search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "loss"

    • ஏ 1 படத்தில் இவர் நடித்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட் ஆனது.
    • நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார்.

    தமிழ் சின்னத்திரையில் "லொள்ளு சபா" என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் சேஷூ. இவர் தனது தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

    சந்தானம் நடிக்கும் பெரும்பாலான படங்களில் நடிகர் சேஷு நடித்துள்ளார்.

    ஏ 1 படத்தில் இவர் நடித்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட் ஆனது. முக்கியமாக "அச்சச்சோ அவரா பயங்கரமான ஆள் ஆச்சே" என்று அவர் நடித்த காட்சிகள் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

    இதற்கு அடுத்து  வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் அவர் நடித்த காட்சிகள் அனைவராலும் கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில், நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார். அவரின் சிகிச்சைக்காக பலர் நிதி திரட்டி கொடுத்தனர்.

    ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இச்செய்தி திரைப்பட கலைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
    • பருவம் தப்பி போவதால் பால் அடைத்து நெல் மணிகள் திரட்சி ஆகாமல் நோஞ்சான் நெல்லாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் பொய்யான்குளம், நத்தகுளம், நல்லூர் கீழ்க்குளம் ஆகியவற்றின் வழியாக ஆயிரத்து 200 ஏக்கரில் நெல் விவசாய நிலங்கள் உள்ளன.

    நடப்பு பருவமழை காலத்தில் இந்த குளங்களுக்கு தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து டிசம்பர் மாத தொடக்கத்தில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டன. உழவு செய்து உரமிட்டு விதைக்கப்பட்ட பிறகு அடுத்ததாக நாற்று நடும் பணியை தொடங்க இருந்த சமயத்தில் யாருமே சற்றும் எதிர்பாராத விதத்தில் 2 நாட்களாக தொடர்ந்து பெரும் மழை பெய்தது.

    இதனால் பெருக்கெடுத்த வெள்ளத்தின் வேக ஓட்டம் காரணமாக வளர் இளம் பருவத்தில் இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் அடியோடு அடித்து செல்லப்பட்டுவிட்டன.

    இதனால் ஏற்கனவே உழவிட்டு உரமிட செலவு செய்தது, விதைநெல் வீணானது ஆகியவற்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இதையும் தாண்டி மீண்டும் வயலை சீர்படுத்தி மறு விவசாயத்தை தொடங்கலாம் என்றால், விதை நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

    விவசாயிகள் கடந்த ஆண்டு அறுவடைக்குப் பிறகு தாங்கள் சேமித்து வைத்திருந்த விதை நெல் முழுவதுமாக வெள்ளத்தோடு போய்விட்ட நிலையில் இனி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். மாற்று ஏற்பாடுகளை செய்ய அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம், விவசாய அலுவலகங்களை தொடர்பு கொண்டால் அங்கும் விதைநெல் கைவசம் இல்லை என்கிற பதிலே கிடைக்கிறது. வேறு இடங்களில் இருந்து உடனடியாக இங்கு விதை நெல் வரவழைத்து தர வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இது பற்றி நத்தகுளம் விவசாய சங்க துணை தலைவரான ஆறுமுகநேரி மாணிக்கம் கூறியதாவது:-

    தற்போதைய பெருமழை வெள்ளத்தால் திருச்செந்தூர், ஆறுமுகநேரி வட்டார பகுதியில் பிசான சாகுபடி விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது. கையிருப்பு விதை நெல் கிட்டத்தட்ட 80 சதவீத விவசாயிகளிடம் இருந்து மழை வெள்ளத்தால் அழிந்து விட்டது. மீதி 20 சதவீத விவசாயிகளிடம் மட்டுமே நெல் வித்துகள் கைவசம் உள்ளன. நிலைமையை புரிந்து கொண்டு போர்க்கால அடிப்படையில் வேளாண் துறையினர் வேறு மாவட்டங்களில் இருந்து நெல் வித்துகளை இங்கு வரவழைத்து தரவேண்டும்.

