என் மலர்
அமெரிக்கா
- நல்ல ஊழியரை பணிநீக்கம் செய்வதற்கு பதில் நான் சிறை சென்றிருப்பேன்
- மூன்றாவது டோஸ் செலுத்தி கொண்ட பின் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது
2019 வருட இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா எனும் வைரஸ் தொற்று, 2020ல் உலகம் முழுவதும் பரவி, உலக நாடுகளை அச்சுறுத்தி, உலக பொருளாதாரத்தை நலிவடைய செய்து லட்சகணக்கானவர்களை பலி வாங்கியது. இதனை எதிர்கொள்ள இந்தியா உட்பட பல நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து அவற்றை அந்தந்த நாட்டு மக்கள் கட்டாயமாக செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தின. விருப்பமில்லையென்றாலும் அரசாங்கங்கள் கட்டாயமாக்கியதால் மக்கள் சில மாதகால இடைவெளிகளில் ஒன்றன் பின் ஓன்றாக செலுத்தி கொண்டனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் பயன்பாடு குறைந்து வருவதாகவும் சில நாடுகள் அதனை உபயோகிப்பதையே நிறுத்தி விட்டதாகவும் எக்ஸ் வலைதளத்தில் ஒரு பயனர் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிலளித்த எக்ஸ் நிறுவனத்தின் அதிபரும், உலகின் நம்பர் 1 கோடீசுவரருமான எலான் மஸ்க் தெரிவித்திருப்பதாவது:
மக்கள் கட்டாயமாக தடுப்பூசிகளையும் பூஸ்டர்களையும் செலுத்தி கொள்ள வேண்டும் என அரசாங்கங்கள் கட்டாயபடுத்தியதை நான் நாகரிகமற்ற அத்துமீறலாக கருதுகிறேன். அதிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் எனக்கு விருப்பமில்லை. தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்பதால் ஒரு நல்ல ஊழியரை பணி நீக்கம் செய்வதற்கு பதிலாக நானே சிறைக்கு சென்றிருப்பேன்.
அது மட்டுமல்ல; நானும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.
நோயினால் ஏற்பட்ட உடல்ரீதியான சிக்கலை விட தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு பலருக்கு அதிக சிக்கல்கள் ஏற்பட்டன. நோய் தடுப்புக்கான தடுப்பூசி, நோயை விட கடுமையான விளைவுகளை தர கூடாது.
இவ்வாறு மஸ்க் தெரிவித்துள்ளார்.
- புறநகர் பகுதியில் வெட்டவெளி விருந்தில் ஜேலி கலந்து கொண்டார்
- காவல்துறை அதிகாரி நெருங்கி வந்ததும் ஜேலி துப்பாக்கியை எடுத்தார்
அமெரிக்காவின் மத்தியமேற்கு மாநிலம் கன்சாஸ் (Kansas). இதன் தலைநகரம் டொபேகா (Topeka).
இங்குள்ள க்ளவுட் கவுன்டி பிராந்தியத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த ஜேலி சில்ஸன் (Jaylee Chillson) எனும் 14 வயது சிறுமி, சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடி விட்டாள். இத்தகவல் க்ளவுட் கவுன்டி காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
ஜேலி தனது நண்பர்களுடன் ஊருக்கு வெளியே உள்ள அரோரா எனும் புறநகர் பகுதியில் ஒரு வெட்டவெளி விருந்தில் கலந்து கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவளை வீட்டிற்கு வருமாறு அழைத்தனர். அப்போது ஒரு காவல்துறை அதிகாரி அவள் தப்பி செல்லாதவாறு இருக்க அவளை பிடித்து கொள்ள முயன்றார்.
ஆனால், அதிகாரிகள் என்ன சொல்லியும் கேட்க மறுத்த அச்சிறுமி, ஒரு கட்டத்தில் திடீரென ஒரு துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டு கொண்டார். அதிர்ச்சியடைந்த அங்கிருந்த காவல்துறை அதிகாரியும், தீயணைப்பு அதிகாரிகளும் அச்சிறுமிக்கு உயிர்காக்கும் முதலுதவிகளை செய்தனர். ஆனால் இந்த முயற்சிகள் பலனளிக்காததால் அச்சிறுமி உயிரிழந்தார்.
