என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தென் மாநிலங்களின் உரிமைகளை சந்திரபாபு பாதுகாப்பார்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
    X

    தென் மாநிலங்களின் உரிமைகளை சந்திரபாபு பாதுகாப்பார்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

    • டெல்லி விமான நிலையத்தில் தலைவர் கலைஞரின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
    • சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தேன்.

    இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று பகல் 1 மணி அளவில் டெல்லி சென்றார்.

    விமான நிலையத்தில் அவரை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா எம்.பி., டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

    இதனைத்தொடர்ந்து அவர் தமிழ்நாடு அரசு இல்லத்துக்கு சென்றார். அங்கு போலீஸ் மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றார்.

    கூட்டம் முடிந்ததும், சென்னை திரும்ப டெல்லி விமான நிலையத்துக்கு இரவு 8 மணிக்கு முதலமைச்சர் சென்றார். அப்போது, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனையில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்ப விமான நிலையம் சென்றிருந்தார்.

    அப்போது இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டனர். அந்த தருணத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து, தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதைப்போல மு.க.ஸ்டாலினுக்கும் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்தார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    டெல்லி விமான நிலையத்தில் தலைவர் கலைஞரின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தேன். அவர் மத்திய அரசியலில் முக்கிய பங்காற்றுவார், தென் மாநிலங்களுக்காக வாதிடுவார், நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என்று நான் நம்புகிறேன் என கூறியுள்ளார்.

    Next Story
    ×