search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக"

    • நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை.
    • நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்!

    சென்னை:

    நடந்து முடிந்த நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்நிலையில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

    வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய மத்திய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன.

    இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

    மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம்:

    * நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை.

    * அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை.

    * சமூகநீதிக்கு எதிரானவை.

    * தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை.

    நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    • தகுதி இல்லாத ஒருவர் பாஜக தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல என்று கனிமொழி கூறி இருந்தார்.
    • பாஜக-வினர் பெரியார் வாழ்க என்ற சொல்ல ஆரம்பிக்கட்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி எம்பி மீண்டும் வெற்றி பெற்றார்.

    பாஜக கூட்டணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையே தோற்றுவிட்டார்.

    இதையடுத்து கனிமொழி மற்றும் அண்ணாமலை இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.

    தகுதி இல்லாத ஒருவர் பாஜக தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல என்று கனிமொழி கூறி இருந்தார்.

    அதற்கு பதிலடியாக, கனிமொழி பாஜகவிற்கு வந்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது பற்றி பரிசீலிப்பதாக அண்ணாமலை கூறினார்.

    அண்ணாமலையின் இந்த கருத்துக்கு கனிமொழி பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    பாஜக-வினர் பெரியார் வாழ்க என்ற சொல்ல ஆரம்பிக்கட்டும். அவர்கள் கட்சியை வளர்க்க நான் அங்கு போக வேண்டிய அவசியம் இல்லை. திராவிட முன்னேற்ற கழகம் தான் எனக்கு தெரிந்த இயக்கம். என்னை இங்கிருந்து யாரும் எதுக்காகவும் அசைக்க முடியாது. அதைத்தாண்டி அவர்கள் கட்சியை வளர்ப்பது என்னுடைய வேலை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    • அ.தி.மு.க. கூட்டணி 23.05 சதவீதமும், பா.ஜ.க. கூட்டணி 18.28 சதவீதமும், நாம் தமிழர் கட்சி 8.10 சதவீத வாக்குகளும் பெற்று இருக்கின்றன.
    • தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எந்த இடமும் இல்லை.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 4 கோடியே 36 லட்சத்து 19 ஆயிரத்து 470 வாக்குகள் பதிவாகி இருந்தன. அதில் தி.மு.க. கூட்டணி 2 கோடியே 4 லட்சத்து 86 ஆயிரத்து 693 வாக்குகள் பெற்றன. அது 46.97 சதவீதம் ஆகும். அ.தி.மு.க. கூட்டணி 23.05 சதவீதமும், பா.ஜ.க. கூட்டணி 18.28 சதவீதமும், நாம் தமிழர் கட்சி 8.10 சதவீத வாக்குகளும் பெற்று இருக்கின்றன.

    இதுதவிர சுயேச்சைகள் மற்றும் இதர கட்சியினர் 2.66 சதவீத வாக்குகளும், நோட்டா 1.07 சதவீத வாக்குகளும் பெற்று உள்ளன.

    ஒவ்வொரு கட்சி ரீதியாக பார்த்தால் 4 கட்சிகள் மட்டும் 10 சதவீத வாக்குகளை தாண்டி இருக்கின்றன. தி.மு.க.- 26.9, அ.தி.மு.க.- 20.46, பா.ஜ.க.- 11.24, காங்கிரஸ் - 10.67 சதவீத வாக்குகள் பெற்று இருக்கின்றன.

    இந்நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுவது குறித்து தி.மு.க. மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், தமிழகத்தில் பா.ஜ.க.வால் வளர முடியாது. பா.ம.க. மற்றும் அதன் மற்ற கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சில வாக்குகளை பெற்றிருக்கலாம். அவர்களுக்கு என தனிப்பட்ட ஆதரவு இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எந்த இடமும் இல்லை. அவர்கள் பெற்ற வாக்குகள் அனைத்தும் கூட்டணி கட்சிகளால்தான் என்று கூறியுள்ளார்.

    • டெல்லி விமான நிலையத்தில் தலைவர் கலைஞரின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
    • சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தேன்.

    இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று பகல் 1 மணி அளவில் டெல்லி சென்றார்.

