search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக ஸ்டாலின்"

    • இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
    • கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் சிறு குறு நிறுவன துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லையில் தொழில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து வரும் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் சுய தொழில் முனைவோருக்காக ரூ. 961 கோடியே 58 லட்சம் மானியத்துடன் சுமார் ரூ. 2,818 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் 30 ஆயிரத்து 324 இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக்கப் பட்டுள்ளனர். நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 லட்சம் நபர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற கடந்த 10 ஆண்டுகளில் 55 ஆயிரத்து 230 நபர்கள் மட்டுமே தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவின் முன்னோடி திட்டமாக தமிழக அரசால் கடந்த ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோருக்காக தொடங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் மூலம் ரூ. 159.40 கோடி மானியத்துடன் ரூ.302.86 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 1369 தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.

    பின்தங்கிய தென் மாவட்டங்களில் ரூ. 262.13 கோடி மானியத்துடன் ரூ. 769.27 கோடி வங்கி கடன் உதவியுடன் 9,594 தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை போல் வரும் பிப்ரவரி மாதம் தமிழக முதலமைச்சர் தலைமையில் உலக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் சிறு குறு நிறுவன துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 170 ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கப்பட்டு ரூ.69 கோடியே 15 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் 90 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் தொடங்கப்பட்டுள்ளது.

    தென் மாவட்டங்களில் ராக்கெட் தொழில்நுட்பம் சம்பந்தமான தொழிற் சாலைகளை தொடங்குவதற்கு முன் வருபவர்களுக்கு உடனடியாக தொழிற்சாலைகள் தொடங்க முன்னுரிமை கொடுக்கப்படும்.

    தமிழக அரசின் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 8 சிட்கோ தொழிற்பேட்டைகளில் 6 தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 8 சிட்கோ தொழிற்பேட்டைகள் புதிதாக இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது.

    பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத நெல்லை மாவட்டத்தில் உள்ள பேட்டை நூற்பாலை மற்றும் வள்ளியூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை ஆகியவை முழுமையாக கையகப்படுத்தி அங்கும் புதிய தொழில் தொடங்க இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

    புதிய தொழில் முனைவோரை உருவாக்குவதில் அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது. அதிகாரிகளை ஊக்குவித்து இளைஞர்களை புது தொழில் முனைவராக உருவாக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • இக்கட்டிடம் 7 மேல் தளங்களைக் கொண்டதாகவும், மொத்தம் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக, புதுடெல்லி, சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    18.6.2021 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், புதுடெல்லி மிக தீவிர நில அதிர்வு மண்டலம் 4 ஆக மறு வகைப்படுத்தப்பட்டு உள்ளதை கருத்தில் கொண்டு வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தினை பழைய கட்டிடங்களை முழுவதுமாக இடித்து மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள விரிவான ஆலோசனை நடத்தினார். அதன்படி, விரிவான வடிவமைப்பு மற்றும் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் இருந்து உரிய ஒப்புதல்கள் பெறப்பட்டன.

    புதியதாக கட்டப்பட உள்ள இக்கட்டிடம் மிக தீவிர நில அதிர்வை எதிர்கொள்ளும் கட்டமைப்பாக வடிவமைக்கப்பட்டு, இந்திய தொழில்நுட்பக்கழகம், சென்னை மூலம் ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் பொதுத் துறையால் புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தை மறுசீரமைத்து புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு 257 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இப்புதிய கட்டிடம் மிக முக்கிய பிரமுகர் தொகுதி, விருந்தினர் மாளிகை தொகுதி மற்றும் அலுவலர்கள் குடியிருப்புத் தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது. இக்கட்டிடம், 3 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்களைக் கொண்டதாகவும், மொத்தம் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது.

    மேலும், மிக முக்கிய பிரமுகர் அறை, 39 முக்கிய பிரமுகர்கள் அறைகள், 60 உயர்தர அறைகள் , 72 படுக்கை வசதிகள் கொண்ட தங்கும் கூடம், பல்நோக்கு அரங்கம், 3 உணவருந்தும் அறைகள், காத்திருப்பு அறைகள், கண்காட்சி அறை, மிக முக்கிய பிரமுகர்களின் முகாம் அலுவலகம், சந்திப்பு அறைகள், உடற்பயிற்சி மையம், வணிக மையம், நூலகம் மற்றும் பல்வேறு வசதிகளுடன் இப்புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.

    தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், பொதுத்துறை அரசு துணைச் செயலாளர் (மரபு) ஜெ.இ. பத்மஜா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அதிகம் காணும் பகுதிகளாகக் கீழடியும் - இந்த அரண்மனையும் திகழட்டும்!
    • நெல்லையில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பதற்கான பணிகள் தொல்லியல் துறை சார்பில் விரைந்து முடிக்கப்படும்.

    சென்னை:

    மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை இரவில் ஒளிரும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில்,

    தூங்காநகருக்கு மேலும் எழில்கூட்டிடும் வகையில் திருமலை நாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது! கண்களைக் கவர்கிறது!

    சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அதிகம் காணும் பகுதிகளாகக் கீழடியும் - இந்த அரண்மனையும் திகழட்டும்!

    இவற்றைப் போலவே, நெல்லையில் 'பொருநை அருங்காட்சியகம்' திறப்பதற்கான பணிகள் தொல்லியல் துறை சார்பில் விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • கார்கில் போர் வெற்றியின் 25-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுக்க களைகட்டியுள்ளன.
    • நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்வோம்

    சென்னை:

    கார்கில் போரின் 25-வது ஆண்டு வெற்றி தின விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்,

    கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்.

    நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்வோம் என்று தெரிவித்துள்ளார்.

    • அரசியலை முன்வைத்து, ஒருபோதும் மக்கள் தேவைகளை புறக்கணிக்கக்கூடாது
    • கூட்டத்தில் பங்கெடுத்து உரிமைகளை பெற போராடியிருக்க வேண்டும்

    சமீபத்தில் பாஜகவில் இணைந்த சரத்குமார் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    ராமேஸ்வரம் தனுஷ்கோடி புதிய ரயில்பாதை அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தும் கூட, சூழலியல் காரணங்களைக் காட்டி அத்திட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருக்கிறது. ரயில்வே திட்டங்களுக்கு 2749 ஹெக்டேர் நிலம் தேவையாக இருக்கும் போது, 807 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    அடிப்படைப் பணிகளை தாமதம் செய்துவிட்டு உண்மைக்கு புறம்பாக மத்திய அரசு மீது குற்றம் சுமத்தும் போக்கை திமுக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

    அரசியலை முன்வைத்து, ஒருபோதும் மக்கள் தேவைகளை புறக்கணிக்கக்கூடாது.

    மேலும், நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவிப்பது ஏற்புடையதல்ல. தமிழக மக்கள் நலன் கருதி, நமது உரிமையை பெற வேண்டும் என்றால், கூட்டத்தில் பங்கெடுத்து உரிமைகளை பெற போராடியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • ரூ.44.46 கோடியில் புதிய ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களுக்கு வாகனங்கள்.
    • சிறைவாசிகள் பயன்பாட்டிற்கு 1 லட்சம் புத்தகங்கள்.

    தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் ஆட்சியில் சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதில் சீர்மிகு பணிகள் மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    அதன்படி, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "1.17 இலட்சம் காவல் பணியாளருக்கு ரூ.5,000 வீதம் ரூ.58.50 கோடி கொரோனா உதவித் தொகை.

    ரூ.44.46 கோடியில் புதிய ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களுக்கு வாகனங்கள்.

    58 புதிய மகளிர் காவல் நிலையங்கள். 21 புதிய தீயணைப்பு மீட்புப் பணி நிலையங்கள்.

    சிறைவாசிகள் பயன்பாட்டிற்கு 1 லட்சம் புத்தகங்கள். தீவிபத்திலும் வெள்ளத்திலும் சிக்கிய 42,224 மனித உயிர்களும் ரூ.605 கோடி மதிப்புடைய உடைமைகளும் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசின் காவல்துறை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட பழைமையான துறை. 1964-68, 1971-76 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு காவல்துறை தலைவராக – ஐ.ஜி.யாகத் திகழ்ந்தவர் எப்.வி.அருள். அக்காலத்தில் டி.ஜி.பி என்னும் பதவி இல்லை. ஐ.ஜி பதவி மட்டுமே இருந்தது.

