search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி"

    • தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அரசு நடை முறைப்படுத்த வேண்டும்.
    • வயலின் உரிமையாளரான சரவணன் என்ற உழவர் குடிகாரர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே வயலில் மது அருந்தி, வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டிக்கேட்ட அந்த வயலின் உரிமையாளரான சரவணன் என்ற உழவர் குடிகாரர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். பொது இடங்களில் சட்ட விரோதமாக மது அருந்துவது மட்டுமின்றி, அதை தட்டிக்கேட்பவர்களை கொடூரமாக குத்திக் கொலை செய்யும் அளவுக்கு குடிகாரர்களுக்கு துணிச்சல் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியும், கவலையுமளிக்கிறது. இது தான் திராவிட மாடலா? என்ற வினாவும் எழுகிறது.

    தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி, தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அரசு நடை முறைப்படுத்த வேண்டும். குடிகாரர்களால் கொல்லப்பட்ட உழவர் சரவணன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தென்னை மரங்களை வெட்டுவதற்கு மனமில்லாத சண்முகசுந்தரம் தனக்கு சொந்தமான மற்றொரு தோட்டத்தில் நடுவதற்கு திட்டமிட்டார்.
    • 35 மரங்களில் கடந்த மாதம் 25 மரங்கள் கொண்டு வந்து இடம் மாற்றம் செய்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் சண்முகசுந்தரம் (வயது 54). இவர் தனக்கு சொந்தமான இடத்தில் புதியதாக வீடு கட்டும் பணியை தொடங்க நினைத்தார். அப்போது அந்த இடத்தில் சுமார் 50 தென்னை மரங்களில் காய்கள் காய்த்து இருந்தது.

    அதனை வெட்டுவதற்கு மனமில்லாத சண்முகசுந்தரம் தனக்கு சொந்தமான மற்றொரு தோட்டத்தில் அந்த தென்னை மரங்களை நடுவதற்கு திட்டமிட்டார். இதையடுத்து மரங்களில் காய்த்து இருந்த தேங்காய்களை பறித்து விற்பனை செய்தார். பின்னர் 50 தென்னை மரங்களில் 35 தென்னை மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து, கிரேன் மூலம் லாரியில் ஏற்றி சுமார் ஒரு கி.மீ. தூரம் உள்ள மற்றொரு தோட்டத்தில் நடவு செய்தார். 

    இதுகுறித்து விவசாயி சண்முகசுந்தரம் கூறுகையில், தனது தந்தை காலத்தில் வைக்கப்பட்ட இந்த தென்னை மரங்களில் இன்று வரை நல்ல முறையில் காய்கள் காய்த்து இளநீர், தேங்காய், கொப்பரை தேங்காய், மட்டை மற்றும் ஓலை என பல்வேறு வகைகளில் பயன்பட்டு வருகிறது. இந்த மரங்களை வெட்டி விற்பனை செய்தால் மீண்டும் இந்த மாதிரி மரம் வளர்க்க 20 வருடம் ஆகும். எனவே என் தந்தை கந்தசாமி நினைவாக இந்த மரங்களை இவ்வாறு இடம் மாற்றி மீண்டும் புத்துயிர் கொடுத்து வளர்த்து வருகிறேன்.

    இந்த 35 மரங்களில் கடந்த மாதம் 25 மரங்கள் கொண்டு வந்து இடம் மாற்றம் செய்தேன். அதில் 23 மரங்கள் தற்போது மீண்டும் காய்கள் காய்க்க ஆரம்பித்துள்ளது. இரண்டு மரங்கள் மட்டும் பட்டுப்போனது. இன்று 10 மரங்கள் கொண்டு வந்து மாற்றி உள்ளோம். இவை அனைத்தும் நல்ல முறையில் உள்ளது. குறிப்பாக இடமாற்றம் செய்யப்பட்ட 35 மரங்களில் 33 மரங்கள் நல்ல முறையில் வளர்ந்துள்ளது. காய்கள் காய்க்கவும் தொடங்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
    • பருவம் தப்பி போவதால் பால் அடைத்து நெல் மணிகள் திரட்சி ஆகாமல் நோஞ்சான் நெல்லாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் பொய்யான்குளம், நத்தகுளம், நல்லூர் கீழ்க்குளம் ஆகியவற்றின் வழியாக ஆயிரத்து 200 ஏக்கரில் நெல் விவசாய நிலங்கள் உள்ளன.

