என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- உற்சாக வரவேற்பு
- கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-மந்திரிகளை சந்தித்து பேசுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.
- நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பிறகு நாளை இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் 9-வது நிர்வாக குழுக் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள் பங்கேற்குமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
முந்தைய ஆண்டுகளில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காத நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்க இருக்கிறார்.
இதற்காக அவர் இன்று காலை 9.50 மணியளவில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், முதலமைச்சரின் செயலாளர் சண்முகம் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.
விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர் பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், மயிலை த.வேலு, பிரபாகரராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன், மேயர் பிரியா, அறிவாலயம் தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் புழல் நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.
பகல் 1.15 மணியளவில் டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் மேளதாளங்கள் முழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லம் சென்றடைந்தார். அங்கு தங்கி இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணியளவில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்குமாறு பேச உள்ளார்.
தமிழகத்துக்கு தர வேண்டிய கல்வி நிதியை தருமாறு வலியுறுத்துவதுடன் பேரிடர் நிவாரண நிதி, திட்டங்களுக்கான கூடுதல் நிதி கேட்டும் வற்புறுத்துவார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தமிழ கத்துக்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த உள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன். தமிழகத்துக்கான நிதியை போராடி பெறுவேன்" என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை இன்று மாலை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போல் நாளை நிதி ஆயோக் கூட்டம் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளதால் அங்குள்ள கூட்ட அரங்கில் நேரம் கிடைக்கும் போது பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசுவதற்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-மந்திரிகளை சந்தித்து பேசுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.
நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பிறகு நாளை இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.






