search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவையாறு பகுதிகளில் பூச்சி தாக்குதலால் பெருமளவில் பாதிக்கப்பட்ட பொங்கல் கரும்புகள்- விவசாயிகள் வேதனை
    X

    திருவையாறு பகுதிகளில் பூச்சி தாக்குதலால் பெருமளவில் பாதிக்கப்பட்ட பொங்கல் கரும்புகள்- விவசாயிகள் வேதனை

    • நல்ல விளைச்சல் இருக்கும் என்ற நம்பிக்கையில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.
    • பருவநிலை மாற்றம், போதிய மழை இல்லாத காரணங்களால், பூச்சி தாக்குதல் கரும்பு பயிர்களை வெகுவாக பாதித்தது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு பிறகு அதிகளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

    குறிப்பாக திருவையாறு பகுதியில் விளையும் கரும்புகளுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. ஆண்டுதோறும் திருவையாறு மற்றும் சுற்றியுள்ள திருக்காட்டுப்பள்ளி, வளப்பகுடி, நடுபடுகை, நடுக்காவேரி பகுதிகளில், பொங்கலுக்கான செங்கரும்பு ஆண்டுதோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்படும்.

    இப்பகுதிகளில் விளையும் கரும்பின் சுவையும், தன்மையும் சிறப்பாக இருப்பதால், வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஒரு மாதத்திற்கு முன்பே கரும்பை பார்த்து, முன்பணமும் விவசாயிகளிடம் கொடுத்து சென்று விடுவார்கள்.இதனால் தான் இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கரும்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த ஆண்டும் நல்ல விளைச்சல் இருக்கும் என்ற நம்பிக்கையில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.

    ஆனால் பருவநிலை மாற்றம், மற்ற மாவட்டங்களில் பெய்த பருவமழையில் பாதியளவு கூட தஞ்சை மாவட்டத்தில் பெய்யாதது போன்ற காரணங்களால் பத்து மாத பயிரான பொங்கல் கரும்பு தற்போது 6 அடிக்கு மேல் வளந்திருக்க வேண்டிய நிலையில் மூன்று அடிக்கு மேல் வளராமல், தோகை பழுப்பு நிறமாக மாறி உள்ளது. மேலும் பூச்சி தாக்குதலால் ஒரு கரும்பு பாதித்தால், அருகில் உள்ள மற்ற கரும்புகள் பாதிப்பை சந்தித்துள்ளது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    இதனால் பாதிக்கப்பட்ட கரும்புகளை அப்புறப்படுத்த விவசாயிகள் கூடுதல் செலவு செய்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே காவிரியில் போதிய நீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை விளைச்சல் கடுமையாக சரிவை சந்தித்தது. சம்பா, தாளடியும் எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சல் இருக்குமா என கேள்விக்குறி உள்ளது. அதேபோல் தற்போது பொங்கல் கரும்பு விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து நடுப்படுகையை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் கூறும்போது:-

    இந்தாண்டு ஏற்பட்ட பருவநிலை மாற்றம், போதிய மழை இல்லாத காரணங்களால், பூச்சி தாக்குதல் கரும்பு பயிர்களை வெகுவாக பாதித்தது.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில், ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் வரை செலவு செய்தும், பூச்சி தாக்குதலால் பாதிப்பு கரும்புகளை அழிக்கும் நிலை உள்ளது.

    ஒரு ஏக்கரில் பயிரிடப்படுள்ள கரும்பு விதைகள், 50 சதவீதம் முற்றிலும் வீணாகி உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் வியாபாரிகள் கரும்பை வாங்க ஆர்வம் காட்டாமல், பயிரை பார்த்து விட்டு திரும்பி சென்று விடுகிறார்கள். இருப்பினும் நல்ல முறையில் உள்ள கரும்பை காப்பாற்ற போராடி வருகிறோம். தோட்டக்கலைத்துறையினர் பூச்சி தாக்குதலுக்கு என்ன காரணம், என்ன வகையான நோய் என கண்டறிய வேண்டும்.

    தமிழக அரசு பொங்கல் தொகுப்பில், எங்கள் பகுதியில் நல்ல முறையில் இருக்கும் கரும்பை கொள்முதல் செய்தால், எங்களுக்கு நிவாரணம் வழங்கியது போல் இருக்கும். 50 சதவீதம் செலவு தொகையாவது கிடைக்கும் என்றார்.

    Next Story
    ×