    அப்படி தந்தால் கூட காலதாமதமான விவசாயம் என்ற வகையில் முளைக்கும் பயிர் கடுமையான நோய் தாக்குதலுக்கு உள்ளாகும். பருவம் தப்பி போவதால் பால் அடைத்து நெல் மணிகள் திரட்சி ஆகாமல் நோஞ்சான் நெல்லாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

    இதனால் மறு விவசாயத்திலும் விவசாயிகளுக்கு பலத்த பாதிப்பு ஏற்படும் நிலையே தெரிகிறது. அதனால் பாரம்பரிய நெல் விதைகளை தவிர்த்து விட்டு இந்த முறை நோய்களை தாக்குப்பிடிக்கக் கூடிய ஒட்டு ரக விதைகளுக்கு அரசின் வேளாண் துறை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    மேலும் தற்போது ஏற்பட்டுள்ள விவசாயத்தின் பாதிப்பை குறித்து உடனடியாக கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவியும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வரையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • கடற்கரையோரமாக குவிந்து கிடக்கும் காய்ந்த எண்ணெய் கழிவுகளும் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது.

    திருவொற்றியூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டி போட்ட மிச்சாங் புயல், எண்ணூர் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக சிதைத்துள்ளது என்றே கூறலாம். தாளங்குப்பம், நெட்டுக் குப்பம், எண்ணூர் குப்பம், காட்டுக்குப்பம், சின்னக் குப்பம், முகத்துவாரம் குப்பம், சடையங் குப்பம், சிலிகர் பாதை கிராமம் ஆகிய 8 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அப்பகுதியில் தேங்கிய எண்ணை கழிவுகளால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

    இந்த கிராமங்களில் வசிக்கும் 30 ஆயிரம் மீனவர்களும் தங்களது படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகி இருப்பதால் இனி என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்துப்போய் உள்ளனர். மீனவர்கள் பயன்படுத்தி வந்த 797 படகுகளும், வலைகளும் எண்ணை கழிவு மற்றும் வெள்ளத்தில் மூழ்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இதன் மூலம் ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வரையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 797 பைபர் படகுகள் மீன்பிடி வலைகள் சேதமாகி இருப்பதன் மூலம் ரூ.4 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீன்பிடி படகுகளை சீரமைத்து பயன்படுத்துவதற்கு பெரும் தொகை செலவாகும் என்பதால் அரசின் நிவாரண உதவிக்காக மீனவர்கள் காத்திருக்கிறார்கள். எண்ணை கழிவுகளில் மூழ்கிய வலைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமாகி இருப்பதாகவும், எனவே மீன்பிடி வலைகளை புதிதாகவே வாங்க வேண்டி உள்ளது என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதை தொடர்ந்து தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பில் சேதமான படகுகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படகுகளுக்கு ரூ.10 ஆயிரம், வலைகளுக்கு ரூ.5 ஆயிரம் என 15 ஆயிரம் வரையில் நிவாரணம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சேத மதிப்புகளை கணக்கிட்டு மீனவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசு உரிய அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே எண்ணை கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்த போதிலும் நேற்று முதலே அப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இன்று 2-வது நாளாக படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணை கழிவுகளை அகற்றி வருகிறார்கள். நவீன எந்திரங்களின் மூலமாக நேற்று தொடங்க இருந்த பணிகள் நடைபெற வில்லை. இன்று அந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடற்கரையோரமாக குவிந்து கிடக்கும் காய்ந்த எண்ணை கழிவுகளும் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்து எண்ணைக் கழிவுகள் முழுவதையும் அகற்றி இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் வரை ஆகும் என்று மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அதற்கு முன்னரே எண்ணை கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 104 இடங்களில் மணல் குவாரிகள் இருந்தும் 15 இடங்களில் தான் குவாரிகள் செயல்படுகிறது.
    • யார்டுகளில் 5 நாட்களாக மணல் வழங்கப்படவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்ற புகார்கள் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சர்கள் வீடுகளும் தப்பவில்லை.