    விமான நிலையத்தில் அவரை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா எம்.பி., டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

    இதனைத்தொடர்ந்து அவர் தமிழ்நாடு அரசு இல்லத்துக்கு சென்றார். அங்கு போலீஸ் மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றார்.

    கூட்டம் முடிந்ததும், சென்னை திரும்ப டெல்லி விமான நிலையத்துக்கு இரவு 8 மணிக்கு முதலமைச்சர் சென்றார். அப்போது, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனையில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்ப விமான நிலையம் சென்றிருந்தார்.

    அப்போது இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டனர். அந்த தருணத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து, தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதைப்போல மு.க.ஸ்டாலினுக்கும் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்தார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    டெல்லி விமான நிலையத்தில் தலைவர் கலைஞரின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தேன். அவர் மத்திய அரசியலில் முக்கிய பங்காற்றுவார், தென் மாநிலங்களுக்காக வாதிடுவார், நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என்று நான் நம்புகிறேன் என கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் பாஜகவிற்கு இடமே இல்லை, இங்கே தாமரை மலராது.
    • தகுதி இல்லாத ஒருவர் பாஜக தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி. மீண்டும் வாகை சூடினார்.

    பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அபார வெற்றி பெற்றதையடுத்து, கலைஞரின் நினைவிடத்தில் சான்றிதழை வைத்து கனிமொழி இன்று அஞ்சலி செலுத்தினார்.

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கனிமொழி, "தமிழகத்தில் பாஜகவிற்கு இடமே இல்லை, இங்கே தாமரை மலராது என்பதை மிகத் தெளிவாக தமிழக மக்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

    அண்ணாமலை அடிக்கடி என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்பார் கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று, 2-வது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியாக நான் அதற்கு பதில் சொல்கிறேன். அந்த தகுதி கூட இல்லாத ஒருவர் பாஜக தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல.

    அதிமுக கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக மக்கள் அவர்களுக்கு தண்டனை தந்து கொண்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து கனிமொழியின் பேச்சு குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "என் தந்தை முதலமைச்சரோ, எல்.எல்.ஏ.வோ கிடையாது. குப்புசாமி ஆடு மாடு மேய்த்தார். என்னிடம் பொறுமையாக செல் எனக் கூறியுள்ளார். ஒருவேளை கனிமொழி பா.ஜ.கவில் இணைந்தால் நான் பதவி விலகுவதை குறித்து பரிசீலனை செய்கிறேன்" என்று பதில் அளித்தார்.

    • அதிமுகவிற்கு இந்த அவல நிலை எதனால் ஏற்பட்டது?
    • இதுபோன்ற தொடர் தோல்விகளை இயக்கம் எந்த நேரத்திலும் கண்டதில்லை.

    சசிகலா தனது எக்ஸ் பக்கத்தில் அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,

    "அன்பு தொண்டர்களே கலங்க வேண்டாம் வரும் காலம் நமக்கானது. அனைவரும் வாருங்கள் வெற்றி அடைவோம் புதிய சகாப்தம் படைப்போம்!

    நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வேதனை. தமிழக மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லாம ஏற்கனவே ஐந்து வருடங்களை வீணாக்கிய திக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் இனி வரும்காலங்களிலும் தமிழக மக்களுக்கு எந்தவித் பிரயோஜனமும் ஏற்படாது என்பது இப்போதே தெரிந்துவிட்டது.

    திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றி பெற்ற வெற்றியாகத்தான் இதை கருதமுடிகிறது. மேலும் "ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்ற கதையாக எங்கள் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளைப் பயன்படுத்திக் கொண்டு திமுக அதில் குளிர் காய்ந்து பெற்ற வெற்றியாகத்தான் இதை பார்க்கமுடிகிறது.

    பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள் ஆரம்பித்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். அதன் பின்னர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கஷ்டப்பட்டு இயக்கம் அதன் வளர்ச்சியில் எனது தன்னலமற்ற பங்கும் அடங்கியிருப்பதால் இந்த இயக்கம் எந்நாளும் தோல்வி அடைந்துவிடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தான் நான் இந்தனை காலம் பொறுமையாக இருந்தேன். கட்சியை ஒருங்கிணைக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டேன். ஒரு சிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு வெறும்புகளுக்காக இயக்கம் அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்க முடியாது.

    இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்து இன்றைக்கு நடத்து முடித்த நாடாளுமன்ற தேர்தலில் ஒருசில இடங்களில் நான்காவது இடத்திற்கும் மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

    மேலும் இதுவரை இயக்கம் என்றைக்கும் கண்டிராத வகையில் 7 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்து இருப்பது மிகப்பெரிய வேதனை. இதற்காக இருபெரும் தலைவர்களும் இந்த இயக்கத்தின் முன்னேற்றத்திற்காக தங்கள் இறுதிமூச்சு உள்ளவரை அயராது பாடுபட்டார்கள். இது அவர்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம்.

    இதனை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை இந்த அவல நிலை எதனால் ஏற்பட்டது? இதற்கு யார் காரணம்? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து இருந்தால் கழகம் இன்றைக்கு மாபெரும் வெற்றி பெற்று இருக்கும் திமுக கூட்டணி படுதோல்வி அடைந்து இருக்கும்.

    இதுபோன்ற தொடர் தோல்விகளை இயக்கம் எந்த நேரத்திலும் கண்டதில்லை. தனி ஆவர்த்தனம் செய்து கொண்டு இருந்தால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. யாராக இருந்தாலும் சுயமாக சிந்தித்து அதில் வெற்றி பெற வேண்டும். இல்லையேல் அடுத்தவர்கள் சொல்வதையாவது கேட்டு தவறுகளை திருத்தில் கொள்ளவேண்டும். அனைத்தையும் இழந்துவிட்டு நீலிக்கண்ணீர் வடிப்பதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை.

    இதுபோன்று புரட்சித்தலைவர் அவர்கள் ஆரம்பித்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வளர்த்தெடுத்த இயக்கம் தொடர்ந்து தோல்வி அடைய வேண்டுமா? அல்லது வெற்றியை ஈட்ட வேண்டு என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த யதார்த்தத்தை உணர்ந்து கட்சியை ஒருங்கிணைக்க அனைவரும் வர வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் "இந்த இயக்கம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களுக்காகவே இயங்கும்" என்று குளுரைத்ததை அனைவரும் மனதில் வைத்து ஒன்றுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

    தமிழ்நாட்டு மக்கள் திமுக தலைமையிலான மூன்றாண்டு ஆட்சியில் கடுமையாக பாதிப்படைத்து இருக்கிறார்கள். திமுகவினர் நாள்தோறும் தமிழக மக்களை கசக்கி பிழிந்து அவர்களுக்கு மிகப்பெரிய கொடுமையை அளித்து வருகின்றனர். எனவே மக்களிடம் நன்மதிப்பை பெற்று வெற்றி பெறுவது என்பது நடக்காத ஒன்று என்பதை நன்றாக அறிந்த திமுகவினர் எதிர்கட்சியினரை பிளவுபடுத்தி அதன் மூலம் வெற்றி பெறலாம் என்று திட்டமிட்டு இந்த இயக்கத்தை ஒன்றிணையாமல் பார்த்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.

    இயக்கத்தில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகள் கட்சி நலனை புறம்தள்ளிவிட்டு சுயநல போக்கோடு செயல்பட்டு இயக்கத்தை தொடர்ந்து தோல்வி அடைய வைப்பதால் கோடான கோடி தொண்டர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிறது.

    மேலும் இதன் காரணமாக தமிழக மக்களும் திமுகவினரிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகிறார்கள். எனவே திமுகவினரில் கோரப்பிடியில் இருந்து தமிழக மக்களை காத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நான் புரட்சித்தலைவர் அவர்கள் இந்த இயக்கத்தை தொடங்கினார். இதனை மனதில் வைத்துதான் இந்த இயக்கத்தில் பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒன்றாக வேண்டும் என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டு மக்களும் இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் ஏழை மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.

