search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ள பாதிப்பு"

    • வீடுகளை இழந்த பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.
    • புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    தென் அமெரிக்காவில் மிகப்பெரிய நாடாக பிரேசில் உள்ளது. இங்குள்ள, ரியோ டி ஜெனிரோ மற்றும் எஸ்பிரிட்டோ மாநிலங்களை புயல் தாக்கியது. இதனால் பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

    இங்குள்ள மலைப்பகுதிகள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்து தரை மட்டமானது.

    ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன்காரணமாக வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

    பிரேசிலை புரட்டி போட்ட இந்த புயல் மழைக்கு இதுவரை 20 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். வீடுகளை இழந்த பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.

    புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இடிந்த வீடுகளில் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகிறது.

    மோப்ப நாய்கள் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. மீட்பு படையினர் இடிபாடுகளில் இருந்து 16 மணி நேரத்துக்கு பிறகு ஒரு சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

    ஆனால், அந்த சிறுமியின் தந்தை அவர் அருகிலேயே இறந்து கிடந்தார். மகளை காப்பாற்றிவிட்டு அவர் உயிர் இழந்ததாக மீட்பு படையினர் தெரிவித்தனர். தொடர்ந்து, மீட்பு பணி நடந்து வருகிறது. இந்த புயலில் மிமோசா டோவுல் பகுதியில் தான் பலர் இறந்துள்ளனர்.

    • தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது
    • கனமழையால் பாதிக்கப்பட்ட 2,60,909 விவசாயிகளுக்கு ₹201.67 கோடி நிவாரண நிதி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை

    தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட 2,60,909 விவசாயிகளுக்கு ₹201.67 கோடி நிவாரண நிதி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது

    அதில், "தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் சராசரி ஆண்டு மழையளவை விட கூடுதலாக ஒரே நாளில் அதிகளவு மழைப்பொழிவு ஏற்பட்டது. அதிகனமழையினை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும். பொது மற்றும் தனியார் கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான பகுதிகளை 21.12.2023 அன்று பார்வையிட்டு மிகக் கடுமையான வெள்ள பாதிப்பிற்குள்ளான பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, மழை வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான பயிர்களுக்கான நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் தொகுப்புகளை அறிவித்தார்.

    அதன் அடிப்படையில், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி. கன்னியாகுமரி, விருதுநகர், இராமநாதபுரம். சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 1.64.866 ஹெக்டேர் வேளாண் பயிர்களுக்கு, 1,98,174 விவசாயிகள் பயனடையும் வகையில் 160 கோடியே 42 இலட்சத்து 41 ஆயிரத்து 781 ரூபாய் நிவாரணம் வழங்கிடவும். 38.840 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 62,735 விவசாயிகள் பயனடையும் வகையில் 41 கோடியே 24 இலட்சத்து 74 ஆயிரத்து 680 ரூபாய் நிவாரணம் வழங்கிடவும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சேமித்து வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் கிலோ உப்பு வெள்ளத்தால் நாசமானது.
    • தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உப்பு அளவு வெகுவாக குறைந்துவிட்டது.

    வேலூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்தியா மட்டுமின்றி இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    தூத்துக்குடி, ஆறுமுகநேரி, முத்தையாபுரம், முள்ளக்காடு, வெள்ளப்பட்டி, தருவைகுளம், வேம்பார், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    கடந்த மாதம் பெய்த புயல் மழையால் தாமிரபரணியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், ஆறுமுகநேரி மற்றும் உப்பளங்களில் வெள்ளம் புகுந்தது.

    அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் கிலோ உப்பு வெள்ளத்தால் நாசமானது.

    இதனால் தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உப்பு அளவு வெகுவாக குறைந்துவிட்டது. வரத்து குறைவாக உள்ளதால் தூத்துக்குடியில் இருந்து விற்பனைக்கு வரும் உப்பு விலை உயர்ந்துள்ளது.

    50 சிறிய பாக்கெட்டுகள் கொண்ட ஒரு மூட்டை கடந்த மாதம் வரை ரூ.230-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ. 290 வரை விலை உயர்ந்துள்ளது.

    சில்லரை விலையில் கல் உப்பு ஒரு பாக்கெட் ரூ.7 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த கல் உப்பு ஒரு பாக்கெட் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தூத்துக்குடியில் இருந்து தமிழகம் முழுவதும் உப்பு விற்பனைக்கு வருகிறது. மழை வெள்ளத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு தயார் செய்யப்பட்டிருந்த உப்பு வெள்ளத்தால் நாசமாகிவிட்டது. இதன் காரணமாக உப்பு விலை உயர்ந்துள்ளது.

    ஓட்டல்கள் மற்றும் தோசை, இட்லி மாவு தயாரிப்பவர்கள் உணவு தின்பண்டங்கள் தயாரிப்பவர்கள் மொத்தமாக கல் உப்பு வாங்கி செல்கிறார்கள்.

    மூட்டை மூட்டையாக உப்பு வாங்கிச் செல்லும் அவர்களுக்கு இந்த விலை உயர்வு கடினமாக அமைந்துள்ளது. இதன்மூலம் தின்பண்டங்கள் விலை உயரவும் வாய்ப்புள்ளது.