    இந்நிலையில் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் என்ற அடிப்படையில் சில மணல் குவாரி ஒப்பந்ததாரர்களும் சிக்கி உள்ளனர். இவர்கள் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    இதில் திருச்சி, கரூர், வேலூர், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 5 மணல் குவாரிகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையின் போது அங்கிருந்த ஒப்பந்த தாரர்களின் ஆட்கள் ஓட்டம் பிடித்தனர்.

    தற்போது சோதனைகள் முடிந்தாலும், யாரும் வேலைக்கு வரவில்லை. இதனால் யார்டுகளில் லாரிகளுக்கு மணல் வழங்கும் பணிகள் முடங்கியுள்ளது.

    104 இடங்களில் மணல் குவாரிகள் இருந்தும் 15 இடங்களில் தான் குவாரிகள் செயல்படுகிறது.

    ஆன்லைன் முறையில் மக்கள் பணம் செலுத்தினாலும், லாரிகளுக்கு யார்டுகளில் மணல் அள்ளிப் போடும் பணியில் ஈடுபடுபவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

    பணம் செலுத்தியவர்களுக்காக மணல் அள்ளிச் சென்ற லாரிகள் மணலுக்காக காத்திருக்கின்றன. இந்த யார்டுகளில் 5 நாட்களாக மணல் வழங்கப்படவில்லை. இதனால் ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலசங்க தலைவர் ஐ.கே.எஸ்.நாராயணன் கூறுகையில், கடந்த 12-ந்தேதியில் இருந்து மணல், சவுடு குவாரிகள் இயங்கவில்லை. ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட லாரிகள் மணல் அள்ளும் 'ஸ்டாக் பாயிண்டில்' ஒரு வாரமாக நின்று கொண்டிருக்கிறது.

    லாரி டிரைவர்கள் பசி பட்டினியுடன் காத்திருக்கிறார்கள். அங்கு நிற்கும் லாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. இதனால் லாரி உரிமையாளர்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்து உள்ளனர்.

    இந்த விசயத்தில் முதலமைச்சர் தலையிட்டு உடனடியாக மீண்டும் மணல் குவாரிகள் செயல்பட நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரூரில் விவசாய பயிர்களை நாசம் செய்யும் மயில்களால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்
    • மயில்களை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினருக்கு கோரிக்கை

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் நொய்யல், அத்திப்பாளையம், குப்பம், கோம்புப்பாளையம், ஓலப்பாளையம், நல்லிக்கோவில், ஒரம்புப்பாளையம் பேச்சிப்பாறை, நடையனூர், கரைப்பாளையம், திருக்காடுதுறை, பழமாபுரம், புன்னம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல், சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை விவசாயிகள் பயிர்செய்துள்ளனர். இந்நிலையில் இந்த பகுதிகளில் ஏராளமான மயில்கள் உள்ளதால் தானியங்கள் பயிர் செய்துள்ள பகுதிகளுக்கு சென்று தானியங்களையும், பயிர் வகைகளையும் மயில்கள் கொத்தி நாசப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வரும் நிலையில் மயில்களின் தொல்லையால் மேலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே வனத்துறையினர் இப்பகுதியில் உள்ள மயில்களை பிடித்து வனப் பகுதிகளுக்கு கொண்டு சென்று விட்டு விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தகவல் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அரசு பிரமாண பத்திரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
    • 2017-18-ம் நிதியாண்டில் சராசரி தினசரி இழப்பு ரூ. 9 கோடியாக இருந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழக நிறுவனங்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அரசு போக்குவரத்து கழகங்கள் தற்போது தினந்தோறும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களில் தினமும் ரூ.15 கோடி இழப்பு ஏற்படுகிறது.

    கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அரசு பிரமாண பத்திரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. 2017-18-ம் நிதியாண்டில் சராசரி தினசரி இழப்பு ரூ. 9 கோடியாக இருந்தது.

    சமீபத்தில் சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி 2021-22-ம் ஆண்டில் தினசரி இழப்பு ரூ.18 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனாலும் சராசரி தினசரி இழப்பு 2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி வரை ரூ.14.8 கோடியாக உள்ளது.

    கடந்த ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.12,007 கோடி வருவாய் கிடைத்தது. இதில் ரூ.6,705.69 கோடி வருவாய் டிக்கெட் கட்டணம் மூலம் வந்தது. மேலும் ரூ.5,256.86 கோடி வருவாய் விளம்பரம் உள்ளிட்ட இதர வகைகளில் இருந்து கிடைத்தது.

    ஆனால் கடந்த ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.16,985 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. ஊழியர்களின் சம்பளத்துக்காக ரூ.9,015 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது 53 சதவீதம் ஆகும். எரிபொருளுக்காக ரூ.4,815.94 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இது 28 சதவீதம் ஆகும்.

    பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு இலவச பயணத்தை வழங்கி வருகிறது. இதற்கான கட்டணத்தை அரசு, போக்குவரத்து கழகத்துக்கு செலுத்தி வருகிறது. கடந்த 2020-21-ம் ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் அரசு மூலம், போக்குவரத்து கழகத்துக்கு கிடைக்கும் தினசரி வருவாய் ரூ.73.64 லட்சமாக குறைந்தது. அது 2022-23 நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை தினசரி வருமானம் ரூ.1.7 கோடியாக உயர்ந்துள்ளது.

    செலவுகளை குறைப்பதற்காக சமீப ஆண்டுகளாக போக்குவரத்து கழக நிறுவனங்கள் பல வழித்தடங்களில் பஸ்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளன. இதன் காரணமாக 2019-20 மற்றும் 2022-23 ஆண்டுகளுக்கு இடையில் ஒரு நாளைக்கு அரசு பஸ்களின் மொத்த பயண தூரம் 83.65 லட்சம் கிலோ மீட்டரில் இருந்து ரூ.77.81 லட்சம் கிலோ மீட்டராக குறைந்துள்ளது. பஸ் சேவைகளின் எண்ணிக்கையும் 19,290-ல் இருந்து 18,723 ஆக குறைந்துள்ளது.

    கடந்த 4 ஆண்டுகளில் எரி பொருள் செலவுகள் ரூ.955 கோடி அதிகரித்துள்ள போதிலும் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் பஸ் கட்டணம் உயரவில்லை.

    • மழையினால் பெரும் நஷ்டம் என்று விவசாயிகள் வேதனை
    • நுாற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் சாய்ந்து நீரில் மூழ்கின

    அகரம்சீகூர்

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட அகரம்சீகூர் பகுதிகளில் கோடை காலத்தில் வழக்கமான அளவைவிட இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனத்தின் காரணமாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது இதன் காரணமாக அகரம்சீகூர் பகுதிகளில் விவசாய பொதுமக்கள் பொதுவாக நெல் சாகுபடியையே அதிகம் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் 120 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் சாய்ந்து மழை நீரில் மூழ்கின. மேலும் நெற்பயிர்கள் நன்கு முதிர்ச்சி அடை ந்துள்ளதால் தேங்கி நிற்கும் மழை நீரில் சாய்ந்து முளைக்க தொடங்கியுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.மேலும் இப்பகுதியில் அறுவடை செய்தவர்களும் வைகோலை தங்களின் வயல்வெளியில் குவியலாக வைத்திருந்தனர். அதுவும் தற்போது வீணாகிவிட்டது. தொடர் மழையின் காரணமாக அகரம்சீகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் நெல் மூட்டைகளை வயல் பகுதியிலேயே வைத்து மூடி பாதுகாத்து வருகிறோம்.இந்நிலையில் நேற்று வானம் மேகமூட்டத்துடனே காணப்படுவதால் அறுவடை பணியை மேற்கொள்ளாமல் உள்ளோம். இதே நிலை நீடித்தால் நெற்பயிர்கள் அனைத்தும் வீணாகும் நிலை ஏற்படும்.நாங்கள் கடன் வாங்கி பயிரிட ப்பட்டுள்ளோம் தற்போது பெய்த கனமழை எங்களுக்கு பெரும் அளவில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து எங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாய பொதுமக்கள் கூறினார்கள்.