விருந்துக்கு வந்திருந்த பலரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
தனது மகளை பறி கொடுத்த ஜேலியின் தந்தை உருக்கமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
- 2016ல் நாஸா விண்வெளிக்கு ஓசிரிஸ்-ஆர்ஈஎக்ஸ் விண்கலனை அனுப்பியது
- 2020ல் ஓசிரிஸ் பென்னு குறுங்கோளில் தனது கேப்ஸ்யூலை தரையிறக்கியது
ஆஸ்டிராய்ட் எனப்படும் சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களை ஆராய்ச்சி செய்வதில் அமெரிக்காவின் மத்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா (NASA) பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறது.
2016 செப்டம்பர் மாதம், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து ஓசிரிஸ்-ஆர்ஈஎக்ஸ் (OSIRIS-REx) எனும் விண்கலனை பூமியிலிருந்து 200 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள பென்னு எனும் குறுங்கோளை ஆராய்ச்சி செய்ய அமெரிக்காவின் மத்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாஸா அனுப்பியிருந்தது. அந்த குறுங்கோளிலிருந்து ஆராய்ச்சிகளுக்காக மாதிரி படிவங்களை பூமிக்கு கொண்டு வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பென்னுவின் மேற்பரப்பில் ஆராய்ச்சி செய்ய அந்த விண்கலனிலிருந்து அனுப்பப்பட்ட ஆய்வு சாதனம் (probe) 2020ல் பென்னுவை அடைந்தது. பாறைகள் நிறைந்த அந்த குறுங்கோளின் மேற்பரப்பிலிருந்து 250 கிராம் மண்துகள்களை அந்த சாதனம் எடுத்தது.
இந்நிலையில் ஓசிரிஸ் விண்கலனிலிருந்து கேப்ஸ்யூல் எனப்படும் மிக சிறிய மற்றொரு விண்கலன் மூலம் பென்னுவின் மண்துகள் மாதிரிகள் ஓசிரிஸ்-ஆர்ஈஎக்ஸ் விண்கலனால் பூமியிலிருந்து 1,07,826 உயரத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டது.
அந்த கேப்ஸ்யூல் 6.21 பில்லியன் கிலோமீட்டர் பயணத்தை நேற்று நிறைவு செய்தது. பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து அமெரிக்காவின் உடா மாநிலத்தில் பாலைவனத்தில் வந்திறங்கியது. இதனை நாஸா அதிகாரிகள் பத்திரமாக மீட்டெடுத்தனர். விண்கலனிலிருந்து வெகு வேகமாக பூமியை நோக்கி வந்த கேப்ஸ்யூல், வளிமண்டலத்தை தாண்டி, அதில் இணைக்கப்பட்ட பாராசூட் மூலம் மெதுவாக பூமியை தொட்டது.
"விஞ்ஞானிகளின் சூரிய மண்டல ஆராய்ச்சிக்கு ஒரு புதிய பார்வை கிடைக்க இந்த ஆராய்ச்சி வழி செய்யும்" என நாஸாவின் இந்த முயற்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அதன் தலைவர் பில் நெல்சன் தெரிவித்தார்.
- 183 ஏக்கர் நிலப்பரப்பில் இத்திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது
- திருப்பணியில் அமெரிக்காவிலிருந்து 12,500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்
இந்தியாவிலுள்ள போசசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருசோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா (BAPS) எனும் இந்து மத அமைப்பினால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வரும் அந்நாட்டிலேயே மிக பெரிய இந்து கோயில், வரும் அக்டோபர் 8ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. பிறகு 10 நாட்களுக்கு பிறகு பொது மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
ஏற்கெனவே இந்த அமைப்பினால் 100 ஏக்கரில் உருவாக்கப்பட்ட கோவில் இந்திய தலைநகர் புது டெல்லியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லாண்டிக் கடற்பகுதியிலிருந்து சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் அமெரிக்காவில் உள்ள வடகிழக்கு மாநிலம் நியூ ஜெர்சி. இத்திருக்கோவில் இம்மாநிலத்தின் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்திலிருந்து தெற்கே 90 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 183 ஏக்கர் நிலபரப்பில் கட்டப்பட்டுள்ள இத்திருக்கோவிலை கட்டி முடிக்க சுமார் 12 ஆண்டு காலம் ஆனது.
