லது) கால் படி தண்ணீர் ஊற்றி, ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் எடுத்தால் பாயாசம் போல் இருக்கும். இதை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு நோய் சரியாகும். மூல வியாதி உள்ளவர்களுக்கு இது ஒரு கண்கண்ட மருந்து. இந்த பாயாசத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

    உடல் பருமன் குறைக்கும் துளசி

    துளசி இலை சாறை சூடாக்கி எட்டில் ஒரு பங்கு தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும். இதனை ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும். பெண்கள் மாதவிடாயின் போது துளசி விதைகளை ஒரு ஸ்பூன் நீருடன் அரைத்து அந்த மூன்று நாட்கள் உட்கொண்டால் கருப்பை சுத்தமாகி புத்திர பாக்கியம் கிட்டும்.

    சிறுநீரகக்கற்கள் நீங்கும்

    துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கற்கள் படிப்படியாக கரையும். இவ் வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷ நீர் கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.

    பெண்களுக்கு...

    துளசி இலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக் கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறிய பின் பத்திரப் படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக் கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந் தால் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (ரத்தப் போக்கு) குணமாகும்.

    • பொதுவாக உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம்.
    • முறையான உடற்பயிற்சியின் மூலமே இதனை குறைக்க முடியும்.

    பொதுவாக உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஒருதடவை உடல் எடை அதிகரித்துவிட்டால் அதனை குறைப்பது கடினம் தான். அப்படி முழு உடல் எடையை குறைப்பதே அவ்வளவு கடினம் என்றால் உடலில் உள்ள ஒரு பாகத்தின் எடையை குறைப்பது என்பது அவ்வளவு சாதாரணமானதல்ல.

    முறையான உடற்பயிற்சியின் மூலமே இதனை குறைக்க முடியும். ஒரு பயிற்சியை செய்வதற்கு முன்பு நாம் அதனை கடைசிவரைக்கும் கடைபிடிக்க வேண்டும். ஆனால் நாளாக நாளாக நமக்கு ஒரு சோம்பேறித்தனம் வந்திடுகிறது. இதனால் அது நமக்கு கைகொடுக்க முடியாமல் போய்விடுகிறது.

    இந்த தொடை சதை என்பது நம் உடலில் உள்ள ஒரு பகுதிதான். இதில் சிலருக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும். அதாவது குடும்ப அமைப்பாகவோ கூட இருக்கலாம். இது ஒன்றுடன் ஒன்று உரசுவதால் அவர்கள் நடப்பதற்கே மிகவும் பயப்படுவார்கள். அதனால் அதை குறைப்பதற்கு முதலில் என்ன வழி என்றால் உணவு முறைதான் இதற்கு சிறந்த தீர்வு. உணவுமுறைகளால் மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும்.

    முறையான உணவு பழக்கவழக்கங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். காரம் அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வறுத்தது, பொறித்தது, மசாலா பொருட்கள் ஆகியவற்றை தவிர்த்துவிட வேண்டும். அதிகமாக காய்கறிகள், கீரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு முக்கியமான விஷயம் என்னவென்றால் உடற்பயிற்சிகள் தான். இந்த தொடை தசைகள் மிகவும் பெரியதாக இருக்கிறது என்றால் அதற்கென்று கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கு ஸ்கிப்பிங், சைக்கிளிங் ஆகியவற்றின் மூலம் இந்த தசைகளை குறைக்க முடியும்.

    தசைகளை இறுகச்செய்யக்கூடிய யோகாசனங்களான படுத்துக்கொண்டே சைக்கிளிங் செய்வது, பட்டர்பிளை எக்சசைஸ். இதில் பட்டர்பிளை எக்சசைஸ் தொடையில் உள்ள தசைகளை இறுகச்செய்வதற்கு மிகவும் ஏற்றது. அல்லது சூரிய நமஸ்காரம் செய்யலாம். அல்லது இதற்கென்றே பிரத்தியேகமாக இருக்கக்கூடிய உடற்பயிற்சி என்னவென்றால் ஸ்குவாட். இந்த ஸ்குவாடை முறைப்படி செய்து வந்தால் நிச்சயமாக தசைகள் சுருங்க ஆரம்பிக்கும்.