    • கடந்த சில நாட்களாக முட்டை விலை 440 காசுகளாக நீடித்ததால் முட்டை வியாபாரிகள் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள்.
    • பண்ணையாளர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் தினசரி 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 440 காசுகளாக நீடித்ததால் முட்டை வியாபாரிகள் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள்.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவான நெக் நிர்ணயம் செய்யும் கொள்முதல் விலைக்கே பண்ணையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும். ஆனால் வியாபாரிகள் பண்ணையாளர்களிடம் நெக் விலையில் இருந்து 25 முதல் 70 காசு வரை குறைத்தே கொள்முதல் செய்து வந்தனர்.

    இதை அடுத்து நாமக்கல் முட்டை விலை நிர்ணய ஆலோசனை குழுவான நெஸ் பேக் உருவாக்கப்பட்டு மைனஸ் விலையை பரிந்துரை செய்து வருகிறது. ஆனாலும் இந்த விலையில் இருந்து குறைத்தே வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் பண்ணையாளர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் முட்டை கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியிருப்பதாவது:-

    வியாபாரிகள் நெக் விலையில் இருந்து குறைத்து முட்டை கொள்முதல் செய்வதால், பண்ணையாளர்களுக்கு ஒரே மாதத்தில் ரூ.180 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது.

    மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் அரசே முட்டை விலையை நிர்ணயம் செய்கிறது. அதேபோல் தமிழக அரசும் கொள்முதல், விற்பனை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்.

    கோடை காலம் தொடங்கி உள்ளதால் மேலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அரசு உடனடியாக இது குறித்து முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நகராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால் ரூ.94 லட்சத்து 88 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
    • சட்டப்பேரவை பொது கணக்கு குழுத் தலைவர் குற்றச்சாட்டு

    அரியலூர்,

    அரியலூரில் சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், சரஸ்வதி, சிந்தனச்செல்வன், மாரிமுத்து ஆகியோர் கொண்ட குழுவினர், அரசு மருத்துவக் கல்லூரி, அரசு சிமெண்ட் ஆலை, உயரிய படிம அருங்காட்சியகம், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஆய்வு செய்தனர்.பின்னர் சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது,கடந்த ஆட்சியில் அரியலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால் ரூ.94 லட்சத்து 88 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. சமூக நலத்துறை சார்பில் விலையற்ற பொருள்களை சரியாக பரிசீலனை செய்யாமல் கொடுத்ததில் ரூ.3.23 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆதிதிராவிட நல்லது துறை சார்பில் மாணவர்களுக்கான உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை செலவு செய்யாமல் மீண்டும் அத்துறைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் கனிம வளங்களை வெட்டி எடுத்ததில் தவறுகள் நடந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை தெரிவித்துள்ளது. இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெரும் அனைத்து அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி, எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன், பேரவை செயலாளர் சீனிவாசன், சார்வு செயலாளர் பாலசீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து நெல் கொள்முதல் நிலையங் களிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும்.
    • தண்ணீர் புகுந்து பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகி பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை தாங்கினார். இதில் கோட்ட அளவிலான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ரவிச்சந்தர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருவையாறு புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்ட வேண்டும். தஞ்சாவூர் கோட்டத்தில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங் களிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கக்கரை சுகுமாரன் கொடுத்துள்ள மனுவில், ஒரத்தநாடு சுற்று வட்டார பகுதியில் சில இடங்களில் சம்பா அறுவடை பணி தொடங்கிவிட்டது. எனவே தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    செல்லப்பன் பேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, செல்லப்பன்பேட்டை கிராமத்தில் மழை நீர் செல்ல வழி இன்றி வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மழை பெய்யும் நேரங்களில் அந்தப் பகுதியில் உள்ள வயலுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகி பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வாய்க்காலை மீட்டு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏக்கருக்கு ரூ.50,000 வரை செலவு செய்துள்ளோம்.
    • பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, உளுந்து, கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு அடுத்தபடியாக பல்வேறு பகுதிகளில் செண்டி, ரோஜா பூ ஆகியவை பயிரிடப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் செம்மண் பகுதியான தஞ்சாவூர் அடுத்த திருக்கானூர்பட்டியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சென்டி பூ சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து விவசாயி கள் கூறுகையில், 45 நாட்களில் செடி வைத்து பூ பூத்து விடும். பனி காலம் தொடங்குவதற்கு முன்பே பூ அறுவடைப்பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது சபரிமலை சீசன் தொடங்கியும் விற்பனை என்பது மந்தமாகவே உள்ளது.