இதன் கட்டுமான பணியில் அமெரிக்கா முழுவதிலுமிருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
உலக பாரம்பரிய தளமாக ஐ.நா. கூட்டமைப்பின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட தென்மேற்கு ஆசியாவில் உள்ள கம்போடியா நாட்டின் அங்கோர் வாட் திருக்கோவில், 500 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டது. நியூ ஜெர்சியின் ராபின்ஸ்வில்லே டவுன்ஷிப் பகுதியில் உருவாக்கப்பட்டு வரும் இந்த அக்ஷர்தாம் திருக்கோவில், அங்கோர் வாட் கோவிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது உலகிலேயே மிக பெரிய இந்து கோவிலாகும்.
அமெரிக்காவில் உள்ள சுவாமிநாரயன் அக்ஷர்தாம் கோவில், பண்டைய இந்திய கலாச்சார முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள், இந்திய இசைக்கருவிகள் மற்றும் நடன வடிவங்களின் செதுக்கல்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்து மதத்தில் மூலவர் எனப்படும் முக்கிய தெய்வத்தின் விக்கிரகத்தை தவிர, இத்திருக்கோவிலில் 12 விக்கிரகங்கள் உள்ளன. இக்கோவிலில் 9 சுழல் வடிவ கோபுரங்கள் மற்றும் 9 பிரமிடு வடிவ கோபுரங்கள் உள்ளன. இது பாரம்பரிய கட்டிடக்கலைகளின் சிறப்பம்சங்களை பிரதிபலிக்கும் மிகப்பெரிய நீள்வட்ட குவிமாடத்தையும் (elliptical dome) கொண்டுள்ளது.
சுண்ணாம்பு, கிரானைட், இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் பளிங்கு உள்ளிட்ட கிட்டத்தட்ட 20 லட்சம் (2 மில்லியன்) கன அடி கற்கள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இந்தியா, துருக்கி, கிரீஸ், இத்தாலி மற்றும் சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவை வரவழைக்கப்பட்டன.
இக்கோவிலில், 'பிரம்ம குண்ட்' என அழைக்கப்படும் ஒரு பாரம்பரிய இந்திய படிக்கிணறு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து 300-க்கும் மேற்பட்ட புனித நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 18 முதல் பொதுமக்களின் தரிசனத்திற்காக இத்திருக்கோயில் திறக்கப்படும். அக்ஷர்தாம் என்றால் இறைவனின் புனிதமான இருப்பிடம் என பொருள்படும்.
- ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
- 74 சதவீதம் பேர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு ஜோ பைடனுக்கு வயதாகி விட்டது என வாக்களித்துள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஜனாதிபதி ஜோ பைடன் (வயது 80) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.
இதனால் அங்கு அடுத்த ஆண்டு தேர்தலுக்கான பணிகள் தற்போதே சூடுபிடித்துள்ளன. இதற்கிடையே ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
அதேசமயம் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகிறார். இவரை தவிர சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் இந்த தேர்தலில் போட்டியிட வரிந்து கட்டி நிற்கின்றனர். இந்தநிலையில் அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி குறித்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதில் சுமார் 44 சதவீதம் பேர் ஜோ பைடன் ஆட்சியில் தங்களது பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக கூறி உள்ளனர்.
மேலும் சுமார் 37 சதவீதம் பேர் மட்டுமே ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். 56 சதவீதம் பேர் இவரது செயல்பாட்டை ஏற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதேசமயம் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகத்தை சுமார் 48 சதவீதம் பேர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது 2021-ல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தபோது இருந்ததை விட 10 சதவீதம் அதிகம் ஆகும்.