    தூத்துக்குடி பகுதியில் தற்போது உப்பளங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. ஆனால் மாவட்டத்தில் மற்ற இடங்களில் வெள்ள பாதிப்பால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு உப்பு விலை குறைய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.

    • சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் ரூ.15 கோடி வழங்கப்படும்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1,17,471 கால்நடைகள் சேதமடைந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    முதலமைச்சர் அறிவித்தபடி, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் உள்ள 2 லட்சத்து 92 ஆயிரத்து 17 குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகை மற்றும் 5 கிலோ அரிசி பை, 1 லட்சத்து 88 ஆயிரத்து 650 குடும்பங்களுக்கு ரூ.1,000 நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளன.

    வெள்ள பாதிப்பால் மொத்தம் 7,762 வீடுகள் சேதமடைந்துள்ளது. இதில் 4,412 குடிசை வீடுகள் பகுதியாகவும், 2,794 குடிசை வீடுகள் முழுமையாகவும், 472 கான்கிரீட் வீடுகள் பகுதியாகவும், 84 கான்கிரீட் வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது. வீடுகள் சேதமடைந்த வகைக்கு 3,981 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 82 லட்சத்து 77 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பால் 153132.38.5 ஹெக்டேர் வேளாண் பயிர்களும், 32592.02.5 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளது. 688.81.7 ஹெக்டேர் விவசாய நிலங்களில் வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட மண் படிந்துள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறு வணிகர்களுக்கு கடன் வழங்க கூட்டுறவு வங்கிகள் மூலம் மனுக்கள் பெறப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் சிறு வணிகர்கள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை 4 சதவீத வட்டி, ரூ.1 லட்சம் வரை 6 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 10,282 உற்பத்தி நிறுவனங்களும், 30,297 சேவை நிறுவனங்களும், 2,583 வியாபாரம் சார்ந்த நிறுவனங்களும் என மொத்தம் 43,162 நிறுவனங்கள் உதயம் பதிவுச்சான்றிதழ் பெற்றுள்ளன.

    மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 வட்டங்களில், 5 வட்டங்களில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையான உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் உதயம் பதிவு மேற்கொண்டு, காப்பீடு செய்துள்ளனர்.

    ஆனால் வியாபாரம் மற்றும் சேவை தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வங்கிக் கடன் பெற்றிருந்தால் மட்டுமே உத்யம் பதிவு மற்றும் காப்பீடு மேற்கொள்கின்றனர். நிவாரணத் தொகுப்பில் அறிவிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்களுக்கான ரூ.1 லட்சம் வரையான சிறப்பு கடன் திட்டம் குறித்து வணிகர் சங்கங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் சிறப்பு கடன் முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 12 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் ரூ.15 கோடி வழங்கப்படும். நாட்டுப்படகு மீனவர்களின் உதவியுடன் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த சுமார் 2,000 பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.

    பகுதி சேதமடைந்த மீன்பிடி விசைப்படகுகள் 347-க்கு ரூ.161.415 லட்சம், முழு சேதமடைந்த 4 நாட்டுப்படகுகளுக்கு ரூ.4 லட்சம், பகுதி சேதமடைந்த 402 நாட்டுப்படகுகளுக்கு ரூ.119.07 லட்சம், சேதமடைந்த மீன்பிடி வலைகள் 3,515-க்கு ரூ.527.25 லட்சம், சேதமடைந்த மீன்பிடி எந்திரங்கள் 3,902-க்கு ரூ.292.65 லட்சம், சேதமடைந்த மீன் பண்ணைகள் உள்ள 24.75 ஹெக்டேர் பரப்புக்கு ரூ.2.475 லட்சம், சேதமடைந்த உள்நாட்டு மீனவர்களின் வலைகள் 850-க்கு ரூ.85 லட்சம் என மொத்தம் மொத்தம் ரூ.1191.86 லட்சம் சேதார மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1,17,471 கால்நடைகள் சேதமடைந்துள்ளது. இதில் 3,285 பசுக்களும், 1,343 கன்றுகளும், 26,469 ஆடுகளும், 85,632 கோழிகளும், 524 பன்றிகளும், 49 கழுதைகளும், 60 எருமைகளும், 109 காளைகளும் அடங்கும். புதிதாக கால்நடைகள் வாங்குவதற்கு கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறந்த கால்நடைகளுக்கு நிவாரணமாக பசு, எருமைக்கு 37,500 ரூபாய் வரையிலும், ஆடு, செம்மறி ஆடுகளுக்கு தலா ரூ.4,000 வரையிலும், கோழி ஒன்றுக்கு ரூ.100 வரையிலும் வழங்கப்படுகிறது. இதுவரை 534 இனங்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இனங்களுக்கு 2 நாட்களில் நிவாரண தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் இணையதளம் வாயிலாக உப்பளத் தொழில் செய்யும் 2023-ம் ஆண்டு பதிவு பெற்ற மற்றும் புதுப்பித்தல் செய்த உப்பளத் தொழிலாளர்களுக்கு அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2023-ம் ஆண்டிற்கான மழைக்கால நிவாரணம் வழங்கும் பொருட்டு 5300 பதிவு பெற்ற உப்பள தொழிலாளர்களுக்கு ரூ.5000 வீதம் ரூ.2,65,00,000 தொகை கடந்த மாதம் 22-ந்தேதி ஆர்இசிஎஸ் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது.