    ஐ.ஜி-யாக இருந்த எப்.வி.அருள் அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கொண்ட; இண்டர்போல் என்னும் பன்னாட்டுக் காவல் நிருவாகத்தில் துணைத் தலைவராக விளங்கித் தமிழ்நாட்டிற்குப் புகழ் சேர்த்தவர். இந்திய காவல்துறை வரலாற்றில் முதன் முதல் நவீனமயமானது தமிழ்நாடு காவல்துறைதான்.

    தமிழ்நாடு காவல்துறை தலைவராகத் திகழ்ந்த எப்.வி.அருள் அவர்கள் எழுதிய போலீஸ் டைரி எனும் நூலில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1969இல் நியமித்த முதல் காவல் ஆணையம் வழங்கிய பரிந்துரைகள் மற்றும் நிதியுதவிகளால் இந்தியாவிலேயே முதன்முதலாக 1971இல் தமிழ்நாடு காவல்துறையை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கின என்று எழுதியுள்ளார். அதன் பிறகுதான் இந்தியாவில் ஒன்றிய அரசிலும், மாநிலங்களிலும் காவல்துறையை நவீனமயமாக்கும் பணிகளைத் தொடங்கினார்கள். அப்போது முதல் தமிழ்நாட்டுக் காவல்துறை இந்தியாவிற்கு வழிகாட்டும் துறையாகவே வளர்ந்து திகழ்ந்து வருகிறது.

    சட்டம் ஒழுங்கை காப்பதில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அரசுத் துறைகள் அனைத்தையும் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள். தம்முடைய பொறுப்பிலேயே உள்ள காவல்துறையைச் சீராக வளர்த்துத் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலையை மிகவும் சிறப்பாகப் பராமரித்து இந்தியா அளவில் தமிழ்நாட்டிற்குப் புகழ் சேர்த்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டும் இல்லாமல் குற்றங்களைத் தடுக்கும் துறையாகச் செயல்பபட வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால்தான், தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில், கல்வி வளர்ச்சியில், உள்கட்டமைப்புகளின் மேம்பாட்டில், மனித வளர்ச்சிக் குறியீட்டில் என எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

    எனவே, சட்டம் ஒழுங்கை தொடர்ந்து காப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. மக்கள் அதிகமாகக் கூடும் அனைத்து விழாக்களையும் அமைதியான முறையில் நடத்திக்காட்டி வந்துள்ளது. 18 ஆண்டுகளாக நின்று போயிருந்த சிவங்கை கண்டதேவி அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டத்தை எந்தப் பிரச்சினையும் இன்றி, சுமுகமாக நடத்திக் காட்டியது. அதற்காக அந்தப் பகுதி மக்கள் முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறிப் பாராட்டினார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை சிறப்பாக விளங்குவதால் மக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்துள்ளன. எடுத்துக்காட்டாக :

    • 40 இலட்சம் பேர் கூடிய திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா
    • 2 இலட்சம்பேர் பங்கெடுத்த மதுரை சித்திரைத் திருவிழா
    • 8 இலட்சம் பேர் திரண்ட திருச்செந்தூர் சூரசம்ஹாரம்
    • 5 இலட்சம் பேர் கூடிய பழனி தைப் பூசத் திருவிழா
    • 12 இலட்சம் பேர் பங்கேற்ற குலசேகரப்பட்டினம் தசரா
    • 3 இலட்சம் பேர் பங்கேற்ற வேளாங்கண்ணி தேவாலயக் கொடியேற்றத் திருவிழா
    • 20 ஆயிரம்பேர் பங்கேற்ற நாகூர் சந்தனக்கூடு திருவிழா

    உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது நமது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை சிறப்பாகப் பராமரிக்கப்படுவதன் அடையாளமாகும். இன்றைக்குத் தமிழ்நாடு வளர்ச்சி மிகு மாநிலமாக இருக்கிறது என்றால் அமைதி மிகு மாநிலமாக அது இருப்பதால்தான்.

