search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாமக"

    • டி.பி.டி.ஆர். பள்ளி வாக்குச்சாவடி முன்பு கடந்த 19-ம் தேதி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • வாக்குசாவடியில் வாக்காளர் பட்டியலில் 400-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் நாடாளுமன்ற தொகுதி தேர்தலின் போது மகாதானத்தெரு டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியில் வாக்காளர் பட்டியலில் 400-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    இதனால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த வாக்காளர்கள் தங்களது பெயர்களை நீக்கப்பட்டதை கண்டித்தும், தங்களை வாக்களிக்க அனுமதி வழங்க கோரியும் மகாதான தெரு டி.பி.டி.ஆர். பள்ளி வாக்குச்சாவடி முன்பு கடந்த 19-ம் தேதி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    அவர்களுக்கு ஆதரவாக பா.ம.க. வேட்பாளர், பா.ம.க.வினர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கலந்து கொண்டனர். இதனை அடுத்து கூடுதல் கலெக்டர் சபீர் ஆலம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுரேகா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சாலை மறியலில் ஈடுப்பட்டதாக பா.ம.க. மாவட்ட தலைவர் பழனிச்சாமி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 100 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • பா.ம.க. இளைஞர் அணி, மாணவர் அணி, பாட்டாளி சமூக ஊடகப் பேரவை ஆகிய அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் அட்டவணைப் படி விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும்.
    • அனைத்துக் கூட்டங்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை ஏற்பார்.

    சென்னை:

    பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று முடிவடைந்த நிலையில், கட்சி வளர்ச்சிக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் துணை அமைப்பு நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்த பா.ம.க. தலைமை முடிவு செய்திருக்கிறது. பா.ம.க. இளைஞர் அணி, மாணவர் அணி, பாட்டாளி சமூக ஊடகப் பேரவை ஆகிய அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் கீழ்க்கண்ட அட்டவணைப் படி விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும். அனைத்துக் கூட்டங்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை ஏற்பார்.

    2.5.2024 (வியாழக்கிழமை) காலை 11 மணி-பா.ம.க. இளைஞரணி

    3.5.2024 (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி-பா.ம.க. மாணவரணி

    4.5.2024 (சனிக்கிழமை )காலை 11 மணி- பாட்டாளி சமூக ஊடகப் பேரவை

    மேற்கண்ட கூட்டங்களில் தொடர்புடைய அமைப்புகளின் மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது தி.மு.க.வின் வழக்கம்.
    • காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை தி.மு.க. அரசு அடகு வைத்து விடக்கூடாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம்; அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை முதல்-அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். ஆனால், அதைக் கண்டிக்கக் கூட முன்வராமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது, காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழ்நாட்டின் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையாவும், துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமாரும் மாறி மாறி கூறி வருகின்றனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நல்லுறவுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இதை தமிழர்களால் சகித்துக்கொள்ள முடியாது.

    கர்நாடக முதல்- அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பேச்சுகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவை என்பது தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிக்குக் கூட தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதுகுறித்து எதுவுமே தெரியாதது தான் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது. உலகில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளுக்கு எல்லாம் கருத்து தெரிவிக்கும் அவர், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் மேகதாது அணையை கட்டுவோம் என்று கர்நாடக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதுகுறித்து எதுவுமே கருத்து தெரிவிக்காமல் இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

    எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது தி.மு.க.வின் வழக்கம். இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை தி.மு.க. அரசு அடகு வைத்து விடக்கூடாது.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அதன்பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். அதை உணர்ந்து மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க வேண்டும். நல்ல வழியிலோ, மோசடி வழியிலோ மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதல்-அமைச்சர் சித்தராமையா ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையான வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
    • வாக்கு சாவடியில் அவரது மகள் சமியுத்தா, சங்கமித்ரா, சஞ்சித்ரா ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

    திண்டிவனம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக தொடங்கி காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையான வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவரது குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார். இதே வாக்கு சாவடியில் அவரது மகள் சமியுத்தா, சங்கமித்ரா, சஞ்சித்ரா ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை பயக்கும்.
    • அனைவரும் சமத்துவம், சகோதரத்துவத்துடன் வாழ தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் .