    மேலும், அதி கனமழையினால் உயிரிழந்த 44 நபர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில் தேங்கியிருந்த மழைநீர் வெள்ளமானது பெரும்பான்மை பகுதிகளில் சுமார் 110 மோட்டார் பம்புகள் மூலம் வேகமாக அகற்றப்பட்டது. மீதமுள்ள 36 குடியிருப்பு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் மூலம் வேகமாக அகற்றப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி மாநகராட்சி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 4,127 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. வெள்ளத்தின்போது 123 கிராம ஊராட்சிகளில் உள்ள 727 குக்கிராமங்களில் மின் இணைப்பு பாதிக்கப்பட்டது.

    தற்போது அனைத்து கிராம ஊராட்சிகளிலும் முழுமையாக மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதீத கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் மாநில நெடுஞ்சாலைகளில் 112 இடங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. அவற்றில் 109 பகுதிகள் சரிசெய்யப்பட்டுள்ளது.

    ஊராட்சிகளுக்குட்பட்ட சாலைகளில் 39 இடங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றில் 33 சாலைகளின் பகுதிகள் சீர்செய்யப்பட்டுள்ளது.

    பொதுப்பணித்துறை மூலம் சேதமடைந்த 85 குளங்களில் 82 குளங்களும், 80 கால்வாய்களில் 65 கால்வாய்களும், ஆற்றங்கரைகளில் ஏற்பட்ட 2 உடைப்புகளும் சரிசெய்யப்பட்டுள்ளன.

    போக்குவரத்துத் துறை மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 302 வழித்தடங்களில் 270 வழித்தடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 தண்ணீர் விநியோகம் செய்யப்படும் நிலையங்களில் 6 நிலையங்கள் பகுதியாகவும், 7 நிலையங்கள் முழுவதுமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

    நெடுஞ்சாலைத்துறை மூலம் சேதமடைந்த 42 சாலைகளும், 112 உடைப்புகளும் சீர் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட தொழில் மையம் மூலம் நீட்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி வழங்கினார்.

    • பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் ஆவடி ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள 850 ரேஷன் கடைகளில், 4 லட்சத்து 94 ஆயிரத்து 156 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
    • மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இறுதிக் கட்ட விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    'மிச்சாங்' புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த பலத்தமழையால் வெள்ள சேதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத்தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மி டிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் ஆவடி ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள 850 ரேஷன் கடைகளில், 4 லட்சத்து 94 ஆயிரத்து 156 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    இதில், அரிசி கார்டுதாரர்களான 4 லட்சத்து 65 ஆயிரத்து 118 பேருக்கு, ரேசன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று, 'டோக்கன்' வழங்கினர். 4 லட்சத்து 47 ஆயிரத்து 226 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் தொடர்ந்து 3 மாதங்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காதோர், வயதானோரின் கைரேகை பதிவாகாததால், பொருட்கள் வாங்க முடியாதவர்களுக்கு, நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் பயனாளிகளின் பட்டியலில் பெயர் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் நிவாரணத்தொகை கிடைக்காதவர்கள் நிவாரணத் தொகை கேட்டு மனுவாக அளித்தனர். இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 தாலுக்காக்களில் மொத்தம் 86 ஆயிரத்து 46 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனுக்கள் அனைத்தும் அரசு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இறுதிக்கட்ட விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி ஒருவர் கூறும்போது, தகுதி உள்ள மனுக்களின் விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்கில் வெள்ள நிவாரணத்தொகை ரூ. 6 ஆயிரம் வரவு வைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • டி.என்.பி.எஸ்.சிக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அதை தேர்வாணையம் கண்டுகொள்ளவில்லை.
    • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 369 இடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்துத் தேர்வுகள் வரும் ஜனவரி 6 மற்றும் 7-ந்தேதிகளில் நடைபெறும் என்று தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருக்கிறது.

    ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.

    தென்மாவட்டங்களில் அண்மையில் பெய்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் எத்தகைய பேரழிவுகள் ஏற்பட்டன என்பது அனைவரும் அறிந்தது தான். மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராக முடியாத நிலையில், தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சிக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அதை தேர்வாணையம் கண்டுகொள்ளவில்லை. அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி எழுத்துத் தேர்வுகளை நடத்த ஆணையம் தயாராகி வருகிறது.

    தென்மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் இந்தத் தேர்வை சரியாக எழுதாவிட்டால், அடுத்த வாய்ப்புக்காக இன்னும் 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதற்குள் பலர் வயது வரம்பை கடந்திருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு இன்னொரு வாய்ப்புக் கிடைக்காது.

    இந்தக் காரணங்களையும், மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு வரும் ஜனவரி 6 மற்றும் 7-ந் தேதிகளில் நடைபெற இருக்கும் எழுத்துத் தேர்வு களை குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 3 மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 815 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை கடந்த 21-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதி கனமழையின் காரணமாக வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் எனவும், லேசான பாதிப்பு உள்ள வட்டங்களுக்கும் மற்றும் குமரி, தென்காசி மாவட்டங்களில் பாதிப்பு காரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப் படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதனையடுத்து மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் கணக்கீடு செய்யப்பட்டு அந்த பணிகள் சுமார் 4 நாட்களில் முற்றிலுமாக முடிக்கப் பட்டது.