    முதலைமைச்சர் அவர்கள் காவல் பணியாளர்களின்கொரோனா கால சிறப்புப் பணிகளை பாராட்டி ரூ.58.50 கோடி ஊக்கத்தொகை

    கொரோனா தொற்றுத் தடுப்பில் களப்பணியாற்றிய 1.17 லட்சம் காவல் துறையினருக்கு ஊக்கத்தொகையாகத் தலா ரூ.5,000 வீதம் 58.50 கோடி ரூபாய் வழங்கினார்கள்.

    முதலமைச்சர் அவர்கள் அமைத்துள்ள ஐந்தாவது காவல்ஆணையம்

    காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்திடவும், காவல் பணியாளர்களின் நலன்களைக் காத்திடவும் அரசுக்கு ஆலோசனைகள் வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் ஐந்தாவது காவல் ஆணையம் அமைத்துள்ளார்கள்.

    புதிதாக ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தை நிர்வாக ரீதியாக பிரித்து ஆவடி, தாம்பரம் என இரு புதிய ஆணையரகங்களை உருவாக்கி; அவற்றுக்கு ரூ.44.46 கோடியில் 352 நான்கு சக்கர வாகனங்களையும், 396 இரண்டு சக்கர வாகனங்களையும் வழங்கி அவை மக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளை உறுதி செய்யவும், அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யவும், ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களில் புதிதாக சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு, ரூபாய் 1.91 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது.

    முதலமைச்சர் புதியதாக உருவாக்கியுள்ள 58 புதிய மகளிர் காவல் நிலையங்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட அனைத்துக் காவல் உட்கோட்டங்களிலும் 39 புதிய மகளிர் காவல் நிலையங்களையும் கோயம்பேடு, கோட்டூர்புரம், புழல் உள்ளிட்ட 19 இடங்களில் புதிய மகளிர் காவல் நிலையங்களையும் ஏற்படுத்தியுள்ளார்.

    முதலமைச்சர் கொண்டாடிய காவல்துறை மகளிர் பொன்விழா

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல் துறையில் மகளிர் காவலர்கள் நியமிக்கப்பட்ட 50-ஆம் ஆண்டு நிறைவையொட்டி 17.3.2023 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில் சிறப்புத் தபால் உறையை வெளியிட்டார்கள். அத்துடன், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'அவள்' (AVAL – Avoid Violence Through Awareness and Learning) திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்கள்.

    முதலமைச்சர் அவர்கள் திறந்த காவலர் குடியிருப்புகள்

    தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 62 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், திருநெல்வேலி மாநகர் மற்றும் மாவட்ட ஆயுதப்படைகளுக்கு 2 ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டடங்கள் ஆகியவற்றை 4.1.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். 481.92 கோடி ரூபாய்ச் செலவில் 2,882 காவல்துறை வாடகைக் குடியிருப்புகள் 42.88 கோடி ரூபாய்ச் செலவில் 42 காவல் நிலையங்கள், 84.53 கோடி ரூபாய்ச் செலவில் 14 இதர காவல் துறை கட்டடங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

    முதலமைச்சர் காவல்துறைக்கு வழங்கிய புதிய வாகனங்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 22.1.2024 அன்று சென்னை பெருநகர காவல் துறையின் பயன்பாட்டுக்காக 25 ஹூண்டாய் கிரெட்டா, 8 இன்னோவா கிரிஸ்டா, 20 பொலிரோ ஜீப் வாகனங்கள் வழங்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன.

    சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை ரூ.2.80 கோடியில் சிறைவாசிகளுக்கான நூலகங்கள் மேம்பாடு

    அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் 14 மாவட்ட சிறைகள், 112 கிளை சிறைகள்/தனிச்சிறைகள்/ திறந்த வெளிச்சிறைகள் ஆகியவற்றில் உள்ள நூலகங்கள் ரூ.2.80 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப்பணிகள் துறை புத்தகக் கண்காட்சியில் முதன்முறையாக இத்துறை பங்கேற்று 1,00,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சிறைவாசிகளின் பயன்பாட்டிற்காக நன்கொடையாகச் சேகரிக்கப்பட்டன.

    முதலமைச்சர்கள் சிறைவாசிகளுக்காக வழங்கிய நூல்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் சிறை நூலகங்களுக்கு 1,500 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்படத்தக்கது.