    இனியும் நான் பொறுமையாக இருந்தால் அது நம் புரட்சித்தலைவருக்கும் புரட்சித்தலைவிக்கும். இந்த இயக்கத்தை உயிர் மூச்சாக எண்ணி வாழ்ந்து கொண்டு இருக்கும் கோடான கோடி தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் செய்யும் மிக பெரிய துரோகமாகிவிடும். எனவே இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். கழக நிர்வாகிகள் அனைவரும் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளை களைந்து தமிழக மக்களையும். இந்த இயக்கத்தில் உள்ள தொண்டர்களின் உணர்வையும், உயர்வையும் எண்ணி அனைவரும் வாருங்கள்.

    உங்கள் அனைவரையும் எந்தவித வேறுபாடும் இல்லாமல் அரவணைத்து அம்மா அவர்கள் கட்டிக்காத்த அதே கொள்கைகளை நிலை நிறுத்தி ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு புரட்சித்தலைவரின் பொன்மொழிக்கேற்ய புரட்சித்தலைவியின் வழி வந்த ஓர் தாய் வயிற்று பிள்ளைகளாக ஓர் அணியில் நின்று ஒற்றுமையோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம் என்னுடைய குறிக்கோள்.

    கழகத்தினரும் தமிழக மக்களும்தான் எனது குடும்பம். புரட்சிதலைவி அம்மா அவர்களை போலவே எனெக்கென்று தனிப்பட்ட குடும்பம் கிடையாது. எனக்கென்று தனியாக எந்தவித விருப்பு வெறுப்புகளும் இருந்தது கிடையாது. எனது உடன்பிறவா சகோதரியாக தோழியாக அரசியலில் ஆசானாக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர் மறைவிற்கு பிறகு நான் எடுத்த ஒவ்வொரு முடிவும் கட்சியின் நலனுக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும் மட்டும் நான் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்

    அரசியல் எதிரிகளில் சூழ்ச்சியால் எங்கள் மீது பொய்யாக போடப்பட்ட வழக்கின் தீர்ப்பால் கடந்த 2011-ஆம் ஆண்டு சிறை செல்ல வேண்டிய நெருக்கடியான நேரந்திலும் எனது ஒரே சிந்தனை எப்படியாவது அம்மாவின் ஆட்சிவை காப்பாற்றி விடவேண்டும். அதேபோன்று கட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும்தான்.

    பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றிவிட்டுதான் சென்றேன். ஆனால் என்ன நடந்தது தமிழகத்தில் கழக ஆட்சி மீண்டும் வரமுடியவில்லை. கட்சியும் காப்பாற்றப்படவில்லை. புரட்சி தலைவர் அவர்களோடு பயணித்த காலங்களில் அவர் இந்த கட்சி ஏழைகளுக்கான கட்சி என்றும் அதனால் கட்சிதான் முக்கியம் தொண்டர்கள்தான் முக்கியம் என்பதை எப்போதும் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

    எனவே எனக்கு இந்த கட்சியை நம்பிக்கொண்டிருக்கும் கோடான கோடி தொண்டர்களும் தமிழக மக்களும்தான் முக்கியம் இதை நன்றாக உணர்ந்து இந்த கட்சி அழிந்துவிடக்கூடாது தமிழ் மக்கள் முன்னேற வேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்ட அனைவரும் வாருங்கள் ஒரு ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது.

    மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதே நவது இலக்கு. வரும் 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றிபெறுவதை யாராலும் தடுக்க முடியாது அதற்கான பணிகளை உடனே ஆராம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் நம் இருக்கிறோம். கட்சியின் நலன் கருதியும் தமிழக மக்களின் நலன் கருதியும் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற அனைவரும் வர வேண்டும். உங்கள் அனைவரையும் ஜெயலலிதா இல்லம் அன்புடன் வரவேற்கிறது என்பதை இந்நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

    கழக உடன் பிறப்புகளே ஒன்றிணைவோம் வாருங்கள் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும் உயிர் தொண்டர்களின் உயர்வுக்காகவும் தமிழக மக்களின் வாழ்வுக்காகவும் ஒன்றிணைவோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் அவசர பயணமாக தற்போது டெல்லி விரைந்துள்ளார்.
    • மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளத்தற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள உள்ள நிலையில் அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் அவசர பயணமாக தற்போது டெல்லி விரைந்துள்ளார்.