    அதன்பின்னர் 3 மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வீடுகளை இழந்தவர்கள், பயிர்கள் சேதம், கால்நடைகள் இறப்பு உள்ளிட்டவைகளும் கணக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தாலுகா வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 815 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணமும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 542 ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகம் பாதிப்புள்ள பகுதிகளில் 508 ரேஷன் கடைகளில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 53 ரேஷன் கார்டுகள் உள்ளன. குறைந்த பாதிப்புள்ள பகுதிகளில் 449 ரேஷன் கடைகளில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 614 ரேஷன் கார்டுகளும் உள்ளன. இவர்களுக்கு வீடு வீடாக டோக்கன்கள் வினியோகம் செய்யும் பணி ரேஷன் கடை பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.

    நேற்று முன்தினம் தொடங்கி இன்று 3-வது நாளாக டோக்கன்களை வீடு வீடாக சென்று ஊழியர்கள் வினியோகம் செய்து வருகின்ற னர். அந்த டோக்கன்களில் நிவாரண தொகை பெறுவ தற்கு நாளை முதல் அதாவது 29-ந்தேதி முதல் தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நாட்களில் ரேஷன் கடைகளில் சென்று ரொக்கமாக நிவாரண தொகையை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றுடன் டோக்கன்கள் வினியோகம் செய்யும் பணி முடிவடையும் நிலையில் நாளை (வெள்ளிக் கிழமை) காலை முதல் பொதுமக்கள் அந்தந்த பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைகளில் பணத்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டுறவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டமாக வந்து நெரிசலில் சிக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் குறைந்தது 800 முதல் 1200 ரேஷன் கார்டுகள் வரை இருக்கும் என்பதால் ரூ.1000 வழங்கும் கடைகளுக்கு ரூ.10 லட்சம் வரை தேவைப்படும்.

    எனவே கடைகளில் பணம் பாதுகாப்பாக கொண்டு வரப்படுவதையும், விநியோகிக்கப்படுவதையும் கண்காணிக்க போலீஸ் பாதுகாப்பு போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தென்காசி உள்ளிட்ட மாவட்டத்தில் இன்று மாலை அனைத்து கூட்டுறவு வங்கி செயலாளர்களுடன், கூட்டுறவு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.

    அதன்முடிவில் எவ்வாறு நிவாரண தொகையை வழங்குவது, கூட்ட நெரிசலை சமாளிப்பது எப்படி என்பது குறித்தும் அறிவுரைகள் வழங்கப் படுகிறது. தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் வரை ரேஷன் கடைகளில் இந்த தொகை வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டனர்.
    • காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சி அளித்தது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத கன மழையால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 1½ லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் சென்றது.

    இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள், ஏரிகள், கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் பல்வேறு குளங்க ளில் உடைப்பும் ஏற்பட்டது.

    தூத்துக்குடி, கோரம் பள்ளம் உடைந்ததால் மாநகரில் உள்ள ஆயிரக் கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதே போல் இரு மாவட்டங்களில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சி அளித்தது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 515 பாசன குளங்களில் 720-க்கும் மேற்பட்ட இடங்களில் மதகுகள் உடைந்து சேதம் அடைந்தது.

    இதைத்தொடர்ந்து சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கியது. தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தினர்.

    மீட்பு பணிகளுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டனர்.

    எம்.சி. அடி கொள்ளளவு கொண்ட கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்ட தால் 4 டி.எம்.சி. தண்ணீர் பாயந்தோடியது. வழக்கமாக குளத்தில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படும் நிலை யில் 46 ஆயிரம் கன தண்ணீர் அங்கிருந்து சென்றது.

    இதனைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட நீர்வளத்துறை என்ஜினீயர்கள் இந்த மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இரண்டு மாவட்டங்களிலும் உடைப்பு ஏற்பட்ட 720 பகுதிகளில் மதகுகளை சீரமைக்கும் பணிகளில் தலைமை பொறியாளர்கள் பிரிவில் உள்ள 3 மூத்த அதிகாரிகள் தலைமையில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    அவர்கள் தலைமையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் எந்திரங்களை கொண்டு சீரமைப்பு பணிகளை இரவு- பகலாக நடத்தி வருகிறார்கள். பெரும்பாலான பணிகள் முடிந்து விட்ட நிலையில் அனைத்து பணிகளையும் நாளைக்குள் (வெள்ளிக் கிழமை) முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இதுகுறித்து நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்தையா கூறியதாவது:-

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சராசரி மழை அளவு 650 மில்லி மீட்டர். ஆனால் டிசம்பர் 15-ந்தேதிக்குள் ஆண்டு மழையில் 75 சதவீதம் பெய்துள்ளது.

    டிசம்பர் 17-ந்தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மிக அதிகளவு கனமழை பெய்தது.