    நடப்பு பருவமழை காலத்தில் இந்த குளங்களுக்கு தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து டிசம்பர் மாத தொடக்கத்தில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டன. உழவு செய்து உரமிட்டு விதைக்கப்பட்ட பிறகு அடுத்ததாக நாற்று நடும் பணியை தொடங்க இருந்த சமயத்தில் யாருமே சற்றும் எதிர்பாராத விதத்தில் 2 நாட்களாக தொடர்ந்து பெரும் மழை பெய்தது.

    இதனால் பெருக்கெடுத்த வெள்ளத்தின் வேக ஓட்டம் காரணமாக வளர் இளம் பருவத்தில் இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் அடியோடு அடித்து செல்லப்பட்டுவிட்டன.

    இதனால் ஏற்கனவே உழவிட்டு உரமிட செலவு செய்தது, விதைநெல் வீணானது ஆகியவற்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இதையும் தாண்டி மீண்டும் வயலை சீர்படுத்தி மறு விவசாயத்தை தொடங்கலாம் என்றால், விதை நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

    விவசாயிகள் கடந்த ஆண்டு அறுவடைக்குப் பிறகு தாங்கள் சேமித்து வைத்திருந்த விதை நெல் முழுவதுமாக வெள்ளத்தோடு போய்விட்ட நிலையில் இனி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். மாற்று ஏற்பாடுகளை செய்ய அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம், விவசாய அலுவலகங்களை தொடர்பு கொண்டால் அங்கும் விதைநெல் கைவசம் இல்லை என்கிற பதிலே கிடைக்கிறது. வேறு இடங்களில் இருந்து உடனடியாக இங்கு விதை நெல் வரவழைத்து தர வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இது பற்றி நத்தகுளம் விவசாய சங்க துணை தலைவரான ஆறுமுகநேரி மாணிக்கம் கூறியதாவது:-

    தற்போதைய பெருமழை வெள்ளத்தால் திருச்செந்தூர், ஆறுமுகநேரி வட்டார பகுதியில் பிசான சாகுபடி விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது. கையிருப்பு விதை நெல் கிட்டத்தட்ட 80 சதவீத விவசாயிகளிடம் இருந்து மழை வெள்ளத்தால் அழிந்து விட்டது. மீதி 20 சதவீத விவசாயிகளிடம் மட்டுமே நெல் வித்துகள் கைவசம் உள்ளன. நிலைமையை புரிந்து கொண்டு போர்க்கால அடிப்படையில் வேளாண் துறையினர் வேறு மாவட்டங்களில் இருந்து நெல் வித்துகளை இங்கு வரவழைத்து தரவேண்டும்.

    அப்படி தந்தால் கூட காலதாமதமான விவசாயம் என்ற வகையில் முளைக்கும் பயிர் கடுமையான நோய் தாக்குதலுக்கு உள்ளாகும். பருவம் தப்பி போவதால் பால் அடைத்து நெல் மணிகள் திரட்சி ஆகாமல் நோஞ்சான் நெல்லாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

    இதனால் மறு விவசாயத்திலும் விவசாயிகளுக்கு பலத்த பாதிப்பு ஏற்படும் நிலையே தெரிகிறது. அதனால் பாரம்பரிய நெல் விதைகளை தவிர்த்து விட்டு இந்த முறை நோய்களை தாக்குப்பிடிக்கக் கூடிய ஒட்டு ரக விதைகளுக்கு அரசின் வேளாண் துறை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    மேலும் தற்போது ஏற்பட்டுள்ள விவசாயத்தின் பாதிப்பை குறித்து உடனடியாக கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவியும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நல்ல விளைச்சல் இருக்கும் என்ற நம்பிக்கையில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.
    • பருவநிலை மாற்றம், போதிய மழை இல்லாத காரணங்களால், பூச்சி தாக்குதல் கரும்பு பயிர்களை வெகுவாக பாதித்தது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு பிறகு அதிகளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

    குறிப்பாக திருவையாறு பகுதியில் விளையும் கரும்புகளுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. ஆண்டுதோறும் திருவையாறு மற்றும் சுற்றியுள்ள திருக்காட்டுப்பள்ளி, வளப்பகுடி, நடுபடுகை, நடுக்காவேரி பகுதிகளில், பொங்கலுக்கான செங்கரும்பு ஆண்டுதோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்படும்.