    ஏக்கருக்கு ரூ.50,000 வரை செலவு செய்துள்ளோம். ஒரு கிலோ பூவின் விலை ரூ.60-க்கு விற்பனை செய்தால் மட்டுமே லாபம் பார்க்க முடியும்.

    ஆனால் பூவின் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை மட்டுமே வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

    பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே தமிழக அரசு பூ சாகுபடியை மேம்படுத்த வங்கி கடன், மானிய விலையில் உரம், விதை ஆகியவை வழங்க வேண்டும்.

    சொட்டு நீர் குழாய் உள்ளிட்ட கருவிகளை மானிய விலையில் வாங்கினால் தங்களுக்கு மேலும் அதிக மகசூல் கிடைக்கும். இதனால் கூடுதல் லாபம் பெற முடியும் என்றனர்.

    • ஆலை தொழிலாளர்களும், கரும்பு விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தியும், கடந்த ஆட்சியில் ஆலையை இயக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • தமிழக அரசு ஆலையை இயக்க 10 பேர் கொண்ட ஆய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறைஅருகே தலைஞாயிறு கிராமத்தில் என்.பி.கே.ஆர்.ஆர் அரசு கூட்டுறவு சக்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை அதிகாரிகளின் அலட்சியத்தினாலும், தவறான ஆலை விரிவாக்க த்தாலும் நஷ்டம் ஏற்பட்டு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.

    இதனால் ஆயிரக்கணக்கான கரும்பு விவசாயி களும், ஆலை தொழிலாளர்களும் வேலை இன்றி பாதிக்கபட்டனர், ஆலை தொழிலாளர்களும், கரும்பு விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தியும், கடந்த ஆட்சியில் ஆலையை இயக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தமிழக அரசு ஆலையை இயக்க 10 பேர் கொண்ட ஆய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.இந்த குழுவில் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் சிவமலர் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் இந்த ஆலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்த போது ஆலை மூடுவதற்கு காரணமாக இருந்தவர் எனக் கூறியும்,

    இவரை தற்போது ஆய்வு குழுவில் இருப்பதால் இவர் ஆலைக்கு எதிராக தான் செயல்படுவார்.எனவே இந்தகுழுவில் இருந்து நீக்க வலியுறு த்தியும், மக்களால் தேர்ந்தெடு க்கபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜகுமார், ஆலை இயங்காது என மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வதை கண்டித்தும் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில கரும்பு விவசாய சங்க செயலாளர் காசிநாதன் தலைமையில் கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பா ட்டத்தில்நூற்றுக்கு மேற்பட்ட கரும்பு விவசா யிகள் கலந்து கொண்டு, கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் சிவமலர் எதிரா கவும், எம்.எல்.ஏராஜ்குமாருக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

    ×