    இந்த மாவட்டத்தில் சராசரியாக 36 சென்டி மீட்டர் பதிவானது. 100 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் 1½ லட்சம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    தாமிரபரணியில் காட்டாற்று வெள்ளம் கீழ்நோக்கி பாய்வதற்கு பதிலாக பக்கவாட்டாகவும், இருபுறமும் கரைபுரண்டு ஓடியது. கரைக்கு அப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வழக்கமாக ஆற்றில் மழை நீர் வடிந்து செல்வதை தடுத்து ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மொத்தமுள்ள 3 ஆயிரம் குளங்களில் 3-ல் ஒரு பங்கு குளங்கள் மட்டுமே 17-ந்தேதிக்கு முன்பு நிரம்பி இருந்தது. ஆனால் பெரு வெள்ளத்திற்கு பின்னரே அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்பின.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் அதிக நீர் இருப்ப தால் குளங்களின் உடைப்புகளை சீரமைத்த பிறகு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.
    • அரையாண்டு தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    சென்னை:

    அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை நுங்கப்பாக்கத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது;-

    தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2-ந்தேதி முதல் புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

    தென் மாவட்டங்களில் மழை பாதிப்பால் ரத்து செய்யப்பட்டுள்ள அரையாண்டு தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது பற்றி முதல்- அமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

    • உடனடியாக படகும் மீட்பு குழுவான அந்த மீனவ நண்பர்களும் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றனர்.
    • அனைவருக்கும் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உடனடி சிகிச்சை மற்றும் உணவு வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்பை இப்போதுதான் முழுமையாக அறிந்து கொள்ளும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.

    இந்நிலையில் ஆறுமுகநேரி அருகே வெள்ளத்தின் நடுவே உயிருக்கு போராடிய பலரை 12 மணி நேரம் போராடி படகு மூலம் அவர்களை மீட்ட நிகழ்வு 'திக்திக்' திகில் சினிமாவை மிஞ்சும் வகையில் இருந்துள்ளது.

    இது பற்றிய விவரம் வருமாறு:-

    அந்த 'திடீர்' மழை கடந்த 17-ந்தேதி தொடங்கி மறுநாள் விடியும் வேளை. காயல்பட்டினத்தின் கடற்கரை பகுதியான சிங்கித்துறை மீனவர் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் ஆக்ரோசமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

    தங்களின் உயிரையும் முடிந்த வரையிலான உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்ள மக்கள் போராடிக் கொண்டிருந்தனர். தொலைத்தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முந்தைய கடைசி தருணம் அது.

    அப்போது அங்குள்ள மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு மாவட்ட மீன்வளத்துறை அதிகாரியிடம் இருந்து அவசர போன் அழைப்பு வந்துள்ளது. அதில், 'ஆறுமுகநேரிக்கும் ஆத்தூருக்கும் இடையில் உள்ள தண்ணீர்பந்தல் என்கிற குக்கிராமத்தில் அனைத்து வீடுகளும் மூழ்கிய நிலையில் அங்குள்ள மக்கள் மொட்டை மாடியில் நின்று உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றனர். அவர்களை மீட்பதற்கு படகு தேவைப்படுகிறது. அதற்கு உடனே ஏற்பாடு செய்யவும்.

    அங்கிருந்து படகையும் படகை செலுத்துபவர்களையும் ஆறுமுகநேரிக்கு ஏற்றி செல்ல மினி லாரி வந்து கொண்டு இருக்கிறது' என்று அந்த அதிகாரி பதற்றத்தோடு தெரிவித்துள்ளார்.

    இந்த தகவலை அறிந்ததும் அப்பகுதியைச் சேர்ந்த மீனவரான யாசர் அராபத் (39) தனது தந்தை சீனிக்கனி உள்ளிட்ட 15 பேரை திரட்டி படகுடன் தயார் நிலையில் இருந்துள்ளார். ஆனால் படகையும் ஆட்களையும் ஏற்றி செல்ல வேண்டிய வாகனம் வழியில் ஆங்காங்கே வெள்ளத்தால் ஏற்பட்ட இடையூறுகளை தாண்டி சிங்கித்துறைக்கு வருவதற்கு மாலை நேரம் ஆகிவிட்டது. இதன்பின் உடனடியாக படகும் மீட்பு குழுவான அந்த மீனவ நண்பர்களும் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றனர்.

    இவர்களின் வரவை எதிர்பார்த்தபடி ஆறுமுகநேரி போலீஸ் செக்போஸ்ட் அருகே அரசு அதிகாரிகள் தவிப்பு நிலையில் இருந்துள்ளனர். ஆனால் இதற்குள் இருட்டிவிட்டது. பேய் மழையும் தனது வீரியத்தை சற்றும் குறைத்துக் கொள்ளவில்லை.

    இதனால் மீட்பு பணியின் முயற்சியை மறுநாள் விடிந்த பிறகு தான் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கேயே காத்திருந்து சூரிய வெளிச்சம் பரவ தொடங்கியதும் பார்த்தபோது தான் தெரிந்தது நிலைமையின் விபரீதம்.

    சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவிலான வயல் பகுதிகள் முழுவதும் சுனாமி அலைபாயும் கடல் போல வெள்ளத்தால் மிரட்டி கொண்டிருந்தது.