    ஒரு சேரில் கையை நீட்டி அமர்ந்து இருப்பதுபோல் சேரே இல்லாமல் அமர்ந்த நிலையில் கைகளை நீட்டி அமர்ந்து இருப்பது ஸ்குவாட். இந்த பயிற்சியை ஆரம்பத்தில் எடுப்பது கடினமாக தான் இருக்கும். ஆரம்பத்தில் கால்கள் மிகவும் வலியாக இருக்கும். எனவே கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி செய்ய வேண்டும். இதுபோன்ற உடற்பயிற்சிகளின் மூலம் இந்த தொடை தசைகளை குறைக்க முடியும். நல்ல சாப்பாடு, நல்ல உடற்பயிற்சியும் தான் தொடையில் உள்ள தசையினை குறைக்க ஒரே வழி.

    • உடல் எடை அதிகரிப்பு குறித்த கவலை அனைவரிடமும் அதிகரித்துள்ளது.
    • தொப்பையை குறைக்க பெரிதும் உதவுகிறது.

    உடல் எடை அதிகரிப்பு குறித்த கவலை அனைவரிடமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக 30 வயதை கடந்த பெண்கள் பலருக்கும் உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறது. உடல் எடையை குறைக்க எப்படி அனைவரும் வாக்கிங், ஜாக்கிங், யோகா போன்றவற்றை செய்யலாமோ அப்படித்தான் கிரீன் டீ குடிப்பதும்.

    கிரீன் டீ உடல் எடையை குறைக்க, கொழுப்பை கரைக்க, தொப்பையை குறைக்க பெரிதும் உதவுகிறது. கிரீன் டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும், அதை குடிப்பதற்கான சரியான நேரம் குறித்தும் பார்க்கலாம்.

    நன்மைகள்

    * கிரீன் டீயில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது.

    * அதே போல் கிரீன் டீ தொப்பை கொழுப்பை குறைக்கவும் கைக்கொடுக்கிறது.

    * கிரீன் டீயில் மிகக் குறைந்த அளவு காஃபின் உள்ளது. கிரீன் டீயில் கேடசின் எனப்படும் பாலிபினால் வகை உள்ளது.இந்த கேடசின்கள் ஆன்டிஆக்சிடென்ட்கள் ஆகும். இவை உடல் எடையை குறைக்க உதவுகின்றன.

    * கிரீன் டீயில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் காஃபின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும், கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்கவும் மற்றும் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.

    எப்போது குடிக்கலாம்?

    * எடை இழப்புக்கு கிரீன் டீ காலை உணவு எடுத்து கொண்ட பிறகு 1 மணி நேர கழித்து கிரீன் குடிக்கவும்.

    * அதேபோல் மதிய உணவுக்கு பிறகு 2 மணி நேரம் கழித்து கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 3 அல்லது 4 கப் கிரீன் டீ குடிக்கலாம்.

    * வெறும் வயிற்றிலும் கிரீன் டீயை அருந்தலாம். சாப்பிட்டு 10 முதல் 15 நிமிடங்களுக்கு பிறகு கிரீன் டீ குடித்தால், அது உணவை ஜீரணிக்க உதவும்.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கலாம்.
    • உடல் எடையை குறைக்க உதவுகிறது.

    தேவையான பொருட்கள்:

    வரகு அரிசி- 50 கிராம்

    பாசிபருப்பு- 25 கிராம்

    வெந்தயம்- கால் டீஸ்பூன்

    சீரகம்- கால் டீஸ்பூன்

    சின்ன வெங்காயம்- ஒரு கப்

    பட்டை- ஒரு துண்டு

    பிரிஞ்சு இலை- 1

    பூண்டு- 4 பல்

    செய்முறை:

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் வரகு அரசி மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த இரண்டையும் நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும். இதில் வெந்தயம், சீரகம், சேர்த்து பொரிந்ததும் அதில் பட்டை, பிரிஞ்சு இலை, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் ஏற்கனவே களைந்து வைத்துள்ள அரிசியையும், பருப்பையும் சேர்க்க வேண்டும்.

    மேலும் கஞ்சி என்பதால் இதற்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். கஞ்சி நன்றாக வந்ததும் இதில் கொத்தமல்லி தலை, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் உடல் எடையை குறைக்கக்கூடிய வரகு அரிசி கஞ்சி தயார்.

    இந்த மாதிரி நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் கெட்ட நீரினை வெளியேற்ற உதவும். இதை உங்களது டயட்டிலும் சேர்த்துக்கொள்ளலாம். அதிகநேரம் பசிக்காது. பசியை அதிக நேரம் தாங்கும். உடல் எடையை குறைக்கவும் இந்த கஞ்சி பயன்படுகிறது.

    இதே செய்முறையில் நீங்கள் காய்கறிகளை சேர்த்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் செய்து கொடுக்கலாம்.

    ×