    இப்பகுதிகளில் விளையும் கரும்பின் சுவையும், தன்மையும் சிறப்பாக இருப்பதால், வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஒரு மாதத்திற்கு முன்பே கரும்பை பார்த்து, முன்பணமும் விவசாயிகளிடம் கொடுத்து சென்று விடுவார்கள்.இதனால் தான் இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கரும்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த ஆண்டும் நல்ல விளைச்சல் இருக்கும் என்ற நம்பிக்கையில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.

    ஆனால் பருவநிலை மாற்றம், மற்ற மாவட்டங்களில் பெய்த பருவமழையில் பாதியளவு கூட தஞ்சை மாவட்டத்தில் பெய்யாதது போன்ற காரணங்களால் பத்து மாத பயிரான பொங்கல் கரும்பு தற்போது 6 அடிக்கு மேல் வளந்திருக்க வேண்டிய நிலையில் மூன்று அடிக்கு மேல் வளராமல், தோகை பழுப்பு நிறமாக மாறி உள்ளது. மேலும் பூச்சி தாக்குதலால் ஒரு கரும்பு பாதித்தால், அருகில் உள்ள மற்ற கரும்புகள் பாதிப்பை சந்தித்துள்ளது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    இதனால் பாதிக்கப்பட்ட கரும்புகளை அப்புறப்படுத்த விவசாயிகள் கூடுதல் செலவு செய்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே காவிரியில் போதிய நீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை விளைச்சல் கடுமையாக சரிவை சந்தித்தது. சம்பா, தாளடியும் எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சல் இருக்குமா என கேள்விக்குறி உள்ளது. அதேபோல் தற்போது பொங்கல் கரும்பு விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து நடுப்படுகையை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் கூறும்போது:-

    இந்தாண்டு ஏற்பட்ட பருவநிலை மாற்றம், போதிய மழை இல்லாத காரணங்களால், பூச்சி தாக்குதல் கரும்பு பயிர்களை வெகுவாக பாதித்தது.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில், ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் வரை செலவு செய்தும், பூச்சி தாக்குதலால் பாதிப்பு கரும்புகளை அழிக்கும் நிலை உள்ளது.

    ஒரு ஏக்கரில் பயிரிடப்படுள்ள கரும்பு விதைகள், 50 சதவீதம் முற்றிலும் வீணாகி உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் வியாபாரிகள் கரும்பை வாங்க ஆர்வம் காட்டாமல், பயிரை பார்த்து விட்டு திரும்பி சென்று விடுகிறார்கள். இருப்பினும் நல்ல முறையில் உள்ள கரும்பை காப்பாற்ற போராடி வருகிறோம். தோட்டக்கலைத்துறையினர் பூச்சி தாக்குதலுக்கு என்ன காரணம், என்ன வகையான நோய் என கண்டறிய வேண்டும்.

    தமிழக அரசு பொங்கல் தொகுப்பில், எங்கள் பகுதியில் நல்ல முறையில் இருக்கும் கரும்பை கொள்முதல் செய்தால், எங்களுக்கு நிவாரணம் வழங்கியது போல் இருக்கும். 50 சதவீதம் செலவு தொகையாவது கிடைக்கும் என்றார்.

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி அணையின்நீர்மட்டம் 142 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.
    • மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டம் முழுகொள்ளளவின் நீடிப்பதால் அணையிலிருந்து உபரிநீர் கூடுதலாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து நேற்றுமாலை 140 அடியை எட்டியது. இதனால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக நீர்வளத்துறையினர் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பினர்.

    இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்லக்கடவு, வண்டிபெரியாறு, உப்புத்துறை, சப்பாத்து ஆகிய பகுதிகளில் உள்ள பெரியாற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவிக்கப்பட்டது. இன்றுகாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 140.35 அடியாக உள்ளது.

