search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறுவடை"

    • பெரிய அளவில் வருவாய் இல்லை என்றாலும், இதிலிருந்து மீள வழியின்றி பல குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி அறுவடை பணி தற்போது தொடங்கியுள்ளது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. 70 சதவீதம் பேர் விவசாயம், கால்நடை வளர்ப்பை சார்ந்தே உள்ளனர். பெரிய அளவில் வருவாய் இல்லை என்றாலும், இதிலிருந்து மீள வழியின்றி பல குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் சீசனுக்கு தகுந்தாற்போல், விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பட்டணம், வெள்ளிமேடு பேட்டை, ஒலக்கூர் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் மரக்காணம் அடுத்த ஆலத்துார், நடுக்குப்பம், முருக்கேரி பகுதிகளிலும், வானுார் அடுத்த ரங்கநாத புரம், விநாயகபுரம், பரங்கனி, எடப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், தர்பூசணி சாகுபடி செய்யப் பட்டது.

    கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி அறுவடை பணி தற்போது தொடங்கியுள்ளது. அறுவடை செய்யப்படும் தர்பூசணி புதுச்சேரி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஒரு டன் 7,500 ரூபாய் முதல் 8,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஒரு டன் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப் படுகிறது. திண்டிவனம், மரக்காணம் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி அறுவடை செய்யப்படுகிறது

    இது குறித்து தர்பூசணி சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறுகையில், '2 மாத பயிர் தான் தர்பூசணி. எங்களிடம் இருந்து வியாபாரிகள் குறைந்த விலைக்கு தர்பூசணி பழங்களை கடந்த ஆண்டு வாங்கிச் சென்றனர். இதனால் தர்பூசணி செடிக்கு மருந்து தெளித்தல், தண்ணீர் பாய்சுவது மற்றும் ஆட்கள் கூலிக்கே கடந்த ஆண்டு சரியாகி விட்டது .இதில் எந்த லாபமும் கிடைக்க வில்லை. ஆனால் இந்த ஆண்டு ஒரு டன் தற்போது 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப் படுகிறது என தெரிவித்தனர்.

    • அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
    • ஏற்கனவே வெட்டி எடுக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    சிதம்பரம்:

    சிதம்பரத்தில் 22 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூர், நெல்லிக்குப்பம், காட்டு மன்னார் கோவில், சேத்தியா தோப்பு, புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடலூர் மாவட்டத்தில் அதிக பட்சமாக சிதம்பரத்தில் 22 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

    புவனகிரி, சேத்தியா தோப்பு, காட்டு மன்னர் கோவில் பகுதிகளில் 14 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது.

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவன சுரங்கங்களில் மழை காரணமாக தண்ணீர் தேங்கி நிற்பதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மின் உற்பத்தியில் பாதிப்பு இல்லை. ஏற்கனவே வெட்டி எடுக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    பண்ருட்டி, தொரப்பாடி, புதுப்பேட்டை காடாம் புலியூர், அண்ணாகிராமம், முத்தாண்டிக்குப்பம், கண்டரக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

    பண்ருட்டியில் இன்று காலை 6 மணி வரை 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக மழை பெய்து வருகிறது.

    • ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
    • பருவம் தப்பி போவதால் பால் அடைத்து நெல் மணிகள் திரட்சி ஆகாமல் நோஞ்சான் நெல்லாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் பொய்யான்குளம், நத்தகுளம், நல்லூர் கீழ்க்குளம் ஆகியவற்றின் வழியாக ஆயிரத்து 200 ஏக்கரில் நெல் விவசாய நிலங்கள் உள்ளன.

    நடப்பு பருவமழை காலத்தில் இந்த குளங்களுக்கு தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து டிசம்பர் மாத தொடக்கத்தில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டன. உழவு செய்து உரமிட்டு விதைக்கப்பட்ட பிறகு அடுத்ததாக நாற்று நடும் பணியை தொடங்க இருந்த சமயத்தில் யாருமே சற்றும் எதிர்பாராத விதத்தில் 2 நாட்களாக தொடர்ந்து பெரும் மழை பெய்தது.

