search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "california"

  • ஏ.சி. அல்லது ஹீட்டரில் இருந்து விஷவாயு கசிந்து 4 பேரும் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.
  • 4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

  கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் சுஜித் ஹென்றி(வயது38). இவரது மனைவி அலைஸ் பிரியங்கா(37). இவர்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பணிபுரிந்து வந்தனர். சுஜித் ஹென்றி பிரபல நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்திருக்கிறார்.

  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அலைஸ் பிரியங்காவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. கணவன்-மனைவி இருவரும் தங்களது மகன்கள் நோவா மற்றும் நாதன் ஆகியோருடன் கலிபோர்னியாவில் சான்மேட்டியோ பகுதியில் வசித்து வந்தார்கள்.

  விடுமுறை கிடைக்கும் போது சொந்த ஊருக்கு வந்து சென்றிருக்கின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அலைஸ் பிரியங்காவுக்கு, கேரளாவில் உள்ள அவரது தாய் போனில் அழைத்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

  இதனால் கலிபோர்னியாவில் உள்ள தங்களது உறவினர் ஒருவருக்கு போன் செய்து, அலைஸ் பிரியங்கா வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியிருக்கிறார். அதன்படி அவர்களும், அங்கு சென்றனர். அங்கு வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப் பட்டிருந்தது.

  எவ்வளவு அழைத்தும் யாரும் கதவை திறக்க வில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், அது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர்.

  அப்போது அங்கு சுஜித் ஹென்றி, அவரது மனைவி அலைஸ் பிரியங்கா மற்றும் அவர்களது 2 மகன்கள் உள்ளிட்ட 4 பேரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். ஏ.சி. அல்லது ஹீட்டரில் இருந்து விஷவாயு கசிந்து 4 பேரும் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

  ஆனால் சுஜித் ஹென்றி, அலைஸ் பிரியங்கா ஆகிய இருவரின் உடலிலும் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் இருந்தன. மேலும் அவர்களது வீட்டில கைத்துப்பாக்கி ஒன்றும் கிடந்துள்ளது. இதனால் சுஜித் ஹென்றி தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்காலம் என்று கருதப்படுகிறது.

  ஆனால் குழந்தைகளின் உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் எதுவும் இல்லை. ஆகவே அவர்களது மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. கணவன்-மனைவி இருவரின் உடலிலும் துப்பாக்கி குண்டு காயங்கள் இருப்பதால், அவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுத்து கொலை செய்துவிட்டு, அவர்களும் உயிரை மாய்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

  4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவில் குழந்தைகள் எப்படி இறந்தன என்பது தெரியவரும். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பூட்டிய வீட்டுக்குள் இறந்துகிடந்த சம்பவம் கலிபோர்னியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • 2023 ஜனவரி மாதம் கூகுள் 12 ஆயிரம் ஊழியர்களை நீக்கியது
  • 2024 ஜனவரி மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கியது

  கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் உலகின் முன்னணி பன்னாட்டு இணையதள மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம், கூகுள்.

  2015 அக்டோபர் மாதம் கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த சுந்தர் பிச்சை (51) நியமிக்கப்பட்டார்.

  2023 ஜனவரி மாதம், கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 12,000 (6 சதவீதம்) பேரை பணிநீக்கம் செய்தது.

  "இந்த பணிநீக்க நடவடிக்கை மிகப்பெரியது என்றாலும் நிறுவன வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது" என்று சுந்தர் பிச்சை அப்போது தெரிவித்திருந்தார்.

  2024 ஜனவரி மாதம், மீண்டும் நூற்றுக்கணக்கான பணியாளர்களை கூகுள் பணிநீக்கம் செய்தது.

  சமீபத்திய பணிநீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, 2024 ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

  அதில் அவர் கூறியிருப்பதாவது:

  கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

  நமது லட்சியங்கள் மிக பெரியவை. நமது முன்னுரிமைகளும் அதிகம். இத்தகைய ஒரு இலக்கு உள்ள போது நாம் பெரிய கடினமான முக்கிய முடிவுகளை எடுத்தாகத்தான் வேண்டும்.

