என் மலர்
உலகம்

விவாகரத்து வழக்கு: ஸ்ரீதர் வேம்பு ரூ.15,000 கோடிக்கு பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
- ஸ்ரீதர் வேம்புவின் விவாகரத்து வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
- கலிபோர்னியாவில் சட்டப்படி மனைவியின் ஒப்புதல் இல்லாமல் கணவர், சொத்துகளை விற்க முடியாது.
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ (ZOHO) நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு. இவருக்கு பிரமிளா என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். அவர் கலிபோர்னியாவில் வசித்து வந்தபோது மனைவி பிரமிளாவை பிரிவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்தார்.
இவர்களது விவாகரத்து வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனிடையே, ஜோஹோ நிறுவன சி.இ.ஒ ஸ்ரீதர் வேம்பு, ஆட்டிசம் குறைபாடு உடைய மகனையும், தன்னையும் 2020ம் ஆண்டு நிர்கதியாக விட்டுச் சென்றுவிட்டதாக அவரது மனைவி பிரமிளா குற்றச்சாட்டினார்.
மேலும், கலிபோர்னியாவில் தன்னுடன் வாழ்ந்த காலத்திலேயே ஜோஹோ நிறுவனத்தில் அவர் பெயரில் இருந்த பங்குகள் மற்றும் அறிவுசார் சொத்துகளை தனக்கு தெரியாமலேயே அவரது சகோதரி, சகோதரியின் கணவர் பெயருக்கு மாற்றிவிட்டதாகவும், விவாகரத்துக்கு பிறகு தனக்கு சொத்தில் சரிபாதியை ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்ற நிலையை தவிர்க்வே ஸ்ரீதர் வேம்பு இவ்வாறு செய்ததாகவும் இந்தியா திரும்பிய பிறகு ஸ்ரீதர் வேம்பு ஒரு முறை கூட என்னையும், மகனையும் பார்க்க வரவில்லை என்றும் பிரமிளா குற்றம்சாட்டியுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கலிபோர்னியாவில் சட்டப்படி மனைவியின் ஒப்புதல் இல்லாமல் கணவர், சொத்துகளை விற்க முடியாது. ஆனால், வேம்பு அவரது உறவினர்கள் பெயர்களில் சொத்துகளை மாற்றி, மனைவி பிரமிளாவையும் அவரது மகனையும் நிர்கதியாக விட்டுச் சென்றுவிட்டதாக பிரமிளா சார்பில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடினர்.
இந்நிலையில், கலிபோர்னியா நீதிமன்றம் விவாகரத்து வழக்கில் ஸ்ரீதர் வேம்புவை தனது மனைவியின் உரிமைகளை பாதுகாக்க $1.7 பில்லியன் மதிப்பிலான (சுமார் ரூ.15,000 கோடி) பத்திரம் (bond) தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
கலிபோர்னியா சட்டப்படி, திருமணத்திற்கு பிறகு உருவான சொத்துகள் இருவரின் உரிமையாகப் பகிரப்பட வேண்டும் என்ற விதியின் படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