    இந்த சவாலை சந்திக்க சிங்கித்துறை மீனவர் குழுவினர் தயாராகினர். தங்களின் படகை சாலையில் இருந்து வயல்வெளி வெள்ளத்திற்குள் இறக்கி தங்கள் இலக்கை நோக்கி லாவகமாக பயணிக்க தொடங்கினர்.

    ஆனால் அந்த பயணம் அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான ஆபத்தை உணர்த்தி எச்சரிக்கை செய்தது. வெள்ள நீரின் ஓட்டம் அதி வேகமாகவும் பள்ளம் எது, மேடு எது, புதர் காடு எது? என்றெல்லாம் தெரியாத வகையில் அங்கு படகை செலுத்துவது 'கரணம் தப்பினால் மரணம்' என்கிற கதை தான். கூடுதலாக மற்றொரு ஆபத்தையும் அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருந்தது.


    அதாவது படகை இயக்கும் முக்கிய பாகமான காற்றாடி போன்ற விசையில் புதர்களும் துணி போன்ற பொருட்களும் சிக்கிக் கொண்டால் படகின் இயக்கம் தடைப்பட்டு நீரில் அவர்கள் அடித்து செல்ல நேரிடும். இப்படியான நெருக்கடி சூழலில் தான் அவர்களின் சாகச பயணம் தொடர்ந்தது. சுமார் 40 நிமிட நேரத்தையும் 4 கிலோமீட்டர் தூரத்தையும் கடந்த பிறகு கண்ணில் பட்டனர் தண்ணீர் பந்தல் கிராமத்தின் அப்பாவி மக்கள்.

    நான்கு தெருக்களில் உள்ள வீடுகள் அனைத்தும் மூழ்கிவிட்ட நிலையில் ஒரு சில வீடுகளின் மொட்டை மாடிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரும் கொட்டும் மழையில் தங்களின் கண்ணீரை கரைத்த படி நின்று கொண்டிருந்தனர்.

    இப்படியான சூழ்நிலையிலும் ஓரளவு தப்பிய தங்களின் வளர்ப்பு பிராணிகளான ஆடுகள், மாடுகள், நாய்கள் ஆகியவற்றையும் தங்களோடு மாடியில் ஏற்றி வைத்திருந்தது காண்போரை நெகிழச் செய்த காட்சியாக இருந்துள்ளது.

    மீட்பு குழுவினரை கண்ட அவர்கள் மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்டவர்களாக அழுகையும் ஆனந்தமும் கலந்து கூக்குரல் இட்டுள்ளனர். மீட்பு குழுவினரிடம், ' சாப்பாடு கொண்டு வந்தீங்களா? குடிக்க தண்ணீர் இருக்கா?' என்று தங்களின் 3 நாள் பசியையும் தாகத்தையும் உணர்வால் வெளிப்படுத்தி உள்ளனர். அவர்களிடம் மீட்பு குழுவினர் உங்களை மீட்க தான் வந்துள்ளோம்.

    உங்களுக்கான உணவு ஏற்பாட்டுடன் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர் என்று கூறி அவர்களை ஒரு முறைக்கு 30 பேர் என்கிற விதத்தில் மொத்தம் 240 பேரை மீட்டு ஆறுமுகநேரி யில் கொண்டு கரை சேர்த்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உடனடி சிகிச்சை மற்றும் உணவு வழங்கப்பட்டது.

    தங்களின் மீட்பு பணியை நிறைவேற்றிவிட்ட நிலை யில் தாங்களும் படகுடன் கரையேற தயாரான நிலையில் தான் அந்த மீட்பு குழுவினருக்கு மீண்டும் ஒரு சவால், தகவலாக வந்தது. சாகுபுரம் உப்பள பகுதியில் உப்பு தொழிலாளர்கள் சிலர் வெள்ளத்தில் சிக்கி 3 நாட்கள் தவித்து கொண்டிருப்பதாக தெரியவந்தது. அவர்களை மீட்பதற்காக தனியார் தொழிற்சாலையின் மீட்பு குழுவினர் எவ்வளவோ போராடியும் அதற்கு பலன் கிடைக்காமல் பரிதவிப்பே தொடர்ந்துள்ளது.

    இந்நிலையில்தான் சிங்கித்துறை மீனவ குழுவினரின் இரண்டாம் அத்தியாய சாகச பயணம் அத்திசையை நோக்கி தொடங்கியது.

    ஆனால் இப்போது அவர்கள் அடுத்தடுத்து முன்பை விட பெரும் சோதனைகள் பலவற்றை சந்திக்க வேண்டியதாயிற்று. நடுவழியில் சேறு போன்ற ஒரு பகுதியில் படகு சிக்கியது. அங்கிருந்து நீந்தி சென்று வேறு ஒரு இடத்தில் கயிறை கட்டி படகு மீட்கப்பட்டுள்ளது. பிறகு தொடர்ந்த பயணத்தில் பழுது காரணமாக படகு நீரின் வேகப் போக்கில் தள்ளாட தொடங்கியுள்ளது. சுதாரித்துக் கொண்ட மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு நங்கூரமிட்டு படகை நிலைநிறுத்தி பழுதை சரி செய்துள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் இருட்டி விடும் என்கிற தருணத்தில் தான் சற்று தூரத்தில் இருந்து சிலரின் கூக்குரல் சத்தம் கேட்டுள்ளது. அங்கு நோக்கி படகு பாய்ந்து சென்றது. அங்கே அவர்கள் கண்ட காட்சி ' பகீர் ' ரகம். பெருங்கடல் கொந்தளிப்பின் நடுவில் ஒரு மேஜையில் நெருக்கடியாக 10, 15 பேர் நிற்பதை போல இருந்துள்ளனர். வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 13 பேர் இங்கு உப்பள பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையில் அன்று இரவு காட்டு வெள்ளம் பெருக்கெடுத்து வந்துள்ளது.