  சில பணிகள் தேவைப்படாது; தேவைப்படாதவை நீக்கப்படும். ஆனால், அதன் எண்ணிக்கை கடந்த வருடம் போல் அதிகம் இருக்காது.

  இந்த நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் நிலவும் அடுக்குகளை (layers) நீக்குவதற்காக எடுக்கப்படுகிறது. சில ஊழியர்களுக்கு இவை முன்னரே அறிவிக்கப்பட்டு விட்டன.

  சில பணிக்குழுக்களில் ஆண்டு முழுவதும் பணிகளின் அவசியம் குறித்து ஆராயப்பட்டு வரும். அவ்வப்போது சில பணிகள் தேவையற்று போகலாம்.

  இவ்வாறு சுந்தர் தெரிவித்துள்ளார்.

  தனது சுற்றறிக்கையில் எங்குமே "லே ஆஃப்" அல்லது "ஜாப் கட்ஸ்" எனும் பணிநீக்கத்தை குறிக்கும் வார்த்தைகளை சுந்தர் பிச்சை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்தியாவில், புத்தாண்டு முதல் 2 வாரங்களிலேயே 45க்கும் மேற்பட்ட ஐடி தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் 7500க்கும் மேற்பட்ட பணியாளர்களை அதிரடியாக நீக்கிய நிலையில், இது  தொடர்ந்தால் தங்கள் எதிர்காலம் என்னவாகும் என மென்பொருள் துறை ஊழியர்கள் கவலையில் உள்ளனர்.

  • திருட வந்த கும்பலில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இருந்தனர்
  • இச்சம்பவங்களால் பலர் வாழ்வாதாரத்தையே இழக்கின்றனர் என்றார் ராமிரெஸ்

  கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகர எல்லைக்கு அருகே உள்ளது காம்ப்டன் (Compton).

  காம்ப்டனில் மெக்சிகோவிலிருந்து வந்த குடும்பத்தை சேர்ந்த ரூபென் ராமிரெஸ் ஜுனியர் என்பவர் "ரூபென்'ஸ் பேக்கரி அண்ட் மெக்சிகன் ஃபுட்" எனும் ஒரு கடை நடத்தி வந்தார்.


  கடந்த வெள்ளிக்கிழமையன்று அவர் கடையின் முன் திடீரென 100க்கும் மேற்பட்டோர் கொண்ட ஒரு கும்பல் கடையை சூறையாட வந்தது. அக்கும்பலில் சிலர் ஒரு வெள்ளை நிற கியா (Kia) காரால் கண்ணாடி கதவு மீது மீண்டும் மீண்டும் மோதி கடையை உடைத்தனர்.

  கடைக்குள் நுழைந்த அந்த கும்பல் சூறையாடியது. அவர்கள் தங்கள் இஷ்டம் போல் அங்குள்ள அலமாரிகளை உடைத்து உணவு பண்டங்களையும் வேறு சில பொருட்களையும் பெருமளவில் கொண்டு சென்றனர்.


  அதில் முக்கியமாக பெருமளவு இறைச்சிகளும், மளிகை பொருட்களும், லாட்டரி டிக்கெட்டுகளும் இருந்தன.

  இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால், ராமிரெசுக்கு சுமார் $70 ஆயிரம் இழப்பு ஏற்பட்டது.

  இதை தவிர, கடையை மீண்டும் சுத்தப்படுத்தி அங்கிருந்த கண்ணாடி துகள்களை அகற்றவும் நீண்ட நேரமானது.

  இது குறித்து ராமிரெஸ் தெரிவித்ததாவது:

  ஆங்காங்கு இது போல் சிறு சம்பவங்களை கண்டிருந்தாலும், என் கடையில் நடந்தது போல் ஒரு சூறையாடலை இதற்கு முன் கண்டதில்லை. கண்காணிப்பு கேமிரா படக்காட்சிகளை காவல்துறையினர் காட்டினார்கள். அவர்களில் ஒருவரையும் நானோ என் குடும்பத்தினரோ இதற்கு முன் கண்டதில்லை. காம்ப்டன் காவல்துறை மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் காவல்துறை கண்டிப்பாக குற்றவாளிகளை கண்டு பிடிப்பார்கள் என நம்புகிறோம். பிரெட் செய்வதற்கான உபகரணங்களையும் அந்த கும்பல் சேதப்படுத்தி விட்டது. எங்கள் முதல் குறிக்கோள் கடையை மீண்டும் முன்னர் இருந்த நிலைக்கு கொண்டு செல்வதுதான். எங்கள் குடும்பம் மீள எத்தனை நாட்களாகும் என தெரியவில்லை. இது போன்ற சம்பவங்களால் பலர் வாழ்வதாரத்தையே இழக்கின்றனர். ஆனால், இதுவரை யாரும் தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை.

