என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "certified seeds"

    • அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.
    • அறுவடை நிலையில் பிற ரக கலவன்கள் நீக்கும் பணியினை விரைவுபடுத்த உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது முதிர்ச்சி நிலையிலுள்ள நெல் விதைப்பண்ணைகளை, திருப்பூர் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து தலைமையிலான விதைச்சான்று அலுவலர் குழு ஆய்வு செய்தது.இது குறித்து விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:-அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட, கல்லாபுரம், கண்ணாடிபுத்துார், கொமரலிங்கம், கணியூர், கடத்துார், சோழமாதேவி, காரத்தொழுவு பகுதிகளில், குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.குறுகிய கால நெல் ரகங்களான கோ - 51, ஏ.எஸ்.டி., - 16, ஏ.டி.டி., - 37, ஏ.டி.டி., - 36, ஐ.ஆர்., - 50, ஏ.டி.டி., - 45, 43, 53 ஆகிய ரகங்களின் விதைப்பண்ணைகள் ஆய்வு செய்யப்பட்டது. அறுவடை நிலையில் பிற ரக கலவன்கள் நீக்கும் பணியினை விரைவுபடுத்த, உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.சன்ன ரக ஏ.டி.டி., - 53 ஆதார நிலை விதைப்பண்ணைகள் காரத்தொழுவு பகுதியில் அமைக்கப்பட்டது. இதனை விதைச்சான்று அலுவலர் குழு ஆய்வு செய்து வயல் தரம் உறுதி செய்யப்பட்டது.புதிய ரகமான, ஏ.டி.டி., - 53 நெல்லானது 105 முதல் 110 நாட்கள் வயதுடைய குறுகிய கால நெல் ரகம், அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றதாகும்.குறுவை மற்றும் கோடை பருவங்களில் பயிரிட ஏற்ற உயர் விளைச்சல் ரகமாக உள்ளதோடு பாசனத்திற்கு நீர் திறக்க தாமதமானாலும் அக்டோபர் மாதத்திற்கு பின்னரும் பயிரிடலாம்.20 ஆண்டுகளாக உள்ள ஏ.டி.டி., 43 ரகத்தை விட, கூடுதல் தரமும், மில் அரவைத்திறனும், உயர் விளைச்சல் திறனும் கொண்டதாகும். இந்த புதிய நெல் ரகம், ஏ.டி.டி., - 43 மற்றும் ஜெ.ஜி.எப்., - 384 கலப்பிலிருந்து, வம்சாவழித்தேர்வு வாயிலாக உருவாக்கப்பட்டது.105 முதல் 110 நாட்கள் வயதுடையதாகவும், ஹெக்டேருக்கு, 9,875 கிலோ மகசூல் தரக்கூடியதாகும்.மேலும் சிறப்பான செடி அமைப்பும், அடர்ந்த கதிர்களையும், நெருக்கமான நெல் மணிகளையும் கொண்டதாகும். ஆயிரம் நெல் மணிகளின் எடை, 14.5 கிராம் இருக்கும்.

    சன்ன ரக வெள்ளை அரிசி, அதிக அரவைத்திறன் (62 சதவீதம்), முழு அரிசி காணும் திறன் (65 சதவீதம்) மற்றும் சிறந்த உமி நிறம் கொண்டதாகும்.தற்போது அறுவடை நிலையிலுள்ள ஏ.டி.டி., - 53 நெல் விதைப்பண்ணையில் அறுவடை முடிந்து, அரசு அனுமதி பெற்ற விதை சுத்தி நிலையங்களில் சுத்தப்பணி மேற்கொள்ளப்படும்.விதை மாதிரி எடுத்து அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில், முளைப்புத்திறன், பிற ரக கலவன்,புறத்தூய்மை, ஈரப்பதம் என அனைத்து இனங்களிலும் முடிவு அறிக்கை பெறப்படும். அதன்பின் சான்று அட்டை பொருத்தி விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும்.மடத்துக்குளம் வட்டாரத்தில் வரும் சம்பா பருவத்திற்கும், நிலம் தயார் செய்யும், நாற்றங்கால் அமைக்கும் பணி நடந்து வருவதால் விதைத்தேர்வில் விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும்.தரமான சான்று பெற்ற விதைகளை தேர்வு செய்ய வேண்டும். இதனால் அதிக முளைப்புத்திறன், பிற ரக கலவன்கள் இல்லாமல் அதிக மகசூல் பெற முடியும்.

    இவ்வாறு விதைச்சான்று உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    ×