    ஆபத்தை உணர்ந்து கொண்ட அவர்கள் அங்கிருந்து சுமார் 10 அடி உயரத்தில் குறுக்கே நீளமாக இருந்த ராட்சத இரும்பு குழாய் ஒன்றில் 'தக்கி முக்கி' ஏறியுள்ளனர். ஆனாலும் வெள்ளம் அவர்களை விட்டு விடுவதாக இல்லை. அந்த குழாய்க்கும் மேலாக பாயத்தொடங்கியது. மரண பீதியில் அவர்கள் ஒருவரையொருவர் அடுத்தடுத்து சங்கிலி போல் கைகளை கோர்த்துக்கொண்டு உயிர் போராட்டத்தில் நின்று தவித்துள்ளனர். ஒருவர் சறுக்கினாலும் ' கூண்டோடு கைலாசம்' என்கிற நிலைதான்.


    அந்த நேரத்தில்தான் மற்றொரு ஆபத்தும் அவர்களை நோக்கி வந்துள்ளது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட செடி கொடிகள் அடங்கிய புதர்கள் அவர்கள் நின்றிருந்த குழாயில் வந்து சிக்கியுள்ளன. இப்படியே அடுத்தடுத்து சில மரக்கிளைகளும் துணிகளும் வந்து அங்கு சிக்க அவற்றையே தங்கள் கால்களால் அழுத்தி அழுத்தி உருட்டி திரட்டி ஒரு 'பிளாட்பாரம்' போல் அமைத்துள்ளனர். அதன் மீது முழங்கால் அளவு தண்ணீரில் கடைசி கட்ட நம்பிக்கையில் இருந்த போது தான் அவர்களுக்கான மறுவாழ்வு அங்கே மீட்பு குழுவினரின் படகு வடிவில் வந்துள்ளது. அவர்கள் மீது மோதி விடாமல் ஜாக்கிரதையாக படகை நங்கூரமிட்டு மீட்பு குழுவினர், தத்தளித்த ஒவ்வொருவரையும் பக்குவமாக படகில் ஏற்றினர். 3 நாட்களாக உயிர் தவிப்பில் கிடந்த அந்த 13 பேரில் ஒருவர் படகில் மயங்கி சரிந்தார். மற்றவர்களும் கண்ணீர் விட்டு கதறியபடி படகில் தொய்ந்து கிடந்தனர்.

    படகு மீண்டும் விரைந்தது கரை நோக்கி. இப்போதும் அவர்களின் பயணம் கரடு முரடானதாகவே இருந்தது. ஆனால் அந்த சிரமம் மீட்பு குழுவினருக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. அவர்கள் நெஞ்சம் ஒருவித பரவசத்தில் நிறைந்திருந்தது. மறுகரையில், 'என்ன ஆனதோ, ஏது ஆனதோ?' என்று கையை பிசைந்தபடி நின்றிருந்த காவல்துறை உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் வெற்றிகரமாக படகு மீண்டு வருவதையும் தத்தளித்தவர்கள் மீட்கப்பட்டு வருவதையும் கண்டனர். துரிதமாக செயல்பட்டு அந்த உப்பள தொழிலாளர்களுக்கு உரிய அவசர உதவிகளை செய்து தேற்றினர்.

    சிங்கித்துறை யாசர் அராபத் தலைமையிலான கலீல் ரகுமான், மைதீன், நபீல்முஸ்தபா, அர்னால்டு, அந்தோனி, சலீம் கான், சபூர்தீன், சம்சு மரைக்காயர், மூஸா, வாசிம் அக்ரம், முத்து, செய்யது அபுசாலி, ஷேக் முகைதீன், அஜீஸ் ஆகியோரை கட்டி தழுவி பாராட்டுதலை தெரிவித்தனர்.

    இந்த சாகச பயணத்தை மேற்கொண்டு கிராம மக்கள் 240 பேரையும் ஜீவமரண போராட்டத்தில் இருந்த 13 தொழிலாளர்களையும் வியூகம் வகுத்து மீட்க செயல்பட்ட மீனவர் யாசர் அராபத் இது பற்றி கூறிய போது, 'எங்களின் கடல் பயணத்தில் புயல், பெரு மழை, படகின் பழுது போன்ற பல சங்கடங்களை சந்தித்து பழகி உள்ளோம்.

