என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தகுதி பற்றி பேசிய அண்ணாமலை... வெற்றி பெற்ற பிறகு பதிலளித்த கனிமொழி
- அதிமுக கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக மக்கள் அவர்களுக்கு தண்டனை தந்து கொண்டிருக்கிறார்கள்.
- பிரதமருக்கே முதல் 4, 5 சுற்றுகள் பின்னடைவு இருக்கும் சூழலில் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி. மீண்டும் வாகை சூடினார். கனிமொழி எம்.பி.க்கு தொகுதி தேர்தல் அதிகாரியான கலெக்டர் லட்சுமிபதி சான்றிதழ் வழங்கினார்.
பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அபார வெற்றி பெற்றதையடுத்து, கலைஞரின் நினைவிடத்தில் சான்றிதழை வைத்து கனிமொழி இன்று அஞ்சலி செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்த தமிழக முதலமைச்சர், திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் அண்ணன் தளபதி அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த வெற்றிக்காக உழைத்த, பிரசாரம் செய்த அனைத்து தலைவர்களுக்கும், எங்களுடைய மாவட்ட கழக செயலாளர்களுக்கும், தூத்துக்குடி உடன்பிறப்புகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மீண்டும் என் மீது இந்த அளவிற்கு நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்து, மீண்டும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய தூத்துக்குடி மக்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தில் பாஜகவிற்கு இடமே இல்லை, இங்கே தாமரை மலராது என்பதை மிகத் தெளிவாக தமிழக மக்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
நிறைய பேர் கனவோடு இருந்தார்கள். அந்த கனவெல்லாம் தெளிவாக்கப்பட்டுள்ள ஒரு சூழலை தமிழ்நாட்டில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
நிச்சயமாக ஒவ்வொரு இந்தியனும் எதிர்பார்த்ததைபோல ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணமும்.
ஆனால் இன்று மாலை நடைபெறும் இந்திய கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
அண்ணாமலை அடிக்கடி என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்பார் கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று.
2-வது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியாக நான் அதற்கு பதில் சொல்கிறேன். அந்த தகுதி கூட இல்லாத ஒருவர் பாஜக தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல.
அதிமுக கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக மக்கள் அவர்களுக்கு தண்டனை தந்து கொண்டிருக்கிறார்கள்.
பிரதமருக்கே முதல் 4, 5 சுற்றுகள் பின்னடைவு இருக்கும் சூழலில் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் தெரிவித்து இருக்கிறார். தார்மீக பொறுப்பேற்றுக்கொள்வது என்பது அரசியலில் புதிய விஷயம் இல்லை. நிச்சயமாக செய்யலாம் என்று தெரிவித்தார்.