  இவ்வாறு அவர் வேதனையுடன் கூறினார்.

  • ஜிம் நண்பர்கள் அர்னால்டை தங்கள் கொண்டாட்டங்களில் இணைத்து கொள்வார்கள்
  • என்னை போல் பலரும் பிறருக்கு உதவிட வேண்டும் என விரும்புகிறேன் என்றார் அர்னால்ட்

  1965ல் ஜோ கோல்ட் (Joe Gold) எனும் தொழில்முறை உடற்பயிற்சியாளர் தொடங்கிய கோல்ட்'ஸ் ஜிம் (Gold's Gym) தொடர் உடற்பயிற்சி கூடம் அமெரிக்கா முழுவதும் பிரபலமானது.

  இங்கு உடற்பயிற்சி பயின்றவர்களில் முன்னாள் கலிபோர்னியா கவர்னரும், ஹாலிவுட் முன்னணி ஹீரோவுமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger) ஒருவர்.

  ஆஸ்திரியா நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த அர்னால்ட், ஹீரோவாக பிரபலமடையும் முன்பு போதுமான வருவாய் இல்லாமல் இருந்த போது கோல்ட்'ஸ் ஜிம் நண்பர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது தங்களின் கொண்டாட்டத்தில் அர்னால்டையும் இணைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

  இதை மறக்காத அர்னால்ட் கடந்த 30 வருடங்களாக அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாநிலத்தில் லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) நகருக்கு அருகே உள்ள பாயில் ஹைட்ஸ் (Boyle Heights) பகுதியில் ஹாலென்பெக் யூத் சென்டர் (Hollenbeck Youth Center) எனும் சமூக நல கூடத்தில் ஆண்டுதோறும் ஏழை எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


  தனது செயல் குறித்து அவர் தெரிவித்ததாவது:

  நான் அமெரிக்கா வந்த போது ஜிம் நண்பர்கள் என்னிடம் கனிவுடன் நடந்து கொண்டனர். எனக்கு பல பரிசுகளை அளித்தார்கள். அயல்நாட்டை சேர்ந்தவனாக கருதாமல் என்னையும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நடத்தினர். அழகான கிறிஸ்துமஸ் மரம் செய்து வைத்திருப்பார்கள். அந்த நினைவுகள் மிக இனிமையானவை. அந்த மகிழ்ச்சியை நான் பலருக்கும் மீண்டும் வழங்க நினைக்கிறேன். அதனால்தான் 30 வருடங்களுக்கும் மேலாக இந்த செயலை தவறாமல் கடைபிடிக்கிறேன். எனக்கு இது மிகுந்த மனநிறைவை தருகிறது. இதன் மூலம் பலரும் இதே போன்று பிறருக்கு உதவிட வேண்டும் என விரும்புகிறேன்.

  இவ்வாறு அர்னால்ட் கூறினார்.

  பணம், புகழ், பதவி மற்றும் உலகெங்கும் ரசிகர்கள் என அனைத்தையும் பெற முடிந்த நிலையிலும் தான் கடந்து வந்த பாதையை மறக்காமல் 30 வருடங்களுக்கும் மேலாக ஒரு நற்செயலை தொடர்ந்து செய்து வரும் அர்னால்டின் உதவும் மனப்பான்மை சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டப்படுகிறது.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • டிராவிஸிற்கு சுமார் ரூ.25 லட்சம் ($30,000) பரிசு தொகையாக கிடைத்தது
  • 687 'பை' உணவு வகைகளை தயாரிக்கலாம் என்கின்றனர் சமையல் நிபுணர்கள்

  அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் ஹாஃப் மூன் பே (Half Moon Bay) பகுதியில் விவசாயிகளுக்கு ஒரு வித்தியாசமான போட்டி நடைபெற்றது. தங்கள் விவசாய நிலங்களில் மிக பெரிய பூசணிக்காய் வளர்ப்பதில் நடைபெற்ற அந்த போட்டியில் பல விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நீண்ட காலமாக நடைபெற்று வரும் இப்போட்டியில் இது 50-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

  இதில் மின்னசோட்டா (Minnesota) மாநிலத்தை சேர்ந்த 43 வயதான தோட்டக்கலை வல்லுனரும், பயிற்சியாளருமான டிராவிஸ் கிரெய்கர் (Travis Greiger) என்பவரும் கலந்து கொண்டார்.

  இவர் வளர்த்த பூசணிக்காய் மிக பெரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, இவர் முதல் பரிசை வென்றவராக அறிவிக்கப்பட்டார். டிராவிஸிற்கு சுமார் ரூ.25 லட்சம் ($30,000) பரிசு தொகையாக கிடைத்தது.

  அவர் தோட்டத்தில் விளைந்த 1,247 கிலோகிராம் எடையுள்ள பூசணிக்காயை பலரும் கண்டு வியந்தனர். டிராவிஸ் 30 வருடங்களுக்கும் மேலாக பூசணிக்காய் வளர்ப்பு உள்ளிட்ட விவசாயத்தில் பெரும் ஆர்வலராக செயல்பட்டு வருபவர்.

  டிராவிஸ் வளர்த்த பூசணிக்காயை கொண்டு அமெரிக்கர்கள் விரும்பி உண்ணும் 'பை' (pie) எனும் உணவு வகைகளை சுமார் 687 எண்ணிக்கைகள் வரை தயாரிக்க முடியும் என்கின்றனர் சமையல் நிபுணர்கள்.

  இப்போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் வளர்த்த பூசணிக்காய் டிராவிஸ் வளர்த்ததை விட 113 கிலோகிராம்கள் எடை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

  • லோமா லிண்டா (Loma Linda) பல்கலைக்கழக மருத்துவமனையில் பிரையன்னா சேர்க்கப்பட்டார்
  • டாக்டர். ஆரோன் ராபிஸன் தலைமையில் 10 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது

  அமெரிக்காவில் வசித்து வரும் கிறிஸ்டல் பாட்லி எனும் பெண்ணின் மகள், 6 வயதான பிரையன்னா பாட்லி (Brianna Bodley).

  விளையாட்டு, கல்வி என உற்சாகமாக இருந்த பிரையன்னாவிற்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனால் அச்சிறுமியின் கல்வி தடைபட ஆரம்பித்தது. மேலும் அவருக்கு பக்கவாதமும் ஏற்பட்டது. நடக்க முடியாத வகையில் அவள் கால்கள் மடங்கி கொள்ளும்.

  கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா (Loma Linda) பல்கலைக்கழக மருத்துவமனையில் அச்சிறுமி அனுமதிக்கப்பட்டாள். அவளுக்கு "ராஸ்முஸ்ஸென்'ஸ் என்சஃபலைட்டிஸ்" (Rasmussen's Encephalitis) எனும் அரிய வகை மூளை அழற்சி நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படடது. இதனால் அவள் மூளையின் ஒரு பாகம் சுருங்கியிருப்பதும் தெரிய வந்தது. அவளுக்கு வலிப்பு நோய்க்கு எதிரான மருந்துகளும் ஸ்டீராய்டு மருந்துகளும் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவள் நிலை சீரடையவில்லை. கடந்த ஜனவரி மாதம் அவள் நிலைமை மோசமடைய தொடங்கியது.

  அரியவகை நோயான இதற்கு சிகிச்சையாக ஒரு பக்க மூளையின் செயலாக்கத்தை நிறுத்துவதுதான் நிரந்தர தீர்வு என மருத்துவர்கள் கண்டறிந்தனர். அந்த மருத்துவமனையின் டாக்டர். ஆரோன் ராபிஸன் தலைமையில் 10 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில் பல துறை மருத்துவர்களும் பங்கேற்றனர்.

  வெற்றிகரமாக நடைபெற்ற இந்த சிகிச்சைக்கு பிறகு அச்சிறுமி தற்போது நலமாக தேறி வருகிறார்.