74 சதவீதம் பேர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு ஜோ பைடனுக்கு வயதாகி விட்டது என வாக்களித்துள்ளனர். எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனுக்கு பதிலாக வேறு ஒருவரை நிறுத்த வேண்டும் என 62 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக அந்த கருத்து கணிப்பு கூறுகிறது. இதன் மூலம் அங்கு தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.
- தனது பெயரை அவர்களது உடலில் பச்சை குத்தி விடுவது இவன் வழக்கம்
- பல வித சித்திரவதைகளை கையாண்டு தனது கூட்டத்திலிருந்து தப்பிப்பதை தடுப்பான்
அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரில் வசித்தவன் "சுகர் பேர்" (sugar bear) என அழைக்கப்பட்டு வந்த சோமோரி மோசஸ் (47).
2003 தொடக்கத்திலிருந்தே இவன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகளை காட்டி மயக்கி, பிறகு அவர்களை பல விதங்களில் அச்சுறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தான். தன்னை விட்டு அவர்கள் வெளியேறுவதை தடுக்க பல வழிமுறைகளை கையாண்டு வந்தான. அவர்களது உடலில் அவனது பெயரை பச்சை குத்தி விடுவான்.
ஒரு பெண் இவரை விட்டு தப்ப முயன்ற போது அவளை அடித்து காயங்களின் மேல் எலுமிச்சை சாற்றை ஊற்றினான். வேறொரு பெண்ணை மின் ஒயரால் அடித்து காயங்களில் உப்பை தடவினான். மற்றொரு பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி இத்தொழிலில் ஈடுபட வைத்தான்.
இந்நிலையில், 2017ல் லியாண்ட்ரா ஃபாஸ்டர் எனும் 32 வயது பெண்ணை அடித்து கொன்று விட்டான். பிறகு அவள் உடலை கத்தியாலும், அறத்தாலும் துண்டு துண்டுகளாக்கினான். சில பாகங்களை தனது வீட்டில் உள்ள ஃப்ரீசரில் மறைத்து வைத்த அவன், பல பாகங்களை எப்படியோ அழித்து விட்டான்.
லியாண்ட்ரா காணாமல் போனதாக வந்த புகாரை காவல்துறை விசாரித்து வந்தது. லியாண்ட்ராவை தேடி வந்த காவல்துறையினர் சோமோரியின் வீட்டை சோதனையிட்ட போது, "சோமோரி" என பச்சை குத்தப்பட்ட ஒரு உடல் பாகம் அவன் வீட்டில் சிக்கியது. இதனை தொடர்ந்த நடைபெற்ற தீவிர விசாரணையில் அவன் கைது செய்யப்பட்டான்.
குற்றத்தை ஒப்பு கொண்ட சோமோரி 15 வருட சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளான்.
- ரிட்ஜ்க்ரெஸ்ட் பகுதியில் 121-வது தெருவிற்கும் 134-வது வடக்கு நிழற்சாலைக்கும் அருகில் ஏரி உள்ளது
- 13-அடி நீள முதலையின் வாயில் மனித உடல் பாகங்கள் தென்பட்டன
அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் புளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ளது பினாலஸ் கவுன்டி பகுதி.
இப்பகுதியின் ஷெரீப் அலுவலகத்திற்கு அங்குள்ள நீர்நிலை ஒன்றில் ஒரு உடல் தென்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக அதிகாரிகள் களத்திற்கு சென்றனர். சம்பவ இடமான ரிட்ஜ்க்ரெஸ்ட் பகுதியில் 121-வது தெருவிற்கும் 134-வது வடக்கு நிழற்சாலைக்கும் அருகில் உள்ள நீர்நிலையில் ஒரு 13-அடி நீள முதலை தென்பட்டது. அதன் வாயில் ஒரு மனித உடலின் பாகம் தெரிந்தது.
இதனையடுத்து ஷெரீப் உத்தரவின் பேரில் அந்த முதலை சுடப்பட்டது. அதிகாரிகள் அதன் வாயிலிருந்த மனித உடல் பாகங்களை ஆய்வுக்காக பத்திரமாக வெளியில் எடுத்தனர். இந்த நடவடிக்கைக்கு ஷெரீப் அலுவலகத்தினருடன் அம்மாநில மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டனர்.