    அணைக்கு விநாடிக்கு 1817 கனஅடி நீர்வருகிறது. நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்தும் வகையில் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 300 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்இருப்பு 7221 மி.கனஅடியாக உள்ளது. நீர்மட்டம் 141 அடியை எட்டும் போது 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கையும், 142 அடியை எட்டும்போது இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும். அதன்பிறகு உபரிநீர் 13 ஷட்டர்கள் வழியாக கேரள பகுதிக்கு திறக்கப்படும்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் என விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்குபிறகு இதுவரை 5 முறை அணையின் நீர்மட்டம் 142 அடிவரை உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி அணையின்நீர்மட்டம் 142 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் வைகை அணையின் நீர்மட்டமும் முழுகொள்ளளவை எட்டியதால் அணையிலிருந்து தொடர்ந்து அதிகளவு தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. இன்றுகாலை முதல் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக 800 கனஅடிதண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்தநீர் தொடர்ந்து 10 நாட்களுக்கு திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படும் என்பதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இன்றுகாலை நிலவரப்படி அணையின்நீர்மட்டம் 69.59அடியாக உள்ளது. நீர்வரத்து 1961 கனஅடி, தண்ணீர் திறப்பு 2599 கனஅடி, நீர்இருப்பு 5724 மி.கனஅடி.

    மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டம் முழுகொள்ளளவின் நீடிப்பதால் அணையிலிருந்து உபரிநீர் கூடுதலாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பெரியாறு 3, தேக்கடி 8.4, கூடலூர் 3.2, உத்தம பாளையம் 2.4, சண்முகா நதிஅணை 4, மஞ்சளாறு 1.4, சோத்துப்பாறை 1, பெரியகுளம் 2, வீரபாண்டி 4, மி.மீ மழைளவு பதிவாகி உள்ளது.

    • புலி நடமாட்டம் இருந்த பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • புலியை திருச்சூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு மாற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியை அடுத்த மூடக் கொல்லி பகுதியை சேர்ந்த பிரஜீஷ்(வயது36) என்ற விவசாயி கடந்த 9-ந்தேதி, புல் அறுப்பதற்காக காட்டுப் பகுதிக்கு சென்றார். அப்போது அவரை ஒரு புலி அடித்துக்கொன்றது.

    மேலும் அவரது உடலை புலி தின்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். விவசாயியை கொன்று தின்ற புலியை சுட்டுக் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதன்பேரில் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆட்கொல்லி புலியை பிடிக்க 80பேர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அவர்கள் துப்பாக்கியுடன் புலி நடமாட்டம் இருந்த பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    மேலும் பல இடங்களில் 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூண்டுகளும் வைக்கப்பட்டன. அது மட்டுமின்றி புலியை கண்டுபிடிக்க 2 கும்கி யானைகளும் பயன்படுத்தப்பட்டன. அந்த யானைகளை வனத்துறையினர் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று புலியை தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.

    ஆனால் ஆட்கொல்லி புலி தொடர்ந்து சிக்காமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் விவசாயியை கொன்ற இடத்துக்கு சற்று தொலைவில் கூடலூர் காபி தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் ஆட்கொல்லி புலி சிக்கியது. இதையடுத்து அந்த புலியை சுல்தான்பத்தேரி அருகே பச்சடியில் உள்ள விலங்குகள் காப்பகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    அந்த புலியை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அந்த புலிக்கு சிறிய அளவில் காயங்கள் இருந்தன. இதையடுத்து அந்த புலியை திருச்சூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு மாற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    விவசாயியை கொன்ற ஆட்கொல்லி புலி சிக்கிய தகவல் அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் அந்த புலியை உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லக்கூடாது என்றும், அதனை சுட்டுக்கொல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனைத்தொடர்ந்து அந்த புலியை திருச்சூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    • புலியை தேடும் பணியில் 80 பேர் அடங்கிய வனத்துறையினர் ஈடுபட்டனர்.
    • புலி தென்பட்டால் மயக்க மருந்து செலுத்தி புலியை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள மூடக்கொல்லி பகுதியை சேர்ந்த விவசாயி பிரஜீஷ் (வயது36) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புல் அறுக்க வனத்துறையொட்டி உள்ள பகுதிக்கு சென்றார். அப்போது அவரை ஒரு புலி அடித்து கொன்று சாப்பிட்டது.

    இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்தது மட்டுமின்றி, பீதியையும் ஏற்படுத்தியது. விவசாயியை கொன்று தின்ற புலியை சுட்டு கொல்ல அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த புலியை கண்டுபிடிக்கும் பணியில் வனத்துறையினர் களம் இறங்கினர்.