    திண்டிவனம்:

    திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமரகதாம்பிகை அரசு உதவி பெறும் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை 8 மணிக்கு தனது வாக்கைப்பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை பயக்கும். அனைவரும் சமத்துவம், சகோதரத்துவத்துடன் வாழ தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் .

    பேட்டியின் போது மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார், பா.ம.க. விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெயராஜ், முன்னாள் நகர செயலர் சண்முகம், வக்கீல் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • நாங்கள் எல்லோரும் கடமையை கண்ணாக செய்து கொண்டுள்ளோம்.
    • எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    திண்டிவனம்:

    திண்டிவனம், ரொட்டிக்கார தெருவில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை நிதி உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தர்மபுரி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி குடும்பத்துடன் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மிக முக்கியமான நாள் இது. என் ஓட்டுரிமையை திண்டிவனத்தில் வாக்களித்த பின் தர்மபுரி தொகுதிக்கு செல்கிறேன். எங்கள் கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தல் நியாயமான முறையில் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் உங்கள் உடன்பிறந்த சகோதரர் வாழ்த்து தெரிவித்தாரா? என்ற கேள்விக்கு எல்லா தொகுதிகளிலும் என் உடன்பிறந்த சகோதரர்கள்தான் போட்டியிடுகிறார்கள். நாங்கள் எல்லோரும் கடமையை கண்ணாக செய்து கொண்டுள்ளோம். மகளிர் என் மேல் அன்புடன் உள்ளனர். எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    உள்ளூர் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு அது முன்னாள் முதல்வரின் கருத்து. நீங்கள் நேரடி அரசியலுக்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தீர்களா என்ற கேள்விக்கு நான் ஏற்கனவே அரசியலில்தான் உள்ளேன். தேர்தல் களத்தில் பிரசாரமெல்லாம் செய்துள்ளேன். தேர்தல் எனக்கு புதிதல்ல என்றார்.

    அப்போது சிவகுமார் எம்எல்.ஏ., மாவட்ட செயலாளர் ஜெயராஜ், முன்னாள் நகர செயலாளர் சண்முகம், வக்கீல் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • மேகதாது அணை கட்டப்பட்டால், நமக்கு ஒரு சொட்டு தண்ணீர் வராது.
    • எதற்கு இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம் என அதிமுகவுக்கே தெரியவில்லை.

    மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ஸ்டாலினை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    57 ஆண்டு காலம் ஆட்சி செய்யும் திமுக, அதிமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    பாமக இல்லாவிட்டால், டெல்டாவே அழிந்து போயிருக்கும். தேர்தலுக்காகவோ, ஓட்டுக்காகவோ நான் பேசவில்லை.

    டெல்டாவை அழிக்க பார்த்த கட்சிகள் திமுக, அதிமுக. டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பாமக தான் வலியுறுத்தியது.

    மேகதாது அணை கட்டப்பட்டால், நமக்கு ஒரு சொட்டு தண்ணீர் வராது.

    எதற்கு இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம் என அதிமுகவுக்கே தெரியவில்லை.

    பாமக வேட்பாளர் வெற்றி பெற்றால், பிரதமரை நேரடியாக சந்தித்து பேச முடியும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைக் கைப்பற்றப் போவதும் சுவர் மீது எழுத்தாகிவிட்டது.
    • பயிரை சாகுபடி செய்யும் காலத்தை விட அறுவடை செய்யும் காலத்தில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சற்றேறக் குறைய ஒரு மாதத்திற்கு முன் தொடங்கிய மக்களவைத் தேர்தல் திருவிழா, இப்போது அதன் நிறைவுகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 19-ம் நாள் வாக்குப்பதிவு நாள். ஆம்.... தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கப்படுவதற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன. வியப்பைத் தரும் உன் உழைப்பு தான் எனக்கு மகிழ்ச்சியையும் அளிக்கிறது; பெரும் நம்பிக்கையையும் தருகிறது. உனது உழைப்பு தான் தமிழ்நாட்டில் நடைபெறும் மக்களவைத் தேர்தல்களில் நமக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித்தரப் போகிறது. தேசிய அளவில் நரேந்திர மோடி தான் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கவிருக்கிறார் என்பது எப்போதோ உறுதியாகி விட்டது. தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைக் கைப்பற்றப் போவதும் சுவர் மீது எழுத்தாகிவிட்டது.