    சிறைக் கட்டடங்களும் குடியிருப்புகளும்

    ரூ.45.26 கோடி செலவில் 94 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

    முதலமைச்சர் அவர்கள் ரூ.26 கோடியில் சிறைவாசிகளுக்கு ஏற்படுத்திய புதிய உணவுமுறை

    முதலமைச்சர் அவர்கள், நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் ஆண்டுக்கு ரூபாய் 26 கோடி கூடுதல் செலவில் சிறைவாசிகளுக்கான புதிய உணவு முறையை மாற்றியமைத்திட ஆணை பிறப்பித்தார்கள். அதன்படி புதிய உணவுமுறை 5.6.2023 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை

    2021 முதல் 2023 முடிய இத்துறைப் பணியாளர்கள் 61,288 தீ விபத்து அழைப்புகளிலும், 2,57,209 மீட்பு அழைப்புகளிலும் பணியாற்றி 42,224 மனித உயிர்களையும், ரூ.605.06 கோடி மதிப்புள்ள உடைமைகளையும் காப்பாற்றி அரும்பணி புரிந்துள்ளார்.

    ரூ.55.60 கோடியில் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தீயணைப்புப் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக ரூ.55.62 கோடி செலவில் தலைக்கவசம் மற்றும் காலணியுடன் கூடிய 1850 தீ பாதுகாப்பு உடைகள், 650 மூச்சுக் கருவிகள், பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய 3500 மீட்பு உடைகள் வாங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

    ரூ.86.83 கோடியில் நவீன வாகனங்கள் மற்றும் உபகரணங்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.72.82 கோடி வழங்கி, தீயணைப்பு மீட்புப் பணிகள் துறைக்காக 75 புதிய நீர்தாங்கி வண்டிகள், 12 அவசரகால சிறிய மீட்பூர்திகள், 44 பெரும் தண்ணீர் லாரிகள், ஒரு வான்நோக்கி நகரும் ஏணி கொண்ட ஊர்தி, 7 அதி உயரழுத்த நீர்தாங்கி வண்டி, 1 சிறிய நுரைநகர்வு ஊர்தி, 50 ட்ரோன்கள், 4 புகைவெளியேற்றும் கருவி, 21 கோம்பி கருவிகள், ஆட்களை ஏற்றிச் செல்லும் ஊர்திகள் 4 முதலியன கொள்முதல் செய்யப்படுகின்றன.

    ரூ.92.40 கோடியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.45.82 கோடி செலவில் காஞ்சிபுரம், தேனாம்பேட்டை, திருவையாறு, கடமலைக்குண்டு, இராஜபாளையம், செங்குன்றம், மணலி, வண்ணாரப்பேட்டை, சேலம் திருவரங்கம் ஆகிய தீயணைப்பு – மீட்புப் பணி நிலையங்களுக்கும், காஞ்சிபுரத்திற்கும் மற்றும் அம்பத்தூரில் சென்னை புறநகர் மாவட்ட அலுவலகத்திற்கும் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு ஆணையிட்டுள்ளார்கள்.

    மேலும், ரூ. 40.63 கோடி செலவில் செங்குன்றம், போடிநாயக்கனூர், துறையூர், இராணிப்பேட்டை, சிவகாசி, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் அலுவலர்கள், பணியாளர்களுக்கு 173 குடியிருப்புகள் கட்டவும் ரூ.5.95 கோடி செலவினத்தில் திருவல்லிக்கேணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களுக்குப் புதிய கட்டடம் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

    ரூ.69.43 கோடியில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள்

    பொதுமக்களின் சிறப்பான சேவைக்கென ரூ. 62.18 கோடி செலவில் திங்கள்நகர், கோவைபுதூர், சின்னமனூர், வாய்மேடு, தெள்ளார், அன்னியூர், திருப்பரங்குன்றம், ஏழாயிரம்பண்ணை, கொளத்தூர், காலவாக்கம், கண்ணமங்கலம், ஆட்டையாம்பட்டி, ஊத்துக்குளி, இளையாங்குடி, வையம்பட்டி, குமராட்சி, நயினார்பாளையம், ஒரகடம், திருவெறும்பூர், இராதாபுரம், ரிசிவந்தியம் ஆகிய 21 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள்ளும் சிவகாசி, ஓசூர், தாம்பரம், இராணிப்பேட்டை ஆகிய 4 தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு நிலையங்களும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. பூந்தமல்லி, கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையங்கள் ரூ.1.06 கோடி செலவில் மேம்படுத்தப்படுகின்றன.