விசாரணையில், இறந்தது 41 வயதான சப்ரீனா பெக்காம் எனும் பெண்மணி என தெரிய வந்துள்ளது.
சில மணி நேரம் நடைபெற்ற இந்த நடவடிக்கையை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். "இவ்வளவு நீளமுள்ள ஒரு ராட்சச முதலை இங்குள்ள ஏரியில் இருக்கலாம் என நினைத்து கூட பார்த்ததில்லை" என இச்சம்பவம் குறித்து டெர்ரி வில்லியம்ஸ் எனும் அப்பகுதிவாசி தெரிவித்தார்.
சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமெரிக்காவில் வணிக வளாகம் அருகே 2 மர்ம மனிதர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
- இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகே 2 மர்ம மனிதர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார், என்ன காரணத்துக்காக இந்த சம்பவம் நடந்தது என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா ஒத்துழைப்பு வழங்கும்.
- பல விதங்களில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா. பொதுசபையின் 78-வது கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அவர், "இந்த ஆண்டு இறுதி வரையில், நாங்கள் தான் ஜி20-க்கு தலைமையாக இருப்போம். ஜி20 பதவிக்காலம் இருக்கும் போதும், முடிந்த பிறகும், நாங்கள் கூட்டாளியாகவும், பங்களிப்பாளராகவும், கூட்டணி அமைப்பவராகவும் எங்களுக்கே உரிய பாணியில் செயல்படுவோம். இதன் மூலம் மற்றவர்களையும் வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ள செய்வதில், நாங்கள் முன்னுதாரணமாக இருப்போம். எங்களது அனுபவங்கள் மற்றும் சாதனைகளை நல்ல விதத்தில் ஊக்கமளிக்கும் வகையில், பகிர்ந்து கொள்வோம்."
"இவை பல விதங்களில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு விவகாரத்தில், நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருந்து இருக்கிறோம். இந்த விவகாரத்தில் ஆப்பிரிக்க யூனியனை ஜி20-இல் இணைத்ததை நாங்கள் மேற்கோள் காட்ட விரும்புகிறோம். மேலும், இது தொடர்பான ஒத்துழைப்பு ஜி20-இல் மட்டுமின்றி அதை கடந்தும் தொடரும் என்றே நம்புகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.
- கொரோனா தடுப்பூசியை ஆறு மாத குழந்தைகள் துவங்கி அனைவரும் செலுத்திக் கொள்ளலாம்.
- ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசியின் தீவிரம், பலருக்கும் குறைந்து வருகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா மற்றும் வருடாந்திர தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் என்று வெள்ளை மாளிகை அறிவித்து இருக்கிறது. வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ மருத்துவரான கெவின் ஒ கானர், இது தொடர்பான தகவலை அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தினார்.
"குளிர்காலம் மற்றும் சளி, காய்ச்சல் காலம் துவங்க இருக்கும் நிலையில், அதிபர் அனைத்து அமெரிக்கர்களையும் தன்னை உதாரணமாக எடுத்துக் கொண்டு, பொது மக்கள் அவர்களது மருத்துவரை தொடர்பு கொண்டு தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தி இருக்கிறார்," என்று மருத்துவர் கெவின் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் இம்மாத துவக்கத்தில், புதிய வகை கொரோனா தடுப்பூசியை ஆறு மாத குழந்தைகள் துவங்கி அனைவரும் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தது. கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் குறைந்து இருக்கலாம், ஆனால் அமெரிக்காவில் இன்றும் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கும் நிலை உள்ளது.
ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசியின் தீவிரம், பலருக்கும் குறைந்து வருவதாக மருத்துவ வல்லுனர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக புதிய தடுப்பு மருந்து பலரின் உயிரை காக்கும் என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தான் ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும், அவருக்கு தொற்றின் தீவிரம் குறைவாகவே இருந்தது.