    இதனால் பெருக்கெடுத்த வெள்ளத்தின் வேக ஓட்டம் காரணமாக வளர் இளம் பருவத்தில் இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் அடியோடு அடித்து செல்லப்பட்டுவிட்டன.

    இதனால் ஏற்கனவே உழவிட்டு உரமிட செலவு செய்தது, விதைநெல் வீணானது ஆகியவற்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இதையும் தாண்டி மீண்டும் வயலை சீர்படுத்தி மறு விவசாயத்தை தொடங்கலாம் என்றால், விதை நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

    விவசாயிகள் கடந்த ஆண்டு அறுவடைக்குப் பிறகு தாங்கள் சேமித்து வைத்திருந்த விதை நெல் முழுவதுமாக வெள்ளத்தோடு போய்விட்ட நிலையில் இனி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். மாற்று ஏற்பாடுகளை செய்ய அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம், விவசாய அலுவலகங்களை தொடர்பு கொண்டால் அங்கும் விதைநெல் கைவசம் இல்லை என்கிற பதிலே கிடைக்கிறது. வேறு இடங்களில் இருந்து உடனடியாக இங்கு விதை நெல் வரவழைத்து தர வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இது பற்றி நத்தகுளம் விவசாய சங்க துணை தலைவரான ஆறுமுகநேரி மாணிக்கம் கூறியதாவது:-

    தற்போதைய பெருமழை வெள்ளத்தால் திருச்செந்தூர், ஆறுமுகநேரி வட்டார பகுதியில் பிசான சாகுபடி விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது. கையிருப்பு விதை நெல் கிட்டத்தட்ட 80 சதவீத விவசாயிகளிடம் இருந்து மழை வெள்ளத்தால் அழிந்து விட்டது. மீதி 20 சதவீத விவசாயிகளிடம் மட்டுமே நெல் வித்துகள் கைவசம் உள்ளன. நிலைமையை புரிந்து கொண்டு போர்க்கால அடிப்படையில் வேளாண் துறையினர் வேறு மாவட்டங்களில் இருந்து நெல் வித்துகளை இங்கு வரவழைத்து தரவேண்டும்.

    அப்படி தந்தால் கூட காலதாமதமான விவசாயம் என்ற வகையில் முளைக்கும் பயிர் கடுமையான நோய் தாக்குதலுக்கு உள்ளாகும். பருவம் தப்பி போவதால் பால் அடைத்து நெல் மணிகள் திரட்சி ஆகாமல் நோஞ்சான் நெல்லாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

    இதனால் மறு விவசாயத்திலும் விவசாயிகளுக்கு பலத்த பாதிப்பு ஏற்படும் நிலையே தெரிகிறது. அதனால் பாரம்பரிய நெல் விதைகளை தவிர்த்து விட்டு இந்த முறை நோய்களை தாக்குப்பிடிக்கக் கூடிய ஒட்டு ரக விதைகளுக்கு அரசின் வேளாண் துறை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    மேலும் தற்போது ஏற்பட்டுள்ள விவசாயத்தின் பாதிப்பை குறித்து உடனடியாக கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவியும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அறிக்கை பேரிடர் மேலாண்மை பிரிவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை பருவத்தில் 78486 எக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இதில் இதுவரை 71412 எக்டர் பரப்பளவில் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன.

