search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விவசாயிகள், பெண்கள், இளைஞர்களை மையமாக கொண்டு அரசியல்- அண்ணாமலை உறுதி
    X

    விவசாயிகள், பெண்கள், இளைஞர்களை மையமாக கொண்டு அரசியல்- அண்ணாமலை உறுதி

    • இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்குமாறு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
    • பொய் பிரசாரம் செய்து காமராஜரையே 67-ம் ஆண்டில் தோற்கடித்த நல்லவர்கள் தான் இந்த தி.மு.க. காரர்கள்.

    முசிறி:

    என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நடத்தி மக்களை சந்தித்து வருகிறார். அவரது 61-வது நாள் நடைபயண யாத்திரை நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் முசிறியில் நடைபெற்றது. முசிறி புதிய பேருந்து நிலையத்தில் நடைபயணம் தொடங்கப்பட்டு முசிறி-துறையூர் பிரிவு சாலை வழியாக முசிறி கைகாட்டியில் முடிவடைந்தது.

    வழியில் அண்ணாமலை முசிறி பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். பின்னர் பட்டியல் அணி சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 6 பெண்களுக்கு தையல் எந்திரத்தை வழங்கினார்.

    தமிழகத்தில் நியாய விலை கடையில் வழங்கும் அரிசிக்கு மத்திய அரசு கிலோ விற்கும் 32 ரூபாய் வழங்குகிறது. தமிழக அரசு 2 ரூபாய் வழங்குகிறது. தமிழகத்தில் 18 லட்சம் விவசாயிகள் கிசான் அட்டை பெற்று விவசாய கடன் பெற்று வருகின்றனர்.

    இயற்கை விவசாயத்திற்கு மத்திய அரசு உறுதுணையாக உள்ளது. ஆவின் பாலில் நடக்கும் ஊழலை பா.ஜ.க. கண்டிக்கிறது. ஆவினிலிருந்து வரும் பால் தரக் குறைவாக உள்ளது. 2022-ம் ஆண்டு ஒரு நாளுக்கு 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்த ஆவின், தற்போது 38 லட்சமாக உள்ளது, 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது.

    தமிழகத்தில் அரசே காவிரி மணலை திருடுகிறது. இந்திய துணை கண்டத்தில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் 467 கோடி ரூபாய்க்கு 2 நாட்களில் மதுபானம் விற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாராயத்திற்கு சிறப்பிடம் பெற்றது தமிழகம்.

    விஞ்ஞான முறையில் ஊழல் செய்து கொண்டிருப்பவர்கள் தி.மு.க.வினர். பாரதிய ஜனதா கட்சியின் கனவு பெரிது, பெரிய ஊர்கள் வளர்கிறது, சின்ன ஊர்கள் தேய்கிறது, கிராமங்கள் முன்னேற வேண்டும். விவசாயிகள், பெண்கள், இளைஞர்களை, மையமாகக் கொண்டு அரசியல் நடத்துவோம், இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்குமாறு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

    பொய் பிரசாரம் செய்து காமராஜரையே 67-ம் ஆண்டில் தோற்கடித்த நல்லவர்கள் தான் இந்த தி.மு.க. காரர்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். நல்லாட்சி அமைவதற்கு ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×