    இதற்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு என்ன? பாட்டாளி மக்கள் கட்சியின் பங்களிப்பு என்ன? என்பது தான் விடை காணப்பட வேண்டிய வினா ஆகும். என்னைப் பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் களமிறங்கியுள்ள 10 பேர் உட்பட தமிழ்நாடு மற்றும் புதுவையிலிருந்து 40 பேரும் மக்களவைக்கு செல்ல வேண்டும்; நமது மாநிலங்களின் உரிமைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமும், எதிர்பார்ப்பும். அதை நீ நிறைவேற்றுவாய் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.

    பயிரை சாகுபடி செய்யும் காலத்தை விட அறுவடை செய்யும் காலத்தில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதன்படி அடுத்த 4 நாட்களுக்கு பாட்டாளி இளஞ்சிங்கங்களாகிய நீங்கள் மிகவும் விழிப்புடனும், கடமை உணர்வுடனும் தேர்தல் பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடி வாரியாக அமைக்கப்பட்டுள்ள குழுக்களைச் சேர்ந்தவர்கள் அடுத்து வரும் நாட்களில் ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தது 10 முறையாவது சந்தித்து அந்தந்த மக்களவை தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டும். வெற்றியை நமக்கு உரித்தாக்க வேண்டும்

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டுத்தனமாக உள்ளார்.
    • திமுகவும், அதிமுகவும் இணைந்து சண்டை மூட்டி விட்டார்கள்.

    விழுப்புரம் மாவட்டத்தில், விக்கிரவாண்டியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதிரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    திமுக, அதிமுக வேண்டாம். மாற்றம் வேண்டுமென மக்கள் நினைக்கின்றனர்.

    தமிழகத்தில் போதைப் பொருளால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளும் கட்சி வேண்டாம். ஆண்ட கட்சி வேண்டாம் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

    ரவிக்குமார் எம்.பி., தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் ? ரவிக்குமார் தொகுதிக்கு எதுவும் செய்யாமல் மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்.

    பாமக வேட்பாளர் முரளி சங்கரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    அதிமுக, திமுக என இருவரும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். கல்வி, வேலை வாய்ப்பிற்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

    விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டுத்தனமாக உள்ளார்.

    தேர்தல் வந்தால் தான் திமுகவிற்கு மக்கள் நியாபகம் வருகிறது. திமுகவில், விசிகவுக்கு பொது தொகுதி கொடுக்காதது ஏன் ?

    சமூக நீதி வழங்கி கொண்டிருக்கும் ஒரே கட்சி பாமக. திமுகவும், அதிமுகவும் இணைந்து சண்டை மூட்டி விட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் நாம் ஆண்ட கட்சியும் இல்லை... ஆளும் கட்சியும் இல்லை.
    • ஏப்ரல் 19 உன் உழைப்பை எடைபோடும் நாளாகவும், ஜூன் 4 சிங்கக்குட்டிகளின் உழைப்பின் பயனைக் கொண்டாடும் நாளாகவும் அமைய வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தல் ஓடோடி வந்துவிட்டது. அடுத்த வாரம் இதே நாள், இதே நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில மக்கள் இந்தியத் தேசத்தின் எதிர் காலத்தைத் தங்களின் விரல் நுனிகளால் எழுதிக் கொண்டிருப்பார்கள்.

    தமிழ்நாட்டில் நாம் ஆண்ட கட்சியும் இல்லை... ஆளும் கட்சியும் இல்லை. அதனால் நம்மிடம் கோடிகளும் இல்லை. நம்மிடம் இருப்பவை அனைத்தும் கொடிகளும், கொள்கைகளும் தான். இவற்றை வைத்துக் கொண்டு இவர்களால் என்ன செய்து விட முடியும்? என்ற ஏளனப் பார்வையுடன் தான் தமிழகத்தின் இரு கூட்டணிகளும் தேர்தல் களத்தில் நுழைந்தன. ஆனால், சிங்கத்தின் குகையில் சிறு நரிகளால் என்ன செய்து விட முடியும்? என்பதைப் போல நமது உழைப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் அக்கட்சிகள் தொலைதூரத்துக்குப் பின்னால் துவண்டு கிடக்கின்றன. நீயோ வெற்றிக் கோட்டை நெருங்கி விட்டாய்.