  பல வருடங்களுக்கு முன், இதே நோய்க்கு அழற்சி ஏற்பட்ட மூளையின் ஒரு பகுதியையே நீக்குவது மட்டும்தான் சிகிச்சை முறையாக இருந்து வந்தது. தற்போது மருத்துவர்களின் திறமையாலும் மருத்துவ தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியாலும் மூளையின் ஒரு பக்க செயலாக்கத்தை மட்டும் நிறுத்த முடிவதால் இது ஒரு வியக்கத்தக்க முன்னேற்றமாக மருத்துவ உலகில் பார்க்கப்படுகிறது.

  • பிக் பாப்'ஸ் அங்காடியில் மதுபானம் விற்பனையாகிறது
  • கரன் விசாரிக்க தொடங்கியதும் அந்த இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

  கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து சுமார் 30 கிலொமீட்டர் தொலைவில் உள்ளது மேற்கு கொவினா (West Covina) பகுதி.

  இதன் மேற்கு ப்யுன்டே நிழற்சாலையில் (West Puente Avenue) "பிக் பாப்'ஸ் லிக்கர்ஸ் அண்ட் மார்கெட்" எனும் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு பலவிதமான மக்களுக்கு தேவையான பொருட்களுடன் பல மதுபானங்களும் விற்பனையாகிறது.

  இங்கு இரு தினங்களுக்கு முன் மாலை 09:00 மணியளவில் 25 வயதிற்கு உட்பட்ட 2 ஆண்கள் பொருட்களை வாங்குவது போல் உள்ளே நுழைந்தனர். உள்ளே நுழைந்த அவர்கள், அங்குள்ள பொருட்களை பிறர் கவனிக்காத வகையில் திருட தொடங்கினர்.

  அங்கு மேற்பார்வையில் இருந்த கரன் சிங் (Karan Singh) எனும் 34 வயதான இந்தியர், இவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க தொடங்கினார். அவர்கள் திருடுவதை உறுதி செய்து கொண்ட கரன், அவர்களை இடைமறித்து விசாரிக்க தொடங்கினார். அப்போது அவர்களுக்குள் நடந்த வாக்குவாதம் மோதலாக மாறியது.

  இதில் அந்த இருவரும் கரனை திடீரென துப்பாக்கியால் சுட்டனர். சுட்டதும் அந்த இருவரும் ஒரு காரில் தப்பி சென்றனர்.

  அதிர்ச்சியடைந்த அந்த அங்காடியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் அந்நாட்டு அவசர உதவி எண்ணான 911-ஐ அழைத்தனர். விரைந்து வந்த சேவை பணியாளர்கள் கரனை உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

  இந்த அங்காடியின் உரிமையாளரின் உறவினரான கரன், கடந்த ஒரு வருடம் முன்பு அமெரிக்கா வந்தவர். இவருக்கு திருமணமாகி மனைவியும் 12 வயது மகனும் இந்தியாவில் உள்ளனர். மனைவியையும் மகனையும் அமெரிக்காவிற்கு அழைத்து வர பணம் சேமிக்க கரன் தீவிரமாக முயன்று வந்தார்.

  கரனை கொன்றவர்களை பிடிக்க மேற்கு கொவினா காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

  • எஸ்பி403 சட்டத்திற்கு அம்மாநில இரு அவைகளும் ஒப்புதல் அளித்தன
  • பாகுபாட்டை களைய முன்னரே பல சட்டங்கள் உள்ளன என கவர்னர் தெரிவித்தார்

  அமெரிக்காவில் உள்ள தெற்காசிய மற்றும் இந்து மதத்தை சேர்ந்த புலம் பெயர்ந்தவர்கள் சாதிப்பாகுபாடுகளை ஊக்குவிப்பதாக கூறி, அத்தகைய நடவடிக்கைகளிலிருந்து இந்து மதத்தை சேர்ந்தவர்களை பாதுகாக்கும் வகையில் அந்நாட்டின் கலிபோர்னியா மாநில சட்டசபையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஆப்கானிஸ்தான் வம்சாவளி அமெரிக்கரான அயிசா வகாப் எனும் உறுப்பினரால் கடந்த மார்ச் 22 அன்று "எஸ்பி403" (SB403) எனும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அம்மாநில இரு அவைகளும் ஒப்புதல் அளித்தன.