    புலி நடமாட்டத்தை கண்டறிய வனப்பகுதியில் பல இடங்களில் 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டன. மேலும் புலியை சிக்க வைக்க கூண்டுகளும் அமைக்கப்பட்டன. புலியை தேடும் பணியில் 80 பேர் அடங்கிய வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    இருந்த போதிலும் இதுவரை அந்த புலி சிக்கவில்லை. வனத்துறை குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விவசாயியை பிரஜீசை கொன்ற புலி 13 வயதுடைய ஆண் புலி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த புலியைப்பற்றிய தகவல்களின் அடிப்படையில் அதனை பிடிக்க வனத்துறையினர் வியூகம் வகுத்து வருகின்றனர்.

    விவசாயியை கொன்ற ஆள்கொல்லி புலியை கண்டுபிடிக்கும் பணிக்காக திணைக்களம் முத்தங்கா பகுதியில் இருந்து விக்ரம் மற்றும் பரத் ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றை கொண்டு புலியை தேடும் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது புலி தென்பட்டால் மயக்க மருந்து செலுத்தி புலியை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • விவசாயியை கொன்று சாப்பிட்ட புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
    • பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும் வைக்கப்பட்டன. இருந்த போதிலும் அந்த புலி சிக்கவில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள மூடக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் பிரஜீஷ்(வயது36). விவசாயியான இவர் பசுமாடுகள் வளர்த்து வந்தார். கடந்த சில நாட்ளுக்கு முன்பு அவற்றிற்கு புல் அறுப்பதற்கு சென்ற போது, புலி அவரை அடித்துக் கொன்று சாப்பிட்டது.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விவசாயியை கொன்று சாப்பிட்ட புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து விவசாயியை வேட்டையாடிய புலியை சுட்டுக்கொல்ல கேரள அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து விவசாயியை கொன்ற புலியை தேடும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். விவசாயி கொல்லப்பட்ட பகுதியையொட்டி உள்ள வனப்பகுதிகளில் புலியை தேடினர். மேலும் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும் வைக்கப்பட்டன. இருந்த போதிலும் அந்த புலி சிக்கவில்லை.

    இந்நிலையில் புலியை சுட்டுக்கொல்லும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அதனை தள்ளுபடி செய்தது. மனிதனை கொன்ற புலியை சுட்டுக்கொல்லுவது தவறு இல்லை என்று கருத்து கூறிய ஐகோர்ட்டு, வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

    இந்நிலையில் விவசாயியை கொன்ற புலியை பிடிக்க 80 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படையினர் களம் இறக்கப்பட்டுள்ளனர். வனத்துறையைச் சேர்ந்த அவர்கள் புலி நடமாட்டம் கண்டறியப்பட்ட இடங்க ளில் 5-வது நாளாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    புலி சிக்குவதற்காக பல இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதனையும் வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். புலியை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டிருப்பதால் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றி வருகின்றனர். 

    • கடந்த 3 நாட்களாக அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தொடர்ந்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கால்வாய் வழியாக செல்லும் நீர் வழியோர கிராமங்களில் உள்ள கிணறுகளின் நீர் மட்டத்தை உயர்த்த உதவியது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    கடந்த மாதம் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து மதுரை உள்பட 5 மாவட்டங்களுக்கும் முறை வைத்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 11-ந் தேதி முதல் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனத்துக்கு தண்ணீர் வைகை ஆற்றின் வழியாக திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் வருகிற 26-ந் தேதி வரை முறை வைத்து திறக்கப்படும் என்பதால் ஆற்றின் கரையோரமுள்ள மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி விவசாயிகளுக்கு 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய் வழியாக திறந்து விடப்படும் தண்ணீரால் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    100க்கும் மேற்பட்ட சிறிய குளங்கள் நிரம்பியது. மேலும் கால்வாய் வழியாக செல்லும் நீர் வழியோர கிராமங்களில் உள்ள கிணறுகளின் நீர் மட்டத்தை உயர்த்த உதவியது. இதனால் இறவை பாசனம் மேம்பட்டது.