    ரூ.39.30 கோடி செலவில் மாநில பயிற்சிக் கழகம்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தீயணைப்பு மீட்புப் பணித்துறை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை மேம்படுத்தும் விதமாக ரூ. 39.30 கோடி செலவில் மாநிலப் பயிற்சிக் கழகம் மற்றும் உலகத்தரத்திலான நிகழ்நேர மாதிரி கூடம் ஆகியவற்றை காலவாக்கத்தில் அமைத்திடவும் ஆணையிட்டுள்ளார்கள்.

    இவற்றின் வாயிலாக – தமிழ்நாட்டின் காவல்துறை – சிறைத்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் அனைத்தும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் சீர்மிகு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சட்டம்-ஒழுங்கு சிறப்பாகப் பராமரிப்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றபோது அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது தொடர்பாக ஐக்கிய அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌத் அல்மரி ஆலோசனை மேற்கொண்டார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தலைமைச் செயலகத்தில் இன்று ஐக்கிய அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் எச்.இ.அப்துல்லா பின் தௌத் அல்மரியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    அவர் தமிழ்நாட்டின் சிறந்த நண்பர் மற்றும் நலம் விரும்பி ஆவார். மார்ச் 2022ல் நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றபோது அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.

    எங்கள் சந்திப்பின் போது, MSMEகள் மற்றும் வேலை உருவாக்கம் ஆகியவற்றில் குறிப்பிட்ட கவனம் செலுத்தி, தளவாடங்கள், சில்லறை விற்பனை, மலிவு வீடுகள் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் வணிகம் மற்றும் முதலீட்டு கூட்டாண்மை பற்றி விவாதித்தோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • ராமதாசின் 86-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் 86-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. அரசு, நாங்கள் செயல்படுத்திய திட்டங்களைத்தான் இன்றும் செயல்படுத்தி வருகிறது.
    • எத்தனை சேகர்பாபுக்கள் வந்தாலும் தமிழக மக்களின் மனதை மாற்ற முடியாது.

    சென்னை:

    சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சட்டமன்றப் பொதுத்தேர்தலை கருத்திற்கொண்டு, முதலமைச்சர் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டு, தனது எக்ஸ் வலைதளத்தில் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் என எதிர்க்கட்சிகள் புரளிகளைக் கிளப்பியதாக முதலைக் கண்ணீர் வடித்துள்ளார்.

    தி.மு.க. அரசின் முதலமைச்சருடைய அம்மா உணவகம் பற்றிய எக்ஸ் வலைதள செய்தியைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி, கடந்த மூன்றாண்டுகளில் முதலமைச்சரோ, அமைச்சர்களோ, மேயரோ, எவரேனும் நேரில் சென்று அம்மா உணவகங்களை ஆய்வு செய்தனரா என்று கேள்வி எழுப்பி இருந்தார். எடப்பாடி பழனிசாமி அறிக்கையிலே இருந்த உண்மை, முதலமைச்சரையும், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளையும் உறுத்தியவுடன், ஒருவர் மாற்றி ஒருவர் அறிக்கை விடுகின்றனர்.

    எடப்பாடி பழனிசாமியின் ஆணித்தரமான குற்றச்சாட்டுக்களுக்கு முறையாக பதில் சொல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.வில் இருந்து ஆதாயம் தேடி தி.மு.க.வுக்கு சென்றவர்களை வைத்து அறிக்கை விட வைப்பது வாடிக்கையாகி விட்டது.

    முதலமைச்சரின் நடவடிக்கையால், அ.தி.மு.க. காணாமல் போய்விடுமோ என்ற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு வந்துவிட்டது என்று அமைச்சர் சேகர்பாபு கூறி இருக்கிறார்.

    'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா'' என்ற புரட்சித் தலைவரின் வைர வரிகளை சிரமேற்கொண்டு, அரசியலில் வீரநடை போடுபவர் எங்கள் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து வீண்வம்பு வளர்த்தால், அவர்கள் பாணியிலேயே எசப்பாட்டு பாட எங்களுக்கும் தெரியும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

    எத்தனை சேகர்பாபுக்கள் வந்தாலும் தமிழக மக்களின் மனதை மாற்ற முடியாது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களின் கோபம் எதிரொலிக்கும். ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. அரசு, நாங்கள் செயல்படுத்திய திட்டங்களைத்தான் இன்றும் செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இந்த அம்மா உணவகம் ஒன்றே 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதைக் கூறி, இனியாவது உங்கள் மூளையில் உதித்த நல்ல வளர்ச்சித் திட்டங்களை தமிழக மக்களுக்குத் தாருங்கள், வேலை வாய்ப்பை உருவாக்குங்கள் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பல லட்சம் செலவழித்து மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வந்துள்ள காவல்துறையின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.
    • பா.ம.க.வினர் கொடுத்த உண்மையான புகாரின் அடிப்படையில் செய்யாறு தொகுதி தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேரையும் கைது செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் அளித்த பொய்ப்புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பொய்வழக்கில் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதை அறிந்த முருகவேல், முன்பிணை கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனு மீது நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு முன்பிணை வழங்கியிருக்கிறது. முருகவேலுக்கு முன்பிணை கிடைக்க வாய்ப்பிருப்பதை அறிந்த காவல்துறை, அதற்கு முன்பாக அவரை கைது செய்ய வேண்டும் என்பதற்காக மத்தியப்பிரதேசத்திற்கு சென்று கைது செய்திருக்கிறது. இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும்.

    மிகச்சாதாரணமான, அதுவும் நீதிமன்றமே நிபந்தனையின்றி முன்பிணை வழங்கியுள்ள பொய் வழக்கில் தொடர்புடைய பா.ம.க. நிர்வாகி முருகவேலுவை பல லட்சம் செலவழித்து மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வந்துள்ள காவல்துறையின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.

    கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யாமல் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல்துறையினர், தி.மு.க.வினர் தூண்டிவிட்டார்கள் என்பதற்காக ஏதோ சர்வதேச பயங்கரவாதியை கைது செய்வது போன்று மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வருவதை என்னவென்று சொல்வது?

    பா.ம.க.வினர் கொடுத்த உண்மையான புகாரின் அடிப்படையில் செய்யாறு தொகுதி தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேரையும் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், காவல்துறையின் அனைத்து உறுப்புகளும் அழுகி விட்டன என்பதை காவல்துறையும், அதை வழி நடத்திச் செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழ்நாட்டு மக்கள் முன்னிலையில் ஒப்புக்கொள்ள வேண்டும்.

    இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • தமிழ்ப் புதல்வன் திட்டத்தால் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.

    சென்னை:

    புதுமைப்பெண் திட்டம் போல உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    இந்த திட்டத்தின் பயன்களை எப்படி பெற வேண்டும்? என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அரசுப் பள்ளி (ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம்), அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் மீடியம் மட்டும்) படித்துள்ள மாணவர்கள் தங்களின் இளங்கலை பட்டம், தொழிற்பயிற்சி, பட்டயக் கல்வி ஆகியவற்றை பெறும் காலம் வரை ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

    இந்நிலையில் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ.401 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    தமிழ் புதல்வன் திட்டத்தால் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.

    • ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள திட்டங்களுக்கு அதிகப்பட்டியான நிதியை ஒதுக்கினார்.
    • அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள்

    2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள திட்டங்களுக்கு அதிகப்பட்டியான நிதியை ஒதுக்கினார்.

    ஆனால், மற்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களின் பெயர்கள் கூட பட்ஜெட்டில் இடம் பெறவில்லை எனவும் விமர்சனம் எழுந்து வருகிறது.

    இந்நிலையில், அரசை பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்" என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒரு சில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

    பிரதமர் நரேந்திர மோடி அவர்களே…

    "தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்" என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய #Budget2024 உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது!

    அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்.

    அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×