  ஆனால், இம்மசோதா சட்டமாவதை அம்மாநில கவர்னர் கெவின் நியூசாம் (Gavin Newsom) தனது "வீட்டோ" (Veto) அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து விட்டார்.

  நேற்று, இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:

  கலிபோர்னியாவில் எந்த நாட்டினராக இருந்தாலும் எங்கு வாழ்ந்து வந்தாலும் அவர்கள் மரியாதையுடனும் சம உரிமையுடனும் நடத்தப்பட வேண்டும் என்பதில் நாம் எப்போதுமே உறுதியாக உள்ளோம். சாதி உள்ளிட்ட எந்த பாகுபாடுகளாலும் மக்கள் புறக்கணிக்கப்படாதிருக்கும் வகையில் பாதுகாக்க இங்கு ஏற்கெனவே பல வலுவான சட்டங்கள் உள்ளன. பாலினம், இனம், உடல் நிறம், மதம், பூர்வீகம் மற்றும் நாடு உள்ளிட்ட இதர காரணங்களுக்காக மக்களிடையே பாகுபாடு காட்டுவது இங்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த புதிய சட்டம் தேவையில்லை என கருதுவதால் நான் இதில் கையெழுத்திட போவதில்லை.

  இவ்வாறு கெவின் நியூசாம் தெரிவித்தார்.

  "சாதி எனும் சர்ச்சைக்குரிய வார்த்தையை வேண்டுமென்றே சேர்த்து, மக்களின் சிவில் உரிமைகளை தடுக்கும் முயற்சியாக இந்துக்களிடையே அச்சத்தையும் பிரிவையும் ஏற்படுத்த கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவை சட்டமாக்காமல் தடுத்ததன் மூலம் கவர்னர் நியூசாம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்திருக்கிறார்" என கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும்விதமாக அம்மாநிலத்தில் வாழும் தெற்காசிய மற்றும் இந்துமதத்தை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.

  ஆனால், இச்சட்டத்தை கொண்டு வர தீவிரமாக முயற்சித்து வந்த ஈக்குவாலிட்டி லேப் (Equality Lab) அமைப்பினர், சட்டசபை உறுப்பினர் வகாப், மற்றும் வேறு சில அமைப்புகள் தற்போதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • சுமார் 5 மணி நேர பயணம் என்பதால் பலர் உறங்கி விட்டனர்
  • தற்போது வரை அப்பெண்ணால் சரி வர பயமின்றி உறங்க முடியவில்லை

  கடந்த 2020 பிப்ரவரி மாதம், அமெரிக்காவில் ஓஹியோ (Ohio) மாநில க்ளீவ்லேண்டு (Cleveland) நகரிலிருந்து கலிபோர்னியா (California) மாநில லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) நகருக்கு ஒரு பெண் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

  மூவர் அடுத்தடுத்து அமரும் இருக்கைகளில் நடுவில் உள்ள இருக்கை அவருக்கு ஒதுக்கப்பட்டதால், அதில் அமர்ந்து வந்த அவர் பயணத்திற்கு இடையே உறங்கி விட்டார். சுமார் 5 மணி நேர பயணம் என்பதால் பல பயணிகள் உறங்கி கொண்டிருந்தனர். மேலும், விமானத்தில் இருக்கைகளின் முதுகுப்பகுதி உயரமாக வடிவமைக்கப்படுவதால் முன் வரிசையிலோ பின் வரிசையிலோ என்ன நடக்கிறது என்பது சக பயணிகளுக்கு தெரிவதில்லை.

  அப்பெண்ணிற்கு அடுத்த இருக்கையில், 50 வயதான மொஹம்மத் ஜாவத் அன்சாரி என்பவர் அமர்ந்திருந்தார். அப்பெண் ஆழ்ந்து உறங்குவதை கண்ட அன்சாரி, அப்பெண்ணின் ஆடைகளின் வழியாக அவரது கால்களின் மேற்பகுதியை தொட்டு தகாத செயல்களில் ஈடுபட்டார்.

