என் மலர்
நீங்கள் தேடியது "Palladam"
- மாதாந்திர மின் பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
பல்லடம் :
பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :- பல்லடம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகர், அம்மாபாளையம், பனப்பாளையம் ஆகிய ஊர்களில் மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது.
- பல்லடம் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம் :
கோவை அருகே உள்ள சின்னியம்பாளையத்திலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஓன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் வெட்டுப்பட்டான் குட்டை என்ற இடம் அருகே சென்றுக்கொண்டு இருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் வேன் நிலை தடுமாறி கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த குமரேசன் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பல்லடம் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் 23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் நடைபெறவுள்ளது.
- பொதுமக்கள் அரசு இ- சேவை மையத்தின் இணையதளம் மூலம் மனுக்களை பதிவு செய்து கொண்டு பயன் பெறலாம்.
பல்லடம் :
பல்லடம் தாலுகா அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதி ஜமாபந்தி தொடங்குகிறது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் 23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் பல்லடம் உள் வட்டம், கரடிவாவி உள் வட்டம், சாமளாபுரம் உள் வட்டம், பொங்கலூர் உள் வட்டம் ஆகிய கிராம பகுதிகளுக்கு ஜமாபந்தி நடைபெறவுள்ளது. ஜமாபந்தி தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் அரசு இ- சேவை மையத்தின் இணையதளம் மூலம் மனுக்களை பதிவு செய்து கொண்டு பயன் பெறலாம்.
மனுக்கள் மீது ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என்று பல்லடம் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கல்லம்பாளையம் பகுதியில் குடிநீர் மற்றும் சப்பை தண்ணீர் விநியோகம் செய்ய ஒரே ஒரு பணியாளர் உள்ளார்.
- நகராட்சி சார்பில் நடைபெறும் விழாக்களுக்கு, நகர்மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை.
பல்லடம் :
பல்லடம் நகராட்சி சாதாரணக் கூட்டம் நகராட்சி தலைவர் கவிதாமணி தலைமையில் கூட்டரங்கில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் பின் வருமாறு:- பாலகிருஷ்ணன், (தி.மு.க.):- கல்லம்பாளையம் பகுதியில் குடிநீர் மற்றும் சப்பை தண்ணீர் விநியோகம் செய்ய ஒரே ஒரு பணியாளர் உள்ளார். அவரையும் வரி வசூல் செய்ய அழைத்து விடுகின்றீர்கள். அதனால், தண்ணீர் சப்ளை பாதிக்கிறது .எனவே கூடுதல் ஆட்களை நியமிக்க வேண்டும்.
ராஜசேகரன், (தி.மு.க.):- நகராட்சி சார்பில் நடைபெறும் விழாக்களுக்கு, நகர் மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை. சென்ற வாரத்தில் நகராட்சி கூட்ட அரங்கில், அமைச்சர் கலந்து கொண்ட விழா நடைபெற்றது. அதற்கு அழைப்பு இல்லை. பெரிய திட்டப் பணிகள் நடைபெறும் போது அதன் துவக்க விழாவிற்கும் அழைப்பு விடுப்பதில்லை. மக்கள் பிரதிநிதிகளான எங்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள். நகராட்சி தலைவர் கவிதா மணி : இனி இது போல் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த கூட்டத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த 6 வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரமூர்த்தி : - ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளேன். என்று பேசினார் அப்போது இடைமறித்த 18 வது வார்டு பாஜக. நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா, நகர்மன்ற கூட்டத்தில் உள்ளூர் விஷயத்தை பேசுங்கள் என கூறினார். இதற்கு பதில் அளித்த ஈஸ்வரமூர்த்தி பிரதமருக்கு நன்றி தெரிவித்து நீங்கள் இந்த கூட்டத்தில் பேசலாமா, நான் எனது கருத்தை இங்கு பதிவு செய்வதற்கு உரிமை உள்ளது என இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி ஆணையாளர் விநாயகம் இருவரையும் சமரசம் செய்தார். பின்னர் 12 வது வார்டு அண்ணா நகரில் ரூ.15 லட்சம் செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டி அமைப்பது உள்ளிட்ட 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவியர் கலந்து கொண்ட பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு, சினேகா சமூக சேவை மையம் ஆகியவை இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவியர் கலந்து கொண்ட பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பல்லடம் அரசு கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில், பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர்கள் சக்தி தேவி, சுதாகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், மற்றும் சினேகா மையத்தைச் சேர்ந்த ரோஸ்லின் மேரி மற்றும் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
- முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
பல்லடம் :
பல்லடம் பஸ் நிலையத்தில், கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி,மதுரை போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் இரவு மற்றும் காலை நேரங்களில் பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் பஸ் நிலையத்தின் முன்பு ரோட்டில் இறக்கி விடப்படுவதால் பயணிகள் அவதிபடுகின்றனர். இதனால் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-
இரவு மற்றும் காலை நேரங்களில், திருச்சி, மதுரை போன்ற வெளியூர் செல்லும் பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை.பஸ் நிலையம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விடுகின்றனர். இது ஒரு புறம் பயணிகளுக்கு வீண் அலைச்சலை ஏற்படுத்துகிறது மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகன போக்குவரத்து உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதற்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு பயணிகள் தெரிவித்தனர்.
- சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பல்லடம் :
பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதன்படி பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலை கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், பொன்காளியம்மன் கோவில்,அங்காளம்மன் கோவில், தண்டபாணி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் கை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- கனிமொழியின் பிறந்தநாள் விழா சித்தம்பலம் பிரிவில் கொண்டாடப்பட்டது.
- தி.மு.க. கொடி ஏற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் பிறந்தநாள் விழா சித்தம்பலம் பிரிவில் கொண்டாடப்பட்டது.
ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் தி.மு.க. கொடி ஏற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. நிர்வாகிகள் சாமிநாதன், சசிகுமார் இளைஞர் அணி ராஜேஸ்வரன், பாலகுமார், குப்புசாமி, பிரகாஷ், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கனிமொழி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- முதலிடம் பெற்ற கோவை பி.எஸ்.ஜி. அணிக்கு ரூ.10,001 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
- பூப்பந்தாட்ட குழு தலைவர் சாகுல் அமீது, செயலாளர் சேக் மக்தூம், பொருளாளர் சுரேஷ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
பல்லடம்:
பல்லடம் பூப்பந்தாட்ட குழு நடத்திய 9ம் ஆண்டு ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் முதலிடம் பெற்ற கோவை பி.எஸ்.ஜி. அணிக்கு ரூ.10,001 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.2-வது இடம் பெற்ற திருப்பூர் ஹிமாலயா அணிக்கு ரூ.7,001 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. 3-வது இடம் பெற்ற கோவை நஞ்சுண்டாபுரம் அணிக்கு ரூ.5,001 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. 4-வது இடம் பெற்ற பல்லடம் பூப்பந்தாட்ட குழு அணிக்கு ரூ.3,001 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் ரோட்டரி சங்கத் தலைவர் ராம். கண்ணையன், தங்கலட்சுமி நடராஜன், குமரப்பன்,வேல்மணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவிற்கு வந்திருந்தவர்களை பூப்பந்தாட்ட குழு தலைவர் சாகுல் அமீது, செயலாளர் சேக் மக்தூம், பொருளாளர் சுரேஷ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
- கடந்த 2019 ம் ஆண்டு பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டு ஜீப் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.
- ஊதியச்சான்று கிடைக்காததால் தற்போது பணியாற்றும் இடத்திலிருந்து சம்பளம் வாங்க முடியாமல் தவித்து வருகிறார்.
பல்லடம்:
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கயம்பாளையத்தை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது36). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர் கடந்த 2010 ம் ஆண்டு காங்கேயம் தாலுகா அலுவலகத்தில் ஜீப் ஓட்டுனராக அரசு பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ம் ஆண்டு பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டு ஜீப் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2022 ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி திருப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இவர் பணி புரிந்த பல்லடம் தாலுகா அலுவலகத்தில் இருந்து முன் ஊதியச் சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் இன்னமும் ஊதியச்சான்று கிடைக்காததால் தற்போது பணியாற்றும் இடத்திலிருந்து சம்பளம் வாங்க முடியாமல் தவித்து வருகிறார். இதனால் பஸ்சில் செல்வதற்கு கூட பணம் இல்லாததால் தினமும் சூலூர் காங்கேயம் பாளையத்திலிருந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகம் வரை சுமார் 35 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று விட்டு இரவு மீண்டும் 35 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பிரயாணம் செய்து வீடு வந்து சேர்வதாக வேதனையுடன் அவர் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து பணியாற்றுகிறேன். அக்டோபர் மாதம் 17-ந் தேதி திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரின் ஜீப் டிரைவராக இடமாறுதல் செய்யப்பட்டேன். பணியில் சேரும்போது முன் ஊதியச் சான்று வழங்க வேண்டும். இதன்படி பல்லடம் தாலுகா அலுவலகத்தில் முன் ஊதியச் சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் கடந்த 83 நாட்களாகியும், எனக்கு இன்னும் முன் ஊதியச் சான்று கிடைக்கவில்லை.மேலும் அக்டோபர் 1-ல் இருந்து 17ந் தேதி வரை பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றியதற்கு சம்பளமும் வரவில்லை. இது குறித்து பலமுறை கேட்டும் இன்னும் எனக்கு முன் ஊதியச் சான்று தரப்படாததால் தற்போது பணியில் சேர்ந்த இடத்தில் சம்பளம் எனக்குத் தரப்படவில்லை. இதனால் குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்படுகிறேன். தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி சமாளித்தேன். தற்போது பஸ்சுக்கு கூட பணம் இல்லாததால் சைக்கிளில் தினமும் காங்கேயம் பாளையத்திலிருந்து திருப்பூருக்கு வந்து செல்கிறேன். சுமார் 70 கிலோமீட்டர் பயணம் செய்வதால் கடும் உடல் வலி ஏற்படுகிறது. எனவே எனக்கு உடனடியாக பாக்கி சம்பளமும் முன் ஊதியச் சான்றும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் குடும்பத்துடன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.