     

    அவரது டெல்லி பயணத்துக்குக் காரணம் இன்னும் தெரியவராத நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றதற்கு அதன் தலைவரும் தனது நண்பருமான தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    மேலும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக உள்ள சந்திரபாபு நாயுடுவுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளதற்கும் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளத்தற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு, அதைக் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று ரஜினி தெரிவித்துள்ளார். 

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிமுக கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக மக்கள் அவர்களுக்கு தண்டனை தந்து கொண்டிருக்கிறார்கள்.
    • பிரதமருக்கே முதல் 4, 5 சுற்றுகள் பின்னடைவு இருக்கும் சூழலில் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி. மீண்டும் வாகை சூடினார். கனிமொழி எம்.பி.க்கு தொகுதி தேர்தல் அதிகாரியான கலெக்டர் லட்சுமிபதி சான்றிதழ் வழங்கினார்.

    பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அபார வெற்றி பெற்றதையடுத்து, கலைஞரின் நினைவிடத்தில் சான்றிதழை வைத்து கனிமொழி இன்று அஞ்சலி செலுத்தினார். 

    இதைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்த தமிழக முதலமைச்சர், திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் அண்ணன் தளபதி அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த வெற்றிக்காக உழைத்த, பிரசாரம் செய்த அனைத்து தலைவர்களுக்கும், எங்களுடைய மாவட்ட கழக செயலாளர்களுக்கும், தூத்துக்குடி உடன்பிறப்புகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மீண்டும் என் மீது இந்த அளவிற்கு நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்து, மீண்டும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய தூத்துக்குடி மக்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழகத்தில் பாஜகவிற்கு இடமே இல்லை, இங்கே தாமரை மலராது என்பதை மிகத் தெளிவாக தமிழக மக்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

    நிறைய பேர் கனவோடு இருந்தார்கள். அந்த கனவெல்லாம் தெளிவாக்கப்பட்டுள்ள ஒரு சூழலை தமிழ்நாட்டில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

    நிச்சயமாக ஒவ்வொரு இந்தியனும் எதிர்பார்த்ததைபோல ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணமும்.

    ஆனால் இன்று மாலை நடைபெறும் இந்திய கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

    அண்ணாமலை அடிக்கடி என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்பார் கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று.

    2-வது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியாக நான் அதற்கு பதில் சொல்கிறேன். அந்த தகுதி கூட இல்லாத ஒருவர் பாஜக தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல.

    அதிமுக கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக மக்கள் அவர்களுக்கு தண்டனை தந்து கொண்டிருக்கிறார்கள்.

    பிரதமருக்கே முதல் 4, 5 சுற்றுகள் பின்னடைவு இருக்கும் சூழலில் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் தெரிவித்து இருக்கிறார். தார்மீக பொறுப்பேற்றுக்கொள்வது என்பது அரசியலில் புதிய விஷயம் இல்லை. நிச்சயமாக செய்யலாம் என்று தெரிவித்தார்.

    • இந்த வெற்றி உங்கள் ஆட்சியின் மாட்சிக்குக் கிடைத்த சாட்சி...
    • பதற்றமில்லாமல் வெற்றியின் பகட்டு இல்லாமல் இயல்பான புன்னகையோடு இருந்தார்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40-க்கு 40 என்று வெற்றி பெற்றுள்ளது. இது சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க.வுக்கு கிடைத்த முழு வெற்றியாகும். இதற்கு பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நாற்பதுக்கு நாற்பது என்பது

    மாயத்தால் நிகழ்ந்ததல்ல

    நிர்வாகத் திறம் என்ற

    நியாயத்தால் நிகழ்ந்தது

    இந்த வெற்றி

    உங்கள் ஆட்சியின்

    மாட்சிக்குக் கிடைத்த சாட்சி

    என்று சொல்லி

    முதலமைச்சருக்குப்

    பொன்னாடை பூட்டினேன்

    பதற்றமில்லாமல்

    வெற்றியின் பகட்டு இல்லாமல்

    இயல்பான புன்னகையோடு இருந்தார்

    வென்றார்க்கு அழகு

    தோற்றாரை மதித்தல்

    தோற்றார்க்கு அழகு

    வென்றாரை வியத்தல்

    பதவிக்கு அழகு

    உதவிகள் தொடர்தல்

    மக்களுக்கு அழகு

    மறுவேலை பார்த்தல்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    • 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலே தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் முதல் தேர்தல் ஆகும்.
    • தி.மு.க.வை வழிநடத்தும் தலைவர் பொறுப்பை ஏற்றதில் இருந்து இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே சொந்தமாக்கி வருகிறார் மு.க.ஸ்டாலின்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. எப்போதும்போல் தமிழகத்தின் தேர்தல் முடிவு ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    இந்த வெற்றி தி.மு.க.விற்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த மகுடம் என்று கருதப்படுகிறது.

    கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட ஏழு கட்சிகளுடன் தி.மு.க கூட்டணி அமைத்து வரலாறு காணாத விதமாக போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றனர். மத்திய ஆட்சியில் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக தி.மு.க உருவானது.

    இதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    அதன்பின் இப்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40-க்கு 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு மறைந்தார். அதன்பின், தி.மு.க. தலைமைப் பொறுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றார். 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலே தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் முதல் தேர்தல் ஆகும்.

    தி.மு.க.வை வழிநடத்தும் தலைவர் பொறுப்பை ஏற்றதில் இருந்து இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே சொந்தமாக்கி வருகிறார் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டு தேர்தல் வரலாற்றில் தி.மு.க. கூட்டணிக்கு அடுத்தடுத்த ஒவ்வொரு தேர்தலிலும் சுமார் 100 சதவீத வெற்றியை மு.க.ஸ்டாலின் தேடித்தந்துள்ளார்.

    • பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 12 தொகுதிகளில் 2-ம் இடம் பிடித்துள்ளது.
    • பெரும்பான்மையான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 4-ம் இடத்தையே பிடித்தது.

    சென்னை:

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் தமிழகத்தில் வெளியான தேர்தல் முடிவில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது.

    எப்போதும்போல் தமிழகத்தின் தேர்தல் முடிவு ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    இந்த நிலையில், தென்சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் பிரதான கட்சியான அ.தி.மு.க. டெபாசிட்டை இழந்துள்ளது. 9 தொகுதிகளில் மூன்றாமிடத்திற்கும், 3 தொகுதிகளில் நான்காவது இடத்திற்கும் அ.தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. 5 இடங்களிலும், புதிய தமிழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும், அ.தி.மு.க. நேரடியாக 32 இடத்திலும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.


    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 12 தொகுதிகளில் 2-ம் இடம் பிடித்துள்ளது. அந்த வகையில், தர்மபுரி, நீலகிரி, கோவை, மத்திய சென்னை, தென்சென்னை, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, வேலூர், திருவள்ளூர் ஆகிய 12 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணியை பின்னுக்கு தள்ளி தேசிய ஜனநாயக கூட்டணி 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி திருச்சி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய 4 தொகுதிகளில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும், கன்னியாகுமரியில் அ.தி.மு.க. வேட்பாளரையும் பின்னுக்கு தள்ளி 3-ம் இடத்தை பிடித்துள்ளது. மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி 4-ம் இடத்தையே பிடித்தது.

    • திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மக்கள் நீதி மையக் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • இந்தியாவைக் காக்கும் போரில், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும். எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை முதல் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளன.

    தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு உறுதியாகியுள்ள நிலையில், இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மக்கள் நீதி மையக் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

     

    அந்த அறிக்கையில்,

    திமுக அரசு செய்துகாட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் அறுவடை செய்திருக்கிறது. மக்களுக்காகச் சிந்தித்து, மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப்பெறும் நல்லாட்சிக்கு ஆதரவளிக்க மக்களும் தயாராக இருப்பதையே இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது.

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 2019 மக்களவைத் தேர்தலில் தொடங்கி, தான் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலுமே அருமை நண்பர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெற்றியைக் குவித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    இந்தியாவைக் காக்கும் போரில், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும். எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

    சிந்தாமல் சிதறாமல் சந்தேகம் இல்லாமல் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி இந்தியாவிற்கு வழியும். ஒளியும் காட்டக் கூடியவை.

    இந்தியா வாழ்க. தமிழ்நாடு ஓங்குக. தமிழ் வெல்க! என்று தெரிவித்துள்ளார். 

    ×