    அப்படிப்பட்ட எங்களுக்கே பீதியை ஏற்படுத்தும் வகையில் இந்த மழை வெள்ளத்திலான எங்களின் பயணம் அமைந்தது. ஆனாலும் பல உயிர்களை காப்பாற்ற செல்கிறோம் என்கிற எண்ணமே எங்களுக்கு துணிச்சலை தந்தது. அனைவரையும் உயிரோடு மீட்பதற்கான வாய்ப்பை எங்களுக்கு அளித்த இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறோம்' என்று கூறினார்.

    உயிரை பணயம் வைத்து செயல்பட்ட இந்த மீட்பு குழுவினரின் அறிய இந்த செயல்பாடு வெளி உலகத்திற்கு இதுவரை தெரியவில்லை. தொடர்ச்சியாக இப்பகுதியில் மின்சாரமும் தொலை தொடர்பும் துண்டிக்கப்பட்டிருந்தது இதற்கு முக்கிய காரணம். தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் இப்படியான சாகச செயலில் ஈடுபட்ட சிங்கித்துறையை சேர்ந்த இந்த மீனவ மீட்பு குழுவினரை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும் என்று காயல்பட்டினத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெஸ்முதீன் தெரிவித்துள்ளார்.

    • மிச்சாங் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வேளச்சேரி பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது.
    • வேளச்சேரி மேற்கு பகுதி செயலாளர் எம்.ஏ.மூர்த்தி உடனடியாக சென்று வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை மிட்டதுடன் நிவாரண உதவிகளையும் செய்தார்.

    சென்னை:

    சமீபத்தில் சென்னை யில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வேளச்சேரி பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது. வீடுகளில் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். தகவலறிந்து பாதிப்படைந்த பகுதிகளுக்கு வேளச்சேரி மேற்கு பகுதி செயலாளர் எம்.ஏ.மூர்த்தி உடனடியாக சென்று வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை மிட்டதுடன் நிவாரண உதவிகளையும் செய்தார்.

    வெள்ள நீர் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு வரும் வரை மீட்பு பணிகளில் ஈடுபட்டதுடன் ஒவ்வொரு நாளும் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று பொது மக்களுக்கு உதவி செய்து வந்தார். இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் எம்.ஜி.ஆர். நினைவு நாளான நேற்று தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட வேளச்சேரி மேற்கு பகுதி கழக செயலாளர் எம்.ஏ. மூர்த்தி ஏற்பாட்டில் 1000 குடும்பங்களுக்கு நிவா ரண பொருட்கள் வழங்கப்பட்டது.

    அரிசி பெட்ஷீட் மற்றும் நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் சரோஜா, மாவட்ட செயலாளர் அசோக், பேரவை மாநில இணைச் செயலாளர் ஜெ.ஜெயவர்தன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் எஸ்.பி.முல்லை செல்வம், சா.சங்கர் வட்டச் செயலாளர் கே.ஆர்.மணி, ஏ.எம்.ராஜா, ஸ்ரீதர், குட்டி உள்பட ஏராளமான பகுதி வட்ட நிர்வாகிகள், மகளிரணி, வடிவேலு, ஜிம்பாபு, ஆறு, மணி, லட்சுமி அம்மாள், ஸ்ரீதர், ஜெயபால் மற்றும் பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • நள்ளிரவு 11.59 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இயேசு கிறிஸ்து பிறப்பது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழை வெள்ளப்பெருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பிரார்த்தனை செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் விழாக்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும்.

    ஆனால் கடந்த 17, 18-ந் தேதிகளில் இந்த மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போதும் சில இடங்களில் வெள்ளநீர் தேங்கி உள்ளது. இதனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் வழக்கமான உற்சாகமின்றி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை களையிழந்து காணப்பட்டது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தேவா லயங்களில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் ஆராதனை, சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதில் பிஷப்கள், பங்கு தந்தையர்கள், இறைமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

    கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்று இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சி.எஸ்.ஐ. ஆலயங்களில் இன்று அதிகாலை சிறப்பு வழிபாடு நடந்தது.

    தூத்துக்குடியில் புகழ் பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நேற்று இரவு நடைபெற்றது. இதில் பிஷப் குமாரராஜா சிறப்பு திருப்பலி நடத்தினார். இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு கேக் வழங்கப்பட்டது.

    இதேபோல் சின்னக்கோவில் என்று அழைக்கப்படும் திருஇருதய பேராலயத்தில் பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நள்ளிரவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதேபோல் பேட்ரிக் தேவாலயம், பேதுரு ஆலயம், புளியம்பட்டி அந்தோணியார் ஆலயம், சொக்கன்குடியிருப்பு மணல் மாதா ஆலயம் மற்றும் அமலி நகர், மணப்பாடு, நாசரேத், சாத்தான்குளம் சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் இன்று அதிகாலை கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது.

    பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனை நடை பெற்றது. நள்ளிரவு 11.59 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இயேசு கிறிஸ்து பிறப்பது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது விண்ணில் இருந்து நட்சத்திரம் கீழே இறங்கி வருவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து பங்கு தந்தையர் குழந்தை இயேசுவின் உருவத்தை ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் வைத்தனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    தேவாலயங்களில் நேற்று இரவும், இன்று அதிகாலையும் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழை வெள்ளப்பெருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பிரார்த்தனை செய்தனர்.

    ×