    தற்போதும் பெரியாறு, வைகை அணைகளில் போதிய தண்ணீர் இருந்தும் 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் அணையின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வைகை அணை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முன் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகளை கைது செய்தனர்.

    வைகை அணையின் நீர் மட்டம் 65.26 அடியாக உள்ளது. வரத்து 1978 கன அடி. திறப்பு 1869 கன அடி. இருப்பு 4687 மி.கன அடி. முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 135.90 அடி. வரத்து 928 கன அடி. திறப்பு 1500 கன அடி. இருப்பு 6093 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 56.10 அடி. வரத்து மற்றும் திறப்பு 90 கன அடி. இருப்பு 457 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.47 அடியில் உள்ளது. இதனால் அணைக்கு வரும் 93 கன அடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடந்த மாதம் 3 ஆம் தேதி முதல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அன்று முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் குளிக்க தடைவித்தனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல் மற்றும் வெள்ளக்கவி பகுதிகளில் மழை பொழிவு முற்றிலும் இல்லாமல் காணப்பட்டது. இருந்தபோதும் அருவிக்கு வரும் நீர் வரத்து சற்று குறைந்து வந்தது. கடந்த 3 நாட்களாக அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தொடர்ந்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்று 42-வது நாளாக தொடர்வதாக தேவதானப்பட்டி வனத்துறையினர் அறிவித்துள்ளனர். 

    DPI0130112023: கிருஷ்ணகி மாவட்டம். தேன்கனிக்கோட் வனச்சரகம், நொகனூர் காப்பு காட்டின் எல்லைக்கு உட்பட்ட தாவரக்கரை கிராமத்திற்கருகே, கடந்த 26-ந் தேதி நொகனூர் காப்புக்காட்டிலிருந்து வெளியேறிய சுமார் 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று, தாவரக்கரை கிராமத்திற்கு அருகில் உள்ள,

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகி மாவட்டம். தேன்கனிக்கோட்டை வனச்சரகம், நொகனூர் காப்பு காட்டின் எல்லைக்கு உட்பட்ட தாவரக்கரை கிராமத்திற்கருகே, கடந்த 26-ந் தேதி நொகனூர் காப்புக்காட்டிலிருந்து வெளியேறிய சுமார் 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று, தாவரக்கரை கிராமத்திற்கு அருகில் உள்ள, நாராயணன் என்கிற பால்நாராயணன் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் மின் மோட்டாருக்கு அமைக்கப்பட்டிருந்த காப்பிடப்பட்ட கம்பியை எதிர்பாராத விதமாக யானை கடித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

    பின்னர். ஓசூர் வனக்கோட்ட வனஉயிரினக் காப்பாளர் கார்த்திகேயனி, தலைமையில், உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன், தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன், வனப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று தணிக்கை மேற்கொண்டு, வனக்கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ், மற்றும் மருத்துவ குழுவினர் மூலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, தருமபுரி மண்டல வனப்பாதுகாவலர் அறிவுரைப்படி, ஓசூர் வனக்கோட்ட வனஉயிரின காப்பாளர் உத்தரவுப்படி, இதுதொடர்பாக தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் வனஉயிரின குற்ற வழக்கு பதிவுசெய்து, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    அதன் அடிப்படையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த, வேலு என்பவரின் மகன் கார்த்திக் (வயது 25) என்பவர் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார்.

    இதில், அவர் கடந்த 8 ஆண்டுகளாக தாவரக்கரை கிராமத்தில் சம்பவம் நடைபெற்ற விவசாய நிலத்தை உழுதும், மின்சாரம் சம்பந்தப்பட்ட சிறு சிறு பணிகளை கவனித்தும், அங்கேயே தங்கி அவரது பொறுப்பிலேயே கவனித்தவருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், மேற்படி விவசாய தோட்டத்தில் மின்சார கேபிள் இணைப்பிணை ஏற்படுத்தி, அதன் மூலம் சொட்டு நீர் பாசனம் செய்து வந்ததாகவும்,அதனை எதிர்பாரத விதமாக ஒரு யானை கடித்து உயிரிழந்தது என்றார்.

    மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பிற்கு காரணமான விவசாயி கார்த்திக் என்பவரை கைது செய்து தேன்கனிகோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • பெரும்பாலும் வாழைத்தார்கள் 13 டசன் மட்டுமே இருக்கும். இந்த வாழைத்தாரில் 23 டசன் வாழைப்பழங்கள் இருந்தன.
    • வளமான மண்ணுடன் இயற்கை உயரத்தை பயன்படுத்தினால் இதுபோன்ற விளைச்சலை காண முடியும் என விவசாயி தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஆத்ரேயபுரம் மண்டலம், உச்சிலியை சேர்ந்தவர் ரித்து சாந்திராஜ். விவசாயி.

    இவரது நிலத்தில் பக்கிஸ் வகையை சேர்ந்த வாழை பயிரிட்டு இருந்தார். இவர் பயிரிட்டு இருந்த வாழை மரத்தில் 6.5 அடி உயரம் உள்ள வாழைத்தார் விளைந்தது.

    பெரும்பாலும் வாழைத்தார்கள் 13 டசன் மட்டுமே இருக்கும். இந்த வாழைத்தாரில் 23 டசன் வாழைப்பழங்கள் இருந்தன.

    இதனை நேற்று ராவுல பாலத்தில் உள்ள சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்தார். வாழைத்தாரை தொழிலதிபர் சீனிவாசரெட்டி என்பவர் அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்றார்.

    வளமான மண்ணுடன் இயற்கை உயரத்தை பயன்படுத்தினால் இதுபோன்ற விளைச்சலை காண முடியும் என விவசாயி தெரிவித்தார்.

    • இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்குமாறு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
    • பொய் பிரசாரம் செய்து காமராஜரையே 67-ம் ஆண்டில் தோற்கடித்த நல்லவர்கள் தான் இந்த தி.மு.க. காரர்கள்.

    முசிறி:

    என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நடத்தி மக்களை சந்தித்து வருகிறார். அவரது 61-வது நாள் நடைபயண யாத்திரை நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் முசிறியில் நடைபெற்றது. முசிறி புதிய பேருந்து நிலையத்தில் நடைபயணம் தொடங்கப்பட்டு முசிறி-துறையூர் பிரிவு சாலை வழியாக முசிறி கைகாட்டியில் முடிவடைந்தது.

    வழியில் அண்ணாமலை முசிறி பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். பின்னர் பட்டியல் அணி சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 6 பெண்களுக்கு தையல் எந்திரத்தை வழங்கினார்.

    தமிழகத்தில் நியாய விலை கடையில் வழங்கும் அரிசிக்கு மத்திய அரசு கிலோ விற்கும் 32 ரூபாய் வழங்குகிறது. தமிழக அரசு 2 ரூபாய் வழங்குகிறது. தமிழகத்தில் 18 லட்சம் விவசாயிகள் கிசான் அட்டை பெற்று விவசாய கடன் பெற்று வருகின்றனர்.

    இயற்கை விவசாயத்திற்கு மத்திய அரசு உறுதுணையாக உள்ளது. ஆவின் பாலில் நடக்கும் ஊழலை பா.ஜ.க. கண்டிக்கிறது. ஆவினிலிருந்து வரும் பால் தரக் குறைவாக உள்ளது. 2022-ம் ஆண்டு ஒரு நாளுக்கு 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்த ஆவின், தற்போது 38 லட்சமாக உள்ளது, 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது.

    தமிழகத்தில் அரசே காவிரி மணலை திருடுகிறது. இந்திய துணை கண்டத்தில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் 467 கோடி ரூபாய்க்கு 2 நாட்களில் மதுபானம் விற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாராயத்திற்கு சிறப்பிடம் பெற்றது தமிழகம்.

    விஞ்ஞான முறையில் ஊழல் செய்து கொண்டிருப்பவர்கள் தி.மு.க.வினர். பாரதிய ஜனதா கட்சியின் கனவு பெரிது, பெரிய ஊர்கள் வளர்கிறது, சின்ன ஊர்கள் தேய்கிறது, கிராமங்கள் முன்னேற வேண்டும். விவசாயிகள், பெண்கள், இளைஞர்களை, மையமாகக் கொண்டு அரசியல் நடத்துவோம், இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்குமாறு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

    பொய் பிரசாரம் செய்து காமராஜரையே 67-ம் ஆண்டில் தோற்கடித்த நல்லவர்கள் தான் இந்த தி.மு.க. காரர்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். நல்லாட்சி அமைவதற்கு ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×