என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    உடல் எடையை குறைக்க இரவு சாப்பிட சரியான நேரம் 7 மணியா? 9 மணியா?
    X

    உடல் எடையை குறைக்க இரவு சாப்பிட சரியான நேரம் 7 மணியா? 9 மணியா?

    • சில சமயங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு வர தாமதமாகிவிடும்.
    • இரவில் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

    உடல் உடையை குறைக்க முயற்சிப்பவர்கள் உணவுக்கட்டுப்பாடு விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் இரவு உணவை உண்ணும் விஷயத்தில் நேரக்கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும். ஏனெனில் இரவு தூக்கத்திற்கு எவ்வளவு நேரத்திற்கு முன்பு சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியமானது. உடல் பருமனாக இருப்பவர்கள் இரவு 7 மணிக்கு சாப்பிடுவது நல்லதா? இரவு 9 மணிக்கு சாப்பிடுவது ஏற்புடையதா? இந்த இரண்டு மணி நேர வித்தியாசம் உடலில் என்னென்ன மாற்றங்கள், பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது பற்றி பார்ப்போம்.

    இரவு உணவு ஏன் முக்கியமானது?

    நமது உடல் சர்க்காடியன் ரிதம் எனப்படும் உள் அட்டவணையை கொண்டு செயல்படுகிறது. அதுதான் தூக்கம், உடல் ஆற்றல், ஹார்மோன்கள், வளர்சிதை மாற்றம், செரிமானம் என ஒட்டுமொத்த உடலமைப்பையும் நிர்வகிக்கிறது.

    இரவில் தாமதமாகவோ அல்லது அதிகமாகவோ சாப்பிடும்போது அதனை ஜீரணமாக்குவதற்கு உடல் அதிக நேரம் போராட வேண்டியிருக்கும். குறிப்பாக இரவில் தூக்கத்தின்போது ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் உடல் இந்த வேலையை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

    அதேவேளையில் மற்ற நேரங்களை விட இரவு நேரத்தில் உடல் கொழுப்பை வேகமாக எரிக்காது. வளர்சிதை மாற்றத்தையும் குழப்பி இறுதியில் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்துவிடும்.

    எப்போதாவது தாமதமாக உண்ணலாமா?

    சில சமயங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு வர தாமதமாகிவிடும். போக்குவரத்து நெரிசலில் சிக்குவதும் தாமதத்தை ஏற்படுத்திவிடும். அந்த மாதிரியான சூழலில் இரவு உணவை தாமதமாகத்தான் சாப்பிட நேரிடும். அப்போது வழக்கமாக சாப்பிடும் உணவுப்பழக்கத்திற்கு மாறாக சாப்பிடுவது சிறந்தது.

    அதாவது வறுத்த புரதம் (கிரில் சிக்கன், பொரித்த மீன்), காய்கறி சாலட், காய்கறி சூப், பருப்பு கலந்த சாலட் உள்ளிட்ட உணவு பொருட்களை உட்கொள்வது சிறந்தது. கொழுப்பு நிறைந்த உணவு பொருட்கள், பீட்சா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வதும் செரிமானத்திற்கும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவிடும். இரவில் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.



    இரவு 7 மணிக்கு சாப்பிட்டால்....

    தூங்குவதற்கு முன்பு சீக்கிரமாக அதாவது 7 மணி அளவில் சாப்பிடும்போது அந்த உணவு செரிமானம் செய்வதற்கு உடலுக்கு போதுமான நேரம் கிடைக்கும். கொழுப்பையும் சரி செய்து அதிக கொழுப்பை எரிக்க வாய்ப்பு கிடைக்கும்.

    தூங்க ஆரம்பிக்கும்போது செரிமான செயல்பாடு முடிவடைந்துவிடும் என்பதால் உடலுக்கு போதுமான ஓய்வு நேரம் கிடைக்கும். அதனால் இடையூறு இன்றி ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.

    தூங்குவதற்குள் செரிமான செயல்பாடு முடிவடைந்துவிடும் என்பதால் வயிறும் வீக்கமின்றி இயல்பாக இருக்கும். நள்ளிரவில் பசி எடுப்பதும் குறையும். இரவு 7 மணியில் இருந்து காலை 7 மணி வரை நீண்ட இடைவெளி கிடைப்பதால் கொழுப்பின் அளவையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

    இரவு தாமதமாக சாப்பிடும்போது என்ன நடக்கும்?

    இரவு 9 மணிக்கோ அதற்கு பிறகோ சாப்பிடும்போது வளர்சிதை மாற்றம் மெதுவாக நடப்பதற்கு வழிவகுப்பதோடு கூடுதல் பசி உணர்வையும் உருவாக்கி விடும். அதனால் அதிகம் சாப்பிட நேரிடும். சோர்வையும் உணரக்கூடும்.

    அதிலும் இரவில் எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள், கிரீம் வகை உணவுகள், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உட்கொண்டுவிட்டு உடனே தூங்க சென்றால் உடலுக்கு அந்த உணவை ஜீரணிக்க போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை. செரிமான செயல்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தி தூக்கத்தையும் பாதிக்கும். உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிவிடும்.

    Next Story
    ×