    மேட்டூர் அணையில் போதிய நீர்வரத்து இல்லாத காரணத்தால் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம் ஆகிய வட்டாரங்களில் 33 சதவீதத்திற்கு மேல் பாதிப்படைந்த 55.71 எக்டர் குறுவை பரப்பிற்கான கணக்கெடுப்பு பணி வேளாண்மை மற்றும் வருவாய் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதன் அறிக்கை பேரிடர் மேலாண்மை பிரிவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் தற்போது வரை 55161 எக்டர் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டு சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்ட நான்கு கிராமங்களுக்கு ரூ.1 கோடியே 13 லட்சத்து 873 விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது என்று வேளாண்மை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நடப்பாண்டு சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
    • அறுவடை நேரத்தில் பெய்த மழையால் காய வைத்த நெல்மணிகள் நனைந்து போனது.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்கு முக்கிய ஆதாரமாக காவிரி தண்ணீர் உள்ளது. நாகை மாவட்டத்தில் நடப்பாண்டு சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் காவிரி ஆற்றில் போதிய அளவு தண்ணீர் திறக்கப்படாததால் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர் வறட்சியால் பாதிக்க ப்பட்டது.

    எஞ்சிய பயிர்களை மோட்டார் பம்பு செட்டுகள் மூலமாகவும், நீர்நிலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை எஞ்சின் மூலமாக வயலுக்கு பாய்ச்சியும் தற்போது விவசாயிகள் அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் அறுவடை நேரத்தில் பெய்த மழையால் காய வைத்த நெல்மணிகள் நனைந்து போனது. இவ்வாறு மழையில் நனைந்த நெல்லை விவசாயிகள் சாலையில் போட்டு காய வைத்து வருகின்றனர். குறிப்பிட்ட அளவுக்கு மேல் நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் கொள்முதல் நிலையத்தில் நெல்லை எடுக்க மறுக்கின்றனர்.

    தண்ணீர் இன்றி வறட்சியால் கஷ்டப்பட்டு காப்பாற்றி வந்த நெல்மணிகள் கடைசி நேரத்தில், ஈரப்பதத்தால் கை விரித்து விட்டதே என்று நாகை விவசாயிகள் வேதனை தெரிவி க்கின்றனர். மேலும் வறட்சி பாதிப்புக்காக அரசு அறிவித்த நிவாரண தொகையும் தற்போது வரை வந்து சேரவில்லை. இருந்தும் பல்வேறு சிரமங்களை தாண்டி அறுவடை
    செய்ததால், திடீரென பெய்த மழையால் காய வைத்த நெல் மணிகள் நனைத்து விட்டன.

    மேலும் தற்போது விட்டு, விட்டு பெய்து வரும் மழையால் நெல்மணிகளை காய வைப்பதில் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் எனவே நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும். அப்போதுதான் நஷ்டத்தில் இருந்து விவசாயி கள் ஓரளவாவது தப்பிக்க முடியும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெல்லை கொட்டி வைத்து விற்க முடியாமல் கடந்த ஒரு வாரமாக காத்து கிடக்கின்றனர்.
    • அறுவடை செய்த நெல்லை மழையில் நனையாமல் இருக்க விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இரும்பு தலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை முன்பரு வத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இரும்புதலை அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து விற்க முடியாமல் கடந்த ஒருவார காலமாக காத்து கிடக்கின்றனர். கொள்முதல்நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் பலர் அறுவடை செய்த நெல்லை மழையில் நனையாமல் இருக்க விவசாயிகள் தினசரி சிரமப்பட்டு வருகின்றனர்.

    எனவே கொள்முதல்நி லையத்தை உடனடியாக திறந்து நெல்கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நடவு செய்த நெல் வளர்ந்து அறுவடைக்கு தயாராகியுள்ளது.
    • ஒரே சமயத்தில் இப்பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர்,சோழமாதேவி, கணியூர், காரத்தொழுவு, கடத்தூர் ஆகிய 8 ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களுக்கு, அணையிலிருந்து கடந்த ஜூன் 1ல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனையடுத்து விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி பணியை துவக்கினர். தற்போது இப்பகுதிகளில் நடவு செய்த நெல் வளர்ந்து அறுவடைக்கு தயாராகியுள்ளது.கணியூர், சோழமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்து கடத்தூர், கண்ணாடிபுத்தூர் பகுதிகளிலும் அறுவடையை துவக்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

    ஒரே சமயத்தில் இப்பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.தொழிலாளர்கள் பற்றாக்குறையால் எந்திர அறுவடைக்கு விவசாயிகள் தயாராக உள்ள நிலையில், மடத்துக்குளம் வட்டார பகுதிகளில் பருவ மழையும் துவங்கியுள்ளது.

    இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் பாதித்து வருகின்றன. நெல் வயல்களில், தாள்கள் தலைசாய்ந்து, நெல் மணிகள் வயல்களிலேயே உதிர்ந்து, பெரும் இழப்பை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

    எனவே பருவ மழைக்கு முன், விளைந்த நெல் அறுவடை செய்யும் வகையில் தேவையான அளவு நெல் அறுவடை எந்திரங்களை கொண்டு வர வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்கப்பட்டுள்ளது.இங்கு நெல்லுக்கான ஆதார விலை சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ. 2,203 மற்றும் ஊக்கத்தொகை ரூ.107 என ஒரு குவிண்டால் 2,310 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.அதே போல் பொது ரகம் ஆதார விலை, ரூ.2,183, ஊக்கத்தொகை ரூ.82 என ஒரு குவிண்டால் நெல் 2,265 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது, அறுவடை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் கொள்முதல் மையத்தில் பதிவு செய்து வருகின்றனர். கணியூர், கடத்தூர், காரத்தொழுவு, சோழமாதேவி பகுதி விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய பருவத்தில் நெற்பயிர்கள் இருந்தது.
    • நெற்கதிர்களை எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, சாலியமங்கலம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை பருவத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய பருவத்தில் நெற்பயிர்கள் இருந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்து மழைநீரில் மூழ்கும் அபாய நிலை உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கி ன்றனர். வயலில் உள்ள நெற்கதிர்கள் சாய்ந்த நிலையில் உள்ளது.

    மேலும் வயலில் தொடர்ச்சியாக மழை பெய்யும் சூழ்நிலை உள்ளதால் சாய்ந்த நெற்பயிர்களை காப்பாற்ற மழைநீரை வடிய வைத்து நெற்கதிர்களை எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கருநாவாய் பூச்சி அறுவடை நிலையில் உள்ள வயல்களில் அதிகமாக தென்படுகிறது.
    • விளக்கு பொரி அமைத்து தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

    நாகப்பட்டினம்:

    குறுவை பயிர்களை தாக்கும் குருத்துப் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குருத்துப்பூச்சி பாபநாசம் வேளாண்மை கோட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் ஆங்காங்கே குருத்துப் பூச்சி, கரு நாகப்பூச்சி மற்றும் இலை கருகல் நோய் அறிகுறிகள் தென்படுகிறது.

    கபிஸ்தலம் அருகே கருப்பூர் கிராமத்தில் குறுவை பயிர்களில் வேளாண்மை துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் கருநாவாய் பூச்சி அறுவடை நிலையில் உள்ள வயல்களில் அதிகமாக தென்படுகிறது.

    இதனை கட்டுப்படுத்திட ஆசி பேட் 25 எஸ்.பி. ஏக்கருக்கு 250 கிராம் உபயோகப்படுத்தலாம்.

    மேலும் வாத்துகளை கருநாவாய் பூச்சிகள் காணப்படும் வயல்களில் மேச்சலுக்கு விடுவதன் மூலம் இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்.

    விளக்கு பொரி அமைத்து தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். கருநாவாய் பூச்சிகளை வேப்பங்கொட்டை கரைசல் வயலில் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

    பாக்டீரியல் இலை கருக்கல் நோயை கட்டுப்படுத்திட தாக்குதல் அதிகமாக காணப்படும் போது காப்பர் ஆட்சி குளோரைடு 500 கிராம் மற்றும் ஸ்பெக்ட்ரோ மைசின் சல்பேட் மற்றும் பெற்றா சொலின் கலவை 120 கிராம் ஆகிய மருந்துகளை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேலைகளில் தெளித்து இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொடர்மழை காரணமாக தண்ணீர் வடியாமல் உள்ளதால் பயிர்கள் அனைத்தும் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    செங்கல்பட்டு:

    தமிழக பகுதியில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு பலத்த மழை பெய்கிறது.