  உடனடியாக விழித்து கொண்ட அப்பெண் ஆடைகளை சரி செய்து கொண்டு, அன்சாரியின் கையை தள்ளி விட்டு, அந்த இருக்கையில் இருந்து வேறு இடத்திற்கு மாறி சென்றார். மேலும், இது குறித்து உடனே விமான ஊழியர்களிடம் புகாரளித்தார்.

  விமானம் தரையிறங்கியதும் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

  இந்த அத்துமீறலால் அப்பெண் அதிர்ச்சியடைந்து பயந்து விட்டார். அந்த விமான பயணம் முழுவதும் அவர் அழுது கொண்டே வந்தார். இதனை பயணத்தில் இருந்த பல பயணிகள் நேரில் கண்டு சாட்சியமும் அளித்தனர். அன்சாரியின் இந்த செயலால் தற்போது வரை அந்த பெண்ணிற்கு சரிவர உறங்க முடியவில்லை.

  ஆனால், அன்சாரி, இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்தார்.

  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்சாரிக்கு சுமார் ரூ. 35 லட்சம் ($40,000) அபராதமும், 21 மாத சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.

  • அப்பணிக்கு தேவையான தகுதி சான்றிதழ்களை பெற்றவர், மேத்யூ
  • லகுனா பீச் பகுதி தம்பதியினர் முதல் முதலாக புகார் அளித்தனர்

  அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ளது கோஸ்டா மேஸா (Costa Mesa). இப்பகுதியை சேர்ந்தவர் மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி (Matthew Zakrzewski).

  மேத்யூ, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள பல இல்லங்களில் பல்வேறு சமயங்கள் குழந்தைகளை பார்த்து கொள்ளும் பொறுப்பில் இருந்து வந்தார். இவ்வேலைக்காக பெற்றோர்கள் தேடும் நபர்களில் முக்கியமானவராக இருந்து வந்தவர் மேத்யூ. அவரது அதிகாரபூர்வ வலைதளத்தில் தன்னை "அசல் குழந்தை பராமரிப்பாளர்" (original babysitter) என விளம்பர படுத்தி கொண்ட மேத்யூ, தன்னை குழந்தைகளுக்கு ஆலோசகராகவும், மூத்த சகோதரனாகவும், விடுமுறை காலங்களில் குழந்தைகளை பார்த்து கொள்பவராகவும் முன்னிலை படுத்தி கொண்டார்.

  அந்த பணிக்கு அந்நாட்டில் தேவைப்படும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

  2019 மே மாதம் அம்மாநில லகுனா பீச் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்களது குழந்தையை பார்த்து கொள்ளும் பொறுப்பில் இருந்த மேத்யூ, அக்குழந்தையுடன் தகாத உறவில் ஈடுபட முயற்சித்ததாக குற்றம் சாட்டி புகாரளித்தனர்.

  உடனடியாக விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், மேத்யூ முன்னர் பணி செய்த இடங்களில் உள்ள குழந்தைகளையும் அவர்களின் பெற்றொர்களிடமும் விசாரணையை தீவிரமாக்கிய போது அவர் லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் மற்றொரு 7 வயது சிறுவனிடமும் தெற்கு கலிபோர்னியாவில் பல வீடுகளில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்களிடமும் இக்குற்றத்தை புரிந்திருப்பதையும் கண்டு பிடித்தனர்.

  மேலும், 2014 ஜனவரி 1லிருந்து 2019 மே 17 வரை மேத்யூ 16க்கும் மேற்பட்ட சிறுவர்களிடம் தகாத உறவில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறுவர்கள் அளித்த சாட்சியங்களின் பேரில் ஆரஞ்ச் கவுன்டி அரசு வழக்கறிஞர் அலுவலகம் பதிவு செய்த வழக்கில் அந்நாட்டு ஜூரி அமைப்பு அவர் குற்றத்தை உறுதி செய்துள்ளது.

  குறைந்தபட்சமாக அவருக்கு 690 வருடங்களுக்கும் மேல் சிறை தண்டனை கிடைக்க இருக்கிறது.

  இவ்வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வர உதவிய காவல்துறையையும், சாட்சியம் அளித்த குழந்தைகளையும், தயக்கமின்றி புகாரளித்த பெற்றோர்களையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.