என் மலர்
நீங்கள் தேடியது "ஆழ்ந்த தூக்கம்"
- உடல்நலம் பாதிக்கும்போதுதான் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.
- சத்தான சாப்பாடு, நல்ல உறக்கம் மிகவும் அவசியமானது.
இப்போதெல்லாம் வேலையால் சரியான தூக்கம் இல்லை, சாப்பாடு இல்லை என பலரும் சொல்கின்றனர். ஆனால் சம்பாதிப்பதே சாப்பாடுக்காகத்தான் என்பதை மறக்கின்றனர். ஒருகட்டத்தில் உடல்நலம் பாதிக்கும்போதுதான் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். நல்ல ஆரோக்கியமான உடல் நலத்திற்கென்று தனியாக எதுவும் செய்ய வேண்டாம். சத்தான சாப்பாடு, நல்ல உறக்கம் என்பதை சரியாக செய்தாலேபோதும். ஆனால் இதைத்தான் அனைவரும் செய்ய மறுக்கின்றனர்.
காலையில் அரக்க பரக்க எழுந்து, பாதி உடல் நனைந்தும், நனையாமலும் குளித்து, அரைவயிறு கூட நிரம்பாமல் அவசரமாக சாப்பிட்டு அலுவலகம் செல்கின்றனர். சிலர் அதைக்கூட சாப்பிடுவது இல்லை. பின்னர் இரவு வந்து சோம்பேறித்தனமாக இருக்கிறது எனக்கூறிவிட்டு கடையில் உணவு வாங்கி சாப்பிடுவது... இடையில் டீக்குடித்து வயிறை நிரப்பிக்கொள்வது. பின்னர் மொபைல் ஃபோனை பார்த்துக்கொண்டே நள்ளிரவில் தூங்குவது. சரியான உணவு, சரியான தூக்கம் இல்லை என்றால் மனித உடல் என்னென்ன விளைவுகளை சந்திக்கும் என்பதை பார்ப்போம்.
உணவை தவிர்ப்பதால் வரும் ஆபத்துகள்
பெரும்பாலும் அலுவலகம் செல்பவர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் அனைவரும் காலையில் சாப்பிடமாட்டார்கள். இதனால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். மாணவர்கள் பசியால் சரியாக பாடத்தில் கவனம் செலுத்த இயலாது. பெரியவர்களும் வேலையில் கவனம் செலுத்த இயலாது. காலை உணவைத் தவிர்ப்பவர்கள், அடுத்தவேளை அளவுக்கதிகமாக சாப்பிடுவார்கள். இடையில் உட்செல்லும் நொறுவைகளும் அதிகமாகும். இதனால் உடலுக்கு கிடைக்கும் கலோரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன்மூலம் உடல் எடை உயரும். உணவைத் தவிர்ப்பதால் உடலில் சுரக்கும் 'டோபமைன்' (Dopamine) மற்றும் செரடோனின் (Serotonin) ஹார்மோன்களின் அளவுகள் குறையும். இந்த இரண்டு ஹார்மோன்களும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுபவை. இதன் காரணமாக பிறரிடம் எரிச்சல், கோபத்தை காட்டுவது என இருப்போம். குளுக்கோஸிலிருந்து அதிக ஆற்றலை எதிர்பார்ப்பது மூளைதான். சாப்பிடாமல் இருப்பதால், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்பட்டு, மூளைக்குத் தேவைப்படும் ஆற்றல் முழுமையாகக் கிடைக்காமல் மறதி அதிகரிக்கும். அறிவாற்றலும் குறையும். செய்யும் வேலையிலும் முழு ஈடுபாடு இருக்காது. இதனால் காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

தூக்கமின்மை தலைவலிக்கு வழிவகுக்கும்
தூக்கத்தை தவிர்ப்பதால் வரும் ஆபத்துகள்
மனதுக்கும், உடலுக்கும் தூக்கம் மிகவும் அவசியம். அதனால்தான் சரியாக தூங்காவிட்டால் நாம் சோர்வாக தெரிவோம். தூக்கமின்மை நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், மனநோய், டிமென்ஷியா, எடை அதிகரிப்பு, மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்தம் போன்றவைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் முக்கிய ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை சீர்குலைக்கிறது. ஒரு நாளைக்கு எட்டு மணிநேர தூக்கம் என்பது கண்டிப்பாக அவசியமாகிறது. இந்த எட்டு மணிநேர தூக்கம் ஐந்து அல்லது ஆறு மணிநேரம் எனும் குறையும்போது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது. ஹார்மோன் ஒழுங்குமுறையில் மாற்றம் ஏற்படுவதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. சரியான தூக்கம் இல்லாதது தலைவலிக்கு வழிவகுக்கும். மன அழுத்தம் ஏற்படும். தூக்கமின்மையின் போது வேலை செய்ய முயற்சிப்பது வேலை செயல்திறனை கணிசமாக பாதிக்கும். சரியான தூக்கம் இல்லாவிட்டால் உடல் முழுவதும் நடைபெறவேண்டிய செயல்முறைகள் சரியாக இருக்காது. இதனால் மூளையில் உள்ள நியூரான்கள் அதிகமாக வேலை செய்து, சிந்தனையை பலவீனப்படுத்தி, உடல் எதிர்வினைகளை மெதுவாக்கி, மக்களை உணர்ச்சி ரீதியாக சோர்வடையச் செய்கின்றன. நாள்பட்ட தூக்கமின்மை இன்னும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் அனைவரும் உணவு மற்றும் உறக்கத்தில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
- படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
- குறிப்பிட்ட நேரம் படிக்கும் வழக்கத்தை பெற்றோர் பின்பற்ற வைக்க வேண்டும்.
இது தேர்வுக்கான காலகட்டம். மற்ற சமயங்களை விட படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலமே அதிக மதிப்பெண்களை பெற முடியும் என்பதை மாணவர்கள் உணர்ந்து செயல்படுவார்கள். ஒருசில பழக்க வழக்கங்களை தினமும் பின்பற்ற வைப்பதன் மூலம் அவர்களின் கல்வித்திறன் மேம்படுவதோடு வாழ்நாள் மூலம் கற்றல் மீதான நாட்டத்தை மெருகூட்ட செய்யலாம். அதற்கான வழிமுறைகள்...
தேர்வு சமயங்களை தவிர்த்து தினமும் குறிப்பிட்ட நேரம் படிக்கும் வழக்கத்தை பெற்றோர் பின்பற்ற வைக்க வேண்டும். அந்த சமயத்தில் வேறு எந்த செயலிலும் கவனம் செலுத்த அனுமதிக்கக்கூடாது. `இது படிப்புக்கான நேரம்' என்பது மனதில் ஆழமாக பதிய வேண்டும். அப்படி குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து படிப்பதன் மூலம் கற்றலை வலுப்படுத்தும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்வார்கள்.

அமைதியான இடம்
கவனச்சிதறல்கள் மாணவர்களை தடம் புரளச் செய்யும். எனவே இடையூறு ஏதும் இல்லாமல், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடிய அமைதியான இடத்தை ஒதுக்கிக்கொடுக்க வேண்டும். அமைதியான சூழல் கவனத்தை ஒன்றிணைக்கும் திறனை வலுப்படுத்தும். புரிதலை மேம்படுத்தும்.
கற்றல் நுட்பங்கள்
எந்த பாடத்தையும் மனப்பாடம் செய்து படிக்கக்கூடாது. ஒரு பாடத்தை படிப்பதற்கு முன்பு அதில் இடம் பெற்றுள்ள முக்கிய சாராம்சங்களை குறிப்பெடுக்க பழக வேண்டும். பின்பு அந்த குறிப்புகளில் முக்கியமானவற்றை மட்டும் சுருக்கி எழுத வேண்டும்.
அதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் ஆசிரியரிடமோ, சக மாணவர்களிடமோ கேள்வி எழுப்பி தெளிவு பெற வேண்டும். இத்தகைய செயல்முறை கற்றல் நுட்பங்களை பின்பற்றுவது பாடம் மீது ஆழமான புரிதலை ஏற்படுத்தும். சிந்தனை திறனை வளர்க்கும். திறம்பட தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறவும் வழிவகுக்கும்.
சிறிது நேர ஓய்வு
தினமும் குறிப்பிட்ட நேரத்தை படிப்புக்காக ஒதுக்கி, தொடர்ந்து படிக்கும்போது ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். படிப்புக்கு இடையே 5 முதல் 10 நிமிடங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். மீண்டும் படிப்பை தொடர்வது மன ரீதியாக புத்துணர்ச்சி பெற உதவும். படிப்பின் மீது முழு கவனத்தையும் திருப்புவதற்கு வித்திடும்.
ஊட்டச்சத்து உணவு
நாள் முழுவதும் இடை இடையே போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் உடல் நீரேற்றத்தை தக்க வைத்துக்கொள்ளும். படிப்புக்கு இடையே சத்தான சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும். அது அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவாக அமைய வேண்டும். அவை மூளைக்கு ஊட்டமளித்து அதன் செயல்திறனை மேம்படுத்த உதவும். அறிவாற்றல் செயல்பாட்டையும் அதிகப்படுத்தும்.
போதுமான தூக்கம்
நினைவகத்தை ஒருங்கிணைப்பதற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் ஆழ்ந்த தூக்கம் இன்றியமையாதது. மாணவர்கள் தினமும் போதுமான நேரம் தூங்கி எழ வேண்டும். நன்கு ஓய்வு எடுக்கும் மனம் கற்றல் விஷயங்களை மறக்காமல் நினைவில் தக்கவைத்துக்கொள்ளும்.
பாராட்டு
நேர்மறை எண்ணங்கள் ஊக்கத்தையும், விடாமுயற்சியையும் உருவாக்கும். எனவே பிள்ளைகளின் முயற்சிகளை அங்கீகரித்து கொண்டாடுங்கள். அவர்கள் படிப்பில் அடைந்திருக்கும் முன்னேற்றம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதனை சாதனையாக கருதி பாராட்டுங்கள்.
யாரும் நிர்பந்திக்காமலேயே சுயமாக படிப்பின் மீது ஆர்வத்தை வளர்த்தெடுக்க அது உதவும். அவர்களாகவே குறிப்பிட்ட நேரத்தை படிப்புக்கு ஒதுக்கி விடுவார்கள். நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள்.

பாடங்களை பிரித்தல்
முழு ஆண்டுத்தேர்வுக்கு பாடப்புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு பகுதிகளாக படித்து முடிப்பதை பெரிய பணியாக உணரலாம். அதில் கடினமான பகுதிகளை படிப்பது சிரமமானதாக, சவாலானதாக சில மாணவர்களுக்கு அமையலாம். ஒவ்வொரு பகுதிகளையும் தனித்தனியாக பிரித்து, அதில் எளிமையான பகுதிகளை முதலில் படிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
கடினமான பகுதிகளை அதிகாலை வேளையில் படிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இப்படி தரம் பிரிப்பதன் மூலம் விருப்பமான பாடங்களை விரைவாக படித்து முடித்துவிட முடியும். அதனால் படிப்பது பெரும் சுமையாக தோன்றாது. இந்த அணுகுமுறை மன அழுத்தத்தையும் தவிர்க்க உதவும். தினமும் படிக்க தொடங்குவதற்கு முன்பு ஏற்கனவே படித்த பகுதிகளை மீண்டும் ஒருமுறை வாசிப்பது நினைவில் ஆழமாக பதிய உதவும். தேர்வை எளிமையாக எழுதுவதற்கு வழிவகுக்கும்.