    2019-ம் ஆண்டில் திமுக கூட்டணி சார்பில் 38 பேர் வெற்றி பெற்று டெல்லிக்கு சென்றனர். ஆனால், அவர்கள் ஆறாவது விரலாகத் தான் இருந்தனர். அவர்களால் அவர்களைத் தேர்வு செய்த தொகுதிகளின் மக்களுக்கோ, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கோ எந்தவித பயனும் ஏற்படவில்லை.

    பாட்டாளி மக்கள் கட்சி காலத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட பல தொடர்வண்டித் திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப் படாமலேயே கிடக்கின்றன. கால ஓட்டத்தில் தமிழகத்திற்கான தேவைகள் அதிகரித்திருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றால், தமிழகத்தின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கக் கூடிய, செயல் படக்கூடிய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அதற்கு பா.ம.க. 10 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வெற்றிக்கனியை பரிசாக வழங்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகவே உள்ளனர். அதே நேரத்தில் அந்தக் கனியை பறிக்க நமது உழைப்பும் மிகவும் அவசியம். இதை நான் உனக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து களத்தில் எப்படி உழைக்கிறாயோ, அதே உழைப்பை இன்னும் ஒரு வாரத்திற்கு கொடு. வெற்றி நம் வசமாகிவிடும். ஏப்ரல் 19 உன் உழைப்பை எடைபோடும் நாளாகவும், ஜூன் 4 சிங்கக்குட்டிகளின் உழைப்பின் பயனைக் கொண்டாடும் நாளாகவும் அமைய வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒட்டுமொத்தமாக 15 மாதங்களாகியும் ஆணையம் எதையும் செய்யவில்லை; ஆணையம் கேட்ட தரவுகளையே தமிழக அரசு தரவில்லை.
    • வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த 31.3.2022 அன்று சுப்ரீம் போர்ட்டில் தீர்ப்பளித்த நிலையில், தமிழக அரசு நினைத்திருந்தால் அடுத்த இரு வாரங்களில் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். ஆனால், அதன்பின் 9 மாதங்கள் கழித்து நவம்பர் 17-ந்தேதி தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்பின் இரு மாதங்கள் கழித்து 12.1.2023-ந்தேதி வன்னியர் உள் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    இதன்படி கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ந்தேதி பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால், அதன்பின் இரு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது; நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவும் இன்றுடன் நிறைவடைந்து விட்டது. ஒட்டுமொத்தமாக 15 மாதங்களாகியும் ஆணையம் எதையும் செய்யவில்லை; ஆணையம் கேட்ட தரவுகளையே தமிழக அரசு தரவில்லை.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து போராடித்தான் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்றால் அதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி தயாராகத்தான் இருக்கிறது. இதை உணர்ந்து வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள்.
    • தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன.

    சென்னை :

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது. கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

    தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதையே தாங்கிக் கொள்ள முடியாத திமுக அரசு, தேர்தல் முடிவு அப்படியே அமைவதை எப்படி தாங்கிக் கொள்ளும்? சோதிடம் கூறியதற்காக கிளி சோதிடரை கைது செய்த திமுக அரசு, தங்கர்பச்சானுக்கு வாக்களித்ததற்காக கடலூர் தொகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை கைது செய்வார்களா? இந்த நடவடிக்கை மூலம் திமுகவின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிகிறது. பகுத்தறிவு கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவால் சோதிடத்தில் நல்ல செய்தி கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அக்கட்சி எந்த அளவுக்கு முட்டாள் தனத்திலும், மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

    கிளியை கூண்டில் அடைத்தது குற்றம் என்றும், அதற்காகத் தான் சோதிடர் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள். இப்போது கைது செய்யப்பட்ட சோதிடர் அதே இடத்தில் பல ஆண்டுகளாக சோதிடம் பார்த்து வருகிறார். அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா? என்று அவரது துணைவியார் நூற்றுக்கணக்கான சோதிடர்களிடம் கிளி சோதிடம் பார்த்திருப்பார். அந்த கிளி சோதிடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், இப்போது தங்கர்பச்சானுக்கு சோதிடம் கூறிய பிறகு சோதிடர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

    தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓர் ஏழை கிளி சோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த சோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.

    ×