    இதேபோல் செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டுகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்து உள்ளன.

    கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வடகால் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 60 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது. வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.இதனால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    தொடர்மழை காரணமாக தண்ணீர் வடியாமல் உள்ளதால் பயிர்கள் அனைத்தும் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • இதுவரை 264 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
    • அறுவடை பணிகள் நடைபெறும் இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், சேமங்கலம் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

    பின்னர் செய்தியாள ர்களிடம் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

    தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், ஏற்கனவே 3 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வந்தன. மேலும் 40 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு திறக்கப்படுகிறது.

    அதில், மயிலாடுதுறை வட்டத்திற்கு இளந்தோப்பு, திருவாளபுத்தூர், கிழாய், கொற்கை, கோடங்குடி, திருச்சிற்றம்பலம், ஆத்துக்குடி, முருகமங்களம், தாழஞ்சேரி, திருவிழந்தூர், சித்தமல்லி, 24 வில்லியநல்லூர், குத்தாலம் வட்டத்திற்கு பழையகூடலூர், மேலையூர், குத்தாலம், நச்சினார்குடி, கங்காதாரபுரம், கொக்கூர்.

    வழுவூர், எழுமகலூர், ஆலங்குடி, 52 வில்லியநல்லூர், பேராவூர், சீர்காழி வட்டத்திற்கு கொண்டத்தூர், அரசூர், பனங்காட்டாங்குடி, உள்ளிட்ட கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 264 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு ரூ.59 இலட்சத்து 79 ஆயிரத்து 420 பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இதுவரை 57 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும், மாவட்டத்தில்; எங்கெல்லாம் அறுவடைக்கு தயாராகி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறதோ அந்த இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் திருப்பதி, சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • ஒரிரு நாட்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில் திடீர் மழை எங்களை புரட்டி போட்டுள்ளது.
    • அதிகாரிகள் பாதிப்பு பயிர்களை கணக்கீட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கபட்டது.

    இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது வரை 90 ஆயிரம் ஏக்கரில் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய 4 தாலுகாவில் பல பகுதிகளில் பம்புசெட் நீரை கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. விவசாயிகளும் அறுவடை ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு நேரங்களில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. ஆனால் நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரித்தன. மயிலாடுதுறை, மணல்மேடு, சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. நள்ளிரவு முழுவதும் இடைவிடாமல் கனமழை பெய்தது. அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 65.6 மி.மீ. மழை பதிவானது.

    இந்த கனமழையால் மங்கைநல்லூர், மணல்மேடு, திருஇந்தளூர், நல்லத்துக்குடி, மணக்குடி, சேமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயராக இருந்த வயல்களில் தண்ணீர் புகுந்தன. தொடர் மழையால் வயல் முழுவதும் வெள்ளக்காடாகி அறுவடைக்கு தயாரான பயிர்கள் தண்ணீரில் சாய்ந்தன. சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இன்னும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பயிர்கள் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது :-

    ஏக்கருக்கு ரூ.30 அயிரம் வரை செலவு செய்து பயிரிட்டோம். பலர் கடன் வாங்கி தான் சாகுபடி செய்திருந்தனர். திடீர் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த முன்பட்ட குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரிரு நாட்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில் திடீர் மழை எங்களை புரட்டி போட்டுள்ளது. வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிய ஒரிரு நாட்கள் ஆகும்.

    அப்படியே வடிந்தாலும் பயிர்கள் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும். தற்போது வரை 10 ஆயிரம் ஏக்கர் வரை பயிர் பாதிப்பு உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் பாதிப்பு இதைவிட அதிகரிக்கும். எனவே அதிகாரிகள் பாதிப்பு பயிர்களை கணக்கீட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பயிருக்காக நாங்கள் வாங்கிய கடனை ஒரளாவது அடைக்க முடியும